நிதி விடுவிப்பினை உறுதிப்படுத்தினால் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தல்

நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களை திறைசேரி பாதுகாக்காது

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் ஆயிரத்து 29 மில்லியன் ரூபாய் எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 மில்லியன் ரூபாயே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை ஏற்றி நிறுவனங்களை நடத்தாது, ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தலுக்கான நிதியை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை – தேர்தல் ஆணைக்குழு

2023 உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக இந்த வாரம் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உறுப்பினர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி கூடுவார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த உறுப்பினர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

கொழும்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நிதி அமைச்சருக்கெதிராக நீதிமன்ற செல்லத் தயாராகும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக, நிறுவன மறுசீரமைப்பு அலகு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

இதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், ஸ்ரீ லங்கன் கேட்டரிங் லிமிடெட், ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி மற்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் அரச நிறுவனங்களில் ஆழமான பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அநுர- சஜித் தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டில் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என இரு கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணக் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​தினசரி 40 அமெரிக்க டொலர்களில் இருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வழங்கப்படும் சாதாரண கொடுப்பனவை 25 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு சார்பில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகவோ அல்லது வெளிநாட்டு விவகாரங்களுக்காகவோ வெளிநாடு செல்லும்போது நாளொன்றுக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறைத்து 10 நாட்களுக்குள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ அரசாங்க விஜயத்தின் போது தூதுக்குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு உரித்தான 750 அமெரிக்க டொலர் உபசரிப்பு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பணம் கொடுக்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கு தம்முடைய அனுமதி போதாது என நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு தனது அனுமதியே போதுமானது என நிதிச் செயலாளர் தமக்கு முன்னதாக அறிவித்திருந்தார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிட தேவையான பணத்தை வழங்க கோரி நிதி அமைச்சுக்கு கடிதம்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை வழங்குமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை அல்லது கூடுதல் தொகையை வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு விடுவிக்க வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்காரணமாக உடனடியாக வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாக கங்கானி லியனகே தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் காலத்தில் பகலில் 35 பொலிஸ் அதிகாரிகளும் இரவில் 28 பொலிஸ் அதிகாரிகளும் தேவைப்படுவதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரச அச்சக அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் – நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.