இலங்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து தடை: 197 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.

ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.

விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக மாற்றி பெளத்தமயமாக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.

இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்பொருட்கள் தீவில் உள்ளன. மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள்(கோபுரம்) இங்கு காணப்படுகின்றன. இந்தத் ஸ்தூபிகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. மிகப் பெரிய ஸ்தூபியின் கல்லறையில் மூன்று கல்வெட்டுகள் காணப்பட்டன.’

‘பெரிய ஸ்தூபியின் விட்டம் 13.54 மீற்றர். அதன் சுற்றளவு 31.93 மீற்றர். கல்வெட்டுகளில் ஒன்று பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி. 1-2 நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுதப்பட்டது என்றும் கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளப்பரப் பலகையில் ‘பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் டெல்ஃப்ட் தீவின்(நெடுந்தீவு) புராதன பௌத்த தளம். இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய ஸ்தூபி பவளக்கல்லால் ஆனது. ஏனைய இரு ஸ்தூபிகளும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன.’ என குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் புராதன தளமானது வெடியரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் இவை குறித்த வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்றை திரிபுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளம்பரப்படுத்தலுக்காக பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டமை குறித்து உரிய அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தாது இருப்பது ஏன் எனவும் நெடுந்தீவு மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை வடக்கில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் விரைந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரியுள்ளனர்.

இலங்கைப் பொருளாதாரம் மேலும் 7.8% வீழ்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 7.8% சுருங்கியுள்ளது என்று சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 12.4% சுருங்கியுள்ளதாக குறித்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உற்பத்திக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த பெப்ரவரியில் 42.3 சுட்டெண் மதிப்பைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 3 சதவீதத்தால் சுருங்கும் என எதிர்வுகூறியுள்ள மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, 2024 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்பதாகவும் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாகம் என்பன கடந்த ஆண்டு தொடக்கத்தில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்பு திட்டத்திற்கு எதிர்வரும் 20 அன்று இறுதி செய்யப்படும் என இலங்கை காத்திருக்கிறது.

இந்த ஆண்டு முழுவதும், எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளுடன், மத்திய வங்கி நாணயத்தை வலுப்படுத்தவும், இறுதியில் வட்டி வீதங்களைக் குறைக்கவும், பணவீக்கத்தை தொடர்ந்து குறைக்கவும் முடியுமென ஆசிய செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வுபிரிவு சிரேஷ்ட உப தலைவர் சஞ்சீவ பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது – அநுர

தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படுகின்ற தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியலைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலமாகவோ அல்லது அதனை மாற்றியமைப்பதன் மூலமாகவோ தமிழர் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வினை வழங்க முடியாது.

அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் தீர்வு ஒருபோதும் தமிழருக்கு நிரந்தர தீர்வாக அமையாது, இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூறியதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு

2021 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை இன்று முதல் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு வழங்காவிட்டால், அந்தந்த அரசியல் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்யவும் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களை 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 23 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சிறுவர்களுக்காக ஜப்பான் 1.8 மில்லியன் நன்கொடை

இலங்கையில் அபாய நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக யுனிசெப் நிறுவனத்திடம் ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதனூடாக 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர், கனடியத் தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும் நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இதன்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

தமிழர் தலைநகர வரலாற்றுத் தொன்மைகள் மாகாண அதிகாரத்தில் இருந்து சிங்கள மயமாகிறது : சபா.குகதாஸ் கவலை

ஈழத் தமிழரின் வரலாற்று பூர்வீக வாழ்விடமான கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் திகாமடுள்ள என பெயர் மாறி பறிபோன பின்னர் திருகோணமலை கடந்த காலங்களில் சிங்கள குடியேற்றங்களால் பெரு நிலப்பரப்புக்கள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொன்மைகளைக் கொண்ட  ஆதாரங்களை சிங்கள மயப்படுத்தும் வேலைத் திட்டத்தை தொல்லியல் திணைக்களம் மூலமாக மத்திய அரசின் ஆளுகைக்குள் உட்புகுத்தி பௌத்த சிங்கள சின்னங்களை புதிதாக அமைத்து வரலாற்றை மாற்றி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகளுக்கு அருகாமையில் புராதன பிள்ளையார் ஆலயம் இருந்தது அதனை ஆலய நிர்வாகம் முற்றாக இடித்து புதிதாக எடுத்த முடிவை தமக்கு சாதகமாக பயன்படுத்திய அரிசிமலைப் பிக்கு தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்பின் உச்சம் இன்று கன்னியா வெந்நீர் உற்றுப் பகுதிகள் யாவும் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பில் வந்துள்ளது அத்துடன் பார்வையாளர்கள் செல்வதற்கான அனுமதி சிட்டை வருமானம் மத்திய அரசாங்கம் வசமாகி விட்டது. மொத்தத்தில் மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கிலாந்திற்கும் இலங்கைக்கும் இடையே உறவுகளை வலுப்படுத்த தீர்மானம்

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்கச் செயலாளரை லண்டனில் சந்தித்து பேசிய போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மற்றும் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் இச்சந்திப்பின் போது இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

22வது கொமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அலி சப்ரி லண்டன் சென்றுள்ளார்.

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணக் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களின் போது, ​​தினசரி 40 அமெரிக்க டொலர்களில் இருந்து அதிகபட்சமாக 30 நாட்களுக்கு வழங்கப்படும் சாதாரண கொடுப்பனவை 25 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு சார்பில் உத்தியோகபூர்வ பணிகளுக்காகவோ அல்லது வெளிநாட்டு விவகாரங்களுக்காகவோ வெளிநாடு செல்லும்போது நாளொன்றுக்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை குறைத்து 10 நாட்களுக்குள் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தியோகபூர்வ அரசாங்க விஜயத்தின் போது தூதுக்குழுவை வழிநடத்தும் அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு உரித்தான 750 அமெரிக்க டொலர் உபசரிப்பு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.