மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பேன்; பதவியேற்ற பின் வட மாகாண ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் தெரிவித்தார்.

அனைத்து மதங்களும் தங்களுடைய மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல மாகாண மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்களின் கொண்ட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக வடக்கு மாகாண அவைத்தலைவர் எடுத்துக் கூறியிருந்த நிலையில் அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக தான் உணர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாண ஆளுநர்கள் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும் கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் வயம்ப ஆளுநராக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்த்க்கது.

Posted in Uncategorized

வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே இவ் விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 11 ,12,13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச உள்ளதாகவும் அதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்படும் கூட்டமாக அமைந்துள்ளது.

எங்களைப்பொருத்தவகையில் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது, வடக்கு கிழக்கு எமது தாயக பூமி.

எங்களுடைய தமிழ் மக்கள் ஒரு இனப்பிரச்சினை சார்ந்து நாங்கள் வடக்கு கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொது மக்களும் மரணித்தார்கள்.

எனவே வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பாகவும் வடக்கில் இடம் பெறுகின்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வு எடுப்பதற்கான விடையங்கள் குறித்து எடுக்கப்படுகின்ற முயற்சிகள் காலத்தை கடத்துகின்ற ஏமாற்றுகின்ற செயல்பாட்டை கையால் வதாகவும் அமைந்துள்ளது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல், வடக்கு கிழக்கில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைக்கின்றோம்.

கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்க கூடும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு இவ் விடையம் குறித்து ஆராய உள்ளது.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகார பரவலாக்கல் தொடர்பாக, பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டும்.என்பது எமது கோரிக்கை.எனவே கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும்இஅந்த முயற்சி தோல்வியடையும்.

எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.

வடக்கு கிழக்கு இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடலை நடத்த வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய காலத்திற்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும். இல்லை என்றால் எதிர்வரும் 11,12,13 ஆகிய திகதிகளில் இடம்பெற உள்ள கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து வடக்கு கிழக்கில் போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக கூறினார்.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள என்றும் அதேபோன்று வடக்கு, கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

வட மாகாண சுற்றுலா துறை நிறுவனங்கள் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும் நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகமும் இணைந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் யாழ் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறையில் மேம்படுத்தும்நோக்குடன் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களை சட்டரீதியாக பதிவு செய்வதன் ஊடாக அவற்றை ஒழுங்குபடுத்தலை நோக்காக கொண்டு இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் காணப்படும் சுற்றுலாத்துறை சேவையை வழங்கும் நிறுவனங்களுள் பதிவுசெய்த நிறுவனங்கள், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் முறைப்படியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .

மேலும் இலங்கை இந்திய போக்குவரத்து விரிவுபடுத்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனால் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள அதிகமான சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் இவ் விழிப்புணர்வு கலந்துரையாடல் மூலம் அதிகமாக சுற்றுலாத்துறைச்சேவையை வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலா பணியக உதவிப் பணிப்பாளர் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறைச் சேவையை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்களை பாதுகாக்க மாகாணத்திற்கு உரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – சுரேந்திரன்

வடக்கு மாகாணத்திற்கு உரித்தான மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை உதாசீனம் செய்யாது பாதுகாக்க மாகாணத்திற்குரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று திண்ணை விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற 13திருத்தத்தின் சாதக பாதங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண மக்களின் பூர்வீக நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றம் விகாரையின் கட்டுமானங்கள் நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையிலும் மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து விகாரை அமைத்து யாவருக்கும் தெரியும்.

13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக நாம் ஏற்கவில்லை சிலர் அரசியல் நீதியில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக பதின் மூன்றை ஏற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.

தமிழ் மக்களுடைய குறைந்தபட்ச இருப்புக்களையும் அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக 13திருத்தம் அவசியம்.

வடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளை வரலாற்று இடங்கள் என்ற போர்வையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன.

அதனை தடுப்பதற்கு மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்கினாலும் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் இல்லாத நிலையில் மத்திய பொலிஸ் உயர் அதிகார வர்க்கங்களின் உத்தரவில் தீர்ப்புக்களை உதாசீனம் செய்கிறது.

ஆகவே அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மாகாண பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் போதுமாவட்ட நீதிமன்றங்களின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு,கிழக்கில் பெளத்த மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் விசேட கூட்டம்

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட,கிழக்கு மாகாணங்களை பெளத்த மயமாக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரின் மத, பண்பாட்டு, கலாசார அடையாளங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சு அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்காமல் நாணய நிதிய கடனுதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை காரணம் ஐெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச ,சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச போன்ற ஐனாதிபதிகளின் காலத்திலும் கிடைத்தது ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல்ப் பெருச்சாளிகளே வளர்ந்தன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை  உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை கிடைத்த உதவியை விட பெருந் தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இவ் உதவி பல கடிமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் தான் இலங்கைக்கு கிடைக்கின்றது இதனால் சிறிது காலம செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி வெடிப்புக்களும் நடைபெறுவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள் நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே, கிடைக்கும் கடன் உதவி ஊழல் வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.