அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் – அருட்தந்தை சிறில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார் என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அருட்தந்தை சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே

பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

அம்பாந்தோட்டையில் உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது.

சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு நிறுவவனத்தின் அதிகாரிகளுக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சினோபெக்கின் நிர்வாகம் அசல் முன்மொழிவு மற்றும் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்கள் திட்டத்துக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகளைத் தொடங்க உள்ளனர். நீர் வழங்கல், மின்சாரம், நில ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

குரகல விகாரை தொடர்பான பேச்சு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் நீதிவான் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வழங்கிய வாக்குமூலங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எது எப்படிஇருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆகவேண்டும்.அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பியை பொறுத்த வரையில் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாகவந்த மாகாணசபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜேவிபியினர்.அதற்கு எதிராக எதிர்த்தவர்கள் மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜேவிபியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் தமிழர் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 11 வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முன்னதாக கட்சியின் கொடியேற்றப்பட்டதுடன், அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

விடுதலை போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து பொதுமக்களுக்கும், போராளிகளுக்குமாக ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் மாநாட்டுப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தம் கருணாகரம், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சியை ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும் – செல்வம் எம்.பி

தமிழரசுக் கட்சியை ஒதுக்கிவிட முடியாது என்றும், அதனை ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும் எனவும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சினை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொதுவேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாள வேண்டும்.

ஒருவரை நிறுத்திவிட்டு சொற்ப வாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடகவே அந்த விடயத்தை செய்ய வேண்டும்.

ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். ஐ.நா வுக்கு கடிதம் எழுதுவது, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுவது ஒற்றுமையக சேர்ந்து செய்தோம்.

எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம்.” என்றார்.

தமிழர் தாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் : செல்வம் எம்பி வலியுறுத்து

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(23) இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். அதிபர் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள் அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொது வேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.

ஒருவரை நிறுத்திவிட்டு சொற்பவாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடாகவே அந்த‌ விடயத்தை செய்யவேண்டும்.

நாளையதினம் எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம் எனவே அரசியல் கதிரைகளுக்காக வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலைமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும்.

இதன்போது தென்னிலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது.

இந்த ஒற்றுமைக்குள் நாங்கள்கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச்சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது.

அவர்களோடு பேசி பொதுச்சின்னத்தின் கீழ் அணிதிரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம், தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது என்றார்.

ரெலோவின் பொதுக்குழுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வவுனியாவில் இடம்பெற்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  11 ஆவது தேசிய மாநாட்டிற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டமும் நிர்வாக தெரிவும் ஜனநாயக முறையில் 23-03-2023 இன்றைய தினம்‌ இடம்பெற்றது.

 

 

 

வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணி விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.

ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது

அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு எதிராக 117 எம்பிக்களும் ஆதரவாக 75 எம்பிக்களும் வாக்களித்தனர். இந்த பிரேரணை மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் விவாதிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தின் முடிவில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. எம்.பி.க்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட இரண்டு உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது 31 எம்.பி.க்கள் சபையில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதிக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், பிரியங்கர ஜயரத்ன, நிமல் லான்சா, வடிவேல் சுரேஸ், டபிள்யூ.டி.ஜே.சேனவிரத்ன, ஏ.எல்.எம்.அதவுல்லா மற்றும் ஏ.எச்.எம். பௌசி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பொதுஜன பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரம, அத்துரலியே ரத்தின தேரர், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வாக்களிக்கும் போது அவையில் இருக்கவில்லை. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளார். சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் செயற்படுவார்.

ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டது, எனினும் பாராளுமன்ற அலுவல்கள் குழு அதன் பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்த முடிவு செய்தது.

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் 13, 17, 20, 33 (6), 34 (1), 35 (1), 21, 22 மற்றும் 33 ஆகிய பிரிவுகள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்ததாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு பேரவையில், ஐஜிபி தேசபந்து தென்னகோனின் நியமனத்தை உறுதிசெய்ய சபாநாயகர் ‘அரசியலமைப்புக்கு முரணாகவும் சட்ட விரோதமாகவும்’ தனது தீர்க்கமான வாக்கைப் பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர்.