கூட்டமைப்பின் சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக்கொள்ளாமை தவறான சமிக்ஞைகளை அனுப்பும்:சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தர்மலிங்கம் சித்தாத்தனை 10வது உறுப்பினராக உறுதிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர்கள் தூதுவர்கள் இடையே கலந்துரையாடல்

இலங்கைக்கான 12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த விடயங்களை தெளிவுபடுத்தும் முதன்மை நோக்கத்துடன் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டல்,அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பின்வருமாறு பெயர் குறிப்பிடப்படும் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1. H.E. (Ms.) Sarah Hulton,High Commissioner,High Commission of United Kingdom in Sri Lanka
2. H.E.Denis Chaibi,Ambassador, Delegation of the European Union in Sri Lanka
3. H.E.Michael Appleton,High Commissioner,New Zealand High Commission in Sri Lanka
4. H.E. (Ms.) Julie J Chung,Ambassador, Embassy of the United States of America in Sri Lanka
5. Mr.Anouk Baron,Deputy Ambassador, Embassy of the Kingdom of the Netherlands in Sri Lanka
6. Dr.Francesco Perale,Deputy Head of Mission,Embassy of Italy in Sri Lanka
7. Mr.Vinod Jacob,Deputy High Commissioner,High Commission of the Republic of India in Sri Lanka
8. Mr.Katsuki Kotaro,Minister/Deputy Head of Mission,Embassy of Japan in Sri Lanka
9. Ms.Lalita Kapur,Deputy High Commissioner,Australian High Commission in Sri Lanka
10. Mr.Aurélien MAILLET, Deputy Head of Mission, Embassy of France in Sri Lanka
11. Mr.Daniel Blood,Counsellor (Political), High Commission of Canada in Sri Lanka
12. Mr.Ozaki Takeshi,First Secretary, Embassy of Japan in Sri Lanka.

எதிர்க் கட்சித் தலைவர், கனடியத் தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும் நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இதன்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றிருந்தார்.

பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வ தொடர்பாளராக இருந்ததோடு,பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவராவார்.

அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும்,இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

வறுமையை ஒழிக்க நியூசிலாந்திடம் ஆதரவு கோரிய எதிர்கட்சித் தலைவர்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனுக்கும் (Michael Appleton) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (06) இடம் பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் வறுமையை ஒழிக்க நியூசிலாந்து அரசாங்கத்தின் ஆதரவை கோரிய எதிர்கட்சித் தலைவர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு அரசியலில் தனித்துவ அடையாளத்தை பதித்து எதிர்க்கட்சியின் அரசியல் கட்சி என்ற வகையில் பிரபஞ்சம் மற்றும் மூச்சு வேலைத்திட்டங்கள் மூலம் நாட்டுக்கு பெறுமதி சேர்த்ததை எதிர்க்கட்சித் தலைவரால் நினைவு கூரப்பட்டதோடு, நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் பாராட்டும் கிடைக்கப் பெற்றது.

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை; கிளிநொச்சியில் சஜித்

அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். வீடு, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பெற்று கொடுக்கும் பணியை நாங்கள் முன்னெடுப்போம்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கம் பெற்று மூன்று ஆண்டுகள். இந்த கட்சிக்கு 3 வயது. ஆனாலும், நாங்கள் பல்வேறு திட்டங்களை மக்களிற்கு பெற்று  கொடுத்துள்ளோம். மாணவர்களின் நலன் கருதி 70 பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கியுள்ளோம். வைத்தியசாலைகளிற்கு வைத்திய உபகரணங்களையும், சிமாட்  வகுப்பறைகளையும் மாணவர்களிற்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளனர். இனப்பிரச்சினையாலும், மத பிரச்சினையாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். இதற்கு மேல் நாட்டை கொள்ளையடித்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கும் மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இன்றைய அரசு மக்களின் மனதை அறிந்து செயற்படாத அரசாங்க உள்ளது. இது மக்களிற்கான அரசு அல்ல. அதனால்தான் பொருட்களின் விலையை அதிகரித்தும்,  எரிவாயுவின் விலையையும் அதிகரித்துள்ளது. மேலாக வரியையும் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியானது மக்களை துன்பத்துக்குள்ளாக்கின ஆட்சி.

அரசின் ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறான நிலையில் கரைச்சி, பச்சிலைப் பள்ளி பிரதேச சபைகளின் வெற்றிக்காக இன்று நாங்கள் கூடியுள்ளோம்.

என்னால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள் கடந்த ஆட்சியாளர்களால் தடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியமைத்த பின்னர் அதனை நான் தொடருவேன். அதற்காக எமக்கு ஆதரவினை தாருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணிலுக்கு பைத்தியம்; மக்களின் வாக்குரிமையை தடுப்பவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள்: யாழில் சஜித் உறுதி!

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார பணிகள் நடந்து வந்தன. இது இலங்கையிலுள்ள அனைவரும் தெரிந்த விடயம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டும் தெரியவில்லை. அவர் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. அப்படியிருந்தும், அதில் தலையிட்டு, சர்வாதிகாரமாக தேர்தலை தடுக்கிறார். அரசியலமைப்பை மீறி தேர்தலை தடுக்கும் யாரும் எதிர்காலத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று (23) யாழ்ப்பாணம் ரக்கா வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரச்சார பணிகள் நடந்தது நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களிற்கும் தெரியும். ஒருவருக்கு மட்டும் தெரியாது. அவர் ஜனாதிபதி. அவருக்கு தேர்தலை பற்றி எதுவுமே தெரியாது.

அவர் மாத்திரமே தேர்தல் இல்லை, தேர்தலுக்கு நிதி வழங்கும் அதிகாரம் என்னிடமில்லை., அப்படி நிதி வழங்குவதாயினும் இப்போது நாட்டில் தேர்தலுக்கு அவசியமில்லையென்கிறார்.

இது சர்வாதிகாரமான ஆட்சி முறை.ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரல்ல. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும். தேர்தலை பிற்போடுவதால் வாக்களிக்கும் உரிமை தடுக்கப்படுகிறது. இது அரசியலமைப்பை மீறும் செயல்.

அரசியலமைப்பை மீறும் யாரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறேன்.

தேர்தல் தொடர்பில் தவறான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்கு பொறுப்புக்கூற வேண்டி வரும் என்றார்.

ரணிலுக்கு பைத்தியம்

யாழ்ப்பாணம், மானிப்பாயில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா-

ஜனாதிபதி நினைக்கிறார் தான் விரும்பிய நேரத்தில் தேர்தலை நடத்தலாம், வேட்புமனுக்களை கொடுக்கலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை சந்திக்கலாம் என.

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசி, தேர்தல் செல்லுபடியற்றது என குறிப்பிட்டுள்ளார்.

அவரிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். அப்படி செல்லுபடியற்ற ஒரு தேர்தலுக்கு உங்கள் கட்சி ஏன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் இல்லையென தெரியாதா.

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான கருத்தை முன்வைத்துள்ளார். மக்களின் வாக்குரிமையுடன் விளையாட வேண்டாம். வாக்குரிமை என்பது ஜனாதிபதியினதோ, எதிர்க்கட்சி தலைவரினதோ விருப்பமல்ல. அது மக்களின் அடிப்படை உரிமை.

இன்று பாராளுமன்றத்தில் நடந்த பைத்தியக்காரத்தின் மூலம், தேர்தலை பிற்போடுவதன் பின்னணியில் இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது. ஐ.தே.க, பெரமுனவின் ஜனாதிபதி ரணிலே அவர்.

தேர்தலை பிற்போடுவதை நாம் ஏற்கோம். மக்களின் வாக்களிக்கும் உரிமையுடன் விளையாட வேண்டாம்.

நாட்டில் 220 இலட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் மக்கள் அங்கீகாரமில்லாத ஜனாதிபதியை பொதுஜன பெரமுன தெரிவு செய்துள்ளது. அவர் மக்களின் உரிமைகளுடன் விளையாடுகிறார். அனைத்து மக்களும் இணைந்து ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.

தல்செவன விடுதி அமைந்துள்ள திருகோண சத்திர காணியை மீட்டுத் தர சஜித்திடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் “தல்செவன” விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த “திருகோண சத்திரம்” எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள நிலையில் அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (ஜன 20) இடம்பெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.