நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதே சிறந்தது – மஹிந்த ராஜபக்ச

நிறைவேற்று அதிகாரமுறையை நீக்குவது சரியான நடவடிக்கை என தெரிவித்துள்ள முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் ஏற்கனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை அனுபவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் நிலைமை எவ்வாறு உள்ளது என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு நாட்டின் அரசியல் நிலைசிறப்பானதாக உள்ளது நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது நல்லது  என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முழுநாடும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதால் அதனை நீக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயல்வது எதிர்கட்சியினருக்கான பொறியாக அமையலாம் எங்களிற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறித்து நன்கு தெரியும் என மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்ததேர்தல் என்றாலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் சரியான தருணத்தில் அவர்கள் மேடைக்கு வருவார்கள் அதுவரை பொறுத்திருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச  இந்தியா போன்ற நாடுகளுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜேவிபி இறுதியாக உணரதலைப்பட்டுள்ளமை மகிழ்;ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே காரணம் – நீதி அமைச்சர் விஜேதாச குற்றச்சாட்டு

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணமாகும். அஜித் நிவாட் கப்ரால் அளுநராக இருந்த காலத்தில் இருந்து நாட்டின் அன்னிய செலாவனி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாட்டுகளில் இருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாமல் போனது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரச வங்கிகள் சாதாரண மக்கள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அந் மக்கள் கறுப்பு வியாபாரிகளை நாடி, தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு பாரிய வட்டித் தொகைக்கு கடன் பெறுகின்றனர். இதனால் சாராதண வியாபாரிகள் விவசாயிகள் தங்களின் தொழிலில் நட்டம் ஏற்படும்போது அவர்கள் அந்த தொழிலை விட்டுவிடும் நிலைக்கு செல்கிறனர். அதனால்தான் இன்று நாட்டில் விவசாயம் செய்பவர்களின் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனால் இது தொடர்பாக மத்திய வங்கி கொள்கை ரீதியில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பான சட்டங்களை அனுமதித்துக்கொள்ள எமக்கு நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய வங்கிக்கு நிதி தொடர்பான அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதனால் இன்னும் தாமதிக்காமல் மத்திய வங்கி இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாடு வீழ்ச்சியடைய பிரதான காரணம் மத்திய வங்கியாகும். இதற்கு 90 வீதம் மத்திய வங்கியின் நடவடிக்கையே காரணமாகும். 10 வீதம் மற்ற விடயங்களாகும். 2006இல் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டது முதல் எமது வெளிநாட்டு செலாவனி முற்றாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாடுகளில் இருக்கும் எமது தொழிலாளர்கள் பாரியளவில் வெளிநாடுகளில் வியாபாரம் செய்து, அங்கு சேமித்து வைத்துக்கொண்டுடார்கள். நாட்டுக்கு பணம் அனுப்பவில்லை.

அதனால் எந்தவொரு நாட்டும் வெளிநாட்டு செலாவனியை நிர்வகித்துக்கொள்ள தவறினால் அந்த நாடு தோலியடையும். அதுதான் எமக்கும் ஏற்பட்டது. எமது அவெளிநாட்டு செலாவனியை முகாமைத்துவம் செய்ய மத்திய வங்கிக்கு முடியாமல் போனது. சிறிமா அம்மையாரின் காலத்தில் வெளிநாட்டு செலாவனி மோசடி ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, அதில் குற்றவாளியாக்கப்பட்ட அனைவரையும் சிறையிலடைத்தார். சிலர் சிறையிலேயே மரணித்தார்கள்.

அதனால் நாட்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பாக மத்திய வங்கி சுயாதீன நிறுவனமாக செயற்படும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு முன்னர் மத்திய வங்கி அதுதொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறையான நிதி முகாமைத்துவம் இல்லாமையே கறுப்பு சந்தை நிதி நிறுவனங்கள் அதிகரிக்க காரணமாகும் என்றார்.

மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் – கம்மன்பில

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். ஆகவே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் ஏற்பாடுகள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது திருத்த யோசனையை எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் அதிகாரத்தை இரத்து செய்யும் வகையில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில முன்வைத்த இருபத்திரெண்டாவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடந்த ஆண்டு ஜூலை மாதமளவில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திக் பிரதான அம்சமாக மாகாண சபைத் தேர்தல் முறைமை,பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் காணப்படுகின்றன.பொலிஸ் அதிகாரத்தை நீக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவே முதன் முறையாக தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.13ஐ அமுல்படுத்தினால் தற்போது உள்ள நல்லிணக்கம் கூட பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தலைமைகளுக்கு கிடையாது.பிரச்சினைகளை புதிதாக உருவாக்கி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் சேவை மாகாண பொலிஸ் தேசிய பொலிஸ் என இரண்டாக வேறுப்படுத்தப்படும்.தேசிய பொலிஸ் அதிகாரிகள் மாகாணங்களுக்குள் இருக்கும் பொலிஸ் சீருடை அணிய அனுமதி வழங்கப்படமாட்டாது. அதற்காக மாகாண முதலமைச்சரின் அனுமதி பெற வேண்டும். பிரிவினைவாதிகளை தாக்க பாதுகாப்பு தரப்பினர் பிரிவினைவாதிகளிடம் அனுமதி கோர வேண்டும்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தின் ஊடாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காணி மற்றும் பொலிஸ் விவகாரங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தான் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் 256 மற்றும் 257 அத்தியாயங்களில் மாநில அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் இலங்கைக்கு எதிராக மாகாணங்கள் செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்ற ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக வழங்கினால் இலங்கை இராணுவத்துக்கும்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொலிஸுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம். பொலிஸ் நியமனத்தில் மாகாண முதலமைச்சரின் தலையீடு காணப்படும். ஆகவே இது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் என்பதொன்று இருப்பதால் தான் தமிழ் தலைமைகள் அதனை முழுமையாக அமுல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இரத்து செய்யும் வகையில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 22 ஆவது திருத்த யோசனை சட்டமூலத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.

உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சி கடும் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறித்து எதிர்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த சட்டமூலத்தினால் ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி அச்சம் வெளியிட்டுள்ளது.

ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா உத்தேச சட்டமூலம் குறித்து அவநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம் குறித்து அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சட்டமூலத்தினால் நிகழ்நிலை மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகலாம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளமை குறித்து நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ள ஹர்சடிசில்வா சமூக ஊடகங்களை ஒடுக்குவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறிப்பிட்ட குழுவொன்றிற்கு தொலைக்காட்சி உரிமங்களை வழங்குவதற்கு உதவலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமும் நடைமுறைக்குவந்தால் இலங்கை ஊடக உலகம் கறுப்பு உலகமாக மாறலாம் என ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் இன்றையதினம் வியாழக்கிழமை வழக்குதாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் மாநாட்டிற்கு தடை விதித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஜெய்கா தலைவர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான செயலாக இருந்தாலும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை கலாநிதி தனக்கா அகிஹிக்கோ பாராட்டினார்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு ரயில் திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜப்பானிய உதவியின் கீழ் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியின்போது, இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜெய்காவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜெய்கா தயாராக இருப்பதாக கலாநிதி அகிஹிட்டோ மேலும் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் விவகார பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தியா – இலங்கை நிர்வாக, அரச அதிகாரிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்த உத்தியோகபூர்வ பேச்சு

இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் இலங்கை பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் தலைமையில் நிர்வாக மற்றும் அரச அதிகாரிகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இரு தரப்பு பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை இன்று (15) புது டில்லியில் நடைபெற்றது.

இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவில் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக (SLIDA) பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவே ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.

இதேவேளை, இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையின் மூத்த அதிகாரிகள், என்.பி.எஸ். ராஜ்புத், புனித் யாதவ் மற்றும் ஜெயா துபே ஆகியோரும் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்டங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மூலம் நடத்தும் நோக்குடன், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றும் NCGG இடையில் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிமுறைகள் குறித்து இச்சந்திப்புகளின்போது இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் (SLIDA) பணிப்பாளர், அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை அதிகாரிகளுக்கான திறன் விருத்தி செயற்றிட்டம் மற்றும் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, பல்வேறு உயர்மட்டங்களில் 1000 அதிகாரிகளுக்கு கலப்பு முறையில் பயிற்சிகளை நடாத்துவதற்கும் செயற்றிட்டங்களை முன்வைத்தார்.

இதேவேளை இந்த பேச்சுகளில் கலந்துகொண்டிருந்த இந்திய அதிகாரிகள் நிர்வாக மறுசீரமைப்பில் தமது முக்கிய வகிபாகங்கள் மற்றும் பொது நிர்வாகத்துக்கான பிரதமர் விருது திட்டத்தில் தகுதி அடிப்படையில் அங்கீகரித்தல், CPGRAMSஇல் AI/MLஐப் பயன்படுத்துவதன் மூலம் பொதுக் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் பொது குறைகளைக் கையாள்தல் மற்றும் ஒன்றிணைந்த சேவை தளங்கள், அவசியமான இ-சேவை மற்றும் இலத்திரனியல் கட்டமைப்பினதும் அவற்றின் பெறுபேறுகளினதும் வலுவாக்கல் போன்ற முன்னெடுப்புகள் மூலமாக சேவை வழங்கலை மேம்படுத்தல் குறித்த தகவல்களை வழங்கியிருந்தனர்.

இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த கவலையுமில்லை – அனுரகுமார

இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தலாம் என்ற கரிசனை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்தது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தான் அழைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவாகயிருக்கலாம் என்பதை தெரிவித்துள்ள ஜேவிபி தலைவர் தேசியபாதுகாப்பு பொறுப்புணர்வுமிக்க பூகோள அரசியல் ஆகியவற்றிற்கான ஜேவிபியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா தனது கட்சியை அழைத்தமைக்கான காரணம் என்னவாகயிருக்கலாம் என்பது குறித்து கருத்துதெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க இலங்கையின் தற்போது காணப்படும் நிலைமை காரணமாகவே இந்தியா தன்னை அழைத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேவிபியை இந்தியா அழைத்ததை பாரம்பரிய செயற்பாடுகளில் இருந்து ஒரு மாற்றம் என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் புவிசார்அரசியல் நலன்களிற்கு எதிராக இலங்கை பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைஅரசியலை உன்னிப்பாக அவதானிக்கின்றது என ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி துருவமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் தேவைகளிற்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை எந்த தேசத்துடனும்இணைந்துசெயற்படுவதற் ஜேவிபி தயாராகவுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும்; வரலாற்றுரீதியாகமுரண்பாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள ஜேவிபியின் தலைவர் நாடுகளும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளும் குறிப்பிடத்தக்க மாற்றமடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராகஇலங்கையின் தேசிய பாதுகாப்பே இந்தியாவின் கரிசனைக்குரிய விடயம் எனவும்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் குறித்து எந்த அச்சமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளரைச் சந்தித்த மைத்திரிபால!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (14) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணி மற்றும் இருதரப்பு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கும் தனது பாராட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமரை சந்தித்தார் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு புதன்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.