75 ஆண்டுகளாக இடம்பெறும் ஊழல் மோசடிகளே இலங்கையின் யாசகம் பெறும் நிலைக்கு காரணம் – பேராயர்

சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி, சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவால் மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் சீர்குலைவின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. நீதியை போன்றே சரியானவற்றை நடைமுறைப்படுத்துவதை இன்று மக்கள் மறந்துள்ளனர்.

தமக்கு ஏதேனுமொன்று கிடைக்கப் பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே அனைத்தையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவரேனும் ஒருவரிடம் ஏதாவதொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி என்ன சுதந்திர தினத்தை கொண்டாடினோம்?

21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, தேசிய கொடியேற்றப்பட்டு, வீதிகளில் மரியாதை அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்து, இது சிறந்த நாடு என்பதை தூதுவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் காண்பித்தோம்.

ஆனால், மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

இதுவா சுதந்திரம்? புரட்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அது எமது சுதந்திரமா அல்லது ஜனாதிபதியின் சுதந்திரமா?

இலங்கை இதற்கு முன்னர் இழைத்துள்ள பல தவறுகளின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் பிரதானமானது திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமையாகும்.

எமது நாட்டில் காணப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனாவுடனும் இவ்வாறான உறவே காணப்படுகிறது.

தற்போதுள்ள கடனை மீள செலுத்த முடியாமல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலும் கடன் பெறவுள்ளனர். நாம் எமது தாய்நாட்டை சீரழித்துள்ளோம் என்றார்.

வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம், உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன.

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர்.

அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.

குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று 27 ஆண்டுள்

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன.

வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்த போதும் அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

தற்போது நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலேயே இப்படுகொலை அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.கலாசார நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய மத்திய அமைச்சர் கலாநிதி எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

யாழ்.கலாசார நிலையத்தில் இன்றையதினம் நிகழ்வுகள் இடம்பெற்ற மண்டபத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சரஸ்வதி மஹால் என்று பெயர் சூட்டப்பட்டது. யாழ் கலாசார நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட அதேவேளை, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள 5 மாவட்டங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாகன பேரணியும் இடம்பெற்றது.


யாழ் கலாசார நிலைய நிர்மாணப்பணிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோசடியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னர் அதன் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.


11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடம் , நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் – இந்திய அமைச்சர் எல்.முருகன்

அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலையமானது மக்கள் மத்தியில் கலை , கலாசார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கும். எனது இந்த விஜயத்தின் போது இலங்கை மக்கள் மீதான இந்தியாவின் பரந்துபட்ட அர்ப்பணிப்பை மாகாணங்களில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. துரையப்பா மைதானம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ் இலங்கை முக்கியத்துவம் பெறுவது இயற்கையானது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற திருக்குறளுக்கமைய நட்பு நாடாக இந்தியா கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 4 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலமாக நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலும் இந்தியா அதன் உதவிகளை முன்னின்று வழங்கியுள்ளது. இவ்வழியாக இரு நாட்டு தலைமைகளினதும் வழிகாட்டலில் எமது ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று உறுதியளிக்கின்றேன்.

யாழ் – சென்னை நேரடி விமான சேவை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்களை விரைவுபடுத்தும். அது வர்த்தகம் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இது உந்துகோலாக அமையும். அதேபோன்று உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவையை புதுப்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். இது எம்மிரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி பொருளாதார, கலாசார ஈடுபாடுகளை ஆழப்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அபிவிருத்தி குறிக்கோளுடன் இலங்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய அபிவிருத்தி பயணத்தில் இந்தியா தனது நட்பு நாடுகளை குறிப்பாக இலங்கையையும் அரவணைத்து முன்னேற்றிச் செல்லும் என்று உறுதியளிக்கின்றோம். இவ்வளர்ச்சி இரு நாடுகளுக்குமானதாக மாத்திரமின்றி மக்களுக்கானதாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Posted in Uncategorized

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளானதில், தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இந்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை திருக்கேதீச்சரத்தில் வழிபாடு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (9) வருகை தந்த இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை (10) காலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற் கொண்டனர்.

இன்று காலை 11 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன் போது இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இ.பா ஜ.கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை ஆகியோருடன் யாழ்ப்பாண – இந்திய உதவித் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர் ஆ கலந்து கொண்டார்.

இதன் போது விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதோடு, இந்திய அரசின் நிதி உதவியுடன் முன் னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து மன்னாரில் இடம் பெற்ற இலங்கை – இந்தியா நட்புறவு நாடுகளின் தூதரக ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள குறைபாடுகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.