எழுவான்கரை – படுவான்கரை பாதைப்போக்குவரத்தை இலவச சேவையாக்குமாறு ஜனா எம்.பி கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஆளுநரிடம் முதற் கோரிக்கையாக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த எழுவான் கரையில் இருந்து படுவான் கரைக்கான பாதைப் பயணத்திற்கு பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடும் விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

முன்னாள் ஆளுநனர் ஏற்கனவே பொருளாதர நிலையில் நலிவுற்றிருக்கும் மக்களைக் கருத்திற் கொள்ளாமல் பாதைப் போக்குவரத்துக்கு கட்டணம் அறவிடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.

தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கும் தாங்கள் வறிய நிலை மக்களுக்குள் இருந்து அவர்களின் நன்மை தீமை அனைத்தையும் அனுபவித்து இன்று இந்நிலைக்கு உயர்ந்துள்ள ஒருவர். எனவே எமது மக்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இப்பாதைப் போக்குவரத்திற்கு கட்டணம் அறவிடுகின்ற விடயத்தை நிறுத்தி முன்னர் இடம்பெற்றது போன்றே இலவச சேவையினை வழங்க வேண்டும் என்று பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததற்கமைவாக இவ்விடயத்திற்குக் கொள்கை அளவில் ஆளுநரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமானது வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் முன்நிறுத்தி கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை

லங்கா சதொச ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் இருவரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன்,கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநரால் புத்தகப் பைகள் வழங்கி வைப்பு

திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார்.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

புதுடெல்லியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இந்தியாவின் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நேற்று(18.5.2023), மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளை முற்போக்கு மாணவர் அமைப்பும் (PSA) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பும் (JNUTSA) இணைந்து இலங்கையில் இந்நினைவேந்தலை மேற்கொள்ளும் மக்களுக்கான தோழமைக்காக தீபமேற்றியும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியும் நினைவுகூர்ந்தனர்.

எமது மக்களுக்காக ஒன்றாக இணைந்து பயணிக்க உறுதி பூண வேண்டும் ஜனா எம்.பி

எமது உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதே அரசாங்கம் கடந்த காலங்களிலே தமிழ்ப் போராட்ட இயக்கங்களைப் பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 மே 18ம் திகதி எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. அதனையொட்டிய ஒரு வார காலத்துக்குள் எமது உறவுகள் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பொதுமக்கள், போராளிகள் உயிர்நீத்துள்ளதாக முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இன்றுடன் 14வது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் செல்ல முடியாத எமது மாவட்ட மக்களுக்காக இந்த நினைவேந்தலை நாங்கள் கல்லடி கடற்கரையிலே செய்துள்ளோம். எமது உறவுகளை நினைத்து அவர்களை நினைவு கூர்வதற்காக இங்கு வருகை தந்துள்ளோம்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் எமது மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்ததன் காரணமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கும், சுயநிர்ணய உரிமையுடன் எங்கள் பிரதேசங்களில் வாழ்வதற்காகவும் அகிம்சை ரீதியாகப் போராடினோம். ஆனால், எமக்கு அந்த உரிமை கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ச்சியாக இனக்கலவரங்களின் ஊடாக எமது உறவுகளின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டதே தவிர நாங்கள் சுதந்திரமடைந்த மக்களாக வாழவில்லை என்ற காரணத்தினால் ஆயுதப் போராட்டத்திற்குள் நாங்கள் வலிந்து தள்ளப்படடிருந்தோம்.

அந்த ஆயுதப் போராட்டம் 2009 மே 18ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், எமக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் தமிழ்த் தேசியப் பரப்பிலே ஜனநாயக, இராஜதந்திர ரீதியாக எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

2001ம் ஆண்டு பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள், அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அரசியல் ரீதியாக எமது பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்றத்திலே ஒற்றுமையாகப் பொரடுவதற்குமாக ஒன்றிணைந்தோம். ஆனால் 2009ல் ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஜதார்த்தமாகப் பேசப்போனால் நாங்கள் இன்று பல பிரிவுகளாகப் பிளவு பட்டு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாகச் செய்ய முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிலைமை தொடரக் கூடாது. ஏனெனில் நாங்கள் முள்ளிவாய்க்காலிலே இழந்த இழப்புகளுக்கு இதுவரை பதில் இல்லை. முள்ளிவாய்க்காலிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குக் கூட இதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்குக் கூட என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாமல் இருக்கின்றது.

2009ற்குப் பின்னர் மூன்றாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்து கொண்டிருந்தாலும் கூட இறந்தவர்களுக்கோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ ஒரு நீதி கிடைக்கும் சூழ்நிலையை இந்த நாட்டிலே உருவாக்கவில்லை.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் கூறுகின்றார். வடக்கு கிழக்கு தமிழ் எம்பிகளையும் அழைத்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டாலும் 13வது திருத்தம் எங்களது இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

எனவே நாங்கள் இந்த உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து கொண்டு இனியாவது ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்கள் ஒன்றாகப் பயணிக்காவிட்டால்; கடந்த காலங்களிலே இதே அரசாங்கம் தமிழ்ப் போராட்ட இயக்கங்களை பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி எங்களை வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

தமிழ்ப் பிரிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போது கூட நாங்கள் வலியுறுத்திக் கூறுவது ஒரு சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் ஒரு பேச்சுவார்ததை நடக்க வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் போதே இதற்கு நியாயமான ஒரு தீர்வை சபைக்குக் கொண்டு வரும்.

இன்று நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையினூடாக நடைபெறும் எந்தவொரு விசாரணை மூலமும் இழந்த எமது உறவுகளுக்கு ஒரு இழப்பிடோ நீதியோ உண்மையோ கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் கலப்புப் பொறிமுறை மூலமாக சர்வதேச தலையீட்டுடனான நீதியான விசாரணையைக் கோரி நிற்கின்றோம்.

அந்த வகையில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரே குரலாக எமது மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும், இழந்தவர்களுக்கான இழப்பீட்டையும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்குமாக தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்று இன்றைய நாளில் நாங்கள் உறுதி பூணுவோம் என்று தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பெருமளவானோர் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இருபத்தொரம் நூற்றாண்டில் உலகமே பார்திருக்க ஓர் இனம் இனப்படுகொலை செய்யப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளான அடையாளங்கள் அனைத்தும் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகளின் கொடும் கரம் கொண்டு வஞ்சம் தீர்க்கப்பட்டு இன்றோடு 14ஆண்டுகள் கடந்தும், எம்மின உறவுகளின் உள்ளங்களில் என்றும் துயர்நிறைந்த அந்த கொடூர நாட்களின் வடுக்கள் என்றும் நெருப்பாக பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது அது, ஓர் நாள் அவர்களின் இழப்பிற்கெல்லாம் நிச்சயமாக விடிவைப்பெற்றுத்தரும்.

முள்ளிவாய்கக்காலின் இறுதி நாட்களில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் வழமை போல் இந்த ஆண்டும் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாயக்கால் நினைவு முற்றத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொள்ள உணர்வெழிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பொது ஈகைச்சுடரினை அற்புதவிநாயகர் ஆலய பூசகரான குருக்கள் பிரம்மச்சிறிசதீஸ்வர சர்மா அவர்களும், நாடு கடந்த அரசாங்க பிரதிநிதி சாமினி இராமநாதன் அவர்களும் , இளையோர்களான செல்வன் சோதிதாஸ் மதி,மற்றும் பேரின்பநாதன் சஞ்சிகா அவர்களும் , முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மகன் செல்வன் ஆரகன் அவர்களும் ஏற்றிவைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரித்தானியா கொடியினை உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஆலோசகர் பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்ரர்) ஏற்றிவைத்துள்ளார்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் செங்குருதியால் தமிழர்களின் அடையாளமாக பட்டொளி வீசிப்பறந்த தமிழீழ தேசியக்கொடியினை முன்னாள் போராளி கபில் ஏற்றிவைத்துள்ளார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, அகவணக்கம் செலுத்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாக ஏற்றிவைக்கப்படும் “இனப்படுகொலையின் பிரதானச்சுடரினை” இன அழிப்பினை அடையாளப்படுத்தும் இசை ஒலிக்க, பிரிகேடியர் ஆதவனின் துணைவியார் சுதா ஏற்றிவைத்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தமது உறவுகளை நினைவில் நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட சுடர்களை மனமுருகி கண்களில் கண்ணீர் சொரிய ஏற்றி வைத்து ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தியுள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்ததூபிக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து ஆரம்பித்து வைக்க,நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்களை ஏற்றி,மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாயக்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான இறையாசி வேண்டிய உரையினை ஒக்ஸ்பேட் அற்புத விநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வரசர்மா நிகழ்த்தியுள்ளார்.

மேலும்,வளாகத்தில அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன

மேற்படி அனைத்து நிகழ்வுகளையும், தமிழர் கலைபண்பாட்டு நடுவமும், தமிழீழ மாவீரர் பணிமனையும் இணைந்து “வீழ்ந்தது அவமானமல்ல, வீழ்ந்து கிடப்பதே அவமானம், மீண்டெழ முயற்சிப்போம்” என ஒழுங்கு செய்துள்ளனர்.

பிரித்தானிய இலங்கைத்தூதரகம் முன்பாக நீதி கோரி போராட்டம்

இறுதி யுத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக தமிழர்களுக்கான சுதந்திர வேட்கை அமைப்பினர் 14ஆண்டு முள்ளிவாய்க்கால் நிணைவுதினத்தையும் ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு நீதி கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் தாய்மார்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கில் 30 க்கும் அதிகமான கிராம அலுவலர் பிரிவுகளில் தமிழர் காணிகள் கபளீகரம்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டையடுத்து அது ஒத்திப்போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிதாக ‘ஜே’ வலயம் உருவாக்கப்பட்டு அதனுள் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் அங்கு எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுகின்றன எனத்தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இதே ‘ஜே’ வலயத்தினுள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மகாவலி ‘ஜே’ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள அரச மற்றும் தனியார் காணி விபரங்கள், வீதிகள், அங்குள்ள குளங்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள், முன்னெடுக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதி காரசபையால் கடந்த 2ஆம் திகதி தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏற்கனவே பல்வேறு அரச திணைக்களங்களாலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.

 

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு

உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற பேரலங்களில் ஒன்றான முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு சிவில் சமூக அமைப்புக்களால் வியாழக்கிழமை (18) கொழும்பு – பொரளை கனத்தை மயான சந்தியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு வந்து நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

‘புலிகளுக்கான நினைவேந்தல் எமக்கு வேண்டாம்’ என்ற வசனம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அங்கு சென்ற சிங்கள ராவய அமைப்பினர் , ஏற்பாடுகளை குழப்புவதற்கும் முயற்சித்தனர்.

இதனால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்க முன்னரே அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிங்கள ராவய அமைப்பினரால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்ட போது அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டளர்களை அறிவுறுத்தினர்.

எனினும் தாம் எவ்வித குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்பதால் , நினைவேந்தலை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவித்ததாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அங்கு தீபம் ஏற்றப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதோடு , கஞ்சி வழங்கப்பட்டது.

அத்தோடு எதிர்வரும் திங்களன்று (22) நீர்கொழும்பு – பால்தி சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரிதொரு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அங்கும் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.