தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பணத்திற்காக காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாம் – த.சித்தார்த்தன்

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன.

விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க மெதுமெதுவாக ஆட்களை கொண்டு வந்து, சிங்கள பிரதேசங்களாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் பல விடயங்கள் நிறுத்தப்படலாமென பலர் நினைத்தனர். ஆனால் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கு பலமுறை முறையிடப்பட்டும், அது கவனிக்கப்படவில்லை.

இவற்றை நிறுத்த நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை, சாத்வீக வழி, பாராளுமன்றத்தின் ஊடாக முயற்சிக்க வேண்டும். அவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவற்றின் வேகம் போதாது என நினைக்கிறேன்.

நான் கந்தரோடையில் இருக்கிறேன். இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்களிற்கு இந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. எப்படி சிங்கள பௌத்த மத அடையாள மாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

அது மாத்திரமல்ல, சற்று அதிக பணம் கிடைக்கிறது என்றால் காணிகளை விற்கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டில் உள்ளவர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர்தான் கந்தரோடையில் விகாரை கட்டப்படவுள்ள காணியையும் விற்றவர்.

வெளிநாட்டிலுள்ள பலர், இங்குள்ள காணிகளை பிற சமூகத்தவர்களுக்கு விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து விற்று வருகிறார்கள். சில இடங்களில் காணிகள் விற்கப்பட்டுள்ளதை அறிகிறோம். நல்லூரிலும் விற்கப்படுகிறது.

இங்குள்ள இராணுவத்தினர் வெறும் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றை வாங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே, சிறியளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக மாற்று சமூகத்தினருக்கு விற்பதை நிறுத்துங்கள்.

இங்கு பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இப்போது நடக்கும் போராட்டங்கள் மிகச்சிறியவை. 3,5,10 பேருடன் நடக்கும் போராட்டங்களினால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படாது. பெருமெடுப்பிலான போராட்டங்களை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்

பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார்.

வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கடமையில் இணைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மன்னராக முடிசூட்டப்பட்டார் மூன்றாம் சார்லஸ்

74 வயதான மூன்றாம் சார்லஸ் இன்று பிரித்தானியா மற்றும் 14 பிற கொமன்வெல்த் நாடுகளின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், பரிசுத்த நற்செய்தியின் மீது கைவைத்து மூன்றாம் சார்லஸ் மன்னர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

அவர் தனது வாக்குறுதிகளை செயல்படுத்தவும், நிறைவேற்றவும் உறுதியளித்த அவர், தேவாலயங்கள் உட்பட சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த விழாவில், கேன்டர்பரி பேராயர், மிகவும் மரியாதைக்குரிய ஜஸ்டின் வெல்பி முடிசூட்டு பிரமாணத்தை செய்து வைத்தார்.

விழாவில் 100 நாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.

வெடுக்கு நாறி மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக சரத் வீரசேகர மிரட்டல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

நேற்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர்.

அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.

இன்று ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின் பொங்கலை வாங்கி உண்டனர்.

பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.

இதேவேளை, இன்று அங்கு கடுமையான மழை பெய்வதால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்தின அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் வர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்.மக்களை முன்னணியினர் இனியும் ஏமாற்ற முடியாது; கட்டி முடிக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக ஏமாற்று நாடகம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

யாழ்ப்பாண தமிழ் மக்களை இனியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏமாற்ற முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37 வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மிகப்பெரிய ஒரு கதவடைப்பு போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்தினோம். பாரிய போராட்டமாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு முதற்தடவையாக இங்கு நடாத்திக் காட்டி இருந்தோம்.

எதற்காக அதனை செய்திருந்தோம் என்பதை அறியாத ஒரு தரப்பு- நான் நேரடியாகவே கூறுகின்றேன்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த கர்த்தாலை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நடாத்திய கர்த்தாலை எள்ளி நகையாடினார்கள்.

தமிழ் மக்களின் உணர்வினை எள்ளி நகையாடினார்கள். அதனுடைய விளைவு இன்று தெரிகிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையினை இடித்து விட போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏன் இந்த கர்த்தாலை நடாத்தினோம் என்றால் அண்மையில் நாவற்குழி ஜம்புகோள பட்டினம், குருந்தூர் மலையில் விகாரைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அத்தோடு கலாச்சார சின்னங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் இருப்பு அழித்தொழிக்கப்படுவதற்கு எதிராக எமது கண்டனத்தினை தென்னிலங்கைக்கு பதிவு செய்வதற்குமாக சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்துவதற்குமாக ஆரம்ப கட்டமாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அது பரிபூரண வெற்றியாக அமைந்திருந்தது.

அதனை எள்ளி நகையாடி அந்த கர்த்தாலுக்கு அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று தையிட்டியிலே கட்டி முடித்து கலசம் வைக்கப்பட்டிருக்கும் விகாரையினை அகற்றுவற்கு நாங்கள் போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளை சாவகச்சேரியில், நெடுங்கேணியில் விகாரை வரும். எல்லா இடங்களிலும் வரும். இவ்வாறு தனித்தனியே போராட போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்த போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி.

அதற்காகத்தான் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் போராட்டத்தினை தையிட்டியில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும்.

சரியான தலைமையினை தெரிவு செய்யவேண்டும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்.

மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடுவோருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

கிழக்கு எம்.பிக்களையும் அழைக்காவிட்டால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதில்லை: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு.சுநே்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இரா துரைரட்ணம், பா.கஜதீபன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் செயலாளர் துளசி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆர்.இராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் யாப்பு மற்றும் மாவட்ட மட்ட செயற்பாடு பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதி கலந்துரையாடல்களில் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும், அவ்வாறு அழைக்கப்படாவிட்டால் பேச்சுக்களில் கலந்து கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்தனர்

மன்னாரில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று (6) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) காரியாலயத்தில் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், விந்தன் கனகரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் வலிகிழக்கு முன்னாள் தவிசாளர் தி.நிரோஷ் உள்ளிட்ட ரெலோவின் உறுப்பினர்கள், மூத்த போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.05.2023) மட்டக்களப்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நினைவுநாள் நிகழ்வுகள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர், மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்களுக்கான தீர்வினை வலியுறுத்தவேண்டிய காலம் என்பதனால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றுபடுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

சிறிசபாரட்னம் ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப்பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாரோ அதேநோக்கத்துடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒற்றுமையினை முன்னிறுத்திவருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலமிருந்து இன்று வரையுள்ள கட்சியாக ஒரு இயக்கமாக தமிழீழ விடுதலை இயக்கம் இருக்கின்றது. நாங்கள் எங்கள் தலைவரை இழந்தாலும் கூட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்காக நாங்கள் ஒன்றாக செயற்படுவோம் என்று உறுதியாக செயற்பட்டுவருகின்றோம்.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்த பலமும் இல்லாத நிர்க்கதியாக நிற்கும் இந்தவேளையில் நாங்கள் பலமாக ஒற்றுமையாக இருக்கவேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் காணப்படுகின்றது.

 

இன்று வடகிழக்கில் ஆயுதப்பலம் இல்லாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தினால் எமது நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவருகின்றது. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் இன்று அதிகாரங்கள் இல்லாமல் ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது.

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் ஆளுனர்கள் தாங்கள் நினைத்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நேற்று முன்தினம் கூட நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கின் தையிட்டி பகுதியிலேயே விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கமானது 13வது திருத்ததின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபையின் முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை நடாத்தவேண்டும் என்ற அழுத்ததினை வழங்கவேண்டும்.


சரத்வீரசேகர,விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்த சட்டமும்வேண்டாம் அதன்ஊடாக வந்த மாகாணசபையும் வேண்டாம் என்கிறார்கள்.வடகிழக்கில் அதேகொள்கையுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செயற்படுகின்றது.

ஆனால் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் மாகாணசபையின் முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் மிக விரைவாக நடாத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றோம்.

நாங்கள் இன்று ஒன்றாகயிருக்கவேண்டிய காலம், ஒற்றுமையாகயிருக்கவேண்டிய காலம். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட இன்று பிரிந்துகிடக்கின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாகி நாங்கள் எமது உரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை அனைத்துதமிழ் தரப்பினரும் உணரவேண்டும்.

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சியை வளர்ப்பதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துவிதமான அட்டூழியங்களையும் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும்.

வடக்கில் காலை வைத்துவிட்டார்கள். இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

பொருளாதார ரீதியாக மீட்சிபெறுவதற்கு உதவிய இந்தியா,தமிழ் மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை மிக விரைவாக நடாத்துதற்கு உறுதிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.