நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பொறிமுறை – அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினருக்கும் ரெலோ முன்மொழிவு

  1. இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை
  2. சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
  3. ஐநாவின் பிரதிநிதித்துவம்
  4. நிபுணர்கள் குழு உருவாக்கம்
  5. புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு
  6. தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

 

இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை

தமிழ் தேசிய அரசியல் தரப்பில் செயல்படும் அனைவரும் சமஸ்டி முறையான அரசியல் தீர்வே இறுதி நிலைப்பாடு என்பதை ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடும் அம்சமாக ஒற்றையாட்சி அற்ற, தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்து, எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய முற்று முழுதாக அதிகார பகிர்வோடு கூடிய அலகாக அமைய வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். அதே நேரம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே உள்ள அதிகாரங்களை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தி மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதிலும் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளோம்.

பிராந்திய வல்லரசாகவும், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து அக்கறையோடு செயற்பட்டு வந்த அண்டை நாடாகவும், இலங்கை அரசியலிலே செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளமையாலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இருப்பவர்களாகவும், ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பிலே அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாட்டை செய்தவர்கள் என்ற வகையிலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி வருபவர்களாகவும் இருப்பதனாலே இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்பு

சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப்பொறிமுறையில் பங்குபெற்றல் அவசியமானது. ஐநா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் முன் நின்று செயல்படுபவர்களாகவும், பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது பங்களிப்பை வழங்கியதோடு அது பற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை செலுத்தக் கூடியவர்களாகவும், மற்றைய நாடுகளையும் தங்கள் பின் அணி திரட்டக் கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பதானாலே இவர்கள் பங்களிப்பு அவசியமானது. குறிப்பாக பிரித்தானியா இலங்கையை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த நாடாகவும் இங்கு நிலவியிருந்த சமஸ்டி ஆட்சி முறையை ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றியவர்களும் அதனால் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் பிரதிநிதித்துவம்

ஐநாவின் பிரதிநிதித்துவம் இந்த பொறிமுறையில் அவசியமாகிறது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை தாண்டி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகும். மேலும் உலக நாடுகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளை ஆணைக்குழுக்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிபுணர் குழுவின் மூலம் தீர்த்து வைத்த அனுபவமும் வரலாற்றையும் கொண்டது ஐநா.

நிபுணர்கள் குழு உருவாக்கம்

மேற்கூறிய பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு சம்பந்தமான நிபுணர்களும் எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதிய ஆளுமை சம்பந்தமான நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம் பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம் பெறுவர். தவிர ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப் பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு

தமிழ் தேசியத் தரப்பினரும் புலம்பெயர் உறவுகளும் ஒருமித்து, இந்த நிபுணர் குழுவினருக்கான செயல்பாட்டை உறுதி செய்யவும், ஏதுவான அரசியல் சூழ்நிலைகளை உரிய தரப்புகளுடன் இணைந்து ஏற்படுத்துவதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையிலான பங்களிப்புடனும் வழிகாட்டுதலுடனும் அரசியல் தீர்வு எட்டப்படுதல் வேண்டும். அதற்கான தொடர்ச்சியான செயல்பாடும் அவசியமாகும்.

அரசியல் தீர்வானது இந்த நிபுணர் குழுவினர்கள் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் வரை நாங்கள் பரிந்துரைத்த பொறிமுறை செயற்பாட்டில் இருக்க வேண்டும். முற்று முழுதான அதிகார பகிர்வு முறைமையை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி முற்றுப் பெற வைப்பது என்பதை இந்தப் பொறிமுறையின் வழிகாட்டுதலுடன் தமிழ் தலைவர்கள் ஒப்பேற்ற வேண்டும்.

தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

கடந்த காலங்களில் அதிகாரப் பகிர்வு முறைமை அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே அமைந்துள்ளன. அப்படியல்லாமல் நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதும் அதனூடான அதிகார பகிர்வினை உறுதி செய்து நடைமுறைப் படுத்தும் வரை இந்தப் பொறிமுறையை தொடர்ச்சியான செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது. தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் விடிவை எட்டுவதற்கு அனைத்து தமிழ் தேசிய தரப்பினரும் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அரசுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இறுதி இலக்கை எட்டும் வரைக்குமான விடயங்களை அரசியல் மாற்றங்களைத் தாண்டி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பொறிமுறையை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து தரப்பினரும் இந்தப் பொறிமுறையை மேலும் செழுமைப்படுத்த உங்கள் பங்களிப்பை கோரி நிற்கிறோம். குறை குற்றம் கூறி, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி வீசிக் காலத்தை வீணடிக்கும் வெட்டி விவாதங்களை தவித்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

உங்கள் பரிபூரண ஆதரவுடன் மேற் குறிப்பிட்ட பொறிமுறையின் உருவாக்கம், நடைமுறை, மற்றும் செயற்பாட்டை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் தேசிய இனத்தின் இறுதி இலக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒருமித்து பயன்படுத்துவோமாக.

குருசுவாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு