நீதிபதி சரவணராஜா விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்த்தக் கலந்துரையாடல் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.

நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.

அதுபோல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி சட்டவிரோத மீன்வாடிகள் அமைப்பு! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக மீன்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அங்கு மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்று நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் முன்னாள் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலி பாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி, இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. தற்போது வன இலாகா கையகப்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்து வருகிறார்கள். அப் பகுதியில் இரண்டரை மாதத்திற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வாடி அமைத்து அங்கே தொழில் மேற்கொள்கிறார்கள் என கொக்குதொடுவாய் மீனவர் அமைப்பும் அங்கு தொழில் செய்யும் தமிழ் மீனவர்களும் கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொண்டதோடு எனக்கும் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டபோது கிராம சேவையாளர் அந்த வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகச் கூறிச் சென்றார். ஆனால் சட்டத்தை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் இதுவரை அகற்றப்படவில்லை.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் அதனை அகற்ற கோரி பதாகை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இருந்த வாடியை விட இன்னுமொரு வாடி முழுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வாடிகள் அங்கே பகுதியளவில் போடப்பட்டுள்ளன. இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பெரியதொரு குடியேற்ற திட்டத்தை முறியடிக்கும் விதமாக செயற்படவேண்டும். – என்றார்

நாகை- காங்கேசன் கப்பல் சேவை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜ தந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் புதுடில்லியில் இருந்தபடி நேற்று காலை ஆரம்பித்து வைத்து உரையாற் றுகையிலேயே மேற்கண்டவாறு தெரி வித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.

நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப் பட்டுள்ளது. சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி பேசுகின்றன.

மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியுள்ளார். இந்த படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின்போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது இரு நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல.

இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2015 ஆம் ஆண்டில் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம்.

பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019 இல் தொடங்கியது. இப்போது, நாக பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும். – என்றார்.

40 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே கப்பல் சேவை ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை, 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த கப்பல் மதியம் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மதியம் 1.20 மணியளவில் மீண்டும் நாக பட்டினத்திற்கு 31 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலை இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 இலங்கை ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்த நிலையில் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. அதனால் 40 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

ஹர்த்தால் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்னாயத்த கூட்டம்

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது.

ஹர்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காஸாவின் தற்போதைய நிலை இலங்கையின் இறுதிப் போரின் ஆரம்பத் தருணங்களை நினைவுபடுத்துகின்றது

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன.அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன.விடுதலைப்புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என நம்புகின்றேன் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்யுமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச நாடுகளுக்கு கடிதம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து சர்வதேச சமூகத்துக்கு எழுதியுள்ள கடிதம், வெள்ளிக்கிழமை (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு கூட்டாகக் கடிதமொன்றை எழுதுவதற்கு 7 தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீர்மானித்திருந்தன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகளின் கூட்டுத்தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச சமூகத்துக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம் இன்றைய தினம் (13) உரிய இராஜதந்திரிகளிடம் கையளிக்கப்படுமென கட்சி பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

அதன்படி முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும், தனக்கு அச்சுறுத்தல் இருந்ததை நீதிவான் வெளிப்படையாகவே கூறியிருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ் நீதிபதிக்கு எதிரான இத்தகைய அழுத்தங்கள் அவர் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் எதிரானவை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என்றும், நாட்டின் நீதிக்கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுவதை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் இரவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்தன், ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கும் (Andrew Patrick) இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்

வட மாகாண அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பிரித்தானியா பூரண ஆதரவு

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சிறந்த எதிர்காலம் தெரிவதாகவும் பிரித்தானிய அமைச்சர் கூறியிருந்தார்.

இந்தச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (12) யாழ்.நகரில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியனுக்கு ஆளுநர் விளக்கமளித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் அவர்களும் கலந்துகொண்டார்.

மன்னாரிலிருந்து அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல முயற்சித்த தொழிற்பயிற்சி உபகரணங்கள் ரெலோ தலைவர் செல்வம் எம்.பியால் தடுத்து நிறுத்தம்

மடு கல்வி வலயத்தில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த தொழிற் பயிற்சி உபகரணங்கள் குறித்த தொழிற்பயிற்சி கூடத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் முயற்சியால் வியாழக்கிழமை வியாழக்கிழமை (12) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மன்னார் தொழிற் பயிற்சி அலுவலகத்திலிருந்து அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட தொழிற் பயிற்சி உபகரணங்கள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தமாகிய நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

மன்னார் மாவட்டத்திற்கான தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இளையோர்களின் தொழிற்பயிற்சிக்கு என பல லட்சம் பெறுமதியான அழகு சாதனம் மற்றும் சிகை அலங்காரப் பொருட்கள் வருகை குறித்த நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

எனினும் அவற்றை இங்குள்ள இளையோர்களின் தொழில் முயற்சிக்கு பயன்படுத்தாமல் அஹம்பாந்தோட்டைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வியாழக்கிழமை (12) வாகனமும் வந்தது.

அப்பகுதி இளைஞர் யுவதிகள் மூலம் சம்பவத்தை கேள்விப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு வடக்கு மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் குறித்த பொருட்களை ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்ல இருந்த முயற்சி கைவிடப்பட்டது.

மேலும் குறித்த தொழிற்பயிற்சியை மன்னார் மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.