உடன் பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு ஐ.எம்.ஈவ் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை – ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதிக்காக இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பது குறித்து என சர்வதேச நாணயநிதியம் ஆராய்கின்றது ஆனால் படிப்படியாக அதனை செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இராணுவத்தில் உள்ளவர்களை வீட்டுக்கு செல்லுங்கள் என தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை வேறு துறைகளிற்கு தொழில்துறைகளிற்கு மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு இதனால் ஏனைய துறைகளில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அவர்களை வேறு தொழில்துறைக்கு மாற்றினால் அந்த தொழில்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய வேலையை இராணுவம் கைப்பற்றிவிட்டது என முறைப்பாடு செய்வார்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அரசகட்டிடங்களை நிர்மானிக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளமுடியும்ஆனால் கட்டுமான துறைக்கு அரசாங்கத்தின் ஒப்பந்தம் எதுவும் கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் விதித்துள்ள பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம் சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது அது பெரிய பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ஜனாதிபதி

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

அண்டைய நாடுகளின் தலைவர்களை தவிர, ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் அமர்வுகள் நிதி, சுற்றுச்சூழல், வெளியுறவு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தக நிலைகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு நடைபெறவுள்ளது.

நான்கு அமர்வுகள் ஜனவரி 12ஆம் திகதியும், ஆறு அமர்வுகள் ஜனவரி 13ஆம் திகதியும் நடைபெறும். மொத்தத்தில் இந்த மாநாட்டுக்காக 120 நாடுகளுக்கு டில்லி, அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகும் ஜனாதிபதி

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம்  எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளபோதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி முதல் காலாண்டில் கிடைக்க பெறும் : ரணில் நம்பிக்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிகள் இந்த வருடத்தின் முதல்காலாண்டில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா இந்தமாத இறுதியில் பதிலளிக்கும்சீனாவுடன் இன்னுமொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகள்ஆரம்பமாகியுள்ளன அவையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா வழங்கிய கடன்களை இரத்துச்செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவில்லை ஆனால் அடுத்த 20 வருடங்களிற்குள் கடன்களை வழங்குவதற்கான கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருளை தடுப்புக்கு பூரண அதிகாரம் கொண்ட செயலகம் : ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை சிக்க வைப்பதற்கும் தனியான பாதுகாப்புப் பிரிவொன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் தைப்பொங்கலின் போது காணி விடுவிப்பதற்கு சாத்தியம் !

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்யாவிடில் பேச்சை தொடர்வதில் பயனில்லை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட வேண்டும் என்று காலக்கெடுவை விதித்துள்ளதோடு, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை முன்னெடுப்பது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றையும், நிரந்தரமான அரசியல் தீர்வு விடயத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான திட்ட முன்மொழிவொன்றையும் தனித்தனியாக கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மாலை ஐந்து மணிமுதல் ஆறுமணி வரையில் இடம்பெற்றிருந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தாவது,

கடந்த, மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை நானும் சம்பந்தனும் சந்தித்தபோது, தமிழ் அரசியல் கைதிகளில் ஐவரை உடனடியாக விடுதலை செய்ய முடியும் என்றும், அபகரிக்கப்பட்ட நிலங்களில் ஒருபகுதிகயை உடனடியாக விடுவிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அதுதொடர்பில் எவ்விதமான குறைந்த பட்ச செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் அவர்களிடத்தில் தெரிவித்திருந்தோம். அவ்விதமான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி எவ்வாறு நம்பிக்கையுடன் நகர்வது என்பது தொடர்பிலும் நாம் கேள்விகளைத் தொடுத்திருந்தோம்.

எம்மைப்பொறுத்தவரையில் முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால் அரசாங்கத்திடமிருந்து எமது மக்கள் சார்ந்த உனடியான பிரச்சினைகளில் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தப்படாது பேச்சுக்களை முன்னெடுப்பதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்பதையும் அரசாங்கத்திடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் அடுத்த பத்தாம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தப்பேச்சுவார்த்தை வெற்றிகரமான நகர வேண்டுமாயின் அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அதுவரையில் அரசாங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக எம்மால் இரு திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்படவுள்ளன. அதில் முதலாவது, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலானதாகும். அடுத்த திட்ட முன்மொழிவானது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முன்னெடுப்புக்களின்போது, நிரந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகாரப்பகிர்வினை மையப்படுத்தியதாகும்.

இந்த இரு முன்மொழிவுகளும் விரைவில் எம்மால் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் தடையாக காணப்படுகின்ற அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகள் பற்றிய ஆவணம் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னாள் பரிசுத்த பாப்பரசரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன் கிழமை (ஜன 04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை (05) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வியாழக்கிழமை (ஜன.05) விஜயம் செய்தார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுக்குறிப்பேட்டில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் நினைவுப் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையையும் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளில் கலந்து கொள்வதில்லை – ரணில்

மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

இரண்டு வருடங்களுக்குள் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களிப்பதற்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரமே ஏற்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதனைத் தவிர உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு செயற்பாடுகளிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதானால் வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதமானோர் புது முகங்களாக இருப்பது பொறுத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் நான்காயிரம் உறுப்பினர்களுக்கு மாத்திரமே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எஞ்சியவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் – ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் இடையை சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும் ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.