வெளிநாட்டு தூதுவர்கள் மலையகத்துக்குச் சுற்றுலா

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களைக் கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 9 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென ‘எல்ல ஒடிஸி’ விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று, வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது.

சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கின்றது.

அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம், ஜூலை 01 முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு, இன்று (06) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதுவர்களுக்குக் கிடைத்தது.

இந்த விசேட சுற்றுப் பயணத்துக்கு, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.

இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் சர்வதேச விசாரணை – சரத் வீரசேகர எச்சரிக்கை

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக எமது இராணுவத்தினருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால், அவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் நாம் அன்று எதிர்ப்பினை இங்கு வெளியிட்டோம்.

ஏனெனில், இதில் எவரேனும் ஒருவர் இராணுவத்தினருக்கு எதிராக பொய் சாட்சி கூறுவாராயின், குறித்த இராணுவ வீரரை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

ரோம் உடன்படிக்கையில் நாமும் கைச்சாத்திட்டுள்ளமையால், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்காலத்தில் இடம்பெறலாம்.

எனவே, இவை நடக்காமல் இருக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அத்தோடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.

இது முற்றாக சட்டவிரோதமான செயற்பாடாகும்” என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

இந்தியா – இலங்கை இடையே டிஜிட்டல் பணபரிவர்த்தனை – உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்திய சுற்றுலா சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடந்த சில மாதங்களில் வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இயக்கப்பட்ட சென்னை – யாழ்ப்பாண விமான சேவை, வரும் ஜூலை 16 முதல் நாள்தோறும் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு என்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி அனைவரும் நன்கு அறிந்துள்ளதாகவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல் எல்லைகளைத் தாண்டிய பொதுவான பாரம்பரியத்தை உருவாக்கும் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா திட்டம்

இலங்கையின் நிதிச் சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச் செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்ட மிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.செந்தில்நாதன் இதனைத் தெரிவித்தாரென இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை, அதன் இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு, 7.1 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி, 3 பில்லியன் டொலர்களை சீனாவுக்கும், 2.4 பில்லியன் டொலர்களை பரிஸ் கிளப்புக்கும், 1.6 பில்லியன் டொலர்களை இந்தியாவுக்கும் செலுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த மறுசீரமைப்பு நிதிவசதி கிடைக்கப்பெற்ற பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பாக 3 முதல் 4 ஆண்டுகளில், இலங்கையிடம் இருந்து பெறவேண்டிய கடனை, 10 முதல் 12 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும் என்று இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தின் தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடென்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்துவிடக்கூடாது என அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை. அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயல்படுகிறார்கள். ஆகவே, பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- தேசிய நல்லிணக்கத்துக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

இலங்கை சிங்கள பௌத்த நாடு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன. குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன. குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்தபோது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.

அத்துடன் குருந்தூர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வருகை தந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டார். நீதிபதியின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலை விகாரையின் தொல்பொருள் மரபுரிமை தொடர்பில் கேள்வி எழுப்பும் அதிகாரம் இந்த தமிழ் நீதிபதிக்கு கிடையாது. அத்துடன் குருந்தூர் மலையில் இருந்து வெளியேறுமாறு குறிப்பிடும் அதிகாரமும் அவருக்கு இல்லை. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தமிழ் நீதிபதி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு ஒருசில நீதிபதிகளும் ஆதரவு வழங்குகிறார்கள். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்பதையும் உயரிய சபை ஊடாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலம் உட்பட மத அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குருந்தூர் மலையிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாது காக்க சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணையவேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றால் ஏன் பௌத்த மத மரபுரிமைகளை அழித்து அதன் மீது திரிசூலத்தை அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்-என்றார்.

முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி தடயங்களை அழிக்க அரசு முயற்சி

முல்லைத்தீவில் அகழப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் தடயங்களை அழிப்பதற்கு முயற்சிக்கலாம் என்றும் அந்த விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா தனரஞ்சினி தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- இன்றுடன் 2,390 ஆவது நாளாக பல இன்னல்களுக்கு மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தெருவில் நின்று போராடி வருகின்றோம்.

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்ப்பட்ட காணாமல் போனோர் பணிமனை இன்று வரை தனது பணியை செவ்வனே செய்து முடிக்கவில்லை. ஆயினும், ஜெனிவா கூட்டத் தொடர் வருகின்ற காலப் பகுதிகளில் தாமும் வேலை செய்வதாகவும், அவர்களது விவரங்களை பெற்று மக்களுக்கு தாம் பதிலளிப்பதாக காட்டுவதற்காகவும் தமது பணிகளை மும்முரமாக வெளிக்காட்டுகின்றனர். நாளையதினம் (இன்று) கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி. அலுவலகம் வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களை அழைத்து அதற்கான பரிகாரம் வழங்கப் போவதாக அறிய முடிகின்றது.

நாம் பல மாவட்டங்களில், பல இடங்களில் மற்றும் பல காலங்களில் ஓ. எம்.பி. பணிமனையை எதிர்த்து நின்றோம். அதாவது மாவட்ட ரீதியாக அவர்கள் எந்தவிதமான செயல்படுகளையும் செய்யாதவாறு எதிர்த்தோம். இன்றும் நாம் ஓ.எம்.பி.அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவோ தீர்வு கிடைக்கப் போவ தில்லை என்பதால் தான் 38 ஆவது கூட்டத்தொடரில் இருந்து இன்று வரை ஜெனிவாவில் உண்மையான குரலினை பதிவு செய்து வருகின்றோம்.

ஓ.எம்.பி.அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முனையாது விலகிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் சார்ந்து அரச சம்பளம் வாங்கும் மாவட்ட செயலகமாக இருப்பினும் அல்லது பிரதேச செயலகமாக இருப்பினும் அங்கே பணிபுரிபவர்களால் கூட அந்தப் பதவிகளில் இருப்பதால், எமது உறவுகளின் உயிர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்க முடியாமல் உள்ளனர். ஆனால், அரசாங்கத்துக்கு சார்பாக வேலை செய்வதற்கு மக்களிடம் வருகின்றனர். மக்களின் பணிகளைச் சரியாக செய்வதில்லை. தமது தேவைகளுக்காகச் செல்லும் மக்களை இருக்க வைத்துவிட்டு அவர்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள். ஆனால், ஓ.எம்.பி. அலுவலகம் என்றவுடன் அங்கு வழங்கப்படும் ஜூஸிற்கும், சிற்றுண்டிக்குமாக வேலை செய்வதை கண்டிக்கிறோம்.

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழிகள் எங்கிருந்து வந்தன? யாரால் ஆக்கப்பட்டன? அதனை இல்லாது ஒழிப்பதற்காகத்தான் அகழ்வுப் பணிகளில் அரச படைகளும் இணைந் துள்ளன. அந்த அகழ்வுகள் நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும். இலட்சக்கணக்கில் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியாது அரசு தவிர்த்து வருவதுடன் அரசாங்கத்தினால் ஜெனிவா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் உள்ளது.

ஆகவே, அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இந்த தடயங்களை அழிக்கலாம். ஆகவே புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி மனித நேயத்துடன் உள்ள அனைத்து உலக நாடுகளும் இவை குறித்த உண்மையினை அறிய உதவ வேண்டும்-என்றார்.

யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு – அரச புலனாய்வு துறையினர் அழுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு,

“நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ். ஐ. எஸ் ) அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தெரிவுக்கான பேரவை கூட்டம் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாவிடின் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம். கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்  என  யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், சிலாபம், கொழும்பு கம்பகா , காலி  மற்றும் அம்பாந்தோட்டை  ஆகிய மாவட்டங்களிலுள்ள   கடற்தொழில் சமாசங்கள் , சங்கங்களின் பிரதிநிதிகளும் சட்ட ஆலோசகர்களும் இணைந்து கலந்துரையாடலொன்றை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.

அதையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களோடு மொத்தமாக 15 கடலோர மாவட்டங்கள் ஒன்றிணைந்து மீனவ பிரச்சினைகள் தொடர்பாகவும்  அவற்றை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன் ஏற்பட்ட  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நீர்கொழும்பு சட்டத்தரணி நிமாலினி குணரட்ணம் தலைமையிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே வடக்கு சங்கங்களையும் சமாசங்களையும் ஒன்றிணைக்குமாறு நாம் விடுத்த  கோரிக்கையை ஏற்று இன்று சட்டத்தரணி வருகைதந்து எங்களுடன் கலந்துரையாடி எங்களையும் இணைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பாதிப்பானது எமது பிரதேசத்திலும் ஏற்பட்டதை கடந்த காலங்களில்  ஊடகங்கள் வெளியிட்டன.  குறித்த பாதிப்பால் கடலாமை, திமிங்கிலம் போன்றன இறந்து கரையொதுங்கிய நிலை காணப்பட்டது என எம் தரப்பு விடயங்களை முன்வைத்தோம்.

வடமாகாணத்தில் பாதிப்பாகவுள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துதல்,  நீதிமன்றத்தை நாடுவது தொடர்பிலும்  இந்தியா இழுவைப் படகுகளை நிறுத்துதல் தொடர்பாகவும் யாழ் மாவட்டத்திலே உள்ள சீன கடலட்டை பண்ணை தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இவற்றை விட கிளிநொச்சி பகுதிகளில் கம்பிப்பாடுகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மீனவர்களின் படகு, வலைகள் சேதமாக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களின் கருத்தைச் செவி சாய்க்காது தொடர்ந்தும் 5000 ஏக்கரில் கடலட்டை பண்ணையை மீண்டும் வழங்குவேன் என கூறியுள்ள நிலையில் அதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்தாலோசித்துள்ளோம்.

கடலட்டைப் பண்ணைகள்  கடந்த காலங்களில் கடற்தொழிற் சங்கங்கங்களின் அனுமதி பெற்றே  வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது நீரியல் வளத் திணைக்களம்,  நெக்ரா, நாரா நிறுவனங்களின் அனுமதியே தேவை எனக் கூறுகின்றது.

இதைவிட பருத்தித்தீவில் சங்கத்தின் அனுமதியின்றி பண்ணை அமைக்கப்பட்ட நிலையில் பல பிரச்சினைகள் எழுந்தும் இதுவரை பண்ணைகள் அகற்றப்படாத நிலையுள்ளது. கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலததில் சீனாவிடம் ரின்மீன்  வாங்கி உண்ண  வேண்டிய நிலை தோன்றும்.

சட்டங்கள் பல இருந்தாலும் அவை அமுல்படுத்தப்படாமல் உள்ளது அவற்றை அமுல்படுத்த அழுத்தங்களை பிரயோகி்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் இல்லை எதுவாயினும் மக்களின் அனுமதியைப் பெற்றே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

வடக்கில் முதலிடுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் ஆளுநர் கோரிக்கை

“எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எமது பகுதியை மீட்டெடுக்க நம்மிடம் உள்ள ஒரேயொரு உபாயம். புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக அனைத்துத் தரப்புக்களும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது மாகாணத்தின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மாகாணத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றைத் தருவதற்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் முன்னேற்றுவதற்கான பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வடக்கு மாகாணத்தில் அதிகரித்து பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிந்திக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறையை இன்னும் விரிவுபடுத்தி, அதனூடான வருமானமீட்டலையும் வடக்குக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைகளையும் பெற்று வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும். எமது மாகாணத்தைச் சிறந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிறந்த பெறுபேற்றைத் தருவதற்கு அனைத்துத் தரப்பினரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.