இந்துக்களையும், அவர்களது கலை கலாசாரங்களையும் இழிவுபடுத்தும் வகையில் மௌலவி ஒருவர் கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எமது மக்களின் மனங்களை கடுமையாக புண்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
இந்துக்கள் பெரிதும் போற்றுகின்ற, மதிக்கின்ற, ஆலயங்களில் மதிக்கப்படுகின்ற பரதநாட்டிய கலையை அந்த மௌலவி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார்.
இது மிகவும் வேதனையான விடயம். நாங்கள் சக மதத்தவரின் கலாசாரத்தை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
நாங்கள் முஸ்லிம் தமிழ் சமூகத்தினர் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மௌலவியின் கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இலங்கை ஒரு பெளத்த நாடு என்பது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பெளத்த கலாசார நிகழ்வுகளுக்கு மாத்திரம் அதிகூடியளவு அதாவது 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஏனைய இந்து மற்றும் இஸ்லாமிய கலாசார நிகழ்வுகளுக்காக எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என வினோ நோகராதலிங்கம் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தொடர்ந்து கருத்துரைக்கையில்;
”இலங்கையை ஒரு பெளத்த சுற்றுலா மையமாக மாற்றும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இது ஒரு பெளத்த என்பதை நாம் உணரக்கூடியதாக இருக்கின்றது. பல்லின சமூகம் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமொன்றை அவசியமாகுமானால் இந்தியாவிடமே கோரவேண்டியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் நிலமலா சீதாராமன் திருகோணமலை ஆலயத்தை புனரமைப்பதற்கு உதவுவதாக கூறினார். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மனவருத்தத்தை கொடுக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதியையே கோருகின்றனர், நிதியை கோரவில்லை. ஆனால் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரோ ஒரு தரப்பை திருப்திப்படுத்துவதற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நிதி எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். முன்னதாக பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன அரசியல் தீர்வு அவசியமில்லை, பொருளாதாரத் தீர்வே அவசியம் என்றார். ஆனால், நிரந்தர அரசியல் தீர்வு இன்றி பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது இலங்கையின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கோ தீர்வுகாண முடியாது” எனது தெரிவித்தார்.