ரணிலை வடக்கு மக்கள் நம்ப தயாராக இல்லை – சஜித்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு வடக்கு மக்கள் தயார் இல்லை. எனது ஆட்சியின் கீழ் வடக்கு மக்களின் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“வடக்கு மக்கள் மீது ஜனாதிபதிக்கு உண்மையான கரிசனை இருந்தால் அவர் வவுனியாவில் வைத்து வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னர் நிறைவேற்றிக் காட்டட்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சவால் விடுத்தார்.

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும், 75ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டும் எனத் தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை கடந்த சனிக்கிழமை வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வினவிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு மாகாணத்துக்கு நான் விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். அங்குள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லவுள்ளேன். வடக்கு மக்கள் படும் இன்னல்களை நான் நேரில் ஆராயவுள்ளேன். ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியமைத்தால் அவர்களின் பிரச்சினைகளுக்கு நான் விரைந்து தீர்வு காண்பேன்.

வடக்கு மக்களுக்கு நான் என்றுமே நன்றியுடையனவாக இருக்கின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளை எனக்கு அவர்கள் வழங்கினார்கள்” – என்றார்.

 

செயற்கை உரம் இன்மையால் மந்த நிலையில் விவசாயம் : விவசாயிகள் கவலை

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம் மற்றும் களை நாசினிகள் உரிய அளவு வழங்கப்படாமையினால் பயிர்களின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

எங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான செயற்கை உரம், களை நாசினி மற்றும் மண்ணெண்ணெய் என்பன சீராக வழங்காமையினால் எமது விவசாயத்தினை திருப்திகரமாக முன்னெடுத்து செல்ல முடியவில்லை. செயற்கை உரங்கள் மற்றும் களை நாசினிகளின் விலைகள் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அளவு மேற்படி பொருட்கள் வழங்கப்படுவதில்லை.

செயற்கை உரம் உரிய காலப்பகுதியிலும், உரிய அளவுத்திட்டத்திலும் கிடைக்கப்பெறாததால் பயிரின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது. தற்போது அடை மழை பொழிகின்ற காலம். திடீரென அடைமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் மந்த நிலை வளர்ச்சியில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் அழிந்துவிடும்.

களை நாசினிகளின் விலை அதிகமாக காணப்படுவதுடன் அதற்கு தட்டுப்பாடும் நிலவுவதால் வயலில் வளர்ந்துள்ள களைகளை அழிக்க முடியவில்லை. களைகள் பயிருக்கு மேலாக வளர்ந்து காணப்படுவதால் பயிரின் வளர்ச்சியில் ஆரோக்கியம் குன்றியுள்ளது. மண்ணெண்ணெய் எமக்கு சீராக விநியோகிக்காததால் தண்ணீர் பாய்ச்சவேண்டிய வயல் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை காணப்படுகிறது.

விவசாயிகள் அனைத்து பக்கத்திலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு தேவையானவற்றை வழங்காமல் இருந்தால் அவர்கள் எப்படி விவசாயம் செய்வது? விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவித்தால் தான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்ற அரிசியையோ அல்லதே வேறு உணவுப் பொருட்களையோ இறக்குமதி செய்யாமல் நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி விவசாயிகளது தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்றனர்.

பொருளாதாரம் பாதுகாப்புடன் தங்கியிருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குவது சரியானது – மஹிந்த

இன்றைய (நவ 22) சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கையில்:

நாம் இந்த நாட்டை நாசம் செய்யவில்லை.நல்லாட்சி அரசில் இருந்து நாம் நாட்டை பொறுப்பேற்கும் போதே மிகப்பெரிய கடன் சுமை எமக்கு வழங்கப்பட்டது.அதன் பின்னர் கோவிட் உள்ளிட்ட நெருக்கடி ஏற்பட்டது.அதனையும் நாம் வெற்றி கொண்டோம்.

மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நாம் அரசியல் ஆக்கக்கூடாது.நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்புடன் தங்கியிருப்பதால் அதற்கு அதிக நிதி ஒதுக்குவது சரியானது.கடினமான நிலையில் நாம் மக்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்றி இருக்கின்றோம்.நான் கூறத் தேவையில்லை.காலம் செல்ல செல்ல மக்கள் அதை புரிந்து கொள்வார்கள்.

எம்மை எவ்வாறு கவிழ்ப்பது என்று ஜோசிக்கிறார்களே தவிர ,எல்லோரும் ஒன்று சேர்ந்து நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்திக்க வேண்டும்.சிலர் திட்டமிட்டு தான் பொருளாதாரத்தை விழச் செய்தார்கள்.இரண்டு தடவை இவ்வாறு நடைபெற்றுள்ளது.

கூச்சல் போடுவதாலும்,போராட்டம் செய்வதாலும் மக்களை காப்பாற்ற முடியாது.இந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் முழுமையான தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டாலும் ,நாட்டின் நிலைக்கு ஏற்ப சிறிய முன்னேற்றம் தரக் கூடிய பட்ஜெட்டாக அமைகிறது என்றார்.

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன், அவை நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் யாழ். மாநகர சபையின் அனுமதிகளைப் பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் திரைநீக்கம்

மாவீரரின் பெற்றோரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்ட களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் கடைப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கெங்கும் மாவீரர் வாரம் உணர்ச்சிபூர்வமாக ஆரம்பமானது

யாழ். பல்கலை

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

 

விசுவமடு

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய தினம் முல்லைத்துவு மாவட்டத்திற்குட்பட்ட விசுவமடு பகுதியில் மாவீரரின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வானது விசுவமடு தொட்டியடி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட அமைவிடத்தில் இடம்பெற்றது.

 

பருத்தித்துறை

பருத்தித்துறையில் நீதிமன்ற வீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தில் மாவீர்களுக்கு அஞ்சலி நிகழ்வு இன்று(நவ 21) காலை 9:30 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடாத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகை சுடரினை இரண்டு மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்துடன் மாவீர்களுக்கு அக வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றிலிருந்து எதிர்வரும் 27 ம் திகதிவரை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

 

கஞ்சிக்குடிச்சாறு

கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் கட்சி பேதமின்றி வழமை போன்று முன்னாள் போராளிகளின் தலைமையிலேயே மாவீரர் தின நிகழ்வு முன்னெடுக்கப்படும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என முன்னாள் போராளியான நாகமணி கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின முன்னேற்பாட்டின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவீரர் தின ஏற்பாடுகளுக்காக மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப் பணிகளை கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றார்கள். நாங்கள் வழமை போன்று இதனை முன்னாள் போராளிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

மீனவர்களுக்காக சபையின் நடுவில் அமர்ந்து திலிப் வெத ஆராய்ச்சி போராட்டம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது, சபையின் நடுவில் அமர்ந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கையில் மீன்பிடித் தொழில் அழிந்துவிட்டது என்றும் உடனடி நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் முடியும் வரை இவ்வாறு அமர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் அவர் சபையைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசிலை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தான் அப்போது கட்டுநாயக்காவில் இருந்ததாகவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவே அங்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்போதே பசில் ராஜபக்ஷவை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ, மற்றும் பல அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வாழ் சீனர்களுக்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய கூட்ட அறிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆணையம்

இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு சீனா வழங்கிய சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் சுருக்கத்தையும், அதன் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையையும் டிசம்பர் 1ஆம் தி கதிக்கு முன் வெளியிடுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (என்எம்ஆர்ஏ) தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

ஆணைக்குழுவின் இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 39 ஆவது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என்றும் தகவல் அறியும் உரிமை ஆணையகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, ​தகவல் அதிகாரி கோரிக்கையை அந்த நிராகரித்தார்.

இந்த நிலையில் தகவல் அதிகாரியின் பதிலில் அதிருப்தி அடைந்த, இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்), கடந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தது, ஆனால் நியமிக்கப்பட்ட அதிகாரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் பதிலளிக்கத் தவறிவிட்டார்.

இதனையடுத்து உலகளாவிய ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்தது.

இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு சீனா வழங்கிய சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் வெளிப்படுத்தப்படாத உடன்படிக்கை இருப்பதாக சந்தேகம் தெரிவித்தே, இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.

ஜனாதிபதி மலையகம் வரும் போது போது பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -மனோ

இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

22 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை – யுனிசெப்

இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 22 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் 4.8 மில்லியன் குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகல் கிடைக்க வேண்டும் எனவும் யுனிசெப் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பற்றாக்குறையாலும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய செலவிடுவதாகவும் அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மிகக் குறைந்தளவு நிதியையே செலவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை செலவழித்துள்ளதாக சுட்டிக்காட்டும் அறிக்கை, அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.