அதிகாரப் பகிர்வு வழங்க எதிர்க்கட்சியினரின் சம்மதம் கேட்ட ரணில்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வுக்கு ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் வைத்து பெற்றுக்கொண்டார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பார்களா என சபையில் வைத்து கட்சிகளிடம் நேரடியாக  கேட்ட  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,இது தொடர்பில்  டிசம்பர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை நடத்தவும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம்,  பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குறித்து  புதன்கிழமை (23) இடம்பெற்ற  குழு நிலை விவாதத்தில்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

ஜனாதிபதி தனது உரையில் தனக்கு முதலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதியின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழைப்பு தொடர்பில் அதில் காணப்பட வேண்டிய  தீர்வு தொடர்பிலும் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பதில் வழங்கினார்.

இதன்போது அவர் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவைப் பார்த்தது  நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப் பகிர்வு வழங்க சம்மதிப்பீர்களா என வினவினார்.

இதற்கு  பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல ,உங்கள் பாட்டனாரும் அதிகாரப்பகிர்வை வலியுறுத்தியவர். நானும் எப்போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்துபவன். நாம் எப்போதும் அதற்கு தடையாக இருந்ததில்லை. சில கட்சிகள் தான் அதற்கு தடை செயற்பட்டன,தற்போதும் செயற்படுகின்றன.

இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார். அவர் 13 பிளஸ் தீர்வு  என்றார். இந்த அதிகாரப்பகிர்வுக்கு அவர் சம்மதமா என அவரிடமே கேட்போம் எனக்கூறிவிட்டு மஹிந்த ராஜபக்சவை பார்த்து ”அதிகாரப்பகிர்வு வழங்க நீங்கள் சம்மதமா?”எனக்கேட்டார்.

இதற்கு மஹிந்த ராஜபக்ச ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு சிரித்துக்கொண்டு சம்மதம் என்பதற்கு  அறிகுறியாக தலையை அசைத்தார். ஆனால்   விடாத லக்ஷ்மன் கிரியெல்ல  தலையசைத்தால்  மட்டும் போதாது.பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கூற வேண்டும் என்றார். இதனையடுத்து உடனடியாக எழுந்த   மஹிந்த ராஜபக்ச எனக்கு  சம்மதம் என்றார்.

உடனடியாக பிரதமர் தினேஷ் குணவர்த பக்கம் தனது கவனத்தை திருப்பிய லக்ஷ்மன்  கிரியெல்ல  பிரதமர் இதற்கு சம்மதிக்கின்றாரா எனக்கேட்டார். ஆனால் எந்தப்பதிலும் கூறாது பிரதமர் தினேஷ் குணவர்த்தன சிரித்தவாறு அமர்ந்திருந்தார். பார்த்தீர்களா பிரதமர் எப்போதும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்.அவர் சம்மதிக்க மாட்டார் என்றார்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர் மனோ கணேசனை நோக்கிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ”என்ன மனோ அதிகாரப்பகிர்வுக்கு நீங்கள் சம்மதமா எனக்கேட்டார். ஆம் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம் என மனோகணேசன் பதிலளித்தார்.

அப்படியானால் சுமந்திரன் நீங்களும் சம்மதம் தானே என ஜனாதிபதி ரணில் கேட்டபோது, இது தொடர்பில் வரவு செலவுத்திட்ட விவாதம் முடிந்த பின்னர் ஒரு திகதியை குறிப்பிட்டு கட்சித்தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினால் நல்லது என சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியினரைப்பார்த்தது அப்படியானால் நீங்கள் சம்மதம் தானே என மீண்டும் கேட்டபோது ஒரு உறுப்பினர். அதனை தலைவர்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.

சரி அப்படியானால் இன்று இந்த விவாதம் முடிவடைவதற்கு உங்கள் தலைவரின் முடிவை எனக்கு கேட்டு சொல்லுங்கள் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கூறியபோதுஇ எழுந்து கருத்துரைத்த  மனோகணேசன்  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் என்பதனால்தான் நாம் அதில் அங்கம் வகிக்கின்றோம் எனக்கூறினார்.

நல்லது  அப்படியானால் வரவு செலவுத்திட்ட விவாதம் டிசம்பர் 8 ஆம் திகதி முடிவடைந்த பின்னர் 12 ஆம் திகதிக்குள் ஒரு சந்திப்பை  நடத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  குறிப்பிட்டார்.

கொழும்பில் தமிழர்களை பதிவு செய்வதை உடன் நிறுத்த வேண்டும் – மனோ

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் தகவலை வேறு யாருக்கும் வழங்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு பிரதேசத்தில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடுவீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுபோல, பொலிஸார் வீடுவீடாக சென்று பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் யுத்தம் இல்லை. பயங்கரவாத நடவடிக்கை இல்லை. சுதந்திரமாக செயற்படும் இப்போது ஏன் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.  இதுதொடர்பாக ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருக்கின்றேன்.

கொழும்பு நகரில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க முடியாது.

இதுதொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரியை கேட்கும்போது, மேலிடத்து உத்தரவு என தெரிவிக்கிறார். அதனால் தயவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டாம். இதனை நிறுத்துங்கள். பொலிஸ் சட்டத்தை பயன்படுத்தி வீடுவீடாக செல்லவேண்டாம்.

ஏனெனில் பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் அங்கிருந்து கடத்தல்காரர்கள், திருடர்கள் கொள்ளையர்களுக்கு செல்கின்றன. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது பிரதேச மக்களின் தகவல்களை பொலிஸுக்கு வழங்க எனக்கு விருப்பம் இல்லை. தவறு செய்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது சபையில் இருந்த பொதுமகள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதற்கு பதிலளிக்கையில், கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்வது தொடர்பாக என்னுடன் நீங்கள் கதைத்தீர்கள். அதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக நான் தெரிவித்தேன்.

வெளியில் இருந்து வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது யுத்தத்துக்கு முன்பிருந்து இடம்பெறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வெளிப்பிரதேசத்தில் குற்றம் ஒன்றை செய்து, கொழும்பில் தங்கி இருக்கின்றார்களா என கண்டுபிடிக்கவே  மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொலிஸ் பதிவு செய்யும் நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதொன்று அல்ல. அதேபோன்று தமிழ் மக்களின் வீடுகளை மாத்திரம் தெரிவுசெய்து மேற்கொள்வதல்ல.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் என  அனைத்து வீடுகளில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றார்கள். இது சாதாரண விடயமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இதனை தவறாக திசைதிருப்பவேண்டாம். என்றாலும் இதில் ஏதாவது தவறு இடம்பெறுவதாக நீங்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதுதொடர்பாகவும் நான் மீண்டும் தேடிப்பார்த்து, உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றார்.

தொடர்ந்து மனோகணேசன் எம்.பி உரையாற்றுகையில், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்று இருக்கும் போது உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த நடவடிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். அத்துடன் உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களை 10நாட்களுக்கு வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  இந்த வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8ஆயிரத்தில் இருந்து 4ஆயிரமாக குறைக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் நிலை இருக்கின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது.

தொகுதி வாரி முறை தேர்தலை நாங்கள் கோரவில்லை. அவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக இருந்தால் மீண்டும் பழைய முறையிலான விகிதாசார தேர்தல் முறைக்கே செல்வோம். அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

பாகிஸ்தான் தூதுவர் யாழ் நூலகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்று புதன்கிழமை (நவ 23) யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டுள்ளார்.

 

அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை வரவேற்றதுடன், யாழ்ப்பாண பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.

மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் இன்று (23) காலை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த  உதயசூரியன், அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள், வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மன்னார் மாவட்டம் கள்ளப்பட்டி பகுதியில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம்  பகுதியை இன்று காலை அடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல்  தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அதிகாரப் பகிர்வு தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் – ஜனாதிபதி

அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்றைய தினம் (நவ 23) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ் அழைப்பினை விடுத்துள்ளர்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமது இலக்கின்படி இனப்பிரச்சனைக்கான தீர்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வருடத்தில் காணப்பட வேண்டும்.

இல்லையேல் தீர்வைக்காண 2048 ஆம் ஆண்டு வரை செல்ல வேண்டியிருக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வரும் வரையில் பொதுத் தேர்தல் எதையும் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் காலமானார்.

79 வயதான அவர் கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று காலை நுவரெலியாவில் அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அவரது இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்பு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலிருந்து இருந்து சமிந்த விஜயசிறி வெளியேற்றம்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபையிலிருந்து நீக்கியுள்ளார்.

இதனால், நாடாளுமன்றம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இன்று சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு இன்று(23) பிணை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் T. N. L.மஹவத்தவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல உத்தரவிட்ட மேலதிக நீதவான், மாதாந்தம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வௌிநாட்டு பயணத்திற்கான தடையை விதித்த மேலதிக நீதவான், வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித விடயங்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளார்.

மீண்டும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவதாக முறைப்பாடு கிடைத்தால், பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.

வேறு ஆடைகளில் பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியைகள் தொடர்பில் விசாரணை

பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிக்கையை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் பணியின் கண்ணியத்தை காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஆசிரியர்கள் தாம் விரும்பிய ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தர முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்தொழிலாளர்களுக்காக நாளாந்தம் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க தீர்மானம்

கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதன்படி, மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மீனவர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை விடுவிக்க கடந்த வாரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 206 பவுசர்களே (58%) பெட்ரோல் நிலையங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதற்காக அரசாங்கம் 33 இலட்சம் டொலர்கள் மேலதிக செலவீனங்களைச் செய்த போதிலும் மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படாததால் மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கருதப்படுவதுடன், இதன் மூலம் மக்களின் போஷாக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளின் அளவு மற்றும் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளை தீர்மானிக்கும் பொறுப்பு, கடற்றொழில் திணைக்களம், கடற்றொழில் அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக தனியார், கூட்டுறவு அல்லது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாகவும் அல்லது கடற்படையினரின் உதவியுடன் மீனவர்களுக்கு தொடர்ந்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.