பிள்ளையானின் கொலைப்பட்டியல் மிக விரைவில்

பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் அவரின் கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.

பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ஐஎஸ்ஐஎஸ் என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.

அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் ஏன் அவர் அதனை உரிய பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

எனது அம்மாவின் தங்கையின் மகன் கோவிந்தராஜன் என்பரை கடத்திச் சென்று படுகொலை செய்த வரைக்குமான அத்துடன் மாநகரசபை உறுப்பினராக நான் கடமையாற்றிய போது எனது பத்திரிகையாளராக இருந்தவரை கடத்திச் சென்று கொலை செய்தது வரையான பல கொலைகள் அடங்கிய பட்டிலை ஆதாரத்துடன் மிக விரைவில் வெளியிடுவேன்.

இன்று பிள்ளையான் தப்புவதற்காக கொஞ்சம் மக்களை ஏற்றிவந்து உங்களது காரியாலயத்திற்குள் வைத்துக் கொண்டு நீங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டு மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவைக்கின்றீர்கள்.

நீங்கள் நல்லவர்கள், குற்றமற்றவர்கள் என்றால் வட கிழக்கில் உள்ள மக்கள் வீதியிலிறங்கி சொல்ல வேண்டும் பிள்ளையான் நல்லவன், உத்தமன் என்று.நீங்கள் பஸ்களில் ஏற்றிவந்தவர்கள் அப்பாவி மக்கள், ஏதாவது கிடைக்கும் என்ற அவாவுடன் வந்தவர்கள்.

இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண தமிழ் மகனுக்கு பாதுகாப்பு இல்லையென்பது விளங்குகின்றது.

அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் சொல்வதை சரியென்று சொல்லவரவில்லை. திலீபன் என்பவர் உலகத்திலேயே ஒரு உன்னதமான தியாகத்தினை செய்த மாமனிதன் தமிழ் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணித்த ஒரு மனிதன்.அந்த தியாகத்தினை உங்களது அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

இன்று வீதிவீதியாக அவரை கொண்டுதிரிகின்றீர்கள்.தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.உங்கள் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இனதுவேசத்தினை கக்கி மக்களை பிரிவுபடுத்தவர வேண்டாம் என தெரிவித்தார்.

ஈரானிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் கலாநிதி இப்ராஹிம் ரைசி ஏற்றுக்கொண்டார்.

ஜே.ஆர் காட்டிய வழியில் பயணித்திருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் – ஜனாதிபதி

மறைந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என்று ஜனாதிபதி ரணி்ல் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வையொட்டி விடுத்துள்ள விசேட செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் பங்கேற்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே, ஜே.ஆர் ஜயவர்தனவின் ஜன்ம தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஜே.ஆர், ஜயவர்தனவின் ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட செய்தியை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பீ. மும்முல்லகே வாசித்தார்.

அதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஜே.ஆர். ஜயவர்தன இந்நாட்டில் சமூக பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். அவர் 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கிக் கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும்.

நாட்டில், ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் அவரது கொள்கை பற்றிய புரிதல் இன்மை காரணமாக, அவரது சமூக பொருளாதார கொள்கைகளின் பலன்களை முழுமையாக அடைய முடியாமல் போனது.

எமது வலயத்தின் இந்தியா , சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகள் ஜே. ஆர். ஜயவர்தனவின் கொள்கைகளையே பின்பற்றின. அந்த நாடுகள் காலத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றன.

1938 களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலுக்கு பிரவேசித்த அவர், 1946 களில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது கெபினட் அமைச்சராக தெரிவானதோடு, டட்லி சேனநாயக்கவுக்கு பின்னர் 1973 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1977 தேர்தலில் இலங்கையின் பிரதமரான ஜே. ஆர். ஜயவர்தன அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார்.

அணிசேரா அமைப்பின் ஆறாவது பொதுச் செயலாளராக அவர் தனது நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் மகத்தானவை. அதனை நினைவுகூருவது பாராட்டப்பட வேண்டியது.” – என்றார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே உதவியது – பிரதீப் ஜயவர்தன

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது.”

இவ்வாறு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனும் ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினருமான பிரதீப் ஜயவர்தன தெரிவித்தார்.

ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில் நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதீப் ஜயவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்துக்கு நாம் பூரண ஆதரவளிக்கின்றோம். எனவே, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.

திருமலையில் திலீபனின் நினைவூர்தி மீது தாக்குதல்; கஜேந்திரன் எம்.பியும் தாக்கப்பட்டார்.

திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று (17) திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, திகோணமலை – கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது.இதன்போது, இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

அந்த பகுதியில் பொலிஸார், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், பொலிஸார் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி இலங்கையில் தமிழர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்புக்கு தீர்மானமில்லை – இராணுவ பேச்சாளர்

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்களின் பெருமளவான காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவ்வப்போது படையினரின் தேவைக்காகக் காணிகளும் அளவீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், வடக்கு, கிழக்கில் அதிகளவான படையினர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதால் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.

அதன்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, அண்மையில் சனல்-4 செய்திச்சேவையினால் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அந்த ஆவணப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை, உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதனால் இதனை சர்வதேச குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சனல்-4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ள ஹன்ஸீர் அஸாத் மௌலானா, இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதுபற்றிக் கருத்துவெளியிட்ட பெத் வான் ஸ்காக், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு எனவும், இதுகுறித்து தாம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உள்நாட்டு பிணையங்கள் Fitch Ratings-ஆல் தரமிறக்கம்

உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தலை Fitch Ratings சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் மேலும் தரமிறக்கியுள்ளது.

இதற்கமைய, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கமைய புதிய வட்டி வீதத்தின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பிணையங்களின் தரப்படுத்தல் ‘C’ மட்டத்தில் இருந்து ‘D’ மட்டத்திற்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்நாட்டு கடனானது, வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலையிலிருந்து – செலுத்தப்படாத நிலைக்கு கீழிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுவரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்படாத உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தல் வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலை வரை தரமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 1591 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Posted in Uncategorized