இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் – எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உழவர்கள் தங்கள் உழவுக்கு உதவிய சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றியறிதலாக தை முதலாம் திகதியை தைப்பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பொங்கல் விழாவானது, மனிதனுக்கும் மற்றும் இயற்கைக்கும் உள்ள உன்னத உறவை புலப்படுத்துவதாக அமைகிறது.

அனைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவும்,பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய நட்பின் அடையாளமாகவும் தை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார அடையாளத்தை பேணுவதுடன்,மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை அடையாளப்படுத்துவதாகவும் அமைகிறது.

மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகத்தின் நட்புணர்வைப் புதுப்பிப்பதுடன்,எதிர்கால வெற்றிக்கான ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பெறுவதற்கு ஏதுவாக தைத்திருநாள் அமைகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடியான இக்காலகட்டத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு அளப்பரியது.ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வதற்கான நாளாக தைத்திருநாள் அமையப் பிரார்த்திப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு அமைவாக இலங்கையர்களாக இனம் – மதம் கடந்து சகோதரத்துவத்துடன் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி,நாட்டை ஒன்றாய் முன்னோக்கி கொண்டு செல்ல உறுதி பூணுவோம்.

இனம்,மதம்,சாதி போன்ற குறுகிய வேறுபாடுகளை மறந்து இயற்கையோடு இணைந்து வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,அனைத்து இந்து பக்தர்களுக்கும்,உலக மக்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் புனர்வாழ்வு சட்டமூலம் – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில்  உள்வாங்கப்பட்டுள்ள தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள். முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுபடும் தரப்பினர், ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை மீளப்பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என எதிர்க்கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நம்புகிறேன்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சபைக்கு மீண்டும் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

இந்த சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகார்கள்,முறையற்ற மற்றும் வன்முறைகளில் ஈடுப்படும் நபர் என்ற சொற்பிரயோகங்கள் தொடர்பில் எமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

சுதந்திர மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களை அடக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே இந்த சட்டமூலம் மக்களாணை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

போதைப்பொருளை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் உரிமைகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்திற்கு அமைய சட்டமூலத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இளைஞர்களின் போராட்ட உரிமைகளை முடக்க வேண்டாம்.ஆகவே இந்த சட்டமூலத்தில் உள்ள குறைப்பாடுகளினால் தான் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதற்கமைய இன்றைய தினம் சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவில்லை.

ஆகவே குறைபாடுகள் இல்லாமல் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற எண்ணக்கருவிற்கு அமைய சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று,நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல,சபைக்கு சமர்ப்பித்துள்ள சட்டமூலத்தை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலத்தின் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

10 வருட காலத்திற்கு முன்னர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை அப்படையாக கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.இந்த சட்டமூலத்தில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்படாத வகையில் முன்னெடுக்கப்படுகிறது. புனர்வாழ்வளித்தல் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்பட்ட வகையில் அமைய வேண்டும் என்பதற்காக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள்,முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுப்படும் தரப்பினர்,ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு  அறிவித்துள்ளோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை – சஜித் பிரேமதாச

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம்.

ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும்,இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான வெற்றி எழுச்சிக்கான தனித்துவமான ஆண்டாகவும் 2022 ஆம் ஆண்டை குறிப்பிட முடியும். இந்த உன்னத எழுச்சிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

ஒரு நாடாக, நாம் பல சவால்களுடன் 2023 ஆம் ஆண்டை எதிர்கொள்கிறோம் நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.

எனவே, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடிய மற்றும் கொண்டு செல்ல வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி புதிதாக நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Posted in Uncategorized

இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் – எதிர்க் கட்சித் தலைவர்

அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம்.

இந்த வருட நத்தார் பண்டிகையை  இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகில் அமைதியின் செய்தியை எடுத்துரைத்து, மனிதர்கள் அனைவரையும் தீமையிலிருந்து காப்பாற்றுவதற்காக உலகிற்கு வந்த சமாதானத் தூதரின் பிறப்பு, அதாவது குழந்தை இயேசுவின் பிறப்பு உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகிறது.

அன்பு, சமாதானம், சகோதரத்துவம் என்ற கருப்பொருளைக் கொண்ட, உன்னதமான நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் சமயப் பண்டிகை மட்டுமல்லாது, இனம், மதம், குலம், நிறம், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலுமுள்ள எண்ணற்ற மக்களால் கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி, தன்னுடைய குமாரனை உலகிற்கு அனுப்பியது, தேவனுடைய ராஜ்யத்தின் மதிப்புகள் மீண்டும் பூமியில் வாழ வேண்டும் என்று இறைவன் எதிர்பார்த்ததனாலாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை டிசம்பர் மாதத்தில் தேவாலயத்தில் மணிகள் ஒலிக்கச் செய்து, இயேசுவின் பிறப்பை மெழுகுவர்த்தி வழிபாடுகளுடன் கொண்டாடுகிறார்கள்.

உலகில் அனைத்து இறைதூதர்களும் ஒரு நல்ல வழியைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களது தர்மத்தின் சாராம்சம் சாந்தி, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் கருணையாக இருந்தது.

இன்று நாம் மிகுந்த பக்தியுடன் நினைவுகூரும் இயேசுநாதர், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த கருணையும் அன்பையும் காட்டிய அற்புதமானவர்.

பகிர்வு பற்றிய அற்புதமான பாடத்தை உலகுக்குக் கற்றுத் தந்த இறைமகன் இயேசு, மனித சுதந்திரத்தைப் பற்றி உலகிற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவரையொருவர் மதித்தல், ஒருவரையொருவர் அன்பாக நடத்துதல், அனைத்து மனித இனத்தையும் சகோதரத்துவத்துடன் நடத்துதல் ஆகிய உன்னத நற்பண்புகளை நடைமுறையில் உலகிற்கு போதித்தார்.

இயேசுநாதரின் கோட்பாடு அன்பு. எனவே, நத்தார் தினத்தை அமைதியின் பருவம் என்றும் கூறலாம். அன்பையும் அமைதியையும் பகிர்ந்துகொள்ளும் பண்டிகையான நத்தார் என்ற உண்மையான

கிறிஸ்தவப் பிறப்பு, அமைதியான, அன்பான இதயங்களுக்கு மட்டுமே என்பது யதார்த்தமாகும். எனவே, நாம் எப்போதும் உண்மையான நத்தார் தினத்தைக் கொண்டாடுவோம். ஆகவே, இந்த வருட நத்தார் பண்டிகையை நாம் இயேசுவை சந்திக்கும் நத்தார் பண்டிகையாக ஆக்குவோம்

சஜித் மாத்திரமே மக்கள் மத்தியில் செல்ல முடியும் – இம்ரான்

நமது நாட்டினுடைய நிலமையினையும் அரசினுடைய நிலமையினையும் பார்க்கின்ற போது திருகோணமலை வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணம் வழங்கும் நிகழ்வானது வரலாற்றில் இடம்பிடிக்கப்படவேண்டிய நிகழ்வு எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவினால் மாத்திரமே இன்று மக்கள் மத்தியில் செல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

‘சுவாசம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 54 ஆவது கட்டமாக முப்பத்தொன்பது இலட்சம் (3,900,000) ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் இன்று வியாழக்கிழமை (22)அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நாட்டை சிங்கபூராக மாற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வெளியில் வரமுடியாமல் இருக்கிறார்கள். அவர்களால் தேர்தல் காலத்தில் பேசப்பட்ட பேச்சுக்களை பார்க்கின்ற போது நகைப்பாக இருப்பதாகவும் தற்போது எதுவும் செய்ய முடியாமல் ஐனாதிபதி, பிரதமர் பதவிகள் மாற்றி அமைச்சரவையிலும் தொடர்ச்சியான மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை அறிவது மட்டுமல்லாமல் தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்த அவர் இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து நாட்டின் பொருளாதார நெருக்கடியிலான சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆளும் கட்சியை விட அதிகமாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உதவுவதாக தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதுவரையில்  48 பாடசாலைகளுக்கு 1602 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்துகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், 22 பாடசாலைகளுக்கு 178 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான தகவல் தொழிநுட்ப கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் இதுவரை 53 வைத்தியசாலைகளுக்கு 2292 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக/நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

தகவல் தொழிநுட்பம்,தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக,பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கிறது எனவும்,போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து கூட இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார்.

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (20) கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில்,பாடசாலை பைகளை பரிசோதிப்பதை விடுத்து,அவர்களுக்கு சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தை தயாரிப்பதே அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளையொன்று வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது,அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும்,நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியதாகவும்,பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயல்படுத்தி வருவதாகவும்,கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்ப மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

காலங்காலமாக,நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளதாகவும்,நம் நாட்டிற்கு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையொன்றே தேவைப்படுவதாகவும், தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்த பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளதாகவும்,அவர்களுடைய சாப்பாட்டு பெட்டிகளை பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு,இலவச சீறுடை திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதி எனவும், இந்நாட்டில் இருக்கக்கூடிய நாற்பத்து மூன்று இலட்சம் மாணவர்களுக்கும் அவ்வாறான திட்டங்களை தான் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாமனைவரும் செயற்பட வேண்டும் எனவும், இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருப்பதாகவும், இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாட்டை உலகில் முதலிடத்திற்கு ஸ்தானப்படுத்துவதே தங்களுடைய கருத்திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் – சஜித்

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான் ஒருபோதும் உடன்பாடில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வடக்கு-கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வியாழக்கிழமை (டிச. 15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் , எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்,
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை தனது சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதற்கு, அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு , சீர்திருத்த செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கும் நல்லாட்சியை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கும் நிபுணத்துவத்தை வழங்குவது அவசியமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்க்ததில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்படுத்துவோம்.

குறுகிய காலத்துக்குள் மக்கள் பலத்துடன் வளர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க இடமளிக்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனம் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இன்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோட்டா கோஹோம், பசில் கோஹோம் என்கிற பெரிய புரட்சியை ஐக்கிய மக்கள் சக்தி செய்தது. குறுகிய காலத்துக்குள் பதிவு செய்யப்பட்டுக் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றி கிடைத்தது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க கோழைகள் சதி செய்கிறார்கள். ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ இருக்கும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி மீது கைவைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். எங்களை அழிக்க நினைப்பவர்கள் மக்களோடு இணைந்து எங்களை அழித்து தோற்கடித்துக்காட்டுங்கள்.

அரசாங்கத்துக்குள்ள தீர்வு மின், நீர் கட்டணங்களை அதிகரிப்பதல்ல. நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எந்தவிதமான தீர்வுகளும் இல்லை. நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை.

அதற்காக அரச நிறுவனங்களின் ஊழியர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாது. அவர்களின் தொழில் உரிமை காதுகாக்கப்படவேண்டும் . அரச, , தனியார் கூட்டுமுயற்சிகளின் ஊடாக நட்டமடையும் அரச நிறுவனங்களை இலாபமடையச் செய்யலாம் .

மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஒற்றையாட்சிக்குள் பிளவுபடாத இலங்கைக்குள், அதிகாரங்களைப் பகிர நடவடிக்கை எடுப்போம். அதேபோல் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பில் அடைப்படை உரிமைக்குள் சேர்ப்போம். மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்காக மக்களோடு ஒன்றிணைந்து வீதிக்கு இறங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கப்போவதில்லை.

மேலும் எமது அரசாங்கத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியப் புதியச் சட்டம் கொண்டுவருவோம். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொடவை தாராளவாதிகள் மறந்துவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.

நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணங்களை மீள நாட்டுக்குக் கொண்டுவருவேன். அத்துடன் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கவும் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பக்கமாக ஐக்கிய மக்கள் சக்தி நிற்பது மாத்திரமன்றி, போராட்டக்காரர்களால் முன்னெடுத்தப் புரட்சியை கையில் எடுத்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்

எனவே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப முடியுமான நாட்டுக்கு உள்ள ஒரே தீர்வு, ஒரே மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அதற்காக அரசாங்கம் ஆரம்பமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

கொள்ளையர்கள் அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் -சஜித்

நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல் தொகுதி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்குள்ள ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

எமது ஆட்சியில் எந்த சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் எமது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் சிறப்பாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

44 இலட்சம் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக எமது ஆட்சியில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை எமது அரசாங்கத்தில் பொறுப்பேற்கவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்பன முற்றாக ஒழிக்கப்படும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக் கூடிய சிறந்த நிபுணர்கள் எம்மிடம் உள்ளனர்.

சர்வ பொருளாதார முறைமையொன்றை ஐக்கிய மக்கள் அரசாங்கம் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தும். ஏற்றுமதியை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.