உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிறுபான்மையினரை இலக்கு வைக்க உதவும்

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தது,ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதில் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்தை அதிகரித்துள்ளது ஒன்றுகூடல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும் சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைப்பதற்கான கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உடன்படமறுப்பவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் உத்தேச சட்டம் மூலம் உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சபா குகதாஸ்

ஆபிரிக்க நாட்டின் ஒருசில பகுதியிலுள்ளதுபோல இலங்கை மக்களும் அரசுக்கு எதிராக பேச முடியாத நிலையில் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு அமைவாகவே உத்தேச பயங்கரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாதச எதிர்ப்புச் சட்டம் மார்ச் மாதம் 22 ந் திகதி வர்த்கமானயில் வெளியிடப்பட்டதையிட்டு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவிக்கையில்

இந்த சட்ட மூலத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துக்கள் என்னவென்றால் கடந்தகாலம் நடைமுறைக்கு வந்த பயங்கரவாதச் சட்டத்தைவிட மிக மோசமான சரத்துக்களை உள்வாங்கியிருப்பதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதை நோக்கும்போது இன்று இந்த அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஜனநாயக எதிர்ப்பு போராட்டத்தை யாராவது முன்னெடுத்தால் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைவிட இந்தச் சட்டம் ஒருபடி மேலாக காவல்துறை அதிகாரி ஒருவர் எவருக்கும் எதிராக இவர் அரசை விமர்சித்தார் என்ற வகையில் பிரதி மா பொலிஸ் அதிகாரியிடம் கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

பொலிஸ் மா அதிபரின் சிபாரிசில் ஒருவரை மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க முடியும். இதில் அவர் குற்றவாளி எனக் காணப்பட்டால் சுமார் பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாக முடியும்.

இத்துடன் இவரின் சொத்துக்கள் அரச உடமைகளாக்கும் நிலையும் அத்துடன் ஒரு மில்லியன் ரூபா தண்டப்பணமாகவும் தண்டனை விதிக்க முடியும் என இந்த உத்தேச பயங்கரவாதச் தடைசட்டத்துக்குள் உள்ளடக்கப்ட்டுள்ளது.

ஆகவேதான் இது ஒரு ஜனநாயக அடக்கு முறையாக பார்க்கப்படுகின்றது. மேலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்தில் பத்தாவது சரத்தில் ஊடக அடக்குமுறையும் இதில் அடங்கியுள்ளது.

ஆகவே ஜனநாயக நாட்டில் அடக்குமுறை ஒன்று இச்சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறலாம். ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் மக்கள் அவற்றை சுட்டிக்காட்ட முடியாத நிலையே இவ் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாட்டில் ஒருசில பகுதிகளில் மக்கள் இவ்வாறான நிலையில்தான் இருக்கின்றார்கள். இவ்வாறுதான் இலங்கையிலும் மக்கள் இவ்வாறு அடிமைகளாக இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றார்கள் போலும்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டப் பின் தென் பகுதியில் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்துள்ளது. இதற்காகவே எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடு நடக்கக்கூடாது என்ற நிலையில் இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கை அரசு 1979 ம் ஆண்டிலிருந்து 45 ஆண்டுகளாக தமிழர்களை எவ்வாறு அடக்குமுறையில் வைத்திருந்தார்களோ இப்பொழுது நாடடிலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் இவ்வாறு வைத்திருக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள காணி விடுவிப்பு போராட்டங்களைக்கூட முன்னெடுக்க முடியாத நிலைக்கு இச்சட்டம் தடையாக உள்ளது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐ.நா மனித உரிமை சாசனங்களுக்கமைய இயற்றப்படவில்லை – அம்பிகா சற்குணநாதன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களுக்கோ சாசனங்களுக்கோ அமைய இயற்றப்படவில்லை என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வருவதில்லை எனவும், தாமதிப்பதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது அது நல்ல விடயம் என்று தான் நாம் கூற வேண்டும். இந்தச் சட்டமானது இரகசியமான விதத்தில்தான் இயற்றப்பட்டது.

பல உரிமைகளில் தாக்கத்ததை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முதல் அச்சட்டம் இயற்றப்படும் போது மக்களின் அபிப்பிராயங்கள், சிவில் சமூகங்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் ஆகியோரின் அபிப்பிராயங்களையும் எடுத்துதான் சட்டத்தை இயற்ற வேண்டும். ஆகவே இந்தச் சட்டத்திற்கு தற்போது அதற்கான நிலை எழுந்து கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திற்கு மக்கள், நிபுணர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவிமடுத்து, முக்கியமாக, எமது அரசியலமைப்பில் உள்ள உரிமைகள் மீறப்படாமல், இதனை உருவாக்க கடமைகள் உள்ளன.

ஏனெனில் இலங்கை பல்வேறு ஐ. நா சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடமை இருக்கிறது.

இந்த சாசனங்களில் உள்ள உரிமைகளை இலங்கையில் நடை முறைப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமாகும். இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது ஐ.நா மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை.

ஆகவே, அரசாங்கம் இதனை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வராமல், தற்போது இதை நிறுத்தி இவ்வாறான சட்டம் இயற்றுவது என்றால், வெளிப்படையான முறையில் நான் முன்னர் குறிப்பிட்ட அத்தனை பேரையும் இணைத்து அவர்களின் அபிப்பிராயங்களை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு ஏற்றதான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்” – என்றார்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் பயங்கரவாததத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் என்ற பிரிவில் பயங்கரவாதத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இந்த வரைவிலணக்கத்தின் பரந்துபட்ட நோக்கம் இந்த விடயத்தை சிக்கலாக்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் அபிப்பிராயபேதத்தினை வெளிப்படுத்தும் நியாயபூர்வமான செயற்பாடுகளிற்கும் பயங்கரவாத செயற்பாடுகளிற்கும் இடையில் வித்தியாசம் காண்பதை கடினமானதாக்கியுள்ளது எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணங்காதிருப்பவர்கள் சிவில் சமூகத்தினரை இலக்குவைப்பதற்காக அரசாங்கம் பயங்கரவாதம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணத்தை பயன்படுத்தக்கூடும் என மனித உரிமை ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

இது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மீறுகின்றது எனவும் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சுதந்திரமான பேச்சிற்கான உரிமையும் மீறப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணம் பேச்சுசுதந்திரம் நடமாட்ட சுதந்திரம் ஆகியவற்றின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சம்காரணமாக பொதுநலன்கள் குறித்த விடயங்களில் மக்கள் வெளிப்படையாக கருத்து கூற தயங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுதலையானவர்கள், சுலக்சன், தர்சன், திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவர்கள் தொடர்பான வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது அரசியல் கைதிகள் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயம் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் இன்றைய தினம் விடுதலையான சுலக்சன் என்ற அரசியல் கைதியையே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராயும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு சிபாரிசு செய்தால் அது உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு அமைய இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கமைவாக இருக்க வேண்டும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தலைமையிலான குழு மார்ச் 27 முதல் நேற்று வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்புக்கள், அவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கேட்க அரசு அவசரமாகவும் உண்மையாகவும் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான விதிமுறைகளும் நிபந்தனைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் மற்றும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிய மாற்றங்களுடன் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.

மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியது.

இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை – மனோ கணேசன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனாதிபதிக்குக் கடுமையான மற்றும் கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆகவே இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், இந்த புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய சட்டமூலம் பலருக்கும் பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், மக்களுக்கு போராட்டம் நடத்த முடியாத சூழலை உருவாக்கும் என்றும் என்றும் எச்சரித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐ.நா இலங்கைக்கு கடும் அழுத்தம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக பயங்கரவாதம் தொடர்பான குறுகிய வரையறைகளை உள்ளடக்கிய சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக புதிய சட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ​கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது இலங்கையின் ஆறாவது அறிக்கையை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் இறுதி அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் கழகத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி பணியாற்றுதல், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்குதல், பொறுப்புகளை நேர்த்தியான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய, ஒன்பதாவது சரத்தின் பிரகாரம், பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக, அவர்களை தடுத்து வைத்துள்ள இடங்களை சுயாதீனமாக கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது