13 ஐ அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

13ஆவது திருத்தத்தில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் வழங்கப்பட்டுள்ளமை நாட்டில் பிளவுகளுக்கு மேலும் வழி வகுக்கும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்து அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து முன்னைய ஜனாதிபதிகள் அனைவரும் தவிர்த்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டக்கி ஷுன்சுகே இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்றாகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வரவேற்றுள்ளார்.

நிலாவரையில் தவிசாளர் நிரோஷுக்கு எதிரான தொல்லியல் திணைக்கள வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை

நிலாவரை, கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்கான ஆவணத்தினை இம்மாத இறுதிக்குள் தயார்ப்படுத்தி மன்றில் சமர்ப்பிக்குமாறு அச்சுவேலி பொலிஸாருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்லாகம் நீதிமன்றில் இன்றைய தினம் (பெப். 1) புதன்கிழமை காலை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கினை முன்கொண்டு செல்வதற்கான சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற, அதற்குரிய ஆவணம் ஏன் அனுப்பப்படவில்லை என பொலிஸாரை நோக்கி நீதிபதி வினவினார்.

அத்துடன் இம்மாதத்துக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கான ஆவணத்தை தயாரித்து சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் அத்திவாரம் போன்று வெட்டுவதற்கு இரண்டு முறை முயற்சித்த நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து அங்கு தொல்லியல் திணைக்களத்தின் முயற்சிகள் கைவிடப்பட்டன.

பின்னர், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.

அதன்போது தவிசாளருக்கு தொல்லியல் திணைக்களத்தின் கருமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தவிசாளரிடம் கூறினர்.

எனினும், பிரதேச சபையானது நிலாவரையை தொடர்ச்சியாக பராமரித்து வருகிறது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு உரிமையுள்ளது என கூறி தவிசாளர் வெளியேறினார்.

இந்நிலையில் பெருந்தொகை இளைஞர்களை அழைத்து வந்து, தமது அரச கருமத்துக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடை ஏற்படுத்தியதாக கூறி, மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற சமகால பகுதியிலேயே குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் பௌத்தமயமாக்கத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும் அமுல்படுத்தப்பட்டது – ஐ. நா.க்கு இலங்கை பதில்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கின்றபோதிலும், அம்மீளாய்வின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகளையும், சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய கால மதிப்பீடு தொடர்பான குழு புதன்கிழமை (01) மீளாய்வை மேற்கொண்டது.

இம்மீளாய்வுக்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருந்ததுடன், மனித உரிமைகள் விவகாரத்தில் அதன் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின்போது முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில் இலங்கையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 177 பரிந்துரைகள் மற்றும் சுயமாக மேற்கொள்ளப்பட்ட 12 தீர்மானங்களின் அமுலாக்கம் பற்றிய தகவல்களை உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையானது கடந்த 2017 ஆம் ஆண்டின் பின்னரான மீளாய்வு காலப்பகுதியில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல் மற்றும் தீவிர பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அவ்வாறிருப்பினும்கூட ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய திருத்தங்கள் அடங்கிய ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்ட நிறைவேற்றம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் உருவாக்கம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரகடனங்கள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதற்கான இணக்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் வலுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகள் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோன்று கொவிட் – 19 பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியிலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை வலுவான முன்னேற்றத்தைப் பதிவுசெய்தது. அதன்படி 163 நாடுகளில் 70.0 என்ற புள்ளியுடன் இலங்கை 76 ஆவது இடத்தைப்பிடித்தது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உபகட்டமைப்புக்கள் மற்றும் முகவரமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதை முன்னிறுத்தியும் காலநிலைமாற்ற சவால்களை திறம்பட எதிர்கொள்வதை  இலக்காகக்கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அந்த 19 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது முக்கியமானது: விக்டோரியா நுலண்ட் வலியுறுத்தல்

மார்ச் மாதத்தில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும், அந்த திருத்தங்களை சர்வதேச சரத்துகளுக்கு அமைவாக வடிவமைப்பதும் அவசியம் என விக்டோரியா நுலண்ட் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நம்பத்தகுந்த பதிலொன்றை வழங்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு குறைந்தளவிலான ஒதுக்கீடு

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்; உலக நாடுகள் வலியுறுத்து

13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது என்று ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இந்திய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடரில் முழுநிறை காலமுறை மீளாய்வு செயல்குழுவில் இலங்கை குறித்து நேற்று மீளாய்வு செய்யப்பட்டது. இதில், பங்கேற்ற இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கவும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்க வும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இதில், இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும். அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சித்திரவதை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கொலம்பியா பரிந்துரைத்துள்ளது.

மேலும் அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு டென்மார்க் பரிந்துரைத்துள்ளது.

விரைவில் ஐ.எம்.எப் உதவி, ஜனாதிபதி தேர்தல், புதிய அரசியலமைப்பு – விக்டோரியா நூலாண்ட் சிறுபான்மையின கட்சிப் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு

ஜனாதிபதியின்‌ சர்வகட்சி கலந்துரையாடல்‌ மூலமாக தீர்வு முயற்சியை சரியாக பயன்படுத்திக்‌ கொள்ளுங்கள்‌. சிறுபான்மையின பிரதிநிதிகள்‌ ஒன்றாக கலந்துரையாடி இனப்பிரச்சினை விவகாரம்‌ உள்ளிட்ட விவகாரங்களில்‌ ஒரு பாதை வரைபடத்தை தயாரியுங்கள்‌. பின்னர்‌ ஒவ்வொரு விவகாரமாக முன்வைத்து, அவற்றை பெற்றுக்கொள்ளும்‌ முயற்சியில்‌ ஈடுபடுங்கள்‌. அவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்காவும்‌ முழுமையாக ஓத்துழைப்பை வழங்கும்‌.

இவ்வாறு இலங்கைக்கு விஜயம்‌ மேற்கொண்டுள்ள அமெரிக்காவின்‌ அரசியல்‌ விவகாரங்களிற்கான துணை இராஜாங்க செயலாளர்‌ விக்டோரியா நுலாண்ட்‌, சிறுபான்மையின கட்சிகளின்‌ பிரதிநிதிகளிற்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்‌.

2024ஆம்‌ ஆண்டிற்குள்‌ ஜனாதிபதி தேர்தல்‌ நடக்குமென விக்டோரியா நுலாண்ட்‌ சூசகமாக தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன்‌, பொறுப்புக்கூறல்‌ விவகாரத்திற்கு இது தருணமல்ல என்றும்‌ தெரிவித்தார்‌.

கொழும்பில்‌ இன்று (1) இந்த கலந்துரையாடல்‌ நடந்தது.

தமிழ்‌ தேசிய கூட்டமைப்பின்‌ த.சித்தார்த்தன்‌, தமிழ்‌ முற்போக்கு முன்னணியின்‌ மனோ கணேசன்‌, இலங்கைத் தமிழ்‌ அரசு கட்சியின்‌ ஆபிரகாம் சுமந்திரன்‌, தமிழ்‌ தேசிய மக்கள்‌ முன்னணியின்‌ கஜேந்திரகுமார்‌ பொன்னம்பலம்‌, அதில இலங்கை முஸ்லிம்‌ காங்கிரசின்‌ ரவூப்‌ ஹக்கீம்‌, அதில இலங்கை மக்கள்‌ காங்கிரஜின்‌ ரிசாட்‌ பதியுதீன்‌ ஆதியோர்‌ இந்த சந்திப்பில்‌ கலந்து கொண்டனர்‌.

இந்த சந்திப்பின்‌ போது, ஜனாதிபதியின்‌ சர்வகட்சி கூட்டம்‌ பற்றி, விக்டோரியா நுலாண்ட்‌ கேட்டறிந்தார்‌.

தற்போது ஜனாதிபதிக்கு பின்னணி பலம்‌ இல்லையென்றும்‌, பொதுஜன பெரமுனவில்‌ தங்கியுள்ள ஜனாதிபதியினால்‌ இனப்பிரச்சினை தீர்வு அரசியலமைப்பு மாற்றம்‌, காணி விடுவிப்பு, 13வது திருத்தம்‌ நடைமுறைப்படுத்துவது போன்றவற்றை நிறைவேற்ற முடியாது என கட்சிகள்‌ தெரிவித்தன.

18வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்‌ விவகாரத்தை ஆதரித்தாலும்‌, 13வது இருத்தம்‌ தமது நிலைப்பாடல்ல, சமஷ்டி அடிப்படையிலான தீர்வே, தமது இலக்கென தமிழ்‌ தேசிய கட்சிகளின்‌ பிரதிநிதிகள்‌ சுட்டிக்காட்டினர்‌.

13வது திருத்தம்‌ மற்றும்‌ அரசியலமைப்பு திருத்தங்களை ஆதரிப்பதாக மனோ கணேசனும்‌ குறிப்பிட்டார்‌.

தற்போது ஜனாதிபதி அரசியல்‌ பலமில்லாதவரை போல தென்பட்டாலும்‌, படிப்படியாக பல விடயங்களை நிறைவேற்ற முடியுமென விக்டோரியா நுலாண்ட்‌ தெரிவித்தார்‌.

சிறுபான்மையின கட்சிகள்‌ ஒன்றாக கலந்துரையாடு, எந்ததெந்த விவகாரங்களை பெறுவது என்பது தொடர்பில்‌ வழி வரைபடமொன்றை தயாரித்து, ஒவ்வொரு விவகாரமாக எடுத்து, அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென விக்டோரியா ஆலோசனை வழங்கினார்‌.

அவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்காவும்‌ துணை நிற்கும்‌ என்றார்‌.

ரணில்‌ விக்கிரமசிங்க விரைவில்‌ ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வார்‌ என்பதையும்‌ விக்டோரியா நுலாண்ட்‌ சூசகமாக வெளிப்படுத்தினார்‌. அனேகமாக அது அடுத்த வருடமாக இருக்கலாமென்றும்‌, புதிய அரசியலமைப்பு விவகாரம்‌ நடைபெறும்‌ என்றும்‌, அது ஜனாதிபதி தேர்தலின்‌ முன்னரா அல்லது பின்னரா என்பது தனக்கு தெரியவில்லையென்றும்‌ குறிப்பிட்டார்‌.

சர்வதேச நாணய நிதியத்தின்‌ உதவி நிச்சயமாக இலங்கைக்கு கிடைக்கும்‌, விரைவில்‌ இடைக்கும்‌ என்றார்‌. சர்வதேச நாணய நிதியத்தின்‌ உதவியின்‌ மூலம்‌, இலங்கை தொடர்பான நம்பிக்கை உருவாகி, மேலும்‌ பல நாடுகள்‌ இலங்கைக்கு உதவி மற்றும்‌ முதலீடு செய்யும்‌ என்றார்‌. அமெரிக்காவும்‌ மேலும்‌ உதவும்‌ என நம்புகிறேன்‌ என்றார்‌.

இந்த சந்திப்பில்‌, தமிழ்‌ தேசிய மக்கள்‌ முன்னணியின்‌ தலைவர்‌ கஜேந்திரகுமார்‌ பொன்னம்பலம்‌, பொறுப்புக்கூறல்‌ பொறிமுறையை கைவிட முடியாதென்றும்‌, அமெரிக்கா அதற்கு அழுத்தம்‌ கொடுக்க வேண்டுமென்றும்‌ தெரிவித்தார்‌.

“தற்போதைய சூழலில்‌ பொறுப்புக்கூறலை கையிலெடுப்பது, தமிழர்‌ பிரச்சனையை தீர்க்க ஒரு உபாயமாகவும்‌ அமையும்‌. பொறுப்புக்கூறல்‌ விவகாரம்‌ மஹிந்த ராஜபக்ச கரப்பிற்கு அழுத்தமாக அமையும்‌. அவர்கள்‌ அதிலிருந்து தப்பிக்க, ரணில்‌ விக்கிரமசிங்கவின்‌ இர்வு முயற்சிக்கு ஆதரித்து, மற்றைய சிக்கல்களை நீர்க்க முயற்சிப்பார்கள்‌” என கஜேந்திரகுமார்‌ குறிப்பிட்டார்‌.

எனினும்‌, விக்டோரியா நுலாண்ட்‌ இந்த கோரிக்கையை நாகூக்காக தவிர்த்து விட்டார்‌. பொறுப்புக்கூறலை வலியுறுத்துவது தேவையான, நல்ல விடயம்‌. ஆனால்‌ பொறுப்புக்கூறலை வலியுறுத்த இது உகந்த தருணமல்ல. இப்போது பொறுப்புக்கூறலை வலியுறுத்த ஆரம்பித்தால்‌ ஏனைய விடயங்கள்‌ சிக்கலாகி விடலாம்‌. அதனால்‌ பொறுப்புக்கூறல்‌ விவகாரத்தை பின்னர்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌ என்ற சாரப்பட குறிப்பிட்டார்‌.

ரணில்‌ விக்கிரமசிங்கவின்‌ அரசை நம்புங்கள்‌, அதை ஆதரியுங்கள்‌ என்பதே அமெரிக்க விக்டோரியா நுலாண்டின்‌ இன்றைய சந்திப்பின்‌ மறைமுக செய்தியென, சந்திப்பில்‌ கலந்து கொண்ட வட்டாரங்கள்‌ தெரிவித்துள்ளன.

Posted in Uncategorized

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு – அமெரிக்கா

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்துள்ளார்.

இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ளார்.

இரண்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரோடு நேற்று இரவு 10.10 மணியளவில் புதுடில்லியில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோடு கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவே இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் கால எல்லை – ஜெகான் பெரேரா

பெருமளவு தாமதத்துக்கு பிறகு, இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம், ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால், அது சட்டவிரோதமான ஆட்சிமுறை சிக்கலுக்குள் நாட்டை தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும்.

நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் அரசாங்கத்தின் விருப்பம் அல்ல. தங்களது வெற்றிவாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் எதிர்க்கட்சிகளினதும் அவற்றின் வேட்பாளர்களினதும் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் அக்கறைகொண்ட சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு குழுக்களினதும் விருப்பமாகும்.

மக்களினால் தெரிவுசெய்யப்படும் பதவிகளை கைப்பற்றுவதற்கு அரசியல்வாதிகள் வாய்ப்புக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக பாடுபடுகின்ற சிவில் சமூக அமைப்புக்களை பொறுத்தவரையில், அவை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், ஜனநாயக பொறிமுறைகள் தொடர்ந்து செயற்படுவதை உறுதிசெய்வதில் நாட்டம் கொண்டிருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தல்களை மார்ச் 9 நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்ற போதிலும், உண்மையில் அந்த நேரத்தில் அவை நடைபெறுமா என்ற சந்தேகம் தொடர்கிறது. தேர்தல்களை நடத்துவதற்கு திறைசேரியில் பணமில்லை என்று அரசாங்க பேச்சாளர்கள் கூறுகிறார்கள். இதை அரசாங்கம் உயர் நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறது.

பொருளாதாரம் மீட்சி பெறும் வரை நாட்டுக்கு அரசியல் உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் வேறு பேச்சாளர்கள் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புதுமையான வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு எடுத்தபோது அதன் ஐந்து உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்ததால், அந்த தீர்மானம் கேள்விக்குரியதாகும். ஏனைய மூன்று உறுப்பினர்களும் மெய்நிகர் காட்சி வழியாக கூட்டத்தில் பங்கேற்றதாக ஆணைக்குழு பதிலளிக்க வேண்டியேற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், அது எவ்வாறு அமைந்தாலும், விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் கூட ஏதாவது வழியில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமாக இருந்தால், அதை எதிரணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கும். அவை நிவாரணம் பெற நீதிமன்றங்களை நாடும். சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் இதில் இணைந்துகொள்ளும்.

அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களை கவனத்தில் எடுப்பதா அல்லது நேரடியாக சட்டத்தின் பிரயோகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதே நீதிமன்றம் எதிர்நோக்கக்கூடிய கேள்வியாக இருக்கும்.

அண்மைய வழக்குகளில் குறிப்பாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பெரிதும் விரும்பப்படுகின்ற ‘முறைமை மாற்றத்தை’ சட்ட முறைப்படியான வழிமுறைகளின் மூலம் கொண்டுவருவதற்கு நாட்டத்தை காட்டியிருக்கிறது.

போராட்ட இயக்கம்

தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வீதிப்போராட்டங்களில் இறங்கவேண்டும் என்று பெருமளவு நெருக்குதல்கள் அரசியல் கட்சிகள் மீது பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறு செய்வதற்கு எதிரணிக் கட்சிகள் துணிச்சல் கொள்ளலாம். ஏனென்றால், மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் தேர்தல் தோல்விக்கு அரசாங்கம் அஞ்சுகிறது என்று அவை ஒரு மதிப்பீட்டை செய்யக்கூடும். முறைகேடாக சொத்துக்களை குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கும் நிலையில், பொருளாதாரத்தை பாதுகாக்கவேண்டிய தேவை குறித்த அரசாங்கத்தின் கருத்தை பெருமளவுக்கு கவனத்தில் எடுக்கக்கூடிய நிலையில் மக்கள் இல்லை.

நேர்மைக்கேடான முறையில் வர்த்தகக் குழுக்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கின்ற பணம் 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த தொகை இலங்கையின் கடன்களை தீர்க்கப் போதுமானவை.

கடுமையான வரிகளினாலும் பணவீக்கத்தினாலும் படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் இதனால் பெரும் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அந்த பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இந்த கம்பனிகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை.

மக்களின் ஆதரவு மோசமாக குறைந்துபோயிருக்கும் பின்னணியில் போராட்ட இயக்கத்துக்கு எதிராக கடுமையான  நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தின்  ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத – ஜனநாயக தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயங்குகின்ற ஒரு அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கைகளில் இறங்குவதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து பாதுகாப்புப் படைகளும் அக்கறை கொள்ளக்கூடும். மக்களின் ஒரு பகுதியான ஆயுதப்படைகள் அவர்களுக்காக அவர்களுடன் நிற்கவேண்டும் என்று உணரக்கூடும்.

சர்வதேச மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்த தடைகள் பாதுகாப்பு படைகளுக்கு ஓர் எச்சரிக்கையாகும். அவர்கள் இருவருக்கும் நேர்ந்த கதி தங்களுக்கும் நேரலாம் என்று படையினர் உணரக்கூடும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் போராட்ட இயக்கத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்புப் படைகள் மிகுந்த கட்டுப்பாடான முறையில் நடந்துகொண்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. தனது ஆணையை இழந்துவிட்டதாக தோன்றிய ஒரு ஜனாதிபதிக்கு ஆதரவாக மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்பட பாதுகாப்பு படைகள் விரும்பவில்லை.

மறுபுறத்தில், அரசாங்கம் தேர்தலை நடத்த விடுவதற்கு தீர்மானித்தால், அதன் அச்சங்களையும் நடைமுறையில் காண நேரிடலாம். பொருளாதாரத்தை இயக்க நிலைக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் இயலாமை அதன் தேர்தல் வாய்ப்புக்களுக்கு பாதகமாக அமையும்.

பொருளாதார உறுதிப்பாடு போன்ற ஒரு தோற்றப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் இல்லாமலும், நீண்ட நேர மின்வெட்டு இல்லாமலும் இருக்கின்ற அதேவேளை பொருளாதாரம் அதிக பெரும்பான்மையான மக்களுக்கு சிறிய வருமானத்தையே கொடுக்கிறது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் 8 சதவீதத்தினால் சுருங்கிய அதேவேளை இவ்வருடம் 4 சதவீதத்தினால் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இன்னமும் கிட்டாத நிலையில் பொருளாதார வளர்ச்சி நோக்கங்களுக்கான சர்வதேச கடனுதவிகளை அரசாங்கத்தினால் பெறமுடியாமல் இருக்கிறது.

உறுதிமொழி

உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க ஒரு தோல்வி அல்லது முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் நிலை கூட ஏற்பட்டால், அதன் நியாயப்பாடு மேலும் குறைந்துவிடும்.

தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு தீர்மானங்களை எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். 2020 ஒகஸ்ட் பொதுத்தேர்தலில் பெற்ற ஆணையை வைத்துக்கொண்டு தற்போது அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு நியாயப்பாடு இருப்பதாக உரிமம் கோரக்கூடியதாக இருக்கிறது. அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்தான வெற்றி கிடைத்தது. இப்போது கூட 225 ஆசனங்களில் 134 ஆசனங்களை அது கொண்டிருக்கிறது.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து விலகவைப்பதில் கடந்த வருடம் போராட்ட இயக்கம் கண்ட வெற்றி முன்னைய அந்த ஆணையின் நியாயப்பாட்டை வலுவிழக்கச் செய்துவிட்டது. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் மற்றும் இராணுவ பலத்தை மிகவும் சாதுரியமான முறையில் பிரயோகித்து போராட்ட இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதில் வெற்றி கண்டார். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய ஒரு தோல்வி பயனுடைய முறையில் ஆட்சியை தொடருவதில் அரசாங்கத்தின் ஆற்றலை பலவீனப்படுத்திவிடும்.

உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றனவோ இல்லையோ, அடுத்தகட்ட போராட்ட இயக்கம் பிரதான அரசியல் எதிரணிக் கட்சிகளின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படும். அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தன்னியல்பாக மூண்ட முதல் கட்ட போராட்டத்தை போன்று இருக்காது.

கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவி விலகியபோது போராட்ட இயக்கத்தினால் சொந்த தலைமைத்துவத்தின் மூலம் அதை பதிலீடு செய்யக்கூடியதாக இருக்கவில்லை.

ஆனால், இனிமேல் போராட்ட இயக்கத்துக்கு பிரதான எதிரணி கட்சிகளே தலைமைதாங்கி வழிநடத்தும். பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கும்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில்  இரண்டரை வருடங்கள் நிறைவடைந்து, அதை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி பெறும் தருணத்துடன் சமாந்தரமானதாக அந்த கோரிக்கை அமையும். இத்தகைய சூழ்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக உறுதியளித்துவரும் அரசியல் சீர்திருத்தங்களை ஜனாதிபதி முன்னெடுப்பதற்கான கால எல்லை சுருங்கிப்போகும்.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நீடித்து வருகின்ற சிக்கலான இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி இன மற்றும் மத சிறுபான்மையினங்கள் மத்தியில் குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் பெரும் நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரச்சினைகளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும்  கூட பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாதத்தை ரத்து செய்தல், சொத்துக்குரியவர்களின்  உரிமைகளை கருத்தில் எடுக்காமல் இராணுவத்தினாலும்  தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், கடந்த கால மனித உரிமை மீறல்களை விசாரணை செய்து மனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வழிவகைகளை முன்வைப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைத்தல் என்பனவே அவையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைத்தால் நாட்டில் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றி, நோபல் சமாதானப் பரிசு கமிட்டியினால் பரிசீலிக்கப்படக்கூடிய முன்னுதாரணத்தை உலகுக்கு காட்டிய ஒரு தலைவராக இலங்கையின் வரலாற்றில் தனது முத்திரையை பதிக்கமுடியும்.