கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன் ஆராய்வு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு புதன்கிழமை (24) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில், VMS எனப்படும் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், அதன் பராமரிப்பு மற்றும் சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

அத்துடன் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி கடலில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றை கண்காணிப்பது மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஊழல் மோசடிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை – அமெரிக்க தூதர் ஜூலி சங்

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தகப்பேரவையின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இவ்வருடம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இவ்வேளையில் அமெரிக்காவும் இலங்கையில் இயங்கிவரும் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் இலங்கை பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கம் தொடர்பில் நினைவுகூறவிரும்புகின்றேன்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவானது மக்கள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

எமது இருநாடுகளும் சுமார் 7 தசாப்தகாலமாக பொருளாதார அபிவிருத்தி முதல் தேசிய பாதுகாப்பு வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் விரிவாக ஒன்றிணைந்து பணியாற்றிவந்திருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவும் பரஸ்பர நன்மதிப்பும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்ததன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் முக்கிய பங்காற்றியுள்ளது.

குறிப்பாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அமெரிக்க வர்த்தகப்பேரவையானது இலங்கையில் அமெரிக்க தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கங்களாகக்கொண்டு இயங்கிவருகின்றது. அதன்படி கலந்துரையாடல்கள், ஆலோசனை வழங்கல்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப்பேரவை உதவிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் தற்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்புக்கள் குறித்த ஆலோசனைகளையும் அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருக்கின்றுது.

இதனை முன்னிறுத்திய பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது.

ஆனால் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் இலங்கை மற்றும் அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் ஏணிப்படி வைத்தமைக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து கோவில் நிர்வாகம் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு போதிய சான்றுகள் இன்மையால் குறித்த வழக்கில் இருந்து ஆலயப்பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலயத்தில் மரத்திலான ஏணிப்படி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை சீரமைத்து ஏணிப்படி ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பாக வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஏணிப்படியை சீரமைத்தமைக்கான சான்றுகள் இல்லை என அரச சட்டவாதிகளால் இன்றையதினம் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் என்றார்

தையிட்டி விகாரை இரகசியமாகத் திறந்து வைப்பு; வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்களில் சிங்கள பெளத்தர்கள் வருகை

யாழ்ப்பாணம் – தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று காலை 5.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இரகசியமாக விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அளவீடுகளை நிறுத்த உத்தரவு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.

குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.

தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.

இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஜனக ரத்நாயக்க

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமை இலங்கை மக்களிற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தனது தோல்வியில்லை எனவும் இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி, இதனை பற்றி தனக்கு எந்த பிரச்சினையுமில்லை என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என முன்னரே உறுதியாக தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலநறுவையில் பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன; இந்துக்களை பாதுகாக்க வருமாறு அழைப்பு

பொலநறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதனை சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழர்களின் பூர்வீக காணிகளையும் அபகரிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினரால் ஊடக சந்திப்புபொன்று நடாத்தப்பட்டது.இந்த ஊடக சந்திப்பில் பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,செயலாளர் சிவஸ்ரீ ரதன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொலநறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ து.சத்தியநாதன் சர்மா,பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் எனது முயற்சியினாலேயே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் அண்மையில் மீண்டும் புதிய நிர்வாக தெரிவின் ஊடாக தலைவராக நான் தெரிவுசெய்யப்பட்டேன்.

நாங்கள் எமது ஒன்றியம் ஊடாக பல்வேறு சமய சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.மத்திய கிழக்கு நாட்டில் உள்ளவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கேட்டதற்கு அமைவாக பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பொலநறுவை மாவட்டம் பெரும்பான்மை சிங்கள மக்களைக்கொண்டபோதிலும் வெலிக்கந்தை பிரதேச சபை,திம்புலாகல பிரதேசசபை பகுதிகளில் தமிழ் மக்கள் பரந்துவாழுகின்றனர்.அங்குள்ள மாணவர்களுக்கு சரியான அறநெறிபோதனைகளை வழங்கும் பணிகளை முதல்கட்டமாக முன்னெடுத்தோம்.

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு வளைகுடா வானம்பாடிகள் அமைப்பிடம் கோரியபோது எமக்கு வழங்கப்பட்டது.பொலநறுவை மாவட்டத்தில் எட்டு அறநெறி;ப்பாடாலைகள் உள்ளன.சுமார் 600மாணவர்கள் அங்கு கற்றுவருகின்றனர்.

இதேபோன்று கற்றல் உபகரணங்களுடன் பிள்ளைகளுக:கு உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் செயற்பாடுகள் எங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகயிருந்தது.எங்களுக:கு அந்த அமைப்பு ஊடாக நிறைய விடயங்களை செய்திருந்தார்கள்.

இதேபோன்று இலங்கையில் உள்ள தமிழ் பேசும் அமைப்புகள் பொலநறுவை மாவட்டத்தின் பக்கம் தமது பார்வையினை செலுத்தவேண்டும்.பொலநறுவை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.பழமையான சிவாலயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.அங்குள்ள மக்களுக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் இல்லை.

அனைத்து தமிழ் மக்களுக்கும் நான் சொல்லும் விடயம்.பொலநறுவையில் பல சிவாலயங்கள் உள்ளன.எத்தனையோ சிவாலயங்கள் அனுராதபுரத்திலும் பொலநறுவையிலும் மறைக்கப்பட்டுள்ளன.முத்துக்கல் என்னும் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சிவாலயம் ஒன்று மறைக்கப்பட்டுள்ளது.அங்கிருந்த சிவலிங்கம் உடைக்கப்பட்டுள்ளது.

அங்கு பல புராதன சின்னங்கள்,எழுத்துக்கள் உள்ளன.அந்த ஆலயங்கள் பௌத்ததேரர்களின் கைவசம் சென்றுள்ளது.அந்த இடத்திற்கு செல்வதற்கு எங்களை அனுமதிப்பதில்லை.அங்கு பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்றுவருகின்றது.தொல்பொருள் ஆராய்ச்சிஎன்ற போர்வையில் புதையல்கள் தோண்டப்படுவதாக தகவல்கள் வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே பொலநறுவை இந்துக்குருமார் ஒன்றியம் சமய பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்துவருகின்றோம்.பல்வேறு பிரச்சினைகளுடன் மக்கள் வாழுகின்றார்கள்.

வறுமையின் காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்திய நிலையிலும் மாணவர்கள் இருக்கின்றார்கள்.இவர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றோம்.

இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி எமது ஒன்றியத்தின் கூட்டத்தினை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.பழைய நிர்வாகத்துடன் பல கருத்துமுரண்பாடுகள் இருக்கின்றது.

அவர்களையும் அழைத்து புதிய நிர்வாகத்தினையும் அழைத்து சரியான தீர்வொன்றை எட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதற்கான செயற்பாடுகளை செயலாளர் சரியாக முன்னெடுத்திருந்தார்.

அன்றைய தினம் கூட்டத்திற்கு எனக்கும் சரியான நேரத்திற்கு செல்லமுடியவில்லை.எனது கடமையினை முடித்துவிட்டு நான் அங்கு சென்றபோது செயலாளருக்கு பழைய நிர்வாகத்தினரால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அவர் தாக்கப்பட்டு அவரது பூநூலும் அறுக்கப்பட்டிருந்தது.

அதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.குறித்த தாக்குதல் தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.

நாம் ஏதாவது செய்ய தயாரானால் தொல்லியல் திணைக்களம் அங்கே 4 கட்டைகளை அடித்து விட்டு தொல்லை கொடுக்கிறது – யாழ். பல்கலை துணைவேந்தர்

ஈழத்தமிழர்களால் மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் வாழ்வியல் என அனைத்து விதங்களிலும் தனித்து இயங்க முடியும் என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலையில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் இன்றைய தினம்(24.05.2023) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலையில் தொல்லியல் படிக்கும் பிள்ளைகள் சிறப்பு கற்கை நெறியினை மட்டும் கற்பது போதாது ஈழத்தமிழர்களின் இருப்பினை ஆவணப்படுத்தல் வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்றது.

அதனை போன்று திருவாசக அரண்மனை போன்றவற்றை கட்டி வருகின்றனர். அவை அனைத்தும் அரசாங்கத்தினுடையதல்ல. அவற்றை அமைப்பதற்கு தனியான சிந்தனை வேண்டும்.

எமது பல்கலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை யாரும் வந்து பார்வையிட முடியும். இன்றைய காலத்தில் வடக்கு கிழக்கு குறித்து அனைவருக்கும் பொறாமை காணப்படுகின்றது.

ஜப்பானின் ஜைக்கா ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றவையே இதற்கு காரணமாகும். முன்னதாகவே ஆராய்ச்சி பயிற்சிக்கான ஆய்வுகூடம் 2000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஜப்பானின் விஞ்ஞானிகள் இங்கு நிற்கின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் அங்கு செல்கின்றனர்.

நாம் ஒன்று செய்ய தயாராகினால் தொல்லியல் திணைக்களம் அதற்கு 4 கட்டைகளை அடித்து விட்டு அதற்கு பல காரணங்களை குறிப்பிடும்.

ஏனைய பீடங்களை இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் கலை பீடம் எமது மக்களின் வாழ்வியலை மிகவும் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு சிறப்பானது.

அத்துடன் எமது அறிவியல் அறிவினால் காலநிலை குறித்தும் முன்கூட்டியே நிலைமைகளை தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திறப்பு விழா நிகழ்வில் வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு, ஏனைய பீட பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – கஞ்சன விஜேசேகர

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் நிவாரணத்தை மின் பாவனையாளர்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும். சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திய ஜனக ரத்நாயக்க என்ற நபரை பதவி நீக்க தீர்மானித்தோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பிய பேராசிரியர் சரித ஹேரத் தற்போது அவருக்கு சார்பாக கருத்துரைப்பது வேடிக்கையாக உள்ளது. ஐந்து பிரதான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க தீர்மானித்தோம்.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டு மின்சார கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய தலைவரையே பதவி நீக்க தீர்மானித்தோம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு  எதிராக கடந்த பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முதலிரு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கினோம்.

‘பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி பொதுமக்களின் நல திட்டங்களுக்கு முரணாக செயற்படுகிறார்’என  மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கும் போது கடந்த அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹசீம் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது எதிர்ப்பை தொடர்ந்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மின்சார சபையுடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினராக தெரிவு செய்யப்பட கூடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க மின்சார விநியோக கட்டமைப்புடனான தொழிற்துறையில் தொடர்பு கொண்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை அவர் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.ஆகவே ஜனக ரத்நாயக்க அரசியலமைப்பு சபையை தவறாக  வழி நடத்தியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைக்கும் அதிகாரம் மின்சார சபைக்கு உண்டு,முறையாக வழிமுறைகளுக்கு அமைய மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த  டிசெம்பர் மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததற்கு ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கவில்லை.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்  மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்த போது இவர் மாத்திரம் தனிப்பட்ட காரணிகளுக்காக மின்கட்டண  அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

யாரை மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதிகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைக்கவில்லை.இதனால் மின்சார சபையும் திறைசேரியும் பாதிக்கப்பட்டது.

மின்கட்டமைப்பு துறையில் பாரிய கேள்வி காணப்பட்ட காரணத்தால் ஒரே கட்டமாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த மின்பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக முன்வைத்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்த பின்னணியில் ஜனக ரத்நாயக்க அதற்கு இடமளிக்கவில்லை.

கடந்த டிசெம்பர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்படாத காரணத்தால் ஜனவரி,பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 32 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.ஜனக ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் இந்த இழப்பு ஏற்பட்டது.இந்த தொகையை மீள பெற்றுக்கொள்ள எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

0-30 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை லை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 09 சதவீதத்தாலும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்பாவனையாளர்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பற்ற வகையில் செயற்பட கூடாது.ஆகவே ஆணைக்குழு ஒரு தரப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வகையில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவுள்ளோம். ஆகவே சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை.குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்ட ஜனக ரத்நாயக்க என்பதை பதவி நீக்க தீர்மானித்தோம் என்றார்.

ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் வெற்றி

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை  உள்ளடக்கி, அவரது சிந்தனையில்  உருவான  செயற்றிட்டம்  வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற  நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன்  அனைத்தையும் இழந்து, அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  அர்ச்சிகனுக்கு  பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.