பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று காலையில் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி உடன்படிக்கையின் போது, கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை விபரம் வருமாறு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்திருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக, எமது இனத்திற்கான பலம் பொருந்திய கட்டமைப்பாக தோற்றம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை மறுதலித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தும் தானாகவே அதிலிருந்து வெளியேறியதால் மேற்கண்ட கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களையும் நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளோம்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருதரப்பு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களின் வரலாற்றுபூர்வ வாழ்விடமான இணைந்த வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில் தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையிலும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில், ஒற்றையாட்சி முறையை நிராகரித்து சமஷ்டி அடிப்படையிலான பூரண பொறுப்பு வாய்ந்த சுயாட்சியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறுபட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மேற்கண்ட அரசியல் அமைப்புகள் தமது நோக்கங்களை வெற்றிகொள்ளும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தி இயங்குவது என்று தீர்மானித்துள்ளன. மேலும் இலங்கைத் தீவில் எமது மரபுவழித் தாயகத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் சட்ட பூர்வமானதும், ஜனனாயக ரீதியிலானதுமான சகல உரிமைகளை நிலை நாட்டுவதையும் பேணிப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இக்கூட்டமைப்பு செயல்படும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் பல்வேறு கட்சிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்டு வருகின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக இல்லாமையினால், மேற்கூறிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டமைக்கப்பட்ட வலுவான அரசியல் சக்தியாக உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளன.

மேற்கூறிய அரசியல் கட்சிகளுக்கிடையில் எட்டப்பட்டிருக்கும் கருத்தொற்றுமையின் பிரகாரம், பின்வரும் விடயங்கள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்படுகின்றன.

1. மேற்கூறிய அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும் கூட்டாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும்.

2. மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய செயற்குழு ஒன்று அமைக்கப்படும்.

3. இத்தேசியச் செயற்குழு, வடக்கு-கிழக்கு தமிழ் மக்களிற்கான முழுமையான அரசியல் தீர்வை நோக்கமாகக் கொண்டு, அதனை அடைவதற்கான அனைத்து வழிகாட்டல்களையும் நெறிமுறைகளையும் வகுத்து செயற்படும்.

4. செயற்குழுவிலும் செயற்குழுவால் அமைக்கப்படும் ஏனைய குழுக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு சம உரிமைகளும் சம அளவான பிரதிநிதித்துவமும் வழங்கப்படும்.

5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுவின் ஏகமனதான முடிவுகளுக்கும் தவறும் பட்சத்தில் அதன் பெரும்பான்மை முடிவுகளுக்கும் அங்கத்துவக் கட்சிகள் கட்டுப்படும்.

6. மேற்கண்ட கட்சிகளையும் தேவையேற்படின் ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட வலுவான கட்டமைப்பாக உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

7. தேர்தல் விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்ற பெயரிலும் அதன் சின்னமான குத்துவிளக்கையும் கொண்டு செயற்படும்.

8. இதற்கான நிரந்தர ஒரு கட்டமைப்பை சாத்தியமான விரைவில் உருவாக்கும்வரை இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றிலிருந்தும் கட்சித் தலைவர்கள் உட்பட தலா மூவரைக்கொண்ட தேசிய செயற்குழு ஒன்று நிறுவப்படும்.

9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற நடவடிக்கைகளையும் இந்த செயற்குழுவே வழிநடத்தும்.

10. தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கையாள்வதற்கும், ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய பிற பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் தேவையான நிபுணர்குழுக்களையும் ஏனைய உப செயற்குழுக்களையும் தேவைகருதி தேசிய செயற்குழு நியமித்துக்கொள்ளும்.

11. அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்டாலும் தத்தமது சுயாதீனத் தன்மையையும் தனித்துவத்தையும் பேணிக்கொள்ள உரித்துடையவை.

12. ஒவ்வொரு கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலைமை அமைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், அங்கத்துவக் கட்சிகளையோ அல்லது கூட்டமைப்பின் கொள்கை, வேலைத்திட்டங்களை ஊடகங்களிலோ பொதுமேடைகளிலோ அல்லது சம்பந்தமில்லா தரப்பினரிடமோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ கருத்திடுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளையும் கண்காணிக்க ஒழுக்காற்றுக் குழு நிறுவப்படும்.

13. ஒரு கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி, உறுப்பினர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவினால் அதனை அங்கத்துவக் கட்சிகள் ஏற்கக்கூடாது.

14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமானது கூட்டுத் தலைமைத்துவமாகவும் சுழற்சிமுறையிலான தலைமைத்துவமாகவும் அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முழுமையான யாப்பு உருவாகின்றபோது, இந்த விடயங்கள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு உள்ளடக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, வேந்தன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

புதிய கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்து

5 தமிழ் கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியென்ற புதிய கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தலில் களமிறங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இதில் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.

தலைமைப்பதவி தேவையென அடம்பிடித்த க.வி.விக்னேஸ்வரன் தரப்பு இந்த கூட்டில் இணைவதாக முன்னர் குறிப்பிட்ட போதும், பின்னர் அதில் இணையவில்லை. சற்று முன்னர் புதிய கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்தாகியது. இந்த கூட்டணி குத்துவிளக்கு சின்னத்தில் களமிறங்கும்.

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார்

அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீன உயர் மட்டக் குழு இன்று இலங்கை விஜயம்

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (சனிக்கிழமை) இலங்கை வரவுள்ளது.

அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் அவர்கள் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனா 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு – யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு  பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய  தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,
 எங்களுடைய தமிழ் மக்கள் வடகிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்ற நிலையில் காணாமலாக்கப்பட்டோர் , அரசியல்கைதிகள், காணி விடுவிப்பு ,இராணுவ ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல் என அரசின்  திட்டமிடப்பட்ட இனபிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும், தேசிய பொங்கல் விழா ஒன்றினை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில்  யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?
 ஜனாதிபதி பொங்கல் விழாவை  மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றினை  வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணியளவில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம் பெற இருக்கின்ற தருணத்தில் 1 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு  போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும்  இடத்திற்கு சென்று நிறைவவடையும்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் அரசியல் பேதமின்றி குறித்த பொங்கல்  நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்த சாத்தவீக போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு, அனைத்து சிவில்  அமைப்புக்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா விருப்பம்

நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய துறையாக கல்வி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ், இலங்கை தொழில்நுட்ப வளாகத்தில் முதுகலைப் படிப்புகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், இலங்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை முதல் முனைவர் பட்ட படிப்பு வரை நூற்றுக்கணக்கான முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் கல்வியைத் தொடரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவித் திட்டங்கள் தனித்தனியாக வழங்கப்படுவதாக கோபால் பாக்லே மேலும் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் – சபா குகதாஸ்

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தரப்பை ஒற்றுமையாக வாருங்கள் கேலி செய்யும் விதமாக தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினன் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழின விடுதலைக்கான தியாகத்தில் உருவான கூட்டமைப்பை சீரழிக்கும் எந்த சக்திகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதிர் காலத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர் கடந்த காலத்தில் பலர் விட்ட தவறுக்கு நடந்த வரலாற்றை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணத்தில் எதிரிக்கு சாதகமாக பிளவினை ஏற்படுத்துவது மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மாவீரர்களின் உயிர்த் தியாகத்தாலும் தன்நிகர் அற்ற தலைவனின் வழி காட்டலினாலும் உருவாக்கப்பட்டது இத்தகைய தியாகத்தை பயன்படுத்தி பதவிகளை பெற்ற சிலர் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஒற்றுமையை சீர்குலைப்பதை தமிழ் மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள்.

சிங்கள் ஆட்சியாளர்கள் ஒற்றுமையாக வாருங்கள் என தமிழர் தரப்பை பார்த்து கேலி செய்யும் போது தொடர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் வகையிலும் தமிழர் தரப்பே இருப்பது மிக வேதனையாக உள்ளது இதற்கான பதிலடி எதிர்காலத்தில் கிடைக்கும்  என குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து கட்சிகள் கூட்டணி; நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன. யாழ்ப்பாணத்திலுள்ளதனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை(13) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது தமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி இடையே சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் டுவிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.