13ஐ ஏற்றுக்கொள்வதால் தமிழ்த் தேசிய கட்சிகளின் இலக்குகள், கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கையின் அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தினையே உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு இந்தியா தொடர்ச்சியாக அழுத்தங்களை அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான ஒருமித்த சந்திப்பு இன்றையதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோரும் தமிழரசுக்கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தபோதும், தேர்தல் பணிகள் காரணமாக அவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையிலையில் சந்திப்பு ஆரம்பமானதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் ஒருமித்துச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சம்பந்தன், முதலில் கருத்துக்களை வெளியிட்டார். அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சரித்திரீதியாக காணப்படுகின்ற உறவுகள் பற்றிக் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்கள் இலங்கையின் பாகத்தில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்கள் உள்ளக சுயநிர்ணய உரித்துக்கு சொந்தமுறையவர்கள். இது ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் காணப்படுகின்றது உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இச்சமயத்தில் குறுக்கீடு செய்த அமைச்சர் ஜெய்சங்கர், நாடு தற்போது முக்கியமானதொரு காட்டத்தில் உள்ளது. பொருளாதார நிலைமகள் மிகவும் சீர்குலைந்துள்ள. இவ்வாறான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி உங்களது நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று கோரியுள்ளார்.

அதன்போது, அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அதன் ஊடாகவே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. அதற்கமைவாகவே 1987ஆம் ஆண்டு இலங்கை –  இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார்.

இதனையடுத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடு ஏனையவர்களின் நிலைப்பாடுகளுடன் மாறுபட்டுக் காணப்படுவதாக குறிப்பிட்டதோடு, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதானது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகாரங்களை பகிர்வதாக அமையாது. ஓற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அவை மீண்டும் இலகுவாக மத்திய அரசாங்கத்திடம் மீளச் சென்றுவிடும்.

இதற்கு உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் உதாரணங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே, ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச் சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முழுமையான சமஷ்டி அடிப்படையில் தான் தமிழர்களுக்கான தீர்வு அமைய முடியும். அதன் மூலம் அந்த மக்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமஷ்டிக் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது. அதனைக்கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தான் உடனடியாகச் சாத்தியமாகவுள்ளது.

ஆகவே, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்குவோம். மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போது ஏற்றுக்கொள்வதால் உங்களுடைய இலக்குகள் கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது. அத்துடன் 13ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கே தயக்கங்கள் அரசாங்கத்திடத்தில் காணப்படுகின்றபோது சமஷ்டி விடயங்கள் நீண்டகால அடிப்படையிலானது. அதற்குள் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துவிடும். ஆகவே சாத்தியமான விடயத்தினை முதலில் அணுகவேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, சுமந்திரன், கஜேந்திரகுமாரின் கருத்தினை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு எமது நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது. எனினும்  நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதில் எமக்கு முழுமையான நம்பிக்கைகள் இல்லை. இருப்பினும், நாம் கிடைத்த வாய்ப்பினை கைவிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏற்படக்கூடாது என்பதற்காக பேச்சுக்களில் பங்கேற்றோம். அதன் பின்னர் அரசாங்கத்திற்கு காலக்கெடுவொன்றை வழங்கியுள்ளோம்.

அதற்குள் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்கள் ஆகியவற்றை முன்னெடுக்குமாறு கோரியுள்ளோம். இந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு மூன்று வருடங்களை கோரியிருக்கின்றார். அத்துடன் 2018இல் இணங்கிய காணிகளையே தற்போது விடுவிப்பதாக அறிவித்துள்ளார். ஏனைய அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லை என்றார்.

இதனையடுத்து, சித்தார்த்தன், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு, நாம் ஆறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டிணைந்து அனுப்பிய கடித்தில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தசட்டத்தினையே முதலில் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். அந்த விடயத்தில் இந்தியாவின் அழுத்தம் தொடர வேண்டும் என்றார்.

தொடர்ந்து, சுரேஷ்பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா உள்ளிட்டவர்கள், நாடு பொருளாதார நெருக்கடிக்குள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல் நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான அதிகாரங்கள் முழுமையாக அமுலாக்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கில் அரசியல் பொருளாதார ஸ்திரமடையச் செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறித்த மாகாணங்கள் கணிசமான பங்களிப்பினைச் செய்ய முடியும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் பகுதிபகுதியாக நடத்தப்பட்டிருந்தது. ஆகவே தற்போது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக முன்னெடுக்க முடியும்.

அதேநேரம், இந்தியாவின் மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையின் மாகாணங்களுக்கு அவ்விதமான அதிகாரங்கள் இல்லை. ஆகவே சிறப்பு ஏற்பாடாக அவ்விதமான அதிகாரத்தினை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிகளை அளித்தால் இந்தியா மற்றும் புலம்பெயர் தரப்பு ஆகியவற்றின் ஊடாக முதலீடுகளை உட்கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம்.

அதேநேரம், வடக்கில் ஐயாயிரம் கடலட்டைப் பண்ணைகள் ஸ்தாபிக்கப்படும் நிலையில் அதற்கான மூலங்களை சீன நிறுவனமே வழங்குகின்றது. இவ்விதமான சீனாவின் பிரசன்னங்களையும் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் பலாலி விமானநிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்பதன் ஊடாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகளின் விமானங்கள் வருகை தருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதன் ஊடாக அந்நியச் செலாவணியை பெருமளவில் ஈட்டிக்கொள்ள முடியும் என்றனர்.

இதனையடுத்து, மீண்டும் கஜேந்திரகுமார் சமஷ்டித் தீர்வு சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்தார். சம்பந்தன், வடக்கு, கிழக்கில் இந்தியாவின் முதலீடுகளை வலுவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

ஈற்றில், வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் பொருளாதார வலயம் தொடர்பில் கரிசனைகளைச் செலுத்தியுள்ளதோடு, வடக்கிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று குறிப்பிட்டதோடு, சமஷ்டி விடயம் சம்பந்தமாக தான் ஏற்கனவே கூறிய கூற்றினை மீள நினைவுபடுத்தியதுடன் சந்திப்பு நிறைவுக்கு வந்தது.

சமஷ்டி அரசியலமைப்புக்கு ஆதரவளியுங்கள் – இந்தியாவிடம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கோரிக்கை

தமிழர் தேசத்தை அங்கீகரித்து அதனைப் பாதுகாக்கும் வகையில் இலங்கையில் சமஷ்டி அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இந்தியா முழுமையான ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்றையதினம் தமிழ்த் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போது பங்கேற்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த எழுத்துமூலமான கோரிக்கையை அவரிடத்தில் கையளித்துள்ளார்.

குறித்த கோரிக்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் வருமாறு,

பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளது. கடந்த 75 வருடங்களாக பின்பற்றப்பட்ட கொள்கைகளும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை தற்போதைய நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இலங்கையில் சமீபகால ஏற்பட்ட மக்களின் எழுச்சிகள் ஒரு முழுமையான ‘முறைமை மாற்றத்திற்கு’ தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளமையானது கடந்த காலநிலைமைகள் தொடர்ந்தும் நீடிப்பதற்கு விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.

இலங்கையில் இனப்பிரச்சினை நீடிப்பதற்கான முக்கிய காரணங்களில் மிக முக்கியமானதொன்று ஒற்றையாட்சி அமைப்பாகும்.

இந்நிலையில், இலங்கை அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்கள் அதை நிராகரித்து வருகின்றனர். மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை, மாநிலத்தில் அர்த்தமுள்ள சுயாட்சியை அடைய முடியாது.

13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 வருடங்களின் பின்னர், அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தினை விடவும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. உயர் நீதிமன்றங்களின் 30க்கும் மேற்பட்ட நீதித்துறை தீர்ப்புகள் அதிகாரப்பகிர்வு எதிராகவே உள்ளனரூபவ் மத்திய அரசாங்கம் அனைத்து அதிகாரங்களின் களஞ்சியமாக இருக்கும் என்றே அத்தீர்ப்புக்கள் பொருள்கோடல் செய்கின்றன.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கான அடிப்படையான 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று இந்தியா கோரிவருகிறது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை நடைமுறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதிகாரப்பகிர்வுக்குச் சார்பாக அமையவில்லை.

அந்த வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருதுவதில் கூட கூடுதலான அரசியல் ஆபத்து உள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று கூட்டாட்சிக் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, அதனடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைப்பதன் மூலமே நியாயமான தீர்வை எட்ட முடியும் என்பதை சிங்கள தேசம் மக்களுக்குச் சொல்ல வேண்டும். நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன்,  ஐக்கிய இலங்கைக்குள் வடரூபவ்கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் முன்வைத்துள்ளோம்.

இலங்கைக்கான அரசியலமைப்பு தமிழ் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் மற்றும் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையை நனவாக்க அனுமதிக்க வேண்டும்.

நிறைவாக, பிராந்தியத்தில் பொதுவாகவும் குறிப்பாக தமிழ் தேசத்திலும் இந்தியாவின் சட்டபூர்வமான தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு எங்கள் அமைப்புகளின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம் என்றுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (ஜன 20) இடம்பெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர் இராணுவ தளபதியுடன் பேச்சு

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்

யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இலங்கையில் தனது முதலீடுகள் தொடர்பில் கௌதம் அதானி ஆராய்வு

இலங்கையில் தனது முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்து கௌதம் அதானி ஆராய்ந்துள்ளார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட குஜராத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.

அஹமதாபாத் சாந்திகிராமில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை தூதுவரை சந்தித்த அதானி அதன் பின்னர் இலங்கையில் தனது முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் துறைமுக துறையில் அவரது குழுமம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

13 ஐ முழுமையாக அமுல்படுத்தி தேர்தலை நடாத்துவது முக்கியமானது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இணைந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டை பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்தியா (இலங்கையின்) நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என்று வலியுறுத்திய ஜெய்சங்கர், இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் – இ.தொ.கா சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததோடு, இதனால் மலையக மக்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மலையகத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான புதிய திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்த வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார். இவ்விரண்டு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன்,இ.தொ.காவின சட்ட பிரிவு பொறுப்பாளர் மாரிமுத்து,இ.தொ.காவின் ஆலோசகர் மதியுகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துறையாடலில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன் என ஜெய்சங்கர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழக்கிழமை (19) மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன். எம்.பிக்களான எம். உதயகுமார், வேலுக்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நன்றிகளை தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;

இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்தினோம். இதன்போது மலையகத்துக்கு இந்திய வம்சாவளித்தமிழர்கள் வந்து 200ஆவது ஆண்டு நிறைவு பெறுவது தொடர்பில் எடுத்துரைத்தோம்.

இந்த நிறைவை முன்னிட்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி என்பவற்றை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், என்பவற்றை பயில்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் மலையக கட்சிகளுடன் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதியை சந்திக்கும் போது இந்த விடயத்தை வலியுறுத்துமாறும் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு மலையகத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனத் தெரிவித்தார்.