வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையிலே சர்வதேச விசாரணையை கோரியே தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்திய வர்த்தகக் குழுவொன்று வடக்குக்கு விஜயம்

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது  கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த விற்க முடியாத குப்பையாகி விட்டார் – ஐக்கிய மக்கள் சக்தி

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லுமாறு நான் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.

நாம் தேர்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. நாளை தேர்தல் நடந்தால்கூட நாம் முகம் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்.

மக்கள் இன்று போராட்டங்களில் ஈடுபடுவதில்லை தான். ஏனெனில், வீதிகளில் இறங்கி போராடுவதற்கு பதிலாக தங்களின் வருமானத்தை உயர்த்தும் வழிகளை பார்க்கலாம் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், மக்களிடம் உள்ள கோபம் அப்படியே தான் உள்ளது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. தற்போது சிலர், ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்ததாக வரும் என்று கூறுகிறார்கள்.

கூறும் அவர்களுக்கே தெரியும், பொதுத் தேர்தல் ஒன்று தான் அடுத்து நடைபெறும் என்று. மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார்.

இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது. ஜனாதிபதியும் விரைவில் வீழ்ந்துவிடுவார். எனவே, தைரியம் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள்.

ஏனெனில், இப்போது மக்கள் தொடர்பாக கவலைப்படும் ஆளும் தரப்பினர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாதத் தீர்மானத்தின்போது அவருக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.

மக்களை பாதுகாக்க யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இறுதியில் தெரியவரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான சமஷ்டித்தீர்வை வலியுறுத்தி திருமலையில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திருகோணமலை மக்ஹெய்சர் மைதானத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் திருகோணமலையிலும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட 100 நாள் செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் நாளை முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்தச் சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள், சர்வகட்சிக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் – சிவாஜிலிங்கம்

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை நாங்கள் வழங்க முடியாது” என்று  அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கேற்க வேண்டுமெ ஒரு பித்தலாட்டத்தை நடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களிடம் நாம் கூறவிரும்புவது என்ன வென்றால் எமது சுதந்திரத்துக்கான பொதுசனவாக்கெடுப்பை கோரும் செயற்பாடானது ஒரு சில கட்சிகள்  மாத்திரமே முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அனைவரும் இது குறித்து பேசுமிடத்து இவ்விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு ஒரு பொதுசனவாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்கள் கேட்கும்  சுதந்திரத்தைப்   பெறமுடியும்.

13 ஆவது திருத்தத்தை சிங்கள இனவாதிகள் எரித்தார்கள். இதே போன்றதொரு நிலைமீண்டும் ஏற்பட்டால்  இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரித்து விட்டு சர்வதேச சமூகத்தை நோக்கி செல்லுகின்ற நிலை ஏற்படும் . ஆகவே இலங்கை அரசு தொடர்ந்து ஏமாற்றுகின்றது என்றால்  அதற்கு ஏமாறுபவர்களும்  பொறுப்பாளிகள் ஆகின்றனர்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காணி அபகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் – இந்திய நிதி அமைச்சர்

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா ஜப்பான் பிரான்ஸ் ஆகியநாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்வதை வரவேற்பதாக அவர்தெரிவித்துள்ளார்.கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலகவங்கியும் சர்வதேச நாணயநிதியமும் துரிதப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது – கனடா தூதுவர்

கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையாலும் கனடாவை போல அதிகளவு சாதிக்க முடியும்,கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது என எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாழ்க்கை பெருமளவிற்கு ஆங்கில பிரென்ஞ் ஆகியவற்றை கொண்டதாக காணப்படுகின்றது தமிழ் மொழியும் பயன்படுத்தப்படுகின்றது கனடா தன்னை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை இவ்வாறே முன்னிறுத்துகின்றது இலங்கை உடனான உறவுகளிலும் இது குறித்தே கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ளோம் இது மிகவும் நீண்டகால கடினமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

தீர்வில்லையேல் இந்தியாவின் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கினை இணைக்க நேரிடும் – செல்வம் எம்.பி.எச்சரிக்கை

தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் வடக்கு கிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என கோர வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அதன் மூலமே தமிழர்களின் இறையாண்மையினை பாதுகாக்க முடியும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சிங்ளவர்கள் தமிழர்களின் இரத்ததினை குடிக்கும் நோக்குடன் மட்டுமே செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும் என்றும் இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உதட்டளவில் தேசியம் பேசாமல் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செய்யும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.