2026 வரை இலங்கையின் வறுமை விகிதம் அதிகரித்த மட்ட்த்தில் காணப்படும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வறுமை விகிதம் இருபத்தி இரண்டு சதவீதத்தை விட உயர் மட்டத்திலிருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக வங்கியின் அறிக்கைகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியைக் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 இல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், நாடு இன்னும் அதிகளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் 25.9 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 வரை நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமென்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் சென்றாலும், வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என உலக வங்கியின் பணிப்பாளர் எச்.பரிஸ் குறிப்பிடுகிறார்.

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில் வரவேற்பு பதாதைகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் இன்று(23) நாட்டிற்கு வருகை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன்(Sun Haiyan) இன்று(23) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தருவதாக தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi), நாளை(24) நாட்டிற்கு வருகை தருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரானிய ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதி – ரெலோ யாழ்.பொறுப்பாளர் சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின் நிகழ்ச்சி நிரல்களில் தமிழ்த் தரப்பில் சிலர் சதி முயற்சியில் இறங்கியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசுடன் இணைந்துள்ள தமிழ் முகவர்கள் வழமை போன்று அரசுக்கு சார்பாக பொது வேட்பாளர் விவகாரத்தை விமர்சிப்பதை தாண்டி தமிழ்த் தேசியக் கட்சிகளில் இருப்பவர்களும் வேறு சிலரும் மறைமுக அரசின் மற்றும் வெளிச் சக்திகளின் முகவர்களாக மாறி எதிரான கருத்துக்களை ஊடகப் பரப்பில் முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து பொது வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சக்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார். இவரைப் போன்று ஒரு சிலர் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரியவர்களின் அனுமதி இன்றி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது போன்ற சதிகளில் குதித்துள்ளனர்.

தமிழர் தரப்பு எவ்வகையான தீர்மானங்களையும் எடுத்தாலும் அதனை தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் இனவாதமாக மற்றும் பிரிவினைவாதமாக பார்க்கும் என்பதற்காக ஒற்றுமையாக வெளிப்படுத்தும் ஐனநாயக முடிவை அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட முடியாது. விமர்சனங்கள், சதிகளை கடந்து அனைவரும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெற்ற 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Gnanamuthu Sreenesan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் நேற்று (16.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியாகவும் நிதானமாகவும் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் சமூகமும், புத்திஜீவிகளும், இந்த தேர்தலை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துள்ளன. ஜனாதிபதித்துவ ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டு 46 ஆண்டுகள் கடந்திருக்கின்றன, யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கும் நிலமை காணப்படுகின்றது.

30 வருடகாலமாக ஆயுதரீதியாகப் போராடினார்கள். பலநாடுகளின் யுக்திகளின் மூலமாக அந்த போராட்டமும் மௌனிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவின் (India) நிர்ப்பந்தத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு மாகாணசபை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த மாகாணசபையிலும் கூட இலங்கை இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு இல்லை.

மாகாணசபை தேர்தல் நிறுத்தப்பட்டு 6 வருடங்களாகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல்தரைப் பிரச்சினையைக்கூட மாகாணசபை முறையால் தீர்க்கப்படாமலுள்ளன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கப்படல் வேண்டும் என்பதற்காக அப்பகுதி மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக்கூட 13ஆவது திருத்ததின் மூலம் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தீர்க்க முடியவில்லை. 1987ஆம் ஆண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமை எமக்குத் தீர்வாக அமையவில்லை.

தற்போதைய நிலையில 3 ஜனாதிபதி வேட்பாளர்கள் முகம் காட்டுகின்றார்கள். நான் 13ஆவது திருத்தத்தையோ, சமஸ்ட்டியைத் தருவேன் என்றோ கூறமாட்டேன் என அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) தெரிவிக்கின்றார். 13ஆவது திருத்தச் சட்டத்தை தரலாம் என சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவிக்கின்றார் ஆனாலும் சிங்கள பேரினவாதம் குறுக்கிடுகின்றபோது பொலிஸ் அதிகாரத்தை அவரும் தரக்கூடிய வாய்ப்பு இல்லை.

தமிழர் ஒருவரை பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்று கூறுகின்றவர்கள், ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடாக என்ன தீர்வைத் தருவார்கள்? அவ்வாறு தரக்கூடியவர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும்.

மகாணசபை, உள்ளுராட்சிமன்றம் போன்ற தேர்தல்கள் இன்னும் நடாத்தப்படவில்லை. எனவே மக்கள் தங்களது பிரதிநிதிகளைக்கூட தெரிவு செய்ய முடியாத ஜனநாயக முறை இங்கு காணப்படுகின்றது. தேர்தல் தொடர்பில் சுயவிருப்பு வெறுப்புக்களைப் பார்த்துக் கொண்டிருக்கினார்கள்.

மேலும், நாடு வங்குறோத்து நிலையில் உள்ள இக்காலகட்டத்தில் உலக நாடுகளிலிருந்து கடன்பெற்று ஆங்காங்கே சில அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.

கச்சதீவை இந்தியா மீள பெறவேண்டும் என எழுந்துள்ள சர்சையானது இலங்கையின் இறைமைக்கு ஓர் சவால் விடுகின்ற விடயமாகவும் கடற்அறாழிலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுகின்றதாகவும் அமைந்துள்ளது.

இது இந்திய தேர்தலுக்காக கொள்ளப்படுகின்ற உத்தியாகவே பார்க்கப்படுகின்றது. அந்நாட்டில் தேர்தல் முடிவுற்றதும் இவ்விடயம் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை – சிறீதரன் எம்.பி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட கைவிசேஷ நிகழ்வைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பல பேர் தோல்வியடைந்தனர்.

வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்பையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.

தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியாள சொல்ல முடியும் என தெரிவித்தார்.

கச்சத்தீவு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது.

வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர். தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புல் கொடி உறவுகள் பாதிக்க விடமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வெவ்வேறு வாகனங்கள் போதிய தகவல்கள் இன்றி காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் வாகன முகாமைத்துவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தணிக்கையில் 679 வாகனங்கள் இடம்பெயர்ந்தமை தெரியவந்துள்ளது.

240 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கணக்காய்வுக்கு அறிவித்துள்ள போதிலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் போதிய தகவல்களை கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுகாதார அமைச்சின் கணக்காய்வு அவதானிப்புகள் ஏனைய 439 வாகனங்கள் தொடர்பில் நான்கு வருடங்களாக எந்தத் தகவலும் கண்டறியப்படவில்லை என தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழர்கள் ஜனநாயக பலத்தை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிரூபிப்பது அவசியம் – சபா.குகதாஸ் வலியுறுத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலத்தை நிரூபிப்பது அவசியம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளருமான சபா.குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்த மௌனிப்பின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களின் அடிப்படை அபிலாசைகளை முன் நிறுத்தி ஒரு திரட்சியான ஜனநாயக பலம் 15 ஆண்டுகளை கடந்தும் வெளிப்படுத்தப் படவில்லை. இதற்கான சரியான தேர்தல் களம் என்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும் தான்.

ஏனைய தேர்தல்களில் திரட்சியான முடிவை வெளிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிக இலகுவான விடயம் இல்லை.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தல்களில் பல்வேறு முடிவுகளை எடுத்தாலும் அவை இன ரீதியாக சாதகமான அமையவில்லை.

ஆனால், யுத்தத்தின் பின்னரான சூழலில் ஒற்றுமையாக ஜனநாயகப் பலத்தை வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதனை நடைமுறைப்படுத்த தமிழர் தாயகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வேண்டும். ஒரே முடிவை உறுதியாக எடுக்க வேண்டும்.

தமிழர்கள் எடுக்கும் முடிவுகளை பேரினவாதம் இனவாதமாக மாற்றிவிடும் என்கிற விமர்சனங்களை தாண்டி தந்திரேபாயமாக ஜனநாயக பலத்தை உறுதி செய்ய செயல் திறன்களை வடிவமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் எவ்வகையான முடிவுகளை எடுத்தாலும் தென்னிலங்கை அதனை இனவாதமாகவே மாற்றியது.

உதாரணமாக சமஷ்டி கேட்டாலும் பிரிவினைவாதம், பதின்மூன்றை கேட்டாலும் பிரிவினைவாதம் இதுதான் யதார்த்தம்.

எனவே, இதனைத் தாண்டி இனத்தின் அபிலாசைகளை முன் நிறுத்தி ஒற்றுமையாக முடிவுகளை எடுப்பது அவ்வாறான ஜனநாயகப் பலத்தை சர்வதேச அரங்கிலும் பூகோள பிராந்திய நாடுகளின் உரையாடலிலும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாதகமாக பயன்படுத்த எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள மாறுபட்ட கருத்துக்களை தாண்டி ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்தார்.