வடக்கு மாகாணத்துக்கு விசேட உதவிகள்-சந்தோஸ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கினங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்நிலையில் வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழ் கட்சிகளின் ஒற்றுமைக்கு பொருத்தமானவரை தலைவராக்குங்கள்’: தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களிற்கு ஜனா எம்.பி அழைப்பு!

கடந்த காலத்தை போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் யார் தலைவராக வரவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு திக்கோடையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்-

தமிழரசுக் கட்சி தலைவருக்காக மூன்று பேர் போட்டியிடும் நிலை உருவாகி இரண்டு பேராக் மாறியுள்ளது. அதற்கான வாக்களிப்பு நாளையாகும். உண்மையில் தமிழரசுக் கட்சி என்பது தனியொரு அரசியல் கட்சி. அதற்கு நீண்ட நெடியதொரு வரலாறு இருக்கின்றது. கட்சி தலைவர் பிரச்சினை என்பது அவர்களது உள் வீட்டு பிரச்சினை. அதில் நாங்கள் கருத்து கூறமுடியாது. இருந்தாலும் நானும் தமிழன் என்ற வகையிலும் தமிழ் மக்களின் போராட்டங்களோடு பின்னி பிணைந்து நின்று தற்போது அரசியலில் இருப்பவன் என்ற வகையில் கருத்து கூறாமல் இருக்க முடியாது.

அந்த வகையில் தமிழ் தேசியம் என்பது தமிழரின் இரத்தத்தில் ஊறிய விடயமொன்றாகும். காரணம் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கப்பட்டதன் காரணத்தால் எங்களது மூத்த அரசியல் தலைவர்கள் அகிம்சை வழியில் போராடி அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் ஆயுத போராட்டத்தின் ஊடாக வென்றெடுக்க போராடினார்கள். அந்த போராட்டத்தில் பங்குபற்றி வடுக்களை சுமந்தவன் என்ற வகையிலே எப்பொழுதும் தேசியம் என்பது வெல்ல வேண்டும் என்று நான் நினைப்பவன்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்க பட்டதன் பின்னர் அதற்கு முன்னர் இருந்த ஒற்றுமையில் இருந்து விலகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இன்று சிதறுண்டு போய் இருக்கிறது. இந்த ஒற்றுமை இன்மையை பயன்பாடுத்தி இலங்கை அரசு பிரித்தாள நினைக்கின்றது. இந் நிலமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாமல் போகலாம்.

எனவே கடந்த காலத்தை போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் யார் தலைவராக வரவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் சிந்தித்து நாளைய தினம் வாக்களிக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி நடக்கிறது – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத் தொடர்களில் புதிதாக வர இருக்கும் தீர்மானங்களை பலவீனப்படுத்து இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச சக்திகளும் இணைந்து பெரும் கூட்டுச் சதி ஒன்றை மேற் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமானசபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் பல போலியான செயற்பாடுகளை பாதிப்புக்களுடன் தொடர்பற்ற தரப்புக்களை வைத்து அரங்கேற்றுகின்றனர். அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாஸ வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து இன நல்லிணக்கம் பற்றிய பேச்சை சிறு குழுக்களை வைத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலந்துரையாடியுள்ளார் உண்மையில் உள்ள நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு யார் தடை என்றால் ஆளும் அரசாங்கம் மட்டுமே தான் ஏனைய தரப்புக்கள் யாரும் தடை இல்லை.

கடந்த காலங்களில் ஆபிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு நாடுகள் தான் ஐெனிவா தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கினர் இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பு அதிகம் இதனை மாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற் கூறிய நாடுகளின் பிரதி நிதிகளுடன் இராஐதந்திர உரையாடலை ஆரம்பித்துள்ளார் இதற்கு சர்வதேச சக்திகளும் மறைமுகமாக ஆதரவை வழங்குகின்றன இதனால் எதிர் காலத்தில் தீர்மானங்கள் வருகிற போது இலங்கைக்கு எதிரான தீர்மானமாக இருந்தாலும் வலுக் குறைந்த விடையங்களை உள்ளடக்கியதாக மாறும் அபாயம் உள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் பூகோள அதிகாரங்களை நிலைப்படுத்த நினைக்கும் சர்வதேச சக்திகள் தமிழர் தரப்பின் நீதியை பலவீனப்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க கூட்டுச் சதியில் இறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு அமையவே கொண்டுவரப்படுகின்றன – நீதியமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு உட்படும் வகையில் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்றன என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (18) நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு இசைவாக வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வெற்றிகரமாக்கிக்கொள்ளும் காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை மிகவும் உறுதிமிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்தும் மிகவும் ஜனநாயக முறையில் அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த சட்டங்கள் அமைக்கப்பட்ட முறை தொடர்பாகவும் அமைச்சர் ஒருங்கிணைப்பாளருக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் மிகவும் முக்கியமாகும் எனவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சீனக் கொள்கையை இலங்கை எப்போதும் ஏற்றுக் கொள்கின்றது – சபாநாயகர் மஹிந்த யாப்பா

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று வெள்ளிக்கிழமை (19) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜின் புதுவருட வாழ்த்துச் செய்தியை இதன்போது சீனத் தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் ‘ஒரே சீனா’ என்ற கொள்கை தொடர்பில் இலங்கை வழங்கிவரும் ஆதரவுக்கு சீனத் தூதுவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் இலங்கை எப்பொழுதும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர திட்டம் உள்ளிட்ட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீன முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, இலங்கை அரசு முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது இலங்கையின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த மறுசீரமைப்பின் ஒரு முயற்சியாகக் காணப்பட்டாலும்இ உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம்இ தடுப்புக் காவல் உத்தரவின் சட்டபூர்வத் தன்மையைச் சவாலுக்குட்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், தடுப்புக் காவல் இடங்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை வரையறுக்கும் விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு ஏற்றால் போன்று, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைத் திருத்தியமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காங்கேசந்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை இவ்வாரம் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘செரியபாணி’ பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜே. இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை , இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவை 2023 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது – ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஒரு வார காலமாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

நிதியத்தின் இலங்கைக்கான முதலாம் கட்ட கடனுவியை தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள பரந்த மக்கள் தொகையை சென்றடையும் வகையில் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மேம்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சொத்து வரியின் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை வேகமாக பூர்த்தி செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

TIN இலக்கம் தேசிய அடையாள அட்டைக்கு ஒப்பானது – ரவி கருணாநாயக்க

TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க வலியுறுத்துகின்றார்.

கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க, இந்த TIN இலக்கத்தை பெற்றுக் கொண்டதன் மூலம் இது வரையில் சட்டபூர்வமாக இல்லாத ஒரு செயலி சட்டமானது.

சரிந்த பொருளாதாரம் படிப்படியாக சிறப்பாகவும் வருகிறது, வரி விதிக்கப்படுகிறது

பொருளாதார பலம் உள்ளவர்களே விலைக்கு வாங்கப்படுவதாகவும், TIN இலக்கம் இருப்பதால் வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மத்திய அரசாங்கம் 2024 இல் 3% சாதகமான பொருளாதார வளர்ச்சியை அடைய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த பொருளாதார வளர்ச்சியை 2025 இல் 5% ஆக அதிகரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு வருடங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இரண்டு வருடங்களாக அமையும் என சுட்டிக்காட்டிய திரு.ரவி கருணாநாயக்க, பணத்தை அச்சடித்து வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை என நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான எழுச்சியைக் கருத்தில் கொண்டு, ரூபாயின் பெறுமதி இனி குறையாது, பணவீக்கம் உயராது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15% என்ற இலக்கை அடைய ஜனாதிபதி மத்திய அரசாங்கத்தை திட்டமிட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு புதிய பொருளாதாரம் தேவை எனவும், ஜனாதிபதி மிகவும் திட்டமிட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்த ரவி கருணாநாயக்க, தொழில்வாய்ப்பை உருவாக்கி, உபரி அந்நிய செலாவணியை வழங்கும், உபரியை வழங்கும் பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டினார்.