தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின் அமைதி நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகாரப்பகிர்வு, காணி விவகாரம் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகள் மற்றும் புதைகுழிகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமருக்கான கடிதம் நாளை இந்திய தூதரிடம் கையளிப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்றையதினம்(12) குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.

குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

மேலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் வியாழக்கிழமை(13) இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

பிரித்தானியாவில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முக்கிய சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்கும் அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரத்திற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப் மற்றும் ஜனநாயக போராளிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உறுப்பினர்கள் பிரித்தானியாவின் ஹரோ பிரதேசத்தில் ஒன்று கூடியிருந்தனர்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் (ஜனா) பங்கேற்றிருந்தார்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டணியின் கள நிலவரங்கள்,யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் ரெலோ தலைவரால் வவுனியாவில் திறந்து வைப்பு

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில்  திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட  இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய வகையில் அலுவலகங்களைத் திறக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக வவுனியா அலுவலகத்தை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று  திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் போராளி மறைந்த  சிவகுமாரன், விடுதலைப்புலிகளின் அரசியல் பெறுப்பாளர் தமிழ் செல்வன், அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் அரசியல் கைதியான  அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், முன்னாள் போராளிகள், எழுத்தாளர் மேழிக்குமரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆய்வு ஐ.நா பிரதிநிதிகள் முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள்

கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.

மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.

ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.

குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

வவுனியா மக்களுக்காக முதலீட்டை உருவாக்க முயற்சிப்பதாலேயே சீனித்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு – செல்வம் எம்.பி

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் கஷ்டப்பட வேண்டாம். வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித் தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் – சீனித் தொழிற்சாலை தொடர்பில் 4வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை.

நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் அதில் பெரிதும் விருப்பம் தெரிவிக்கவில்லை . சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்த வரை தமிழீழ விடுதலை இயக்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம்.

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்ப்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை.

வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் தேவையில்லமால் தலையிட வேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும்.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாட்டு பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல தெரிவிக்கின்றோம்.

வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

எங்களைப் பொறுத்த வரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேண்டாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் கவலை பட தேவையில்லை என தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கடிதம் அனுப்ப நடவடிக்கை

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதமொன்றை இவ்வார இறுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கடிதத்தினை ஏனைய தரப்புக்களான இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புக்களுடனும் கூட்டிணைந்து அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பௌத்த மதத்தின் பெயராலும் தொல்பொருளின் பெயராலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய வரலாற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமையும் இதன்போது சுட்டிக்காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த கடிதத்துக்கான வரைவு, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்துக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையொப்பங்களை இடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு புலிகளின் நோக்கத்திற்கேற்பவே இன்றும் செயற்படுகின்றது – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மீண்டும் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர் என்பதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பு என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பு என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போன்று தேசிய கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதிக்கோ, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் இது குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழர் பகுதியிலுள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும் – சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றெழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடகங்களுக்கு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்களில் பல்வேறு தேவைகளுக்கு அகழ்வுகள் மேற் கொள்ளப்பட்ட போது அதற்கான தடையங்கள் பெருமளவில் கிடைத்துள்ளன.

ஆனால் அவையாவும் உரிய நீதி இன்றி மறைக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்தகாலத்தில் மன்னாரில் இரண்டு பாரிய புதைகுழிகளில் தோண்டத் தோண்ட எலுப்புக் கூடுகள் வந்தன ஒன்று திருக்கேதீஸ்வர வீதியில்  நீர்க்குழாய் அமைப்பதற்கான அகழ்வில்  அப்பகுதிக்கு அருகில்  யுத்தகாலத்தில் இராணுவம் இருந்து  முகாமிக்கு அருகில்  உரிய ஆய்வுகள் இல்லாமல் மறைக்கப்பட்டது இண்டாவது சதொச கட்டட அமைப்பதற்கான அகழ்வில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன  அவற்றை ஆங்கிலேயர் காலத்தவை என கதை முடித்தனர்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கான நீதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள அரசாங்கததால் வழங்கப்படமாட்டாது.

எனவே தமிழர் தாயகத்தில் குறிப்பாக சிறிலங்காவில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பௌத்த சிங்கள அரசாங்கத்தால் நீதி கிடைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை அவ்வாறு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் மூன்றாம் தரப்பு மந்தியஸ்தம் அல்லது மேற்பார்வை மூலமே சாத்தியப்படும் இதனால் தாயக புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக மூன்றாம் தரப்பு மேற்பார்வையை உள்ளீர்க்க வலுவான இராஐதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து கையாள வேண்டும். அதுவே புதைகுழி விவகாரம் மட்டுமல்ல அரசியல் தீர்வுக்கும் வழியைத் திறக்கும் – என குறிப்பிட்டுள்ளார்.