எட்கா உடன்படிக்கை தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை – சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கம் ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

மார்ச்மாத இறுதிக்குள் இந்தியாவுடனான உத்தேச பொருளாதாரதொழில்நுட்ப உடன்படிக்கை குறித்த தொழில்நுட்ப பேச்சுக்களை இறுதிசெய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சரத்வீரசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்

இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழுவினருடன் அரசாங்கம் ஆராயவில்லை இது குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உரிய கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் இறுதி உடன்படிக்கை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எக்டா உடன்பாடு குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சரத்வீரசேகர நாட்டில் காணப்படும் அரசியல் சமூக சூழ்நிலைகளை தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து 2018 இல் இரண்டு நாடுகளும் எக்டா உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன எனவும் தெரிவித்துள்ள அவர் 2016 இல் மோடி அரசாங்கத்திற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின எனவும் தெரிவித்துள்ளார்.

2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய முன்னொருபோதும் இல்லாத உதவியை இலங்கை பாராட்டுகின்றது எனினும் நெருக்கடியில் ஒரு நாடு சிக்குண்டுள்ள வேளை அதன் மூலம் பலன்பெற முயலக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கட்டண முறை (UPI) மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையில் (UPI) QR குறியீட்டை பயன்படுத்தி ஒன்லைனில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையில் LankaPay Pvt Ltd நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10,000 வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.

மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65,000 வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UPI பணப்பரிமாற்ற முறையை ஒன்லைன் மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

இது எங்களிற்கு மிகவும் முக்கியமான தருணம். இந்திய பிரதமர் மோடி அவர்களே இது உங்களிற்கு இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இராமர் கோயிலை திறந்துவைத்தமைக்காக நான் உங்களை பாராட்டவேண்டும்.

எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் தொடர்புகள் பிணைப்புகள் உள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் இருநாடுகளிற்கும் இடையில் பணப்பரிமாற்றம் இருந்து வந்துள்ளது. அதிஸ்டவசமாக அவ்வேளை மத்திய வங்கி என்ற ஒன்று இருக்கவில்லை.

இலங்கையின் உலர்வலயங்களின் கிராமங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களிற்கு முற்பட்ட – தென் இந்திய காலத்து நாணயங்கள் காணப்பட்டமை இலங்கை தென் இந்திய ஒத்துழைப்புகள் மிகவும் வலுவாக காணப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.

ஆகவே, நாங்கள் இன்று என்ன செய்கின்றோம் என்றால் அவற்றை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துகின்றோம்.

இலங்கைக்கு அதிகளவு இந்திய சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையேற்படும்போது எங்களின் அனைத்து கிராமங்களிலும் ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்படும்.

“தமது இந்திய விஜயத்தின் “தொலைநோக்கு அறிக்கை”யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன்மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை மேலும் உறுதிசெய்யும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்,

இந்தியாவும் மொறிசீயசும் வலுவான பொருளாதார கலாச்சார தொடர்புகளை கொண்டுள்ளன. இன்று நாங்கள் இந்த உறவுகளிற்கு மேலுமொரு புதிய பரிமாணத்தை வழங்குகின்றோம் என்றார்.

இதன்போது உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி,

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும்முறையினால் இலங்கையிலும் மொறீசியசிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நன்மையடைவார்கள்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை காரணமாக இந்த இரு நாடுகளிலும் துரிதமாகவும் இலகுவாகவும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறை உலகின் தென்பகுதி நாடுகள் மத்தியிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகின்றது. எங்கள் உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த பத்து வருடங்களில் சவாலான தருணங்களில் இந்தியா தனது அயல்நாடுகளில் எவ்வளவு தூரம் ஆதரவாக உள்ளது என்பதை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

இலங்கை இனி தனிமைப்படுத்தப்பட்ட நாடல்ல; சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே இலக்கு – அநுரகுமார

நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நாடாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாகவும் விளங்குகிறது. எனவே இலங்கை அந்த நாட்டிடம் இருந்து ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

76 ஆண்டு கால அழிவுகரமான அரசியல் கலாசாரத்தை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும். அதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சில துறைகளில் மூலதனமும் தொழில்நுட்பமும் தேவை. சந்தையை விரிவுபடுத்த சில நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியாது. எனவே, உறவுகளை வலுப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அழைப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி செல்கிறார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் மூன்று விமான நிலையங்களை கையகப்படுத்துவது தொடர்பில் அதானி குழுமம் ஆலோசனை

இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதுடன், அதானி குழுமம் அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 07 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார்

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கிழக்கு ஆளுநருடன் ஆலோசனை

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

கேரளா கைத்தொழில் அமைச்சர் ராஜீவை சந்தித்த அநுர குமார குழுவினர்

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்துகொள்கின்ற இந்திய விஜயத்தின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.

இந்தியாவின் கமியூனிஸ்ட் கட்சியை (CPIM-Kerala) முதன்மையாகக்கொண்ட இடதுசாரிக் கூட்டமைப்பினால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற கேரளா மாநிலத்திலேயே இன்று அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். மூன்று கோடியே ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட கேரளா மாநிலம் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் வேகமான முன்னேற்றமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதியுயர் இடத்தை கேரளா உரித்தாக்கிக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (09) முற்பகல்வேளையில் கேரளா தலைநகரமான திருவனந்தபுரத்தில் மாநில அரசாங்கத்தின் கைத்தொழில்கள் மற்றும் சட்டம் பற்றிய அமைச்சர் ராஜீவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அமைச்சர் ராஜீவ் இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு அங்கத்தவராக விளங்குவதோடு கட்சியின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரைப்போன்றே ஒரு சட்டத்துறை பட்டதாரியுமாவார்.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre) அவதானிப்புச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர். அந்த நிறுவனத்தின் பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு இந்திய விண்வெளி நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் பிரதானமான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக அமைவதோடு அது இந்தியாவின் செய்மதி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அவசியமான ரொக்கெட்டுகளையும் விண்வெளிக் கலங்களையும் உற்பத்திசெய்து வருகின்றது. அதேவேளையில் தேசிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவினர் அதன் கட்டுப்பாட்டு நிலையத்தையும் விண்வெளி அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் மேற்படி குழுவினர் இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்ற முதலாவதும் மிகப்பெரியதுமான தகவல் தொழில்நுட்ப பூங்காக்களிலொன்றான திருவனந்தபுரத்தின் Technopark இலும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டனர். அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருடன் நிறுவனம் சம்பந்தமான விசேட தகவல்கள் பற்றியும் கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டனர்.

இந்த Technopark 1990 இல் கேரளா மாநில முதலமைச்சர் ஈ. கே. நாயனாரின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அது 800 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டுள்ளதோடு கட்டிடத்தின் பரப்பளவு 10.6 மில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. அதற்குள் 480 கம்பெனிகள் இயங்கிவருவதோடு 70,000 பேருக்கு மேற்பட்ட தொழில்வாண்மையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள். இது கேரள மாநில ஆட்சியின் கீழேயே நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

அடுத்ததாக இந்த பிரதிநிதிகள் குழு G Tech நிறுவனத்தின் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான சமர்ப்பணத்தில் பங்கேற்றதோடு கேரளா பல்கலைக்கழகத்தில் அவதானிப்புச் சுற்றுப்பயணத்திலும் இணைந்து கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைநகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள கரையோர Kovalam இன் Vellar கைப்பணிகள் கிராமத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு உருவாகியது.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆந் திகதி இலங்கை திரும்ப உள்ளனர்.

இந்தியா – இலங்கைக்கிடையில் பெற்றோலிய குழாய் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.