இந்திய-இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டும்! – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள தொலைநோக்கு அறிக்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இலங்கை – இந்திய சமூகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை நினைவுகூரும் வகையில் விசேட நினைவுச் சின்னமொன்றும், இந்திய – இலங்கை உறவுகளில் அண்மையில் இடம்பெற்ற விசேட தருணங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும்- சபா.குகதாஸ் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் , மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை IMF பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது, சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும்.

அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரயோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய தூதரக அதிகாரிகள் ஆளுநருடன் சந்திப்பு

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இயற்கை வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை நாம் அடுத்த வாரம் சந்திக்க உள்ளோம் – சஜித் பிரேமதாச

இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25% எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற இன்னும் பல புள்ளி விவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடிய குழுவாக மாறிவருவதனை எடுத்துக் காட்டுகின்றன.

அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதால், இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி,இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை. ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன். இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து அரச பாடசாலைளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (12) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைகள் மூடப்படுவதையும் சிறைச்சாலைகள் திறப்பதையும் தடுப்பதற்காகவே தனது இந்த முயற்சியை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒரு நாட்டின் பாடசாலை கட்டமைப்பு வலுப்பெறும் போது சிறைச்சாலைகள் மூடப்படுகிறது.பாடசாலை கட்டமைப்பை வலுப்படுத்துவதே பிரபஞ்சம் திட்டத்தின் பிரதான நோக்கம். நவீனத்துவ, ஸ்மார்ட் கல்வியை வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதுள்ள வங்குரோத்து நிலையில் இருந்து மீள, சரியான பயணப் பாதையில் பயணிக்க வேண்டும். நாடு அனுபவித்த அவலத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்கக் கூடாது. அடுத்த சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உலகம் புதிய தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தியடைந்து வரும் நிலையில், அந்த புதிய தொழில்நுட்பத்தை இந்நாட்டில் கல்விக்கு வழங்காமல் இருப்பது பாடசாலை மாணவர்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்

ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளரல்ல – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளரல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் போட்டியிடலாம்.ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரைக் களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது.பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.கட்சி என்ற ரீதியில் பலமானதாகவே உள்ளோம்.ஆகவே இந்த ஆண்டு எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்று ஆளும் தரப்பின் ஒரு தரப்பினர் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடுகிறார்கள். கட்சிக்குள் இருந்துக் கொண்டு தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது என்பது பிரச்சினைக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரல்ல,அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கட்சியின் உயர்மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஆகவே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது.ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் இனி வலுவான முறையில் முன்னெடுப்போம் என்றார்.

அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை இலங்கை கைவிட வேண்டும் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் மனித உரிமை தராதரங்களை மதிக்கும் விதத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில்மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவி;த்துள்ளது.

சர்வதே நாணயநிதியத்திற்கான கடிதமொன்றில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் சிவில் சமூகத்தின் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்தும் நாட்டில் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நகல்சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நல்லாட்சி மற்றும் ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள் கண்காணிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் பல சமீபத்தைய நடவடிக்கைகள் சட்டங்களில் உத்தேச அரசசார்பற்ற அமைப்புகள் சட்டமும் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சுமந்திரன் எம்பி தனிப்பட்ட ரீதியில் ரணிலின் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு மற்றும் பக்தர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியிலே எங்கள் பிரதேசங்கள் பல கபளீகரம் செய்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வெடுக்குநாறி மலையும் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், வடக்கு கிழக்கில் அமைதியை கொண்டு வரவேண்டும், 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும், புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் தனவந்தவர்கள் இலங்கையில் வந்து முதலிடவேண்டும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் வாய்கிழிய கூறிக் கொண்டு, மறைமுக நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கில் தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை ஒழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இந்த வெடுக்குநாறி சம்பவத்தை பார்ப்பதாகவும் கோவிந்தன் கருணாகரம் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

நாட்டில் இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் அதிகாரங்கள் பரவலாக்கப்படல் வேண்டும் : கருணாகரம் எம்.பி !

வெளிநாட்டமைச்சர் அலிசப்றி பல நாடுகளுக்குச் சென்று வருகின்றார். கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். சமஷ்டி அதிகாரப் பரவலாக்கல் நடைபெற்றால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் வெளிநாட்டமைச்சர் கூறியிருக்கும் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்பதனை உணர்வதுடன் அவரது உதாரணங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

உண்மையிலேயே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த நாட்டிற்குத் தேவையென்றால், இந்த நாடு பொருளாதாரரீதியாக முன்னேற்றமாக நகரவேண்டுமென்றால், சுபீட்சம் நிலவ வேண்டுமென்றால், இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்படல் வேண்டும்.

தற்போதைய வெளிநாட்டமைச்சர் பல நாடுகளுக்குச் சென்று வருகின்றானர். கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் உணர்ந்திருக்கின்றார். அவர் உண்மையிலேயே கோட்டபாயவினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர். கோட்டபாயவின் தனிப்பட்ட ஆஸ்த்தான சட்டத்தரணியாக இருந்தவர். தற்போது வெளிநாட்டமைச்சராக இருக்கிறார். அவரது கூற்று வரவேற்கத்தக்கது. அதை ஏனைய அரசியல்வாதிகள் உட்பட புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் வெளிநாட்டமைச்சர் கூறுகின்றார் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்று கூறியிருக்கின்றார். சமஷ்டி அதிகாரப்பரவலாக்கல் இந்த நாட்டில் நடக்குமாக இருந்தால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் உணரவேண்டும்.

அதிகாரப்பரவலாக்கல் ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்பது பொய்யானது அதிகாரங்களைப் பரவலாக்கலாம், அதற்கு அவர் பல உதாரணம் காட்டியிருக்கின்றார். சுவிஸ்லாந்தைக் காட்டியிருக்கின்றார். இலங்கை ஒரு சிறிய நாடு இங்கு அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது என்பவர்களுக்கும் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார்.

பெல்ஜியம் இலங்கையை விடச் சிறிய நாடு ஆனால் அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு தற்போது பெல்ஜியம் வளர்ச்சியடைந்த நாடாக ஐரோப்பாவில் இருக்கின்றது. எனவே இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிகாரங்களைப் பரவலாக்கி மாகாணங்களுக்கு பூரணமான அதிகாரங்களைக் கொடுத்தால் இந்த நாடும் புலம்பெயர் தேசத்துத் தமிழ்த் தனவந்தர்கள் முதலீடு செய்வார்கள் என அவர் இதன்போது தெரிவிததுள்ளார்.

மனித உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் சட்டமூல உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத் தாம் தொடர்ந்து கண்காணிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, வடமெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் இலங்கை நிலைவரம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் இணையனுசரணை நாடுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், ‘சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களை நாம் தொடர்ந்து கண்காணிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகளாலும், ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ‘நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலைக் குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும்’ என்ற பொதுவான கரிசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.