சிங்கப்பூர் ஜனாதிபதியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சி வேட்பாளருமான தர்மன் சண்முகரத்தினம், 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் சீனரல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர்களது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து, நான்கு தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவரும் Singapore Cancer Registry-இன் நிறுவனருமான பேராசிரியர் K.சண்முகரத்தினத்தின் மகனாவார். பேராசிரியர் K.சண்முகரத்தினம் “சிங்கப்பூரில் நோயியலின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

15% மற்றும் 14% வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை சீன சமூகத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு வேட்பாளர்களையும் தர்மன் சண்முகரத்தினம் எளிதாக தோற்கடித்துள்ளார்.

மிகவும் மதிக்கப்படும், புகழ்பெற்ற அரசியல் தலைவரான அவர், சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கப்பூரை ஆண்ட People’s Action Party (PAP) கட்சியில் இருந்து வௌியேறி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.

பொருளாதார நிபுணரான அவர், 2003 முதல் இரண்டு தசாப்தங்களாக கேபினட் அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் (2007-15) துணைப் பிரதமராகவும் (2011-19) பணியாற்றியுள்ளார்.

பலர் இவரை தற்போதைய பிரதமர் Lee Hsien Loong-இன் அரசியல் வாரிசாகக் கருதினர்.

சிங்கப்பூரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றது.

சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி Halimah Yacob-இன் 6 ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

ஜ.நா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்! – சந்தியா எக்னெலிகொட

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் துனைவியார் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போனவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கும் நகைச்சுவையினை நிறுத்தும் வரையில் இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே நீங்கள் ஜனாதிபதி தானே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரமுடியும் தானே எனவே இவ்வாறான நகைச்சுவையினை நிறுத்துங்கள்.

வடக்கு கிழக்கில் பலாத்தகாரமாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீரில் மூச்சுவிட்ட பூமி ஆகும்.

ஏன் என்றால் கொழும்பு கொஸ்வத்தை பிரதேசத்தில் பலவந்தமாக எனது கணவரான ஊடகவியலாளர் பிரதீப் எக்கினா கொட கடத்தி செல்லப்பட்டார்.

அவர் அங்கு எரிக்கப்பட்டாரா அல்லது எங்காவது புதைக்கப்பட்டாரா? அல்லது கடலில் கொண்டு சென்று போட்டார்களா? தெரியவில்லை இருந்தபோதும் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் பல காரணங்கள் தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஒ.எம்.பி காரியாலயம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அதிகளவான பணத்தை வீண் செலவு செய்து நடாத்தி வருகின்றது.

இந்த ஓ.எம்.பி. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை உண்மையாக நீதியாக தேடி கொடுத்துள்ளதா?குறைந்தது உண்மையையாவது அமைப்புகளுக்கு முன்வைத்தா? இல்லை.

இந்த தாய்மாருக்கு தேவையானது உண்மையும் நீதியும் அது இந்த நாட்டில் நடைபெறாது என்பதால் தான் சர்வதேச அமைப்புக்களிடம் செல்லவேண்டியுள்ளது.

2022 ஜ.நாவில் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குழு இறுதிவரை இலங்கைக்கு வரவில்லை. அவர்களுக்கான விசா அனுமதியை வர்த்தமானி மூலம் தடைசெய்து அதனை ஜனாதிபதியின் வீட்டு காப்பற்றின் கீழ் போடப்பட்டுள்ளது.

எனவே சட்டத்தின் கீழ் அவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கவும் அதற்கான நீதியை வேண்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும்” என அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையின் முதலாவது சினோபெக் எரிபொருள் நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது எரிவாயு நிலையமான மத்தேகொட சி & ஏ பெற்றோல் நிலையம் சினோபெக் என்ற பெயரில் தனது சேவை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த எரிபொருள் நிலையம் முன்னர் சிபெட்கோவின் கீழ் இருந்ததாகவும், சீனாவின் சினோபெக் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் பின்னர், அதன் உத்தியோகபூர்வ சின்னத்தின் கீழ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய எரிபொருள் நிலையத்தில் 16 எரிபொருள் பம்புகள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் மூன்று ரூபா சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர் சேவையின் தேவைக்கு ஏற்ப, சினோபெக் நிறுவனம் புதிய பம்புகளை நிறுவி ஒரு வருடத்திற்குள் எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் பல்பொருள் அங்காடி வளாகத்தை நிர்மாணிக்கவும், எரிபொருள் நிரப்பு நிலையத்தை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமக்குரிய தீர்வுகளை விரைவில் தர வேண்டும் எனக் கூறியும், காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தும் ‘எங்கே எங்கே… காணாமல் போன உறவுகள் எங்கே’ என கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

‘எமது உறவுகள் எமக்கு வேண்டும்’, ‘மதவாதம் வேண்டாம்’ என கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி, பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது.

வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர்  குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது

குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுப்ட்டனர்

அறகலய போராட்டக்காரர்களை ஏமாற்றவே இனவாத, மதவாதம் தூண்டப்படுகிறது – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஆட்சியாளர்களுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை ஏமாற்றவே தற்போது நாட்டில் இனவாத, மதவாத சக்திகள் முளைவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன.

இனவாத மதவாத சக்திகள் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா?

இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அறகலய போராட்டக்காரர்களுக்கு முறைமை மாற்றம் ஒன்றை செய்வோம் என்று உறுதிமொழி வழங்கியவர்கள் இன்று இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் தங்கள் உறுதிமொழிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்களா?

இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி ஆட்சி பீடம் ஏறியவர்களை நாட்டு மக்களே தவறை உணர்ந்து கொண்டு அறகலயப் போராட்டத்தை முன்னெடுத்து துரத்தினார்கள். போராட்டக்காரர்கள் முன்வைத்த முறைமை மாற்றம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் அதை செய்து முடிப்பதாக உறுதிமொழி வழங்கிவிட்டு இன்னும் அது பற்றி எதுவுமே செய்யாது உள்ளனர்.

மாறாக மீண்டும் இனவாத மதவாத கோஷங்களை எழுப்பிக் கொண்டு தாங்கள் போராட்டக்காரருக்கு வழங்கிய உறுதிமொழிகளை மடைமாற்றம் செய்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சரத் வீரசேகர, உதய கம்மாம்பிள்ள, விமல் வீரவன்ச மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குகள் உட்பட பலர் அறகலய போராட்ட காலத்திலும் பின்னரும் தலைமறைவாக அஞ்சி வாழ்ந்தனர். போராட்டக் காரர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். இன, மத பேதங்களை கட்டவிழ்த்து ஆட்சியாளர்கள் சிங்கள மக்களை ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடித்தனர் என்பதே போராட்டக் கார்கள் முன்வைத்த வாதம். அதற்கு பரிகாரமாக முறைமை மாற்றத்தை கோரினர். புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி அக்கோரிக்கையை நிறைவேற்ற உறுதிமொழி வழங்கி மூச்சு விட்டவர்கள் அதை நிறைவேற்றாமல் இனவாத மதவாத கருத்துக்களை எழுச்சி பெற வைத்து நாட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முயலுகிறார்கள்.

பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு சுமுகநிலையை அடைந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாலும் முறைமை மாற்றம் சம்பந்தமாக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை கைக் கொள்ளவில்லை. இந்த காலக்கெடு முடிந்து போராட்டக்காரர்கள் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு தங்கள் உறுதி மொழிகளில் இருந்து தப்பிப்பதற்கும் போராட்டக்காரர்களை ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கிறார்களா என்ற சந்தேகம் உறுதியாகி வருகிறது.

சிங்கள மக்கள் குறிப்பாக போராட்டக் காரர்களை இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனவாத மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சி பீடம் ஏற இடமளிக்கக் கூடாது. இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராயர் ஏதாவது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றாரா? – ஜனா எம்.பி கேள்வி

பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்மென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளார் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டிலே தற்போது மீண்டும் ஒரு இனக்கலவரம் தோன்றிவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் இந்திய உளவுப் பிரிவு தங்களது அறிக்கை மூலமாக இலங்கையில் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது வழமையாக ஒவ்வொரு தேர்தல் வரும் போது இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்வது இந்த நாட்டிலே வழமையாகி விட்டது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாட்டில் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை சாதகமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஒரு பிரளயத்தை கிளப்பி ஜனாதிபதி தேர்தலை வென்றார்கள்.

இதனை மையமாக வைத்து ஒரு சில சிங்கள இனவாதிகள் தமிழ் நா.உறுப்பினர்களின் வீடுகளை சுற்றி வழைக்க வேண்டும். வடக்கு கிழக்கில் பௌத்தத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என இன துவேசத்தை கிளப்பி விடுவது மாத்திரமல்லாது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன்பு இரு நாட்கள் உதயகம்பன்பிலவும் புத்தபிக்குகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசியல் அமைப்பின்படி அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆகவேண்டும் என்பதுடன் மாகாணசபை தேர்தல் நடக்கக் கூடும். எனவே அடுத்த வருடம் ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவரின் தலைநகரில் தமிழருக்கு எனவேலை என உதயகம்மன்பில கேட்கின்றார்? அவர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் வடக்கு கிழக்கிலே சிங்களவர்கள் அடாத்தாக வந்து குடியேறியவர்கள் நாங்கள் தமிழர்கள் கொழும்பிலும் ஏனைய தென்பகுதியில் அடாத்தாக வந்து குடியேறவில்லை.

கொழும்பு சிங்கள தலைநகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்று தெரிவிக்கும் நீங்கள், நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வந்து வடக்கு, கிழக்கை பிரித்து எங்களை ஒரு தனிநாடாக பிரகடனப்படுத்தவும்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வரவுள்ளார். அதேவேளை சீன ஆய்வு கப்பல் வரவுள்ளது. இவ்வாறு மாறிமாறி பூகோள ரீதியாகவும் உள்ளூர் அரசியல் ரீதியாகவும் இலங்கை சிக்கித் தவிக்கின்றது. ஏன் என்றால் இலங்கைக்கு ஒரு உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையும் இல்லாத அரசாங்கம் ஜனாதிபதியும் செயற்படுகின்றனரா? நடைபெற்றுவரும் இனரீதியான முறுகலை ஜனாதிபதி மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு சுபீட்சமாக இருக்காது.

பேராயர் மல்கம் ரஞ்சித் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க இருப்பதாகவும் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் என்கின்ற இந்த ஆண்டகை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கும் போதும் இலங்கை வரைபடத்தையே மாற்றி கோல் சிற்றி அமைக்க கடலை மண்போட்டு நிரப்பி சீனாவுக்கு தாரைவார்க்கும் போது வாய்திறக்க வில்லை

அதேபோன்று கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நவாலி தேவாலயம் உட்பட தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் 2009 முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்த்து 50 ஆயரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது மற்றும் வடக்கு கிழக்கில் பல கிறிஸ்தவ வணபிதாக்கள் படுகொலை செய்யப்பட்டபோது பேராயர் வாய்திறக்கவில்லை.

ஆனால் 2019 இல் தேவாலய குண்டுதாக்குலுக்கு நீதி கோருகின்றார். அதற்கு நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஆயர்களான மன்னார் ஆண்டகையாக இருந்த இராயப்பு ஜோசப் , முள்ளி வாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக சாட்சியளித்தார். அவ்வாறே மட்டு திருகோணமலை ஆண்டகையாக இருந்த கிங்ஸ்லி சுவாம்பிள்ளை 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்தவர். அதேபோன்று தற்போதுள்ள மட்டு ஆயர் பொன்னையா ஆண்டகை அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.

ஆனால் இவர்களுக்கு மேலாக இருக்கின்ற பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சரத்வீரசேகர, உதயகம்பன்பல, விமல் வீரவன்ச போன்று ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சார்பாகவா அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.

வடக்கு, கிழக்கில் 30ஆம் திகதி போராட்டத்துக்கு முழு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவு கூரப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கில் மன்னாரிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்குவது மாத்திரமல்லாது எமது உறவுகளுக்கான நீதியை பெற்றிட தேசியத்தின்பால் ஈர்ந்துள்ள அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும்- என்றார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் புளொட் அமைப்பின் இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார், ஜனநாயப் போராளிகள் கட்சி இணைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குருந்தூர்மலை தமிழரின் காணிகள் விடுவிக்கப்பட உடனடி வாய்ப்பில்லை – செல்வம் அடைக்கலநாதன் எம். பி.

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர்மலை பிரதேசத்திலே வனவளத் திணைக்களம், தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை அவதானித்தோம்.

இதன் அடிப்படையில், உடனடியாக இந்த நிலங்கள் விடுவிக்கப்படும் சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கின்ற உயர் அதிகாரிகள் இந்த விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.

நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபட கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்து கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். என்னைப் பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா என்று சந்தேகம் இருக்கிறது – என்றார்.

விகாரை கட்ட அனுமதி மறுப்பு – திருமலை மாவட்ட செயலகத்தில் பிக்குகள் முற்றுகை போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தை பிக்குகள் நேற்று முற்றுகையிட்டு போராடினர். அத்துடன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்த மண்டபத்துக்குள்ளும் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலாவெளி – பெரியகுளத்தில் இடை நிறுத்தப்பட்ட விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பிக்குகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் பிக்குகளை அழைத்து விளக்கம் வழங்கினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் புகுந்த பிக்குகள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் கூட்டம் தடைப்பட்டது.

இதன்போது, “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசம். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பார்களானால், அதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்க முடியாது – என்றார்