இடைக்கால ஏற்பாடாக 13ஐ செயல்படுத்த கோரும் உங்கள் நகர்வே சரியானது – தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

“நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அரசமைப்பு இப்போதைக்கு வரும் சாத்தியமில்லாத நிலையில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் உங்களது நகர்வு சரியானது” – இவ்வாறு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் நேரில் தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்.

கொக்குவிலில் விருந்தினர் விடுதியில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க தூதுவர் வடக்கை மையப்படுத்திய அரசியல் விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்றும், ஜனாதிபதி தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அவர் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தார் எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் கேட்டறிந்தார். குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

வடக்கில் பௌத்தர்கள் இருக்கிறார்களா என்று சந்திப்பில் அமெரிக்க தூதர் கேட்டார்.

அப்படி யாரும் இல்லையென்பதையும் தற்போது இராணுவத்திடம் சம்பளம் பெறும் ஒருவர், நிவாரணம் வழங்குவதாக ஏழை மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கூத்தாடினாலும் அதை சமூகம் கண்டுகொள்ளவில்லை என்றும் இதன்போது தமிழ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரங்களின் தற்போதைய நிலை பற்றியும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சந்திப்பில், மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் இளைஞர்கள் பெருந்தொகையாக நாட்டை விட்டு வெளியேறுவது பற்றியும் கேட்டறிந்தார். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் பற்றியும் விரிவாக கேட்டறிந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது