இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட விரும்பினால் அதை தடுக்க மாட்டோம். ஆனால் கூட்டமைப்பின் சின்னமாக தொடர்ந்து குத்துவிளக்கு சின்னம்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டில் ஆனந்தசங்கரி, கருணா செய்ததை போல, தற்போது தமிழ் அரசு கட்சியும் தமிழ் மக்களிற்கு துரோகமிழைத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இன்று மட்டக்களப்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் முரண்பாடுகளின் மத்தியில் இருந்து ஆயுத இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தனர். விடுதலைப்புலிகள் முப்படைகளுடன் மிகப்பலமாக இருந்த காலப்பகுதியில், தமிழர்களிற்கு பலமான அரசியல் குரலும் இருக்க வேண்டுமென்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
முதன்முதலாக 2002ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டது. 2004ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி தனது கட்சியையும், சின்னத்தையும் தூக்கிச் சென்றார்.
2004ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிளவடைய வைத்தார். அந்த நேரம் கூட, தமிழ் மக்களிற்கு பெரிய பாதிப்பேற்படவில்லை. புலிகள் மிகப்பலமாக இருந்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
2010ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் வெளியேறினார். 2015 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது. 2016 இல் விக்னேஸ்வரன் வெளியேறினார். இருந்தும் 3 கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்ட நிலையில், தமிழ் மக்கள் மிக பலவீனமாக இருக்கும் இந்த நிலையில்- சர்வதேச அழுத்தங்கள் மூலம் தமிழ் மக்களிற்கு நிரந்தரமான தீர்வை பற்றிய பேச்சை ஆரம்பிக்கக்கூடிய நிலையில்- இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து வெளியேறியுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என தமிழ் அரசு கட்சி கூறுகிறது. தமிழ் அரசு கட்சியுடன் மாத்திரமல்ல, இன்று பிரிந்து நிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், விக்னேஸ்வரன் தரப்பு உள்ளிட்ட தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். ஆனால் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களிற்கும் இழைத்த துரோகங்களை மறக்க மாட்டோம்.
2004 இல் ஆனந்த சங்கரி, கருணா போல, தற்போது தமிழ் அரசு கட்சி இழைத்த துரோக அனுபவங்கள் எமக்குள்ள காரணத்தினால், எவருடைய கட்சி சின்னமும் அல்லாமல் பொதுவான சின்னமான குத்துவிளக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்கிறது. தமிழ் அரசு கட்சி தேர்தலின் பின்னர் மக்கள் புகட்டும் பாடத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படலாம். ஆனால், குத்துவிளக்கு சின்னம்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக இருக்கும்.
வீட்டு சின்னத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது எனத் தெரிவித்தார்