கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டார்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய உத்தேச வீசா வகைகள் வருமாறு

1.வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான “முதலீட்டாளர் வீசா” வகை

2.சேவை வழங்குநர்களுக்கான “சேவை வழங்குநர் வீசா” வகை

3.கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான “சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்” வீசா வகை

நிலக்கரி கப்பல்கள் 14 நாட்டை வந்தடையவுள்ளன

ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது

3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி – ஐக்கிய நாடுகள் உணவு விவசாய அமைப்பு

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கையில், நான்கு பேரில் ஒருவர் ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்

இதேவேளை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி கீழ்நோக்கிய போக்கில் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் விலங்குணவு கிடைக்காமலும் மீனவர்கள் எரிபொருளை பெற முடியாமலும் உள்ளனர்.

இதன் காரணமாக, உள்ளூர் சந்தைகளில் உணவு விநியோகம் சுருங்கி வருவதாகவும் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவிகள் 244,300 பேரை சென்றடைந்துள்ளது.

அதேவேளை 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்காக நேற்று (திங்கட்கிழமை) வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவினால் பாடசாலை சீருடைகள் நன்கொடை

பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது தொகுதி முடித்த பொருட்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

நாடு திரும்பிய ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை முடித்துக்கொண்டு நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்தும் தெரிவித்தார்.

2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக ஹனா சிங்கர் செயற்பட்டார்

காணாமல் போனோர் அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.

அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

வடக்கு மாகாணத்தில் இளையோரை குறி வைத்து ஐஸ் போதை மற்றும் ஹெரோயின் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்கள் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் பணத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் பல இளையோர் பாதிக்கப்பட்டு சீரழிந்து வருகின்றனர் என்பதை வெளிவரும் செய்திகளும் வெளிவராத புள்ளி விபரங்களும் ஆதாரப்படுத்துகின்றன.

இவ்வாறான போதைப் பொருட் பாவனையை தடுப்பதற்கு முழுமையான செயல் நடவடிக்கைகளை அதிகாரத் தரப்பான காவல் துறை கட்டுப்படுத்த தவறுகின்றமையே சட்டவிரோத போதைப் பாவனை தீவிரம் பெறுவதற்கு காரணமாகின்றது.

சில கிராமங்கள் தாங்களாக உணர்ந்து சில விழிப்புக் குழுக்களை தங்கள் கிராமத்திற்கு உருவாக்கி கட்டுப்படுத்தி வருகின்றனர் ஆனால் பெரும்பான்மையான கிராமங்களுக்கு இவ்வாறான குழுக்கள் அமைக்கப்படவில்லை.

எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு தீர்மானம் ஒன்றை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலமே சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் விரைவாக இவ்வாறான விழிப்புக் குழுக்களை அமைப்பதை நடைமுறை செய்ய வேண்டும். இதுவே யுத்தத்தால் அழிந்து போன எம் தேசத்தை போதையால் மீண்டும் அழிந்து போக விடாமல் பாதுகாக்கலாம்.

மன்னாரில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு செல்வம் எம்.பி நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் முதல் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு எவரையும் அனுப்பமாட்டோம் – மனுஷ நாணயக்கார

அடுத்த வருடம் மார்ச் மாத்தத்துக்கு பின்னர் வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்கு இலங்கையில் இருந்து யாரையும் அனுப்பவித்தில்லை.

சிறந்த பயிற்சி பெற்றவர்களையே வெளிநாட்டு தொழிலுக்கு  அனுப்புவோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச புலம்பெயர்தோர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை  (டிச. 18) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் முறையான பயிற்சி இல்லாமல் இவ்வாறு தொழில்வாய்ப்புகளுக்கு செல்வதே இதற்கு காரணமாகும்.

அதேபோன்று போலி முகவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி செல்பவர்களும் இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேருடுகின்றனர்.

அதனால் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கின்றோம். அவ்வாறு பதிவு செய்து செல்பவர்கள், அங்கு ஏதாவது பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதுதொடர்பில் எமக்கு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

அத்துடன்  5வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலுக்கு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் இருந்தது.  என்றாலும் வாழ்க்கைச்செலவு காரணமாக இவ்வாறான தாய்மார்கள் சட்ட விரோதமான முறையில் செல்கின்றனர்.

அதனால் இந்த சட்டத்தை தற்போது இலகுவாக்கி, 2வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு வெளிநாட்டு தொழிலவதற்கு  தடைவித்திருக்கின்றோம்.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அனுப்பாமல் இருப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அவ்வாறு அனுப்புவதாக இருந்தால், அவர்கள் அது தொடர்பில் சிறந்த பயிற்சி பெற்றவராக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச்செல்பவர்கள் அங்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களுடன் கூடிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமான தொழில் பயிற்சி வழங்கியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மாத்திரமே வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்பப்படுவார்கள்.

அத்துடன் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

என்றாலும் தற்போது பெண்களுக்கு நிகராக ஆண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக செல்கின்றனர். நாட்டில் தற்போது நூற்றுக்கு 24வீதமான பெண்களே வெளிநாட்டு தொழிலுக்கு சென்றிருக்கின்றனர்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கட்டமைப்பை முழுமையாக டிஜிடல் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்த துறையில் ஏற்படுகின்ற மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

ஜனவரி முதல் நிதி கட்டுப்பாடுகளில் தளர்வு – பிரதமர்

மக்கள் நலன் கருதி எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். அதற்கமைய நிதி தொடர்பான கட்டுப்பாடுகளில் ஜனவரி முதல் தளர்வுகள் ஏற்படும் என நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எத்தனை சிரமங்கள் இருந்தாலும் சமூக பாதுகாப்புடன் தொடர்புடைய வசதிகளை குறைக்காமல் பராமரிப்பதற்கு வரவு – செலவு திட்டத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பொதுவான அம்சமாகக் காணப்பட்டது வருமானம் ஈட்டும் வழிமுறைகள் குறைவடைந்தமையாகும்.

தொழில்கள் இழக்கப்பட்டமை, முதலீட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தவற்றை செயற்படுத்த இயலாமை , அதில் ஆர்வமின்மை , கட்டுமானத்துறையின் வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்பன இதில் தாக்கம் செலுத்தின.

கடந்த சில மாதங்களில் நாம் எதிர்கொண்ட நிதி மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக , உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரமின்றி , முழு நாட்டையும் பொதுவான முடிவிற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்தது.

அதற்கமை நிதி முதலீடுகள் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் நிறுவனங்கள் வருமானம் பெறும் வழிகள் வீழ்ச்சியடைந்தன. இவை அரசாங்கத்திற்கு உரித்தான திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள் என்பவற்றிலும் தாக்கம் செலுத்தின.

ஜனவரி மாதத்திலிருந்து இந்த நிலைமையை ஓரளவுக்கு தளர்த்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஏற்கனவே பல தீர்மானங்களை எடுத்துள்ளது. உள்ளுராட்சி நிறுவனங்களும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ள தடைகளை நீக்க முடியும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.