இலங்கையில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு

இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களுக்கான பாரிய பற்றாக்குறையை சந்தித்துள்ளது எனவும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு செல்லுதல், சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுதல், அத்தோடு சமீபத்தில் அரசு வெளியிட்ட சுற்றறிக்கை பிரகாரம் ஒய்வு பெரும் வயது 60 என அறிவிக்கப்பட்டமை என்பன இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன.

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 விஷேட மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்படவேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரிகள் உடனடியாகச் செயல்படத் தவறினால், அடுத்த ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000 இற்கும் அதிகமாகும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி

சென்னையில் உள்ள  மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது.

மெரினா கடற்கரையின் அருகே கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில் தற்போது  கடலோர ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.

சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் விதித்துள்ளது.

அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேனா நினைவுச் சின்னத்திற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் தமிழக பாரதிய ஜனதாக கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில் மத்திய பா.ஜ.க அரசு அனுமதிவழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளுக்காக அலி சப்றி சீனா பயணம்

சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் சீனா செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியுதவி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கவேண்டிய கடப்பாட்டுக்கு இலங்கை உள்ளாகியிருக்கின்றது.

அதன்படி கடன்மறுசீரமைப்பு குறித்து முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளையும் தற்போது முன்னெடுத்துவருகின்றது.

அதனை முன்னிறுத்தி இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குழுவொன்றை உருவாக்கியுள்ளன.

நாட்டின் மிகமுக்கிய இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் கண்காணிப்பாளராக பங்கெடுத்துவருகின்றது.

எனவே சீனாவில் எதிர்வரும் 25 – 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்குப் பயணமாகும் அமைச்சர் அலி சப்ரி, அங்கு முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.

அத்தோடு, சீன அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் குறித்தும் அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும், இருநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விரிவாக இதன்போது கலந்துரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன – ரணில்

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன் என ஜனாபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

நான் பிரதமராக பதவிவகித்தவேளை நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை நான் ஆரம்பித்தேன் அன்று முடித்த இடத்திலிருந்து நான் தற்போது தொடர்கின்றேன்.

தமிழர் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் பலவிடயங்கள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளோம்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்,இந்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்திற்கும்  எதிர்கட்சிகளிற்கும் இடையி;ல் மூன்று விடயங்கள்தொடர்பில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டன இவற்றில் இரண்டிற்கு தீர்வை கண்டுள்ளோம்.

வடக்குகிழக்கில் காணப்படும் காணி தொடர்பான விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பல நடவடிக்கைகைள எடுத்துள்ளது.

அதிகாரப்பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள்   மூலம் சாத்தியமான தீர்வுகள் வெளிவந்துள்ளன அவற்றை நான் தமிழ் அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளேன்

ஜூலை மாதத்திற்குள் முழுமையான செயல்முறையை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிருடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தின் 9வது பதிப்பை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயமும் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் ஒன்றிணைந்து புதன்கிழமை 21ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தது.

யோகா தினத்தினை அனுஸ்டிப்பதற்காக 19 இந்திய கடற்படைக் கப்பல்கள் உலகளாவிய ரீதியில் பணிநிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2023 சர்வதேச யோகா தினத்தினைக் குறிக்கும் தனித்துவமிக்க முயற்சியான பூகோள சமுத்திர வளையத்துடன் கொழும்பையும் இணைக்கும் முகமாக, இந்திய நீர்மூழ்கிக் கப்பலான வாஹிரிலும் அதற்கருகிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னே, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடல் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.எஸ்.டி.சில்வா, இலங்கை கடற்படையினர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள், ஐ.என்.எஸ் வாஹிர் மாலுமிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இந்தியா – இலங்கை இடையிலான பொதுவான பாரம்பரியமாகக் காணப்படும் யோகாவின் நிலைமாற்று சக்தி தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் உள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் யோகா ஆர்வலர்களின் வலுவான ஆதரவு மற்றும் உத்வேகத்துடன் கடந்த 50 நாட்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயமும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் இணைந்து நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான யோகா சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்ததாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும், 2023 சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ என் எஸ் வாஹிர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் மூலமாக நல்லெண்ணம் நட்புறவு மற்றும் தோழமையின் செய்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கடற்படையின் கல்வாரி ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிர் அண்மையில் சேவையில் இணைக்கப்பட்டிருந்ததுடன் முதற்தடவையாக வெளிநாடொன்றின் துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

2023 ஜூன் 19 முதல் 22 வரை இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நின்ற காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், சாரணர்கள், தேசிய காலாட்படையினர், இலங்கை கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இக்கப்பலுக்குள் விஜயம்செய்து பார்வையிட்டிருந்தனர்.

அதுமாத்திரமல்லாமல் வெளிக்கள நிகழ்வுகளாக கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களைச் சந்தித்திருந்த ஐ என் எஸ் வாஹிர் நீர்மூழ்கியின் மாலுமிகள், சில பாடசாலைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாஹர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு அயல் நாடுகளினதும் கடற்படைகள் இடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைவினை இந்த விஜயம் மேலும் வலுவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலையில் அப்பட்டமான அரச சர்வாதிகாரம் – சபா குகதாஸ்

தமிழர்களின் தொல்லியல்களை சிங்கள பௌத்தமாக மாற்றியமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது அரச இயந்திரத்தை சர்வாதிகாரமாக வழி நடாத்தி தமிழர்களின் இருப்பை அழிக்க பல முனைகளிலும் கங்கணம் கட்டி நிற்கின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு  மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வியாழக்கிழமை (22) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கைத்தீவில் ஆரம்பத்தில் அனுராதபுரத்தை ஆண்ட முத்துசிவன் மன்னனின் மகன் தீசன் (தேவநம்பியதீசன்) என்கிற தமிழ் மன்னன் காலத்தில் தான் பௌத்தம் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை மகாவம்சத்தின் பாளி மொழியிலான மூலப் பிரதி கூறியுள்ளதை மறைத்து உண்மையான தமிழ்ப் பௌத்த தொல்லியல் அடையாளங்களை சிங்கள பௌத்தமாக மாற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளையே பேரினவாத ஆட்சியாளர்களும் தொடரந்து மேற் கொள்கின்றனர்.

தீசன் என்ற பெயரை திஸ்ஸ என சிங்களத்தில் பிற்காலத்தில் மாற்றியது போலவே அனுராதபுரத்தில் இருந்து வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்ட போது சைவ ஆலயங்களுடன் தமிழ் பௌத்தமும் பரவி இருந்தது அவ்வாறான தொன்மைகளை தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்தமாக மாற்றியமைக்கும் செயற்பாடு தமிழின அழிப்புக்கு வலுச் சேர்க்கும்  பாரிய ஆபத்தாக தமிழர் தாயகத்தில் மாறியுள்ளது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடு சட்டத்திற்கு முரணானது என்பதை நீதிமன்ற தடையே மிகப் பெரும் ஆதாரம் அதனை மீறி இராணுவத்தை முழுமையாக பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்து விகாரையை கட்டி முடித்து இராணுவம் அமைத்ததாக பெயர்ப் பலகை இடப்பட்டுள்ளது என்றால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு நடைபெறும் அடக்கு முறைகளுக்கு மிகப் பெரும் ஆதாரம் ஐனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் அரச சர்வாதிகாரம் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – மதுரை இடையே விரைவில் விமான சேவை – நிமல் சிறிபால டி சில்வா

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவுக்குமி டையில் தற்போது நான்கு தினங்கள் இடம் பெறும் விமான சேவைகளை வாரத்தின் ஏழு நாட்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான சேவைகள் மற்றும்  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அண்மையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்கு விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை மூலம் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வடக்கில் காங்கேசன்துறை துறைமுகத்தில் அரசாங்கத்தின் செலவில் 450 மில்லியன் ரூபா செலவில் முனையத்திற்கான கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காங்கேசன்துறைக்கான முதலாவது கப்பல் அண்மையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. இந்தியாவின் சுற்றுலாப் பயணிகள் சுமார் 500 பேருக்கு அதிகமானோர் அதில் வருகை தந்திருந்தனர்.

இந்த கப்பல் சேவையை வாரத்திற்கு ஒரு முறை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கிணங்க பலாலி விமான நிலையத்தை நாம் நிர்மாணித்து வழங்கியுள்ளோம்.

வாரத்திற்கு நான்கு தினங்கள் விமான சேவைகள் இடம் பெறுகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை விமானப்பயணச் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த விமான சேவையை 7 நாட்களுக்கும் தொடர்வதற்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேறு விமான சேவை நிறுவனங்களும் விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதற்கு அனுமதி வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம்.

சென்னைக்கும் பலாலிக்குமிடையில் அந்த விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரிய விமானங்களை அங்கு தரையிறக்கும் வகையில் விமான ஓடுபாதைகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வுள்ளன.

அது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்டவர்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது – ஹர்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில்  கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக

குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம்  06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை  அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜோர்ஜீவா உறுதியளித்துள்ளார்.

‘தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கன. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில்  புதன்கிழமை (21) பரிஸ் சென்றடைந்தார்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அனுபவம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் சர்வதேச நிதி நிறுவனங்களை கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாநாட்டின் பக்க அம்சமாக ,  பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு இராஜதந்திர தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது – குமார வெல்கம

எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையைப் பொறுத்தவரையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது.

அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தமது அரசாங்கத்தை அமைக்கின்றன.

மாறிமாறி வரும் அனைத்து அரசாங்கங்கள் இதனையே வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறுதான் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் எவரும் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை.

ஊழல் என்பது புதியதொரு விடயமல்ல. தேர்தல் முறைமையின் ஊடாகவே ஊழல் அதிகரித்துள்ளது. நாடாளுமன்றம் தற்போது ஒரு வர்த்தக நிறுவனம் போன்றே செயற்படுகின்றது.

சூழ்நிலைக்குத் தேவையான சட்டங்களை இயற்றியாவது ஊழலை ஒழிக்க வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் விலைமனுக் கோரல் விவகாரத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறன.

எனவே இவற்றினைக் கருத்திற் கொண்டே ஊழல் எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது என்று மக்கள் குறிப்பிடுவது உண்மையான விடயமாகும்” என அவர் அமேலும் குறிப்பிட்டுள்ளார்.