நாட்டை மீட்டெடுக்க இறுக்கமான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் – சர்வதேச நாணய நிதியம்

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், காலநிலை மாற்றம் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து வடமாகாண ஆளுநர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் , கொவிட் தொற்றுக்கு பின்னரான நிலை, பொருளாதார நெருக்கடி , வரி அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு இதன்போது கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின்படி நாட்டில் ஊழல் ஒழிப்பு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், விநியோக கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக செயற்பாடுகளுக்கு புதிய வரிக்கொள்கை பாரிய சுமையாக அமைந்துள்ளதென வர்த்தகப் பிரதிநிதிகளும், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

வங்கிகளில் கடன்களை பெறுவதிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், வங்கி வட்டி வீதங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் தங்களின் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமையை தாம் அறிந்துக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதம அதிகாரி பீற்றர் ப்ரூர் (PETER BREUER) தெரிவித்தார்.

கடந்தகால பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு இவ்வாறான நிலையை அடைந்துள்ளதாகவும், நிலைமையை மாற்றியமைக்க குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இறுக்கமான கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் இறுதியில் நல்ல சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றங்கள் தொடர வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதம அதிகாரி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு, வர்த்தகப் பிரதிநிதிகள், சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பிரதிநிதிகள் , சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட நிதித்துறைசார் நிபுணர், பொருளியலாளர், உள்ளூர் பொருளியலாளர் உள்ளிட்ட குழுவினர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .

அநுரகுமார ஜனாதிபதியானால் பெண் ஒருவருக்கே பிரதமர் பதவி – விஜித ஹேரத்

தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானதன் பின்னர் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். .

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், பெண் ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதே தமது கட்சியின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதால், தனது சொந்த அரசாங்கமும் அந்த வேலைத்திட்டத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்ததுடன், நிலைமைகளை இலகுபடுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மீளாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தனது வேலைத்திட்டத்திற்கு துரோகமிழைக்கும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும் அவர் அந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளராக களமிறங்கும் ரணிலுக்கு சஜித்தும் ஆதரவளிக்கலாம் – ரவி கருணாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது, அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

அதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

அதனடிப்படையில் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகள் சார்பற்ற பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டினை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வல்லவரான அவருடைய அர்ப்பணிப்பையும், சேவையையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் அவருக்கு பகிரங்கமான ஆதரவை வெளியிட வேண்டும் என்று கோருகின்றோம்.

விசேடமாக சஜித் பிரேமதாச கூட கட்சிசார்பற்ற ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அவரை ஆதரிப்பதற்கு எவ்விதமான தடைகளையும் நாம் ஏற்படுத்தப்போவதில்லை.

தற்போதைய சூழலில் நாட்டின் வரிசையுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை விரைந்து பொருளாதார முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஆகவே அவருடைய அர்ப்பணிப்பான அரசியல்சேவை தொடர்வதன் ஊடாகவே நாட்டை மீண்டும் நிலைக்கு கொண்டு வரமுடியும் என்றார்.

அரசியல் கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் பொதுமன்னிப்பு

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார்.

நாகலிங்கம் மதன்சேகர் மற்றும் செல்லத்துரை கிருபாகரன் ஆகிய கைதிகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதியால் தமிழ் அரசியல் கைதிகள் மன்னிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மதன்சேகர் மார்ச் 29, 2023 அன்று அவசரகால (இதர விதிகள் மற்றும் அதிகாரங்கள்) விதிமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கிருபாகரன் குற்றவாளி என கண்டறியப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார், ஆனால் ஜூலை 20, 2022 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தண்டனையையும் உறுதி செய்தது.

இந்த தடவை மக்கள் சரியான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் – கர்தினால் கோரிக்கை

சர்வதேச கடல் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடற்படைக் கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், உள்ளூர் விவகாரங்கள் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் ரஞ்சித், தேவாலயத்திற்குள் கைக்குண்டு வைத்தவர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தொல்லை கொடுத்த உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று கூறினார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனதற்கும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் கம்பளத்தின் கீழ் மறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக சர்வதேச கடல்களைப் பாதுகாப்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

“2024 தேர்தல் ஆண்டு என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த முறை சரியான தலைவர்களிடம் மக்கள் தேசத்தை ஒப்படைப்பார்கள் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம், ”என்று அவர் மேலும் கூறினார்

சென்னையில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மறைந்த மாமனிதன் விஜயகாந்த், அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (MP ) இன்று சென்னையில் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தமிழ் ஈழ மக்கள் சார்பாக கேப்டனுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறியடிக்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறியடிக்க அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக்க சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு நயன, வாசலதிலக்கவை நியமனம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.

இதன்படி பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் அறிவிப்பின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி அமைப்பாளர் ஆவார். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெருகல் மக்களுக்கு ரெலோ நிவாரண உதவி

இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெருகல் வட்டவன் கிராம மக்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், திருகோணமலை குலம் , தம்பலகாமம் ரூபன், திரகோணமலை ரதன் , மற்றும் எமது மாவட்ட அமைப்பாளர், விஜயகுமார், உதவி அமைப்பாளர் பிரபாதரன், உறுப்பினர்கள் மணி , கமலேஸ், சற்பரூபன், சஞ்சீவ், ராம்கி, சஜீவன், ஆகியோரின் நிதி உதவியுடனும் ரஞ்சித், ராஜன், பிரேம், டெனி, பூவா மற்றும் எமது வெருகல் பிரதேச உறுப்பினர்களின் பங்களிப்புடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இதற்காக எமக்கு ஏற்பாடுகளை செய்து தந்த எமது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அண்ணன், வட்டவன் பாடசாலை அதிபர் கோணேஸ்வரன் மற்றும் கிராம சேவையாளருக்கும், கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் நன்றிகள்

எமக்கு முழுமையாக ஒத்துழைப்பு நல்கிய எமது உறவுகளான கிராம மக்களுக்கும் எமது வெருகல் அங்கத்தவர்களுக்கும் வெருகல் பிரதேச எமது மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

 

மேலும் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெற்றதும் உங்களையும் உதவிகள் வந்து சேரும்.

“என்றும் நாம் உங்களுடன்”

ரெலோ – TELO
திருகோணமலை மாவட்டம்

ரெலோ கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி

மனிதநேயம் மிக்க புரட்சிக்கலைஞர் கப்டன் விஜயகாந்த் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் நலன் விரும்பியும் இன விடுதலைக்கு போராடுகின்ற அனைத்து போராளிகள் இயக்கங்களோடும் நெருக்கமான உறவுகளை பேணியிருந்தாலும் ரெலோ இயக்கத்திற்கு முதன் முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து முதன் முதலில் (எழும்பூரில் 1984) நட்சத்திர கலைவிழாவை முன்னின்று நடத்தி நிதி திரட்டி வழங்கியிருந்தார்.

கப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது 100 வது திரைப்படத்தை “விடுதலைப்புலிகள்” என்ற பெயருடன் வெளியிடுவதற்க்காக பதாகைகள் பரவலாக வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய காலத்தில் அனைத்து இயக்கங்களையும் விடுதலைப்புலிகள் என்றே அழைக்கப்பட்ட அந்த காலத்தில் ஈழப்போராளிகள் நலன் விரும்பி ஒருவரால் சில காட்சிகளை அத்திரைப்படத்தில் நீக்கக்கோரி நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதால் அத்திரைப்படத்தின் கதாநாயகன் பெயரும் கதாபாத்திரத்தையும் இணைத்து கப்டன் பிரபாகரன் என்று அத்திரைப்படத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கப்டன் அவர்களின் இழப்பு இலங்கைத்தமிழர்களுக்கு மட்டுமல்ல மனிதநேயத்தை நேசிக்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அந்தவகையில் கப்டன் அவர்களுக்கு 02.01.2024 அன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலி செய்து நினைவு கூரப்பட்டார்.