இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழக்கிழமை (19) மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன். எம்.பிக்களான எம். உதயகுமார், வேலுக்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நன்றிகளை தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;

இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்தினோம். இதன்போது மலையகத்துக்கு இந்திய வம்சாவளித்தமிழர்கள் வந்து 200ஆவது ஆண்டு நிறைவு பெறுவது தொடர்பில் எடுத்துரைத்தோம்.

இந்த நிறைவை முன்னிட்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி என்பவற்றை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், என்பவற்றை பயில்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் மலையக கட்சிகளுடன் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதியை சந்திக்கும் போது இந்த விடயத்தை வலியுறுத்துமாறும் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு மலையகத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனத் தெரிவித்தார்.

மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் – ஜனாதிபதி

தற்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது.

நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார்.

வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.

முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள்.

அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.

அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும்.

ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில், அவரது நியமனத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பு பேரவையில் உள்வாங்கப்படவுள்ள மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில், மலையக இந்திய வம்சாவளி தமிழர் சார்பில் பிரதாப் ராமானுஜத்தின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு உத்தர லங்கா சபாகய கட்சி எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனமானது இழுபறி நிலையில் உள்ளது.

அரசியலமைப்பு சபையில் ஒரு தமிழருக்கும் இடமில்லை – உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம் – மனோ

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு.

ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும். இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.

சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள். ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.

அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.

மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.

உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.

தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார். எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.

இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.

இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில், எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம். இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

மனோ கணேசனுடன் எரிக் சொல்ஹெய்ம் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை நேற்று (16) சந்தித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் நுகேகொடையிலுள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. (a)

தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

அரசை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில் பொது மன்னிப்பில் விடுவிக்க ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – மனோ

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டில் வறுமை நிலை 26வீதமாக அதிகரித்துள்ள நிலையில் மலையக தோட்டப்பகுதிகளில் அது 53 வீதமாக அதிகரித்துள்ளது. அது தொடர்பிலும் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

எனினும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டங்கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

ஏற்கனவே கடந்த தீபாவளியின் போது எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேவேளை அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் பேரில் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் வரவு -செலவுத் திட்டத்தில் மலையக தோட்டப்பகுதி மக்கள் தொடர்பில் எத்தகைய வேலை திட்டங்களும் முன் வைக்கப்படவில்லை.

தற்போதைய நிலைமையில் நிவாரணங்களை வழங்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.

நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பேசப்படும் நிலையில், கிராமப் புறங்களில் அது 36 வீதமாகவும் நகர்ப்புறங்களில் அது 46 வீதமாகவும் காணப்படுவதுடன் மலையகத் தோட்டப்புறங்களில் அது 53 வீதமாகவும் காணப்படுகின்றது.

அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன் தோட்டப் பகுதி மக்களுக்காக அரசாங்கம் எத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அதேபோன்று கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமுர்த்தி உதவி வழங்குவது முறைப்படுத்தப்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள சமுர்த்தி பட்டியலை நீக்கிவிட்டு மின் கட்டண பட்டியலை வைத்து அதற்கான செயற் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் நியாயமானதாக அமையும் என்பதால் அதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

ஈழ, மலையக தமிழர்களின் பிளவுகளை கையாள அரசுக்கு இடமளிக்க மாட்டோம் – மனோ கணேசன்

ஈழத் தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட் டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் எம். பி.

இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னதாக மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், “ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலை யில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம். பி., சித்தார்த் தன் எம். பி. ஆகியோரும் என்னிடம் உரையாடி உள்ளனர். தமிழ் தேசிய கூட் டமைப்பு எம். பிகளின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாக தெளிவுபட எமக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற கருத்து பகிர்வுடன் அது நிற்கிறது. மாகாண சபை, பதின்மூன்று “பிளஸ்” என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகிறது. முப்பது வருட கோர யுத்தம் காரணமாக கடும் மனித உரிமை மீறல்களை வட, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித் துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வட, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம் – இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்கு துணை போய், ஈழத்தமிழ் உடன் பிறப்புகளின் தேசிய அபிலாசைகளுக்கு இடை யூறாக இருக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள். இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய தெளிவான புரிதல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமூக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகிறோம்.

சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது, வட, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அர சாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருப்பதாகக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட்டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும் – என்றுள்ளது.

கொழும்பில் தமிழர்களை பதிவு செய்வதை உடன் நிறுத்த வேண்டும் – மனோ

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் தகவலை வேறு யாருக்கும் வழங்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு பிரதேசத்தில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடுவீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுபோல, பொலிஸார் வீடுவீடாக சென்று பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் யுத்தம் இல்லை. பயங்கரவாத நடவடிக்கை இல்லை. சுதந்திரமாக செயற்படும் இப்போது ஏன் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.  இதுதொடர்பாக ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருக்கின்றேன்.

கொழும்பு நகரில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க முடியாது.

இதுதொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரியை கேட்கும்போது, மேலிடத்து உத்தரவு என தெரிவிக்கிறார். அதனால் தயவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டாம். இதனை நிறுத்துங்கள். பொலிஸ் சட்டத்தை பயன்படுத்தி வீடுவீடாக செல்லவேண்டாம்.

ஏனெனில் பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் அங்கிருந்து கடத்தல்காரர்கள், திருடர்கள் கொள்ளையர்களுக்கு செல்கின்றன. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது பிரதேச மக்களின் தகவல்களை பொலிஸுக்கு வழங்க எனக்கு விருப்பம் இல்லை. தவறு செய்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது சபையில் இருந்த பொதுமகள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதற்கு பதிலளிக்கையில், கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்வது தொடர்பாக என்னுடன் நீங்கள் கதைத்தீர்கள். அதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக நான் தெரிவித்தேன்.

வெளியில் இருந்து வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது யுத்தத்துக்கு முன்பிருந்து இடம்பெறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வெளிப்பிரதேசத்தில் குற்றம் ஒன்றை செய்து, கொழும்பில் தங்கி இருக்கின்றார்களா என கண்டுபிடிக்கவே  மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொலிஸ் பதிவு செய்யும் நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதொன்று அல்ல. அதேபோன்று தமிழ் மக்களின் வீடுகளை மாத்திரம் தெரிவுசெய்து மேற்கொள்வதல்ல.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் என  அனைத்து வீடுகளில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றார்கள். இது சாதாரண விடயமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இதனை தவறாக திசைதிருப்பவேண்டாம். என்றாலும் இதில் ஏதாவது தவறு இடம்பெறுவதாக நீங்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதுதொடர்பாகவும் நான் மீண்டும் தேடிப்பார்த்து, உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றார்.

தொடர்ந்து மனோகணேசன் எம்.பி உரையாற்றுகையில், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்று இருக்கும் போது உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த நடவடிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். அத்துடன் உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களை 10நாட்களுக்கு வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  இந்த வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8ஆயிரத்தில் இருந்து 4ஆயிரமாக குறைக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் நிலை இருக்கின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது.

தொகுதி வாரி முறை தேர்தலை நாங்கள் கோரவில்லை. அவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக இருந்தால் மீண்டும் பழைய முறையிலான விகிதாசார தேர்தல் முறைக்கே செல்வோம். அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

ஜனாதிபதி மலையகம் வரும் போது போது பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -மனோ

இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.