பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – விஜயதாஸ

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான சட்டமூலம் மூன்று மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டு, அதற்கான சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. எக்காரணிகளுக்காகவும் தேசிய பாதுகாப்பை மலினப்படுத்த முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்ட விடயத்தை தொடர்ந்து நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன்.

ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு உரிய தரப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதுடன், தகவல் குறிப்பிட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது, எக்காரணிகளுக்காவும் தேசிய பாதுகாப்பையும், பொது மக்கள் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்த முடியாது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்யும் நோக்கம் கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது, குழுவினர் அறிக்கை சமர்ப்பித்ததும் மூன்று மாத காலத்திற்குள் தேசிய பாதுகாப்பிற்கான சட்டத்தை உருவாக்கும் சட்டமூல வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

தடுப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயம் வழங்க பயங்கரவாத தடைச்சட்டதில் திருத்தம் செய்யவும் – ரிஷாத்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் நியாயம் வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இயற்றப்படும் சட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களும், எதிர்ப்புக்களும் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் சிறையில் இருந்த போது நேரடியாக உணர்ந்தேன்.

அதேபோல் முஸ்லிம் இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் காலத்தின் தேவைக்கேற்ப திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆங்கில மொழியில் மாத்திரம் தான் சட்டக் கல்லூரி பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இவ்விடயம் தொடர்பில் பலர் எம்மிடம் வலியுறுத்ததியுள்ளோம்.

போதைப்பொருள் நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது, போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கு கல்வி அமைச்சு சிறந்த செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

இயற்றப்பட்ட சட்டங்களை செயற்படுத்தாத காரணத்தினால் நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் பல பிரச்சினைகளை தோற்றுவித்தது.

ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சுயாதீன ஆணைக்குழுக்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்

இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

இலங்கை குறித்து பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராக மக்னட்ஸ்கி  பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும், சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் ஜிஎஸ்பி வரிச்சலுகை தொடர்பான தனது அர்ப்பணிப்புகளை நிறைவேற்றவேண்டும்,தனது இராணுவத்திற்கான மிகவும் அதிகரித்த செலவீனங்களை குறைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழுவின் தலைவரும் கென்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எலியட் கோல்பேர்ன் பிரிட்டன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அப்பால் செல்லவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமை பேரவையின் புதிய தீர்மானம் இலங்கை விவகாரத்தில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதை நோக்கிய பாதையில் சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர்முன்னரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,மனித உரிமை பேரவை தொடர்பிலான சர்வதேச நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்களை விசாரணை செய்து குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான பொறிமுறை என்ற விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் போதுமானதல்ல  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கொல்பேர்ன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிரான ஆதாரங்களை வலுப்படுத்தி அவர்களிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு விசேட வளங்களை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்,யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை வழக்குவிசாரணைக்கு உட்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசாங்கம் தயாரில்லை என்பதற்காக அவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுபாட்டுரிமையை அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் எலியட் கோல்பேர்னின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் ஏன் சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தொடர்பில் மக்னட்ஸ்கி பாணியிலான தடைகள் குறித்து அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிட்டன்  ஆதரவளித்த சமீபத்தைய தீர்மானம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம்  குற்றவியல் பொறுப்புக்கூறலிற்கு முயலவேண்டும் என்ற பரிந்துரையை ஏன் கொண்டிருக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அவர் பாதுகாப்பு சபையின் போதிய ஆதரவின்மையே அதற்கு காரணம் என பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவி;த்திருந்ததை என்னால் நம்பமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உரத்த செய்தியை சர்வதேச அரங்கில் தெரிவிப்பதே எங்கள் நோக்கமாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள்மற்றும் ஊழல்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக  ஏன் பிரிட்டன் மக்னஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம்: மூவருக்கு பிணை

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலையாகியுள்ளனர்.

அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிக்கப்பட்டன.

பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

​பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77 ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் இலங்கை தொடர்பான தீர்மானமும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் 20 க்கு 7 என்ற வாக்கு விகிதத்தில் நிறை வேற்றப்பட்டது.

இதேவேளை இலங்கை மீதான தீர்மானத்தை நடை முறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கவேண்டியேற்படும்.

இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை, தமது அதிகரித்து வரும் பணிகளின் காரணமாக நிதிச்சவால்களை எதிர்கொள்கிறது என்று மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் தெரிவித்துள்ளார். எனவே இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை, நிதியளிக்கவேண்டும் என்று ஃபெடரிகோ வில்லேகாஸ் கோரிக்கை விடுத்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது- ஜனாதிபதி ரணில்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையை நிகழ்த்திய அவர், இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல், காணாமல் போனோர் விடயம் என்பன தொடர்பாக தீர்வு காணப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டார்கள், எதிர்காலத்திலும் எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அடுத்த வாரத்தில் தாம் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, எகிப்தில் இடம்பெற்ற கொப் 27 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடர்பாகவும், ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டார். இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளர்முக நாடுகள் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை, இது அந்த மாநாட்டில் பின்னடைவாகவே கருதப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் காலநிலை தொடர்பான எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உணவு பற்றாக்குறையை பொருத்த வரையில் ஆபிரிக்க நாடுகளே அதிகமாக அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் பாதிக்கப்படும் அபாயத்தை கொண்டுள்ளன.

இதனை மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் எச்சரிக்கை செய்தியாக அறிவித்ததாகவும் ஜனாதிபதி கூறினார். இதற்கிடையில், எகிப்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக தாம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் டிசம்பர் அளவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிடும் போது குறுக்கீட்டு கேள்வியை எழுப்பிய, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியயெல்ல, எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, ஏனைய கடன்வழங்குனர்களின் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்த விடயத்தை வெளிப்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன், இணங்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

இதில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் அதனை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்

இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளின் படி மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பாரத்தை சுமத்துவதா, நேரடி வரிகளை விதிப்பதா, அல்லது அரச செலவீனங்களை குறைப்பதா, என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புக்கு கடன்வழங்குநர்களில் ஏதாவது ஒரு தரப்பு இணக்கம் வெளியிடாவிட்டால் அது குறித்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார். கடன்களை இரத்துச் செய்வதா அல்லது கடன் செலுத்தும் தவணைகளை நீடிப்பதா என்பது குறித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டவேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – ஐனாதிபதி

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகவும், எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதேச செயலக பிரச்சினைக்கு திலகரிடம் பிரதமர் தினேஷ் உறுதி

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டபோதும் அவை முறையற்ற வகையில் முழுமையான பிரதேச செயலகமாக அல்லாமல் உப செயலகமாக அமைகலகப்பட்டமையை மறுத்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது.

அதன் பயனாக அண்மையில் பாராளுமன்ற கலந்தாய்வு கூட்டத்திலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இது குறித்து பேசி இருந்தத்துடன் கலந்தாய்வு கூட்டத்தின் பின்னர் நேற்று (09) மேலதிக விளக்கங்களுக்காக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடப்பட்டது.

பிரதேச செயலக பிரச்சினைக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக

பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி அளித்ததாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (9/11) புதன்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு வழங்கி இருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் அமைப்பின் அநீதி குறித்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது.

முன்னைய அமைச்சரினால் முழுமையான பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி பிரகடனம் வெளியிட்டுள்ள போதும் காலி மாவட்டத்தில் அவை முழுமையாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அவை உப செயலகாமாகவும் திறக்கப்பட்டுள்ளமை பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டார்.

பிரதேச சபைச் சட்டத்திருத்த விடயத்திலும் எதிர்கட்சி உறுப்பினராக இருந்த காலத்திலும் கூட தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியதை அவருக்கு நன்றியுடன் நினைவு கூர்ந்து இந்த விடயத்திலும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டினோம். விடயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்ட பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக தமது பதவிக்காலத்தில் இந்தப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்தார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

16 பிரேரணைகள் அடங்கிய பிரகடனம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியீடு

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் இன்று (08) காலை 10.30 மணிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் நடைபெற்றது.

இதில் திருகோணமலை மக்கெய்சர் வெளியரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் பின்வருமாறு அமைகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்களான நாம், அதிகாரப் பகிர்வு கோரிய எமது தொடர் நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாளான, 8 கார்த்திகை 2022 ஆகிய இன்றைய தினம் (08), வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை முன்வைக்கிறோம்.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களைக் கருத்திற்கொண்டும், 13 ஆவது திருத்தத்தின் சாராம்சத்தைப் பரிசீலித்தும், குறிப்பாக 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியத்துவத்துடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடாத்தலில் ஜி. எல். பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினால் ஒஸ்லோ உடன்படிக்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு” என்பதனை சீர்தூக்கிப் பார்த்தும் இந்தப் பிரகடனம் மக்களின் குரலாக வெளிப்படுகிறது.

தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவந்த இனவாத அடிப்படையிலான அரசியல், மொழி, பொருளாதார, சமூக ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், 2006ல் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13 ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால் இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்டுவரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, கௌரவாமான, உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்:

  1.  வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்
  2.  ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்
  3. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்
  4.  முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் சபையின் தலைமை உறுப்பினராக திகழ்வார்
  5. ஆளுநர் என்பவர் மாகாணத்தின் மக்கள் பிரதிநிகள் சபையைக் கட்டுப்படுத்தாதவராகவும் மத்திய அரசின் கௌரவ பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்
  6. வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்
  7. மாகாண மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்ட அபிவிருத்திசார் சர்வதேச ஒப்பந்தங்களை மாகாண ஆட்சி மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில் சர்வதேச வணிகம், தொழிற்றுறை அபிவிருத்தி, நகரமயமாக்கல் அடங்கலான கட்டுமான அபிவிருத்தி ஆகியன அடங்கல் வேண்டும்
  8. காணி மற்றும் மாகாண ஆட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஏனைய அனைத்து விவகாரங்கள் சாhந்தும் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாகாண ஆட்சிக்கு வழங்கப்பட வேண்டும்
  9. மாகாண அலகிற்கான பொலிஸ், உளவுத்துறை சேவைகள் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்
  10. நீதித்துறை, அரச நிர்வாகம், கல்வி, பொதுச்சுகாதாரம், பொதுப்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், எரிபொருள் அடங்கலான ஏனைய அனைத்து துறைகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு மாகாண ஆட்சிக்குள்ள அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
  11. தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்
  12. தற்போதைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் கரையோரப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மிதக்கும் கடற்படைத்தளங்களை தேவையான கடற்பிரதேசங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் காணிகள் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்படுவதுடன் இயல்புவாழ்வை மீளப்பெற முடியும்
  13. இலங்கையின் மத்திய அரசானது, வடக்கு கிழக்கு மாகாண அலகு பொருளாதாரப் பலம் அடைவதற்காக குறிப்பிட்ட காலம்வரையில் தேவையான நிதிசார் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்
  14. தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் சார்ந்து பொறுப்புக் கூறும் கடப்பாட்டை இலங்கை அரசு கொண்டுள்ளது. எனவே சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஐ.நா.வின் வழிகாட்டலில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நீதிப்பொறிமுறைகளை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்
  15. வடக்கு கிழக்கு மாகாண அலகானது மாகாணத்துக்குள் வாழும் அனைத்து இன, மத மக்கள் மத்தியிலும் சகவாழ்வு, இன-மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய நிலைபேறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்
  16. மத்திய அரசானது, இலங்கை நாட்டின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக வாழ்வு, இன நல்லிணக்கம், சகவாழ்வு, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய மனிதப் பண்புகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் அயலிலுள்ள நட்புநாடான இந்தியாவையும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அடங்கலான மையக்குழு நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா.சபையையும் கோருகிறோம். என மக்கள் பிரகடனம் அமைந்திருந்தது.

 

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை – சம்பந்தன்

இலங்கையில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளதோடு பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.