இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது – ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஒரு வார காலமாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

நிதியத்தின் இலங்கைக்கான முதலாம் கட்ட கடனுவியை தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள பரந்த மக்கள் தொகையை சென்றடையும் வகையில் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மேம்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சொத்து வரியின் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை வேகமாக பூர்த்தி செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடாத்த முதுகெலும்பில்லாத ஜனாதிபதி ரணில் – சஜித் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் யார் என தெரியாமல் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் குழப்பமடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிக்கும் ரணில் – விமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கினார்.

இந்த தீர்மானத்தை நாட்டு மக்களும், பாராளுமன்றமும் அப்போது அறிந்திருக்கவில்லை.

நாட்டுக்கு எதிராக ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

அந்த வாக்குறுதிகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவித்தார்கள்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \ 1 தீர்மானத்துக்கு இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டில் இருந்து இலங்கை விலகியுள்ள நிலையில் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களில் பல சட்ட வகிபாகத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆகவே இராணுவத்தினருக்கு எதிராக எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். பொய் சாட்சியம் வழங்கலாம்.சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், யுத்த வெற்றியை பிரதான தேர்தல் பிரசாரமாக கொள்ளும் ராஜபக்ஷர்கள் இராணுவத்தினருக்கு எதிரான சட்டமூலங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்.

ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

தொழிலாளர்களிடம் பிக்பொக்கட் அடித்து வெளிநாடுகளில் விநோதங்களில் ஈடுபடும் ஜனாதிபதி – சஜித் குற்றச்சாட்டு

சுகாதார தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை நிறைவேற்ற பணம் இல்லை எனக் கூறும் அரசாங்கம், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67ஆவது கட்டமாக, கலாவெவ சிறிமாபுர மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும்

இன்றைய நிகழ்வில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,

”கூலித்தொழிலாளர்களின் அன்றாட வருமானத்தை பிக் பொகட் அடித்துக் கொள்ளும் அரசாங்கமே நாட்டில் உள்ளது. இன்று நாள் முழுவதும் நடைபெற்று வரும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நோய்வாய்ப்பட்ட சமூகத்தால் மருந்துகளைப் பெறமுடியவில்லை.

சுகாதார சேவையே இந்நேரத்தில் நாட்டுக்குத் முக்கியமான தேவையாக இருந்தாலும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒதுக்கீடுகளே வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வாறு போதாது எனக் கூறும் அரசாங்கத்திடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்கும் போதாதது எனக் கூறுகிறோம். பலவீனமான தலைமைத்துவத்தினாலயே சுகாதார சேவை முடங்கியுள்ளது.

நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி – ரணில் இடையே சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்த வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி, The Climate Reality Project இன் நிறுவனரும் தலைவருமான அல் கோர் (Al Gore) ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியும் தூதுவருமான ஹிமாலி அருணதிலக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உலகளாவிய தலைமைத்துவ தோல்வியின் விளைவுகளை வளர்ந்து வரும் நாடுகள் சுமக்க வேண்டியுள்ளது – ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக முன்வரும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறை முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் உயர் மட்ட மற்றும் நிலையான கொள்கையை உத்தரவாதம் செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுவிஸ்சர்லாந்தின் டாவோஸ் நகரில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற “பசுமை தொழில்நுட்ப மன்றத்தில்” (Green Tech Forum) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இதனை சுவிஸ் – ஆசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

‘எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுத்தல்’ என்ற தொனிப்பொருளில் தனது உரையை ஆற்றிய ஜனாதிபதி, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் உயர் ஆற்றல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு உகந்த முதலீட்டுடன் கூடிய சூழலை ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் முன்வைக்கப்பட்ட “வெப்பமண்டல முன்முயற்சி” உட்பட ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

இலங்கை தனது நிலையான, பசுமையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான இலட்சியத் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

துரித புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டம் இந்த முழு முயற்சியின் ஒரு முக்கிய அங்கம் என்றும், இது வலுசக்தி பாதுகாப்பிற்கான பாதையில் இன்றியமையாத நடவடிக்கை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு:

இந்த விரிவுரையை வழங்க என்னை அழைத்த சுவிஸ் – ஆசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்நிகழ்வின் அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

காலநிலை மாற்றத்தைத் தணிக்க உலகளாவிய நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த பல உலகளாவிய மன்றங்கள் உள்ளன. இருப்பினும், இதற்காக அர்ப்பணிப்பதை விட செயற்படுவது குறைந்த மட்டத்தில் உள்ளது என்று சொல்ல வேண்டும். உலகளாவிய தலைமைத்துவத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியின் விளைவுகள் பெரும்பாலும் பூகோள தெற்கின் வளர்ந்து வரும் நாடுகளுக்கு சுமக்க நேரிடுகிறது.

பொதுவான காலத்தை விட வறட்சி, நீண்ட காலம் நீடிப்பது விவசாய உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும் போது நமது உணவு பாதுகாப்பு ஆபத்தில் தள்ளப்படுகிறது. மேலும், தாமதமான பருவமழை காரணமாக நீர்மின் உற்பத்தி தடைபடும்போது நமது வலுசக்தி பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது.

வறட்சியின் நிறைவில் வெள்ளம் நிலைமை ஏற்படுகிறது. குறிப்பாக, சாதாரண மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைக்கிறது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகள் அசாதாரணமானது என்பது இதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

காலநிலை நீதி தொடர்பான பிரச்சினையைப் போன்று அதனை தணிக்கவும் பூகோள தெற்கின் நாடுகளுக்கு மேம்பட்ட பொருளாதாரங்களின் வலுவான பங்களிப்பின் அவசியத்தையும் இது காட்டுகிறது.

காலநிலை மாற்றத்தைத் தணிக்க இலங்கை உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்த வேண்டும். டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் “வெப்பமண்டல முன்முயற்சி” ஆரம்பிக்கப்பட்டது. இது வெப்பமண்டல நாடுகளில் காடுகள், வலுசக்தி, சமுத்திரம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை உருவாக்குகிறது.

அத்தகைய முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமான, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நமது முயற்சிகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, இலங்கை நீர்மின் உற்பத்தியில் விரிவான வலையமைப்பை உருவாக்கியது. 1950 இல் அதன் முதல் பாரிய நீர்மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இது நான்கு நீர்த்தேக்கங்களைக் கொண்டுள்ளது. அதன் பின்னர் நாட்டின் ஆற்றல் தேவைக்காக மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தோம். இவ்வாறு ஐந்து பிரதான நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு ஆறாவது நீர்த்தேக்கமாக வளவே கங்கை திட்டம் இணைக்கப்பட்டது. மகாவலி கங்கைத் திட்டத்தின் இறுதிக் கட்டம் ஏழு வருடங்களுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டது. இதனால், நீர்மின்சாரத்திற்கு கிடைக்கும் மூலங்களைப் பயன்படுத்தியுள்ளோம்.

இன்றும், இலங்கையின் மின்சார உற்பத்தித் திறனில் சுமார் 40% நீர்மின்சாரமாகும். நீர் மின்சாரம் உகந்த அளவில் பயன்படுத்தப்பட்டதால், காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியை தேசிய மின் கட்டமைப்பில் ஒருங்கிணைக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தற்போது இந்த செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. இந்த இலக்கை அடைய 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இருப்பினும், அண்மைக் காலம் வரை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியார் துறை முதலீட்டிற்கான கட்டமைப்பு மிகவும் சாதகமாக இல்லை.

கடந்த 2 ஆண்டுகளில், இந்த குறைபாடுகளை சீர் செய்யவும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைக்கு உகந்த முதலீட்டு சூழலை உருவாக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நிதி மறுசீரமைப்புகள்

அதன் முதலாவது முன்னெடுப்பாக, செலவு பிரதிபலிப்பு கட்டண முறையை உருவாக்க வேண்டும். 2014 மற்றும் 2022இற்கு இடையில், இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் இலங்கை மின்சார சபைக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதுடன் சில சந்தர்ப்பங்களில் மின்சார விநியோகஸ்தர்களுக்கான கொடுப்பனவுகளில் தாமதம் ஏற்பட்டது.

இருப்பினும், ஒகஸ்ட் 2022 முதல், இது செலவு-பிரதிபலிப்பு விலை சூத்திரத்திற்கு மாறியது. அதன்படி, எதிர்கால மின் உற்பத்தி செலவைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு காலாண்டிலும் மின் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்த இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டு இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியதன் மூலம் ஏற்கனவே இருந்த கடன்களை கணிசமான அளவில் செலுத்த முடிந்தது.

இந்த நிறுவனம் இப்போது வலுவான இருப்புநிலை மற்றும் வலுவான பணப்புழக்க நிலை மற்றும் நிதி பணப் புழக்கத்தை உறுதி செய்யும் கட்டண அறவீட்டு முறையொன்றைக் கொண்டுள்ளது. உள்ளக மறுசீரமைப்புகள், பசுமை நிதியை ஈர்ப்பதற்கான கட்டமைப்பையும் நாங்கள் தயாரித்து வருகிறோம்.

நிலையான நிதிக்கான வரைபடம், பசுமை நிதி வகைப்படுத்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான முதலீட்டாளர் வரைபடம் (SDG) மற்றும் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பசுமைப் பிணைப்புக் கட்டமைப்பிற்கான வரைப்படம் ஆகியவை ஊடாக இலங்கைக்கு பலமான காலநிலை நிதியியலைப் பலப்படுத்தி தேவையான சூழல் உருவாக்கப்படுகிறது. நிலையான நிதியுதவியை வழங்குவது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடுகளுக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும்.

சட்ட மறுசீரமைப்புகள்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் பாரிய அளவிலான தனியார் துறை முதலீடுகளுக்கு சட்டரீதியான தடைகள் உள்ளன. 2022 இல் கொண்டுவரப்பட்ட மின்சாரச் சட்டத் திருத்தம் அந்தச் சட்டத் தடைகளை நீக்குவதற்கான இரண்டாவது படியாகும்.

நிறுவன மறுசீரமைப்புகள்

மூன்றாவதாக, இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் இறுதிக் கட்டத்தில் அரசாங்கம் உள்ளது. இது மின்சார சபையின் விநியோகம், உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தில் அதிக நிதி மற்றும் செயல்பாட்டு சுதந்திரத்தை உருவாக்கும். இதன் விளைவாக போட்டித்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஏற்படும்.

மின் உற்பத்தியில் தனியார் துறை பங்களிப்பு ஏற்கனவே நடைபெற்று வருகிறது, இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் தனியார் துறை பங்கேற்புக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்த பாரிய மறுசீரமைப்புகள், நுகர்வோர் மற்றும் மிகவும் போட்டி மற்றும் திறமையான மின் உற்பத்தியாளர்களுக்கு அதிக உற்பத்தி வாய்ப்புகளை உருவாக்குகின்றன. மின்சார சபை திறமையாக செயல்படுவதையும் இது உறுதி செய்கிறது. இந்த மறுசீரமைப்புக்கான சட்ட வரைவு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்

குறிப்பாக 2026 ஆம் ஆண்டளவில் நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக, கட்டமைப்பின் செயல்திறனை மேம்படுத்தவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைக்கவும் மேம்பாடுகள் அவசியம். களஞ்சியப்படுத்தல், பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும் முதலீடு தேவைப்படுகிறது. 2030 ஆம் ஆண்டு வரை இந்த ஒருங்கிணைப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் செயல்படுத்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

எதிர்கால நோக்கு

கடந்த இரண்டு ஆண்டுகளில் வலுசக்தி துறையில் செயல்படுத்தப்பட்ட முக்கிய மறுசீரமைப்புகள் இந்தத் துறையில் மீண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாரிய அளவிலான சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனம் 350 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளது. இது 2025 இல் தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் 750 மில்லியன் டொலர்களை காற்றாலை ஆற்றலில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி காற்றாலை மின்சாரம் இலங்கைக்கு பெரும் வாய்ப்பை வழங்குகிறது.

குறிப்பாக கடலோர காற்றாலை மின்சாரத்தின் ஊடாக இலங்கைக்கு தேவையை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாத்தியம் உள்ளதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுசக்தி தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் முற்போக்கான கட்டத்தில் உள்ளது. மேலதிக மின்சாரத்தை, குறிப்பாக இந்தியாவின் தென்பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைப் பகுதிக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது.

சூரிய சக்தி மின்உற்பத்திக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது சுமார் 40 ஜிகாவொட் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூரைகளில் பொருத்தப்படும் சூரிய தகடுகளினால் உருவாக்கப்படும் ஆற்றலைத் தவிர, சூரிய சக்தி ஆற்றல் சுமார் 200 ஜிகாவாட் ஆகும். அதன்படி, மொத்த அளவை அதிகரிக்க வேண்டும். இது இலங்கையின் காற்றாலை சக்தியை விட அதிகம். இலங்கையில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமைஆமோனியாவின் சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

இலங்கையின் நிலையான, பசுமையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கைக்குரிய திட்டங்கள் உள்ளன. 2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இலங்கை உறுதிபூண்டுள்ளது.

துரித புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டம் இந்த முழு முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இது ஆற்றல் பாதுகாப்பிற்கான இன்றியமையாத படியாகும்.

இலங்கை தற்போது வறட்சிக் காலத்தில் அதிக விலைகூடிய எரிபொருளைச் சார்ந்து இருப்பதால், இந்த புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஆதாரங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இலங்கை தற்போது காலநிலை மாற்றத்தைத் தணித்தல் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது பசுமை ஆற்றலுக்கான தற்போதைய வாய்ப்புகளை மேலும் திறந்து விடும்.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கொள்கையின் திசையை பல்வேறு உந்துதல்களும் பங்குதாரர்களும் ஆதரிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. எனவே, முதலீட்டாளர்கள் இந்தத் துறையில் உயர்தரம் மற்றும் நிலையான கொள்கையை எதிர்பார்க்கலாம். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம். மேலும் இதுபோன்ற முதலீடுகள் எதிர்வரும் தசாப்தங்களில் அதன் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் அதிக வருமானத்தை தரும் என்பதில் எனக்கு எதுவித சந்தேகமும் கிடையாது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி; கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் – நிலாந்தன்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

-நிலாந்தன்

பொது வேட்பாளராக களமிறங்கும் ரணிலுக்கு சஜித்தும் ஆதரவளிக்கலாம் – ரவி கருணாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது, அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

அதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

அதனடிப்படையில் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகள் சார்பற்ற பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டினை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வல்லவரான அவருடைய அர்ப்பணிப்பையும், சேவையையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் அவருக்கு பகிரங்கமான ஆதரவை வெளியிட வேண்டும் என்று கோருகின்றோம்.

விசேடமாக சஜித் பிரேமதாச கூட கட்சிசார்பற்ற ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அவரை ஆதரிப்பதற்கு எவ்விதமான தடைகளையும் நாம் ஏற்படுத்தப்போவதில்லை.

தற்போதைய சூழலில் நாட்டின் வரிசையுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை விரைந்து பொருளாதார முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஆகவே அவருடைய அர்ப்பணிப்பான அரசியல்சேவை தொடர்வதன் ஊடாகவே நாட்டை மீண்டும் நிலைக்கு கொண்டு வரமுடியும் என்றார்.

அரசியல் கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் பொதுமன்னிப்பு

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதியால் தமிழ் அரசியல் கைதிகள் மன்னிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதன்சேகர் மார்ச் 29, 2023 அன்று அவசரகால (இதர விதிகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கிருபாகரன் குற்றவாளி என கண்டறியப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார், ஆனால் ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் விரைவில் பாரிய மாற்றம் – ரணில் விக்கிரமசிங்க

புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று சனிக்கிழமை (06) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.