அமெரிக்க ஒத்துழைப்பில் கொத்மலையில் காலநிலை மாற்றம் தொடர்பில் சர்வதேச பல்கலைக் கழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான திட்ட வரைபை தயாரித்துள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த சர்வதேச பல்கலைக்கழத்தை அமைப்பதற்காக 400 ஏக்கர் நிலப்பரப்பு கொத்மலை பிரதேசத்தில்  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு விஜயம் செய்த காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தலைமையிலான குழுவினர் பல்கலைக்கழத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் முன்வந்துள்ளது

மேலும், அமெரிக்க பல்கலைக்கழங்களின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க தூதரகம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிடம் உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே  அடையாளப்படுத்தப்பட்டுள்ள 400 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக மேலும் 200 ஏக்கர் காணியை பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கபட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் ஸ்தாபிக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழத்தின் வதிவிட வசிதகள் உட்பட அனைத்து வளங்களையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கும் அரசின் நிவாரணங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்

சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டும் கட்டாயம் நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச நிதி உதவிகள் மூலமான வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்படும் எனும் உறுதிப்பாட்டினை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நலிவடைந்த பிரிவினரை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், அதில் அரசியல் கலந்துள்ளதனால், தமக்கு அதில் நம்பிக்கையில்லாத பட்சத்திலேயே இதனைக் கூறுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையகத்திற்கான வீட்டு திட்டத்தினை மீள செயற்படுத்த உடன்படிக்கை கைச்சாத்து

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில்  ஒரு வீட்டுக்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு சுமார் 28 லட்சம் ரூபாய் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 ஆயிரம் தனி வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக, அந்த திட்டத்தில் எஞ்சியுள்ள வீடுகளை புதிய மதிப்பீட்டு விலையின்கீழ் நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை இன்று (திங்கட்கிழமை) கைச்சாத்திடப்பட்டது.

இதற்கான நிகழ்வு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

“2020 ஆம் ஆண்டில் நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்கும்போது இந்தியாவின் 4 ஆயிரம் வீட்டு திட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது. 699 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

சுமார் 2 ஆயிரம் வீடுகளில் மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அவற்றை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

இதற்கிடையில் கொரோனா அதன்பின்னர் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்திய வீட்டு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இக்கால கட்டத்தில் 3 ஆயிரம் ரூபாய் வரை சீமெந்து விலை அதிகரிக்கப்பட்டது. அன்று ஒரு வீட்டுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் 28 லட்சம் ரூபாய் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலையின்கீழ் எஞ்சியுள்ள வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இது முழுமைப்படுத்தப்பட்ட பின்னர் 10 ஆயிரம் வீட்டு திட்டமும் வெகுவிரைவில் அமுல்படுத்தப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடன்படிக்கையான 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமென்பது சர்வதேச உடன்படிக் கையாகும்.

இந்த திருத்தச்சட்டம் நாட்டின் அரசியலமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால், வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் பயன் கிட்டும். எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ அமுல்படுத்த வேண்டும் – என்றார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துக – திகாம்பரம்

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் அதற்கு தாம் ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயத்தை அமைச்சரவையில் இருந்தபோதும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன் என்றும் பழனி திகாம்பரம் தெரிவித்தார்

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசாத ரணிலின் சர்வகட்சி மாநாட்டை மலையகக் கூட்டணி புறக்கணிப்பு

ரணில் விக்கிரமசிங்கவின் சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளாது என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.ஆனால், மலையக தமிழரின்  அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை.

இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.

ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தராசு சின்னத்தில் களமிறங்குகின்றது மலையக அரசியல் அரங்கம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

எண்பதாண்டு காலமாக உள்ளுராட்சியில் நீதி மறுக்கப்பட்டிருந்த மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பிரதேச சபைச் சட்டத்திருத்தின் ஊடாக வென்று எடுத்த நீதியை நிலைநாட்டவும் நுவரெலியா மாவட்டத்தில் வென்றெடுத்த புதிய பிரதேச சபைகளிலாவது திருத்தப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவும் மக்களுக்கு நீதி வேண்டி தராசு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்கள் இருவர் பதவிப்பிரமாணம்

 புதிய அமைச்சர்களாக ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா தேவி வன்னியாரச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா தேவி வன்னியாரச்சி பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த அமைச்சுப் பதவியை வகித்த மஹிந்த அமரவீர, புதிய அமைச்சரை நியமிக்க ஜனாதிபதிக்கு அனுமதியளித்து இன்று(19) காலை இராஜினாமா செய்திருந்தார்.

மலையக தியாகிகளை நினைவு கூர்ந்தனர் யாழ் பல்கலை மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (12) நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் குறித்த நினைவேந்தலில் நினைவுகூரப்பட்டதோடு 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் “மலையக தியாகிகள்” என அடையாளபடுத்துகின்ற நிலையில் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தில் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையின் பேரில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது உயிரை தியாகம் செய்த முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகம் ஜனவரி 10 ஆம் திகதி நடந்தது.

மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த இத்திகதி மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை டெவனில் நடைபெற்ற நினைவேந்தலின் போது தீர்மானிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு மஸ்கெலியாவில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு பத்தனை சந்ததியில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு கொட்டக்கலை கொமர்சியல் பகுதியில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையப்படுத்தியே குறித்த நினைவேந்தல் யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது மலையக வாழ மக்களின் அறப்போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்திற்க்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதன்பொழுது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தின்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை

வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியவுடனேயே, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், வடக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நாட்டின் சகல அரசியல் கட்சிகளினதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கமைய, வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நேரடி ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் , எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஈடுபடுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.