நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கம்

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார்.

இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது படி என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

இன நல்லிணக்க செயற்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கவலை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் சில பாராட்டத்தக்க விதிகள் இருந்தாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக கோரும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தில் சில மாற்றங்களை வரவேற்றாலும், அந்த அமைப்பு இரண்டு குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

முதலாவதாக, முன்மொழியப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட மற்ற அனைத்து எழுதப்பட்ட சட்டங்களையும் மீறுவதாக கூறியுள்ளது.

இரண்டாவதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இரகசியப் பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதிற் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் வினைத்திறன் முழுமையாக அதனை அமுல்படுத்துவதை பொறுத்தே அமையும் எனவும் இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கு மேலதிக மாற்றம் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு – IMF மீண்டும் உறுதி

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா(Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து நடத்தும் ஸ்பிரிங் மாநாட்டிற்கு இணையாக இலங்கை தூதுக்குழுவுடன் நேற்று(11) நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் IMF முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோருடனான சந்திப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது அவசியமானது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை முழுமைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதை முகாமைத்துவ பணிப்பாளரிடம் இதன்போது மீள உறுதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை பூர்த்தி செய்ய இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது இலங்கையின் தூதுக்குழு மீள உறுதி செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயம்

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கியின் அதிகாரிகளால் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளையும் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, ரயில் மார்க்கங்களை பராமரிப்பதற்கு அவசியமான ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தண்டவாளங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ரயில் மார்க்கங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

ரயில் மார்க்கங்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக பல இடங்களில் ரயில்களின் பயண வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அதிகளவான பாதிப்பிற்கு கரையோர மார்க்கம் முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையிலான ரயில்களின் பயண வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டர் வரை குறைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐ.எம்.எவ் கடனுதவி வேலைத்திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை தெளிவுபடுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் கட்சிகளுக்கு நாட்டிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என சாகல ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன

இலங்கையில் அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வொன்றை வழங்கும் வகையில், நாட்டிலுள்ள குரங்குகளை சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இந்த ​கோரிக்கைக்கு அமைய, முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளன.

நாட்டிலிலுள்ள குரங்குகளை வெளிநாட்டிற்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குரங்கு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையிலேயே, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் இரகசிய திட்டங்களால் இந்தியாவுக்கு ஆபத்து – ரெலோ சபா குகதாஸ்

அண்மையில் வெளிநாட்டு இணையதள ஊடகங்களில் சீனாவின் இரகசிய திட்டம் ஒன்று இடம்பெறுவதாக வெளியான செய்தி தற்போது உள்நாட்டு ஊடகங்களில் அது பேசு பொருளாக மாறியள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (09.04.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சீனாவானது இலங்கையில் ராடர் ஒன்றை அமைத்து வருவதாகச் சொல்லப்படுகின்றது. அந்த ராடர் நிலையம் அமையப்பெற்று பூரண செயற்றிறனுக்கு வருமாக இருந்தால் அதனூடாக வரும் ஆபத்துக்கள் குறிப்பாக இந்தியாவுக்கும், இந்தியாவினுடைய பிராந்தியத்துக்குள் ஊடுருவி இருக்கின்ற நாடுகளினுடைய இரகசிய திட்டங்களுக்கும் ஆபத்துக்கள் காத்திருப்பதாகத் தான் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக இந்தியாவினுடைய பல்வேறு இரகசிய நடவடிக்கைகளை ஆராய்வதற்கு இந்த ராடர் நிலையம் பயன்படும் என ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றது.

குறிப்பாக இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற ஏவுகணை தளங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், இந்தியாவினுடைய மேற்குப் பகுதியில் இருக்கின்ற கடற்படை தளங்கள், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தளங்கள் என்பன எல்லாம் கேள்விக்குள்ளான நிலைக்கு உள்ளாகும் என சொல்லப்படுகின்றது.

மற்றும் இந்தியப் பிராந்தியத்தில் அமையப்பெற்றுள்ள அமெரிக்க, பிரித்தானியாவினுடைய இராணுவ தளங்கள் இதன் மூலமாக வேவு பார்க்கப்படும் எனச் சொல்லப்படுகின்றது.

அத்துடன் அந்தமான், நிக்கோவா தீவுகளும் அந்த ராடரின் வேவுக்குள் உட்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே இது ஒரு பாரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றது. உண்மையிலேயே இலங்கையினுடைய எதிர்காலம் பூகோள நலன் சார்ந்த நாடுகளின் அரசியலில் கொதிநிலையாகவே மாற இருக்கின்றது.

குறிப்பாக இலங்கையினுடைய நிலவரத்தில் இவ்வாறு இருக்கின்ற நேரம் இந்தியாவுக்கு இது எதிர்காலத்தில் பாரிய ஒரு சவாலாக இருக்கப் போகின்றது. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவினுடைய தென்னெல்லைக்கோ அல்லது இந்தியாவினுடைய பிராந்திய கடற் பகுதிக்கோ எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படவில்லை.

காரணம் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் கட்டமைப்பின் பலம் இந்தியாவின் தென் எல்லைக்குள் ஒரு பாதுகாப்பாக வைத்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி எல்லாமே ஒரு கேள்விக்கு உள்ளாகின்ற நிலையாக மாறியுள்ளது.

இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பையும் பிராந்திய பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஆகவே இந்த நிலையை இந்தியா உணர்ந்து எதிர்வரும் காலங்களிலாவது இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கையில் சீனாவின் உடைய அகலக்கால் பதிப்பானது மேன்மேலும் இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதனை இவ்வாறான செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகிறது ஈழத் தமிழர்களது பிரச்சினைகளில் இனியாவது இந்தியா கரிசனை காட்ட வேண்டும்.

இந்தியாவானது ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதன் மூலமாகத்தான் இந்த கொதிநிலை அரசியலையோ அல்லது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அல்லது பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது – வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகம்

இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும், விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் உட்பட வவுனியாவை சேர்ந்த இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பு இந்துமாமன்ற பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழு இந்திய தூதுவரை நேற்று (10.04.2023) மாலை சந்தித்திருந்தது.

சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை மீண்டும் விக்கிரகங்கள் வைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தும் தடைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எல்லையோர கிராமங்களில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களுடன் சைவ அடையாளங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பாகவும் இதன்போது இந்திய தூதுவருக்கு ஆவணங்கள் ஊடாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மால் முடிந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக இந்திய தூதுவர் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனால் இந்த சந்திப்பு திருப்தி தருவதாக அமைந்தது என ஆலய நிர்வாகத்தினர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.