கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.

இந்நிலையில், குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 ஹெக்டயர் ( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்களம் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நீதியான தேர்தலை நடாத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும் தாம் எப்போதும் ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனெட் சபையின் உறுப்பினர்களான பென் கார்டின், ஜிம் ரிச், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோர் இணைந்து இலங்கையில் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் நீதியை அடைதல் ஆகியவற்றை முன்னிறுத்திய பொதுமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட இருகட்சித் தீர்மானமொன்றை செனெட் சபையில் முன்மொழிந்துள்ளனர். இத்தீர்மானத்தில் இலங்கை மக்களின் ஜனநாயக ரீதியான மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்திய அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கை மக்கள் அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அவை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், முறையற்ற நிதி நிர்வாகம், சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தோல்வி, சீனாவிடமிருந்து பெற்ற மிகையான கடன்கள் போன்றவை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் ஊழலையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையும் முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தொடர் தாமதம் நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்துள்ளது. இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களில் பலர் உள்நாட்டுப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்’ எனவும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தீர்மானத்தை மேற்கோள்காட்டி ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி – அமெரிக்க செனெட் வெளியுறவு குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இருகட்சித் தீர்மானத்தில் ‘ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் – ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துதல் என்பவற்றுக்கு நாம் எப்போதும் ஆதரவளிப்போம்.

முன்னாள் தவிசாளர் நிரோஷ்க்கு எதிரான நிலாவரை வழக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் ஒத்திவைப்பு

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தடுத்ததன் மூலம் அரச கருமங்களுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தடை ஏற்படுத்தினார் என தொடரப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் எதிர்வரும் ஆண்டின் யூன் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம் (15.12.2023) வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் கிடைக்கப்பெறவில்லை என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் எதிர்வரும் ஆண்டின் யூன் மதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணையினை நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த 2021 ஆண்டின் ஆரம்பத்தில் தொல்லியல் திணைக்களமும் இராணுவத்தினரும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் பௌத்த விகாரை அமைப்பது போன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதனை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பெருமளவானவர்களுடன் நிலாவலைப் பகுதிக்கு வருகை தந்து தமது அரச கருமத்திற்கு தொடர்ந்தும் தடை ஏற்படுத்திவருகின்றார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இருதரப்பினையும் அழைத்து சமரச முயற்சி என்ற போர்வையில் –  தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குள் தவிசாளர் தலையிடக் கூடாது என வலியுறுத்தினர். எனினும் இன நல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு தன்னால் இடமளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் வெளியேறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வருட ஆரம்பத்திலும் நிலாவரையில் பௌத்த வழிபாட்டிடம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்த நிலையில் அது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை  பரிமாறிக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய கோபன்ஹேகனில் உள்ள ஒரு பெரிய டென்மார்க் நிறுவனமான ஜி.பி.வி இன் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

டென்மார்க்கில் பல முதலீட்டாளர்கள் எரிசக்தி துறை, ஆழ்கடல் மீன்பிடி, இயந்திர படகு, உற்பத்தி மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பொதியின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து டென்மார்க் தூதரிடம் பிரதமர் தெரிவித்தார்.

முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் டென்மார்க் இலங்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பரிஸ் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்தார்.

கொள்கலன் ஊக்குவிப்பு மையமாக இலங்கையின் கப்பல் போக்குவரத்தை  விரிவுபடுத்துவதற்கான முயற்சி குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் கறுவா மற்றும் ஏனைய வாசனைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகளை டென்மார்க் வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் டென்மார்க் தூதரக அதிகாரி ருச்சி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய இளவரசி ஜனவரியில் இலங்கை வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார்.

அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பாகி 75 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கம் இளவரசி ஆனுக்கு அழைப்புவிடுத்திருக்கும் நிலையிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

அரசியல் சீர்குலைவை சரி செய்வதே முதன்மையானது

உலகத் தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் முயற்சியை பல்வேறு புலம்பெயர் அமைப்புகளும் விமர்சித்திருக்கின்றன.

அவர்கள் புலம் பெயர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றை வெளியிட்டிருப்பதை பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் வரவேற்றதாகத் தெரியவில்லை.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் புலம் பெயர் சமூகத்தோடு அரசாங்கம் உரையாடி வருவதான ஒரு தோற்றம் ஏற்பட் டிருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவையினர் இலங்கையில் தங்கியிருக்கும் சூழலில் சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதியான – டீசிரி கோமியர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருகின்றது.

இதேவேளை, தமிழத் தேசிய அரசியல் பரப்பின் பிரதான கூட்டணியான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ, ”தனிநபர்கள் தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களை கையாள முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’, என்று தெரிவித்திருக்கின்றது.

இதிலுள்ள அடிப்படையான பிரச்னை வேறு.

அதாவது, தமிழ் மக்களின் அரசியலை எவர் வேண்டுமனாலும் கையாளலாம் என்னும் நிலைமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைமைகள் இருக்கின்றபோதும் அவர்கள் மத்தியில் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்கள் இல்லை – தென்னிலங்கையோடு விடயங்களை கூட்டாகக் கலந்துரையாடும் போக்கு இல்லை.
இந்த இடை வெளியாலேயே உலகத் தமிழர் பேரவை என்னும் பெயரில் புலம்பெயர் சமூக உறுப்பினர்கள் சாதாரணமாக விடயங்களில் தலையீடு செய்ய முடிகின்றது.

இது தொடர்பில் ‘ஈழநாடு’ தொடர்ந்தும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.

அதாவது, தாயக அரசியலை வேறு தரப்புகள் கையாள அனுமதிக்கக்கூடாது. புலம்பெயர் சமூகத்தின் உதவியை பெற வேண்டும் – அவர்களது ஆதரவு முக்கியமானது. ஆனால், தாயக அரசியலை தீர்மானிக்கும் உரிமையை அவர்கள் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. 2009வரையில் புலம்பெயர் அமைப்புகளும் தனிநபர்களும் வெறுமனே நிதியளிக்கும் கருவிகளாகவே இருந்தனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர்தான் ஆளுக்கொரு கடை என்னும் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் அரசியலில் தலையீடு செய்ய முற்பட்டனர்.

2009இற்கு பின்னரான தாயக அரசியல் தலைமைகளை மதித்து நடக்கும் போக்கு புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் பெரியளவில் இல்லை.

தாங்கள் கூறுவதை இங்குள்ளவர்கள் கேட்க வேண்டும் என்னும் அடிப்படையிலேயே அவர்களது அணுகுமுறை இருந்தது.

இந்தப் போக்கின் விளைவாக – விடுதலைப் புலிகளுக்கு அதிகம் உரிமை கோருவது யார் என்னும் அரசியல் போக்கொன்றும் உருவாகியது.

அந்த உரிமையை அதிகம் தங்கள் வசப்ப டுத்துவதை ஓர் அரசியல் போக்காகவே கைக்கொண்டிருப்பவர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணியினர்தான்.
அதேவேளை கிளிநொச்சியில் அந்த உரிமையை தன் வசப்படுத்துவதில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னணி வகிக்கின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிலர் இந்த விடயத்தை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில் முனைப்போடு செயல் படுகின்றனர்.

இதற்கு பின்னால் புலம்பெயர் குழுக்களின் நிதி ஆதரவும் உண்டு. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியதை செய்யலாம் என்னும் சூழலில்தான உலகத் தமிழர் பேரவையினர் சிங்கள மக்களோடு உரையாடும் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஜனநாயக அரங்கில் எவரும் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம் – அதற்காக அவர்கள் செயல்படலாம்.

ஆனால், அவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் பெயரால் விடயங்களை முன்னெடுப்பதுதான் சிக்கலானது.
அது ஆபத்தானதும்கூட.

ஏற்கனவே, பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றுபட்டு சர்வதேச அரங்கில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி செயல்பட்டு வருகின்றபோது – இதேவேளை, தாயக தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள இந்தியாவின் உதவியை கோரி வரும் சூழலில் தன்னிச்சையாக சிங்கள மக்களோடு உரையாடப் போகின்றோம் என்று சிலர் தென்னிலங்கையில் சந்திப் புகளை மேற்கொள்வதானது அடிப்படையிலேயே தமிழர் அரசியலை பலப்படுத் தும் செயல்பாடுகளாக அமையாது.

இவை அனைத்தும் தமிழ் அரசியலின் சீர்குலைவையே அடையாளப்படுத்தும்.

மற்றவர்களோடு உரையாட செல்வதற்கு முன்னர் தமிழத் தேசிய தரப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழர் அரசியலிலுள்ள சீர்குலைவை சரிசெய்ய வேண்டும்

சீனாவுக்காக இந்தியாவின் வரலாற்று உறவை முறித்துக்கொள்ள போகின்றீர்களா – கோவிந்தன் கருணாகரன்

இந்திய, சீன உறவில் உண்மையான நண்பன் யார் என்பதை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை தவிர்க்க வேண்டும்.

இங்கு பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழியும், பௌத்த இலக்கியங்களும் இந்தியாவிலே தோற்றம் பெற்றன. இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சீன எக்சிம் வங்கி எமக்கு உதவுகின்றது. சர்வதேச கடன் மறுசீரமைப்பில் கை கொடுக்கின்றது என்று குறிப்பிடப்படுகிறது.

சீன கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் வரையறைகள் என்னவென்பதை இந்த சபையில் சமர்ப்பிக்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமை.

அதுமாத்திரமன்றி கடன்மறுசீரமைப்பு, சீனாவின் கொள்கை தொடர்பாக அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும்.

சீனா தொடர்பாக உரையாற்றும்போது இந்தியா தொடர்பிலும் உரையாற்ற வேண்டியது கட்டாயம். இந்தியா என்று நாங்கள் பேசினால் இங்குள்ள சிலருக்கு அது கசக்கும்.

இந்தியா எனக்கொன்றும் இனிப்பல்ல. ஆனால் யதார்த்தம் புரிய வேண்டியது அவசியம். பொருளாதார சிக்கலில் நாம் மூழ்கியிருந்த போது நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசிய மருந்து, எரிபொருட்களுக்காக எந்தவொரு நிபந்தனையுமின்றி இந்தியா வழங்கியது

ஆனால் அந்த வேளையில் சர்வதேச நாணய நிதியம் கூட.2.9 பில்லியன் டொலர்களை பல்வேறு நிபந்தனைகளுடன்தான் வழங்கியது நான் ஒன்றும் இந்திய ஆதரவாளன் அல்ல.

ஆபத்தில் கை கொடுப்பவனே நண்பன் . ஆபத்து நேரத்தில் உதவுவதுபோல் தனது நலனை நிறைவேற்ற நினைப்பவன் நண்பனல்ல. இந்திய,சீன உறவு தொடர்பாக இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது .நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை நாம் தவிர்க்க வேண்டும்.நமது கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எமக்கு உற்ற நண்பனாக விளங்குவது இந்தியா மாத்திரமே .

அண்மைக்காலமாக எமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களை அவதானிக்கின்றோம். இது நமது தேசிய கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்மைய நாட்களில் சீன பாதுகாப்புத்துறை தொடர்பான உளவுக்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் சஞ்சரிப்பதும் நமது கடலில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வருகை தெரிவதாக கூறுவதும் அதற்கு எமது நாடு செங்கம்பளம் விரித்து வரவேற்பதும் வழமையான நிகழ்வுகளாகி விட்டன. எமது வெளிநாட்டுக் கொள்கை சீனாவுடன் எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்பதல்ல. எமது சீன சார்பு என்பது இந்து சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்கு நமது நாடு காரணமாகிவிடக்கூடாது.

சீனாவை விட இந்தியா எமது நட்பு நாடு. பௌத்த,இந்து மக்களின் ஆணிவேரின் மூலம் இந்தியாவே பாரம்பரிய கலாசார தொடர்புகள் மட்டுமல்ல இங்கு நீங்கள் பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழி இந்தியாவில் தான் தோன்றியது. பௌத்த இலக்கியங்கள் தோற்றம் பெற்றதும் இந்தியாவில்தான். இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்க கொள்ளப் போகின்றீர்களா ? என்றார்.

இமாலய பிரகடனமா? எங்களிற்கு எதுவும் தெரியாது ; எந்த தொடர்பும் இல்லை – பௌத்தசாசன அமைச்சு தெரிவிப்பு

உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ள பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்தமதகுருமாரும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதானபத்திரன மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரகடனம் குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லைஎனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரகடனத்தைமுழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (13 ) பாராளுமன்றில் இடம்பெற்றது.

இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து தகவல் திரட்டவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது.

இதில் ஒட்டுமொத்த மக்களும் உள்ளடங்குகிறார்கள். நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல் தரவு கட்டமைப்பு பேணப்படும். ஆகவே தனிப்பட்ட தகவல் கோரலை நிறுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் கோரல் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களை மாத்திரம் இலக்காக கொண்டு தகவல் திரட்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொய்யுரைக்கிறார். கடந்த முறையும் இவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தரவுகளை காண்பித்தேன் பதிலளித்தேன்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகிறார்கள்.இது தற்போது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை.யுத்த காலத்தில் இருந்து இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.பொலிஸ் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஒரு தனிநபர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல் தரப்படுத்தலை பேணுவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை. பெயர் உள்ளிட்ட தகவல் மாத்திரமே கோரப்படுகிறது. மதம் பற்றி கேட்கவில்லை.இனம் தொடர்பான விபரம் மாத்திரமே கேட்கப்படுகிறது. கடந்த முறையும் இவர் இவ்வாறு பொய்யுரைத்தார்.

நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே தகவல் கோரலை எதற்காகவும் இடைநிறுத்த முடியாது. தகவல் கட்டமைப்பை பேண வேண்டும். சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதை ஆராய்ந்து திருத்திக் கொள்கிறேன் என்றார்.