13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தப்பட கோரும் டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதியின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.

போதைப்பொருளை தடுப்புக்கு பூரண அதிகாரம் கொண்ட செயலகம் : ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை சிக்க வைப்பதற்கும் தனியான பாதுகாப்புப் பிரிவொன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான தீர்ப்பு 12 ஆம் திகதி

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் கடந்த 2022 அக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

இந் நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்பு, எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கப்படும் என உயர் நீதிமன்ரம் தற்போது அறிவித்துள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. உயர் நீதிமன்றம்  வழக்கை நிறைவுறுத்தி அனைத்து தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை கடந்த 2022 அக்டோபர் 5 ஆம் திகதியிலிருந்து  3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என  அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் திகதி அறிவிப்பு இன்றி இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எதிர்வரும் 12 ஆம் திகதி  குறித்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

21/4 தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன, சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார், ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க, கத்தோலிக்க மதத் தலைவர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் பிரதிவாதிகள் தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ், மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டனர்.

இந் நிலையில் குறித்த 12 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக கடந்த 2019 அக்டோபர் 2 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அறிவித்தது. அது முதல் மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி  சுரேன் பெர்ணான்டோவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி  விரான் கொரயாவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகினர்.

ஏனைய பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான்  வீரகோன், ஜனாதிபதி சட்டத்தரணி  அனுஜ பிரேமரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி துலிந்த வீரசூரிய,சட்டத்தரணி  சுதர்ஷன குனவர்தன, சட்டத்தரணி  கே.வி.எஸ். குனசேகரராஜன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந் நிலையில், பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டிருந்த தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அவ்வழக்குகளை முன்னெடுத்து செல்ல முடியாது என  உயர் நீதிமன்றம் கடந்த 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி அறிவித்தது.

பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிராக அரசியலமைப்பின் 35 (1) உறுப்புரை பிரகாரம் வழக்கொன்றை முன்னெடுத்து செல்ல முடியாது என அறிவித்து உயர் நீதிமன்றம் அதனை அறிவித்திருந்தது.

அவ்வாறான பின்னணியிலேயே இந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள்  முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில்,  தீர்ப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி வழங்கப்ப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சமஷ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும் : அம்பாறையில் சத்தியாக்கிரக போராட்டம்

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் இன்று பொது மக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஏற்பாட்டில் வடகிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று படுமாறு வலியுறுத்தி கடந்த 5 திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரையிலான தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மக்கள் ஒன்று திரண்டு குறித்த சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் போது வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் சிறுபான்மை தமிழ் அரசியல்கட்சிகள் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதில் பெண்கள் 50 வீதம் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமையவேண்டும். தற்போது வடகிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் மத கலாச்சார இடங்கள் தொல் பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தல் வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என வாசகங்கள் கொண்ட சுலோகங்களுடன் கோஷம் எழுப்பியவாறு பொதுமக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் தைப்பொங்கலின் போது காணி விடுவிப்பதற்கு சாத்தியம் !

வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அந்தக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு அரசியல் கைதிகளின் நீதி விவகாரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு கலந்துரையாடலில் கலந்து கொண்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக சபாநாயகரிடம் முறையிட தீர்மானம்

தொழிலாளர் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளையும் COPE குழுவின் அதிகாரங்களையும் ஆட்சேபனைக்கு உட்படுத்தி, விமர்சனங்களை முன்வைத்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று நடைபெற்ற COPE குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்தானது தவறான முன்னுதாரணம் எனவும், இதனூடாக COPE குழுவை இழிவுபடுத்துவது தெளிவாகியுள்ளதால், அது குறித்து கடும் அதிருப்தியை COPE குழு வெளியிட்டுள்ளதுடன், கணக்காய்வாளர் நாயகமும் தனது கவலையை தெரிவித்துள்ளா

கர்நாடகா மங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கையர்கள்

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு 2021 – 06 – 10 ஆம் திகதி கர்நாடகாவின் மங்களுரில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான ஏற்பாட்டினைச் செய்வதற்காக 15 நாள்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும் தம்மை அனுப்பிவைப்பதற்கான ஏற்பாட்டினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாரிடம் தொடர்புகொள்வது என்பது தெரியாது என்று பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு, மருத்துவ வசதிகள் இல்லாம் இருப்பதாகவும் சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார்.இதையடுத்து, குழப்பமாக சூழல் ஏற்பட்டது.

முன்னதாக உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார். யாழ். மாநகர சபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில், மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

ஐ.எம்.எவ், பாரிஸ் கிளப் கலந்துரையாடல்களில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.

மேலும் கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள், மனித கடத்தலை தடுத்தல், மீன்பிடி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு வழங்கிய உதவிக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன , தகவல் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்த மீன்பிடி படகுகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

மீன்பிடி, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், இலத்திரனியல் மற்றும் சுற்றுலா போன்ற புதிய துறைகளிலும் முதலீட்டாளர்கள் வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விஜயம் செய்யவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை.

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

புதுவருடத்தில் இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது.