சீன ஆராய்ச்சிக் கப்பல் நவம்பரில் இலங்கை வருவதற்கு அனுமதி – அலி சப்ரி

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கைக்கு வருகைதருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார  அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் சீன கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனினும் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வரமுடியாது ஆனால் நவம்பர் மாதத்திலேயே சீன கப்பல் இலங்கை வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீன கப்பல் நவம்பர் மாதத்திலேயே இலங்கை வரமுடியும் என்பது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இது வெறுமனே ஒரு விஜயம் மாத்திரம் இல்லை கப்பல் இலங்கையில் தரித்துநிற்க்கும் நாட்களில் அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் உள்விவகாரங்களை கருத்தில் கொண்ட பின்னர் கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வருவதற்கான திகதியை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவுடனான இருதரப்பு உறவுகள்  மிகவும் அவசியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு – தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று(09) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்கவும், நீதிபதிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பதை நிறுத்தவும்’ கோரி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு சட்டத்தரணிகள் இன்று (09) காலை கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலத்தமடு ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! பொலிஸார் – பண்ணையாளர்கள் முறுகல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் இன்று மட்டக்களப்பு – கொம்மாதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி மத்திய கல்லூரி நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காகப் பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவிலான பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் வானில் ஹெலிகொப்டரும் வட்டமிட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்ணையாளர்களுடன் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் தலைமையை இலங்கை ஏற்கவுள்ளது

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது

2023 ஒக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

அவுஸ்திரேலிய உதவி வெளியுறவு அமைச்சர் டிம் வொட்ஸ் (Tim Watts), பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன், இந்தியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்தோனேசியாவின் அரசியல் சட்டம் மற்றும் அரசியல் விவகார அமைச்சரின் ஆலோசகர் ஆடம் முலவர்மன் டுகுவோ, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் , மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் டத்தோ. செரி திராஜா சம்ப்ரி அப்துல் காதிர், மொரீஷியஸின் வெளியுறவு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனீஷ் கோபின், ஓமன் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் ஷேக் கலபா பின் அலி பின் இசா அல்-ஹார்த்தி, சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி மற்றும் வெளிவிவகார இரண்டாவது அமைச்சருமான கலாநிதி முகமது மாலிகி பின் ஒஸ்மான், தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேன்டி பாண்டோர், தாய்லாந்தின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ, ஐக்கிய அரபு இராஜ்ஜிய பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் உதவி அமைச்சர் சயீத் முபாரக் அல் ஹஜெரி, யெமன் வெளிவிவகார பிரதம அமைச்சர் அவ்சன் அப்துல்லா அஹமட் அல்-ஆவுத் ஆகியோர் கொழும்பில் நடைபெறும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மசாஹிரோ கொமுரா, கொரியா வெளியுறவு அமைச்சின் அரசியல் விவகாரங்கள் துணை அமைச்சர் சுங் பியுங்-வோன், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் இணையவுள்ளனர்.

அமைச்சர்கள் குழு என்பது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அமைப்பாகும். தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் தலைமைப் பதவியை வழங்கும்போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார்.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25ஆவது கூட்டம் (ஒக்டோபர் 9-10) நடைபெறும்.

1997 இல் நிறுவப்பட்ட இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கம், இந்து சமுத்திரத்தின் எல்லையிலுள்ள அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். அதன் உறுப்பினர்கள் ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா வரை பரவியுள்ளனர்.இன்று, இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 உறுப்பு நாடுகள் மற்றும் 11 உரையாடல் கூட்டாளர்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது. 23ஆவது அமைச்சர்கள் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கும்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில், சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர்.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி மற்றும் மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர எல்லை சங்க செயலகத்தின் பணிப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எமது நாட்டுக்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உத்தேசிப்பதாக தம்மிக்க பெரேரா தெரிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார் நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா.

அந்தவகையில் 51% வாக்குகளை மொத்த வாக்களாக பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தல் போரில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என்ற வதந்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தம்மிக்க பெரேரா,

பெரும்பான்மைக் கட்சிகள் தாம் வேட்புமனுத் தாக்கல் செய்வதில் இணக்கம் காணும் பட்சத்தில் அது தனது தேர்தல் பிரசாரத்திற்கு பெரும் உந்துதலாக அமையும் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியிலிருந்து களமிறங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தான் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதாக மாத்திரம் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசியல் திட்டத்தில் ஒரு படியாக கல்வித் திட்டம் தொடங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியபோது, ​​இளைஞர் சமுதாயத்தை அறிவாற்றலுடன் செயற்படவும் அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் டி.பி. கல்வி தொடங்கியது.

இலங்கையில் 55 லட்சம் குடும்பங்களில் 11 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பிள்ளைகள் கல்விப் பாடசாலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.

காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை: பரீட்சார்த்தமாக யாழ் வந்த செரியாபாணி

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரீட்யாசார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று காலை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட செரியாபாணி எனும் குளிர் ஊட்டப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிச்சாத்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர். இவ் பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

நாகப்பட்டினம் இலங்கையிலேயே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமீக 27,000ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வரும் 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும்.

பொலிஸ் அதிகாரம் இன்றிய மாகாண சபையுடன் அடுத்த வருடம் தீர்வு; மனித உரிமை மீறல்களுக்கு நாட்டினுள்ளேயே தீர்வு – ஜனாதிபதி ரணில்

“இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுகளை நடத்தவுள்ளேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வேறுபாடுகளை முன்நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

அதனையடுத்து பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டன.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ‘‘தேசிய கீதத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று கூறப்படுவதால் அதனை சிங்களத்தில் இசைத்தாலும் தமிழில் இசைத்தாலும் பிரச்சினைகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு ஒரே தேசமாக முன்னோக்கிச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்.

வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல் களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவைச் சந்திக்க நேரிட்டது. அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் அனைத்து தலைவர்களுடனும் பேச்சு நடத்தவே எதிர்பார்க்கின்றேன். இன மத பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவோம். மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்.

பொலிஸ் அதிகாரங்களை ஒருபுறம் வைத்துவிட்டு விடயங்களைப் பார்ப்போம். நான் கல்வி அமைச்சராக இருந்தபோது நாட்டில் ஒன்பதாயிரம் பாடசாலைகள் காணப்பட்டன. அவற்றை ஒரு போது என்னால் நிர்வாகம் செய்ய முடியாமல் போனது. ஒன்பதாயிரம் பாடசாலைகளையும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. மாகாண சபைகளையும், ஒழுக்கத்தையும் பேணுவது மத்திய ஆட்சியின் செயற்பாடாகும்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை நாம் நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. சர்வதேசத்திற்கு சென்று அதனை தீர்த்துக் கொள்ள முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்

நாட்டின் பொருளாதாரம் முழுமையாகச் சரிவடைந்ததால் கடந்த வருடத்தில் நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற. அனைத்து வேறுபாடுகளையும் விடுத்து நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேசத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருடன் மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியின் அதிபர் எண்டன் பெனடிக் உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழாம், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட னர்.

மயிலத்தமடு மேய்சற்தரையை விவசாயத்திற்கு வழங்க கோரி சுமனரத்ன தேரர் தலைமையில் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

பாரம்பரிய மேய்ச்சற் தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயத்தினை முன்னிட்டு ‘ரணிலுக்காக நாம் 2024’ என்ற பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கட்டவுட் முன்னால் தும்புத்தடியோடு நின்றவாறும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் தொண்டமான் எமக்கு வேண்டாம்,இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பாளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் எம்.பிக்கள் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும் – சபா குகதாஸ்

தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட தயாராக வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07.10.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றத்திலும் ஒற்றுமை இன்மையை காட்டிக் கொடுக்காமல் சுயலாப நோக்கில் செயற்படாமல் ஒற்றுமையே பலம் என்ற நோக்கில் களத்தில் இறங்குங்கள் செயலில் காட்டுங்கள்.

பாதிப்பின்விரக்தி நிலையில் வாழும் வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மைத் தமிழ் மக்களின் மனநிலையை விளங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து அரசியல் இருப்புக்கான குளிர்காய்தலை தவிர்க்க வேண்டும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய விடையம் மிக முக்கியமானது.

தமிழர் தரப்பு அதனை வலுப்படுத்தி சர்வதேச நீதிப் பொறிமுறைக்கான கதவினைத் திறக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து போராடுவதன் மூலமே மாற்றத்தை கொண்டு வரலாம்.

இத்தகைய போராட்டம் நாட்கள் கழிய பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைப்பதற்கான வழியை திறக்கும்.

தனித்து ஓடினால் மக்கள் நன்றாக ரசிப்பார்கள் வாக்கு வங்கி அதிகரிக்கும் என நினைக்கும் பிற்போக்கு சிந்தனையை தவிர்த்து சகலரையும் ஒன்றினைத்து போராடினால் நீதிக்கான வழி திறக்கும் என குறிப்பிட்டுள்ளார்.