ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றிய இலங்கையர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது.

இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச்சீர்ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யுஎன்எச்சீ ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.

படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பு சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரைஇறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு அருகில் வங்களா விரிகுடாவில் இன்னுமொரு படகு தத்தளிக்கின்றது என்ற தகவல் குறித்து ஐநா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

திருத்தப்பணிகளுக்காக ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும்.

இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டார்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய உத்தேச வீசா வகைகள் வருமாறு

1.வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான “முதலீட்டாளர் வீசா” வகை

2.சேவை வழங்குநர்களுக்கான “சேவை வழங்குநர் வீசா” வகை

3.கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான “சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்” வீசா வகை

நிலக்கரி கப்பல்கள் 14 நாட்டை வந்தடையவுள்ளன

ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது

3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி – ஐக்கிய நாடுகள் உணவு விவசாய அமைப்பு

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கையில், நான்கு பேரில் ஒருவர் ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்

இதேவேளை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி கீழ்நோக்கிய போக்கில் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் விலங்குணவு கிடைக்காமலும் மீனவர்கள் எரிபொருளை பெற முடியாமலும் உள்ளனர்.

இதன் காரணமாக, உள்ளூர் சந்தைகளில் உணவு விநியோகம் சுருங்கி வருவதாகவும் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவிகள் 244,300 பேரை சென்றடைந்துள்ளது.

அதேவேளை 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்காக நேற்று (திங்கட்கிழமை) வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவினால் பாடசாலை சீருடைகள் நன்கொடை

பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1வது தொகுதி முடித்த பொருட்கள் ஏற்கனவே சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

நாடு திரும்பிய ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், தனது சேவையை முடித்துக்கொண்டு நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

ஹனா சிங்கருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, இலங்கைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்தும் தெரிவித்தார்.

2018 செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளராக ஹனா சிங்கர் செயற்பட்டார்

Posted in Uncategorized

காணாமல் போனோர் அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.

அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம் என  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் விநியோகம் மற்றும் பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்.

வடக்கு மாகாணத்தில் இளையோரை குறி வைத்து ஐஸ் போதை மற்றும் ஹெரோயின் போன்ற சட்டவிரோத போதைப் பொருட்கள் ஆரம்பத்தில் இலவசமாகவும் பின்னர் பணத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் பல இளையோர் பாதிக்கப்பட்டு சீரழிந்து வருகின்றனர் என்பதை வெளிவரும் செய்திகளும் வெளிவராத புள்ளி விபரங்களும் ஆதாரப்படுத்துகின்றன.

இவ்வாறான போதைப் பொருட் பாவனையை தடுப்பதற்கு முழுமையான செயல் நடவடிக்கைகளை அதிகாரத் தரப்பான காவல் துறை கட்டுப்படுத்த தவறுகின்றமையே சட்டவிரோத போதைப் பாவனை தீவிரம் பெறுவதற்கு காரணமாகின்றது.

சில கிராமங்கள் தாங்களாக உணர்ந்து சில விழிப்புக் குழுக்களை தங்கள் கிராமத்திற்கு உருவாக்கி கட்டுப்படுத்தி வருகின்றனர் ஆனால் பெரும்பான்மையான கிராமங்களுக்கு இவ்வாறான குழுக்கள் அமைக்கப்படவில்லை.

எனவே மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழ் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு தீர்மானம் ஒன்றை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு கிராமங்களுக்கும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலமே சட்டவிரோத போதைப் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

மாவட்டச் செயலாளர்கள் விரைவாக இவ்வாறான விழிப்புக் குழுக்களை அமைப்பதை நடைமுறை செய்ய வேண்டும். இதுவே யுத்தத்தால் அழிந்து போன எம் தேசத்தை போதையால் மீண்டும் அழிந்து போக விடாமல் பாதுகாக்கலாம்.

மன்னாரில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு செல்வம் எம்.பி நிதி உதவி வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று திங்கட்கிழமை (19) மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து நிதி உதவி வழங்கி வைத்தார்.

நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்,ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

-மாணவர் ஒருவருக்கு இன்றைய தினம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.குறித்த மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் 2 வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.