பொலிஸார் கிராமசேவகரின் வேலைகளை பார்க்கக்கூடாது – மனோ கணேசன்

பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து தெரிவிப்பதற்காவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

ஆகவே தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிருலபனை,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை,பம்பலப்பிட்டி, மட்டக்குளி,முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.

இது டரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை,பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் ஏன் வீடு வீடாக செல்கின்றீர்கள். தகவல் திரட்டுகின்றீர்கள்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்குவதை போன்று பொலிஸார் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார்கள்.பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையை பொலிஸ் செய்ய கூடாது.

விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முழு பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள்.தீபாவளி,நத்தார் மற்றும் தைப்பொங்கள் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா ? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகிறது.பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவா ?அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

பாதாள குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்கு தொடர்புண்டு.நான் ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறிப்பிடவில்லை.

ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள்.99 சதவீதமான சிறந்தவர்கள் உள்ளார்கள்.தனிப்பட்ட தகவல்களை கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.

தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியும்.தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன.ஆகவே இதனை உடன் நிறுத்துங்கள் என்றார்.

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் விவாதத்திற்கு விடப்படாது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, கூச்சல் .குழப்பங்களுக்கு மத்தியில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கள் மீதான விவாதத்திற்கு இரவு 8 மணிவரை நேரம் சபாநாயகர் அறிவித்த நிலையில் மாலை 4.30 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பெறுமதி சேர்வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதனை சமர்ப்பிக்காது வற் வரி சட்டமூல விவாதத்தை தொடர்ந்து முன்னெடுத்து சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசு முயற்சித்தது.

என்றாலும் எதிர்க்கட்சிகள் ” கூட்ட நடப்பெண்” கோரிய நிலையில் அதற்கு தேவையான 20 எம்.பி. க்கள் சபையில் இல்லாத நிலையில் பிரதி சபாநாயகர் சபையை ஒத்திவைத்ததால் பெறுதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் (வற்)மீதான விவாதம் இடை நடுவில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த விவாதத்தை திங்கட்கிழமை (11) நடத்தி அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் சபைமுதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான திங்கட்கிழமை தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை தொடர்ந்து ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார். அத்துடன், குறைநிரப்புத் தொகை செலவீனத் தலைப்பையும் திங்கட்கிழமையே அங்கீகரிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.

அதற்கமைய, இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகோரிக்கை விடுத்தது. இதற்கமைய நேற்று காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம்மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து திங்கட்கிழமையே நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்ததுடன்,அதற்கமைய ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51 மேலதிக வாக்குகளால்நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (11) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் அதனுடன் இணைந்ததாக இந்த பிரேரணை மீதான விவாதத்தையும் முன்னெடுக்க சபாநாயகர் முயற்சித்தார்.

எனினும் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவே ”சரி அப்படியானால் வரவு செலவுத்திட்ட திங்கட்கிழமை (11) விவாதம் முடிந்தவுடன் தனியாக விவாதத்திற்கு எடுப்போம். விவாதம் 8 மணியானாலும் விவாதத்தை தொடர்வோம் ”எனக்கூறிய சபாநாயகர் அதற்கு சபையின் அனுமதியும் கோரினார். இதற்கு சபையும் அனுமதி வழங்கியது. எனினும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் அரசு தரப்பினரின் நேரத்தை மட்டுப்படுத்தி எதிர்கட்சியினருக்கான நேரம் வழங்கப்பட்ட நிலையில் இவ்விவாதம் மாலை 4.30 மணிக்கு நிறைவுற்றது.

இதனையடுத்து உடனடியாகவே சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க உரையாற்றினார்.அவரின் உரை முடிந்தவுடன் அரசு பிரேரணையை நிறைவேற்ற முற்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன் தமது உரைகளுக்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தின .ஆனால் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் எதிரிக்கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்ததால் திங்கட்கிழமை (11) விவாதம் தேவையில்லையென சபாநாயகர் கூறியதனால் சபையில் கடும் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுந்து, சபைமுதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த விவாதத்தை நடத்த போதுமான காலத்தை வழங்குவதாக காலையில் சபையில் தெரிவித்தார். அதனாலே நாங்கள் அதற்கு இணங்கினோம். ஆனால் தற்போது விவாதத்துக்கு இடமளிக்காமல் வாக்களிப்புக்கு செல்வது ஜனநாயக விராேத செயலாகும் என்றார்.

இருந்தபோது வாக்களிப்புக்கு செல்ல கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிரகாரம் வாக்களிப்பு மாலை 4,45 மணியளவில் இலத்திரணியல் முறையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம், இரண்டாம் மதிப்பீடு வாக்களிப்புக்கு விடப்பட்ட நிலையில் ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 57 மேலதிக வாக்குகளினால் நிரைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், மூன்றாம் மதிப்பீடும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வாக்களிப்பில் ஆளும் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரோஷான் ரணசிங்க சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இதேவேளை நிதிச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில், திங்கட்கிழமை (11) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர். குறித்த மகஜரில்,

இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம் குறிப்பாக நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவதுடன் அதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றது.

அதிலும் வட பகுதியில் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், இராணுவ சோதனை தடுப்பு அரண்கள்,மக்கள் மீள்குடியேற்றப்படாமை போன்றவற்றால் இங்கு வாழ்கின்ற மக்களாகிய நாம் பெரும் சவாலையே எதிர்நோக்கின்றோம்.

தற்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு,எரிபொருட்களின் விலைஅதிகரிப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை,இந்திய இழுவை மடி எமதுகடற்பரபில் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை,பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், போதைப்பொருள் பாவனை,சமூர்த்தி கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கபெறாமை போன்ற சாவால்களையும் மக்களாகிய நாம் எதிர்நோக்குவதுடன் நாட்டின் பொருளாதார கொள்கை,நாட்டின் புதிய சட்ட மற்றும் சட்ட மூலங்கள் சர்தேச உடன்படிக்கைகள் மூலம் வட பகுதி மக்களாகிய நாம் பல இன்னல்களை எதிர் நோக்கின்றோம்.

அதிலும் நாட்டின் முதலீட்டை அதிகரித்தல் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்கள் நடைபெறுகின்றது நடைபெற உள்ளது மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி,விடத்தல்தீவு இறால் பண்ணை,கனிய மண் அகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் அட்டைப்பண்ணை, பொன்னாவெளி கிராம டோக்கியோ சீமேந்து தொழிற்ச்சாலை திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி அத்துடன் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றசெயற்பாடுகளும் நடைபெறுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர் மலைவிவகாரம், திட்டமிட்ட மாகாவலி குடியேற்றங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை வட மாகாண பெண்கள் என்ற ரீதியில் எதிர்நோக்குகின்றோம் ஆகவே வட மாகாண பெண்கள் குரல் என்ற ரீதியில் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனுடன் மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள் என்றுள்ளது.

இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில் நடந்துகொள்ளவில்லை எந்த நாட்டிற்கும் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும்கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

உருவாகின்ற கடல்சார் சவால்களிற்கு இணைந்து தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் எங்கள் நாடுகள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கூட்டு பொறுப்பாகும் இந்த அர்த்தத்தில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது பரஸ்பரம் ஒன்றிணைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப் போவதில்லை – சஜித் பிரேமதாச

ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஒரு சில பொய் செய்திகளை பிரசாரப்படுத்திவரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடமிருந்து தரகுப்பணம் பெற்றுக்கொண்டு, ரணிலும் சஜித்தும் இணையப்போவதாக பிரசாரம் செய்து வருகின்றன.

இது உண்மைக்கு புறம்பான செய்தி. ரணலும் சஜிதும் ஒரு போதும் இணையப்போவதில்லை என்ற இந்த செய்தியை இந்த சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கட்டுநாயக்கவில் பயணிகளுக்கு பயணப்பொதிகளை அடையாளம் காண “டாக்” குறிச்சொற்கள்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் “டாக்” குறிச்சொற்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்துள்ளனர்.

சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதும் சில பயணிகள் தெரிந்தே மற்றவர்களது பயணப்பொதிகளை திருடிச்செல்வதும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்ற நிலையில் அவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடினமாக உள்ளது.

இதனை தடுக்கும் முகமாக இப் புதிய “டாக்” குறிச்சொற்கள் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேரும் பயணிகளின் பயணப் பொதிகளின் “டாக்” குறிச்சொல் சீட்டுகளை சோதனையிடும் நடவடிக்கையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வந்த குழு பெரும்பான்மை புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை – 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கை

இலங்கை வந்துள்ள உலக தமிழர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அத்துடன், அவர்களின் கருத்துகள் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் மக்களின் கருத்துகளையும் பிரதிபலிக்கவில்லை என்று ஆறு முக்கிய புலம்பெயர் அமைப்புகள் கூட்டு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளன. ஆறு அமைப்புகளும் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,

இலங்கையின் அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தின் ஈடுபாடு அவசியம். புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் சிலரும் சிங்கள, பௌத்த மத குருமார்கள் மற்றும் தென்னிலங்கை சிவில் சமூகத்தின் ஒரு பிரிவினரும் அண்மையில் மேற்கொண்ட முயற்சி குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்தோம். புலம்பெயர் தமிழர்களில் தெரிந்தெடுக்கப்பட்ட – வரையறுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் மட்டும் இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகியிருப்பது துரதிர்ஷ்டம். உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு சிலரை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கிறது. பெரும்பான்மையான புலம் பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகளை முழுமையாக உள்ளடக்கவில்லை.

கடந்த 2009 செப்ரெம்பரில் பிரான்ஸின் பாரிஸில் உருவாக்கப்பட்ட உலக தமிழர் பேரவை 10 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த அமைப்புகளின் பிரதிநிதித்துவத்துடன் உருவாக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை உலக தமிழர் பேரவையிலிருந்து தற்போது பிரிந்து விட்டன. பிரிட்டிஷ் தமிழ் மன்றம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், U.S.T.B.A.C. என முன்பு அறியப்பட்ட யுனைற்றட் ஸ்ரேற்ஸ் தமிழ் அக்ஷன் குறூப் (U.S.T.A.G.) போன்றவை உலக தமிழர் பேரவையிலிருந்து விலகிவிட்டன. இதனால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை அந்த அமைப்பு கொண்டிருக்கவில்லை.

வடக்கு, கிழக்கு, தமிழ் மக்களின் கருத்துகளுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் – புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை கொண்டுள்ள அமைப்புகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூக, சமய, பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அடிப்படை கோட்பாடுகளை ஏற்றுள்ளன.

இதன்படி, 1948ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த மக்களும் அவர்களின் சந்ததியினரும் தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்யும் ஜனநாயக – அமைதி வழியான – நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்கு சர்வதேச கண்காணிப்புடனான வாக்கெடுப்பு அவசியம்.

வடக்கு, கிழக்கில் தற்போதுள்ள அதிகப்படியான இராணுவ பிரசன்னம் காரணமாக இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை நிறுவப்பட வேண்டும், மக்களுக்கு அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வழங்குவதற்காக இலங்கை அரசமைப்பின் ஆறாவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும்.

இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். இனப் படுகொலை மற்றும் போர் குற்றத்துக்கு சர்வதேச நீதிமன்றில் விசாரணை – சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த அபிலாசைகளை புரிந்து கொள்ளுமாறும் – அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுமாறும் சிங்கள, பௌத்த மதகுருமார்கள் மற்றும் தெற்கு சிவில் சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய முற்போக்கான நடவடிக்கை அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிரூபிப்பதுடன், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு நியாயமான நீடித்த தீர்வை காணவும் பங்களிக்கும் மற்றும் பாதுகாப்பான – வளமான இலங்கைக்கு வழிவகுக்கும் – என்றுள்ளது.

இந்த கூட்டு அறிக்கையில் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் சங்கம் – அமெரிக்கா, யுனைற்றெட் ஸ்ரேற்ஸ் தமிழ் அக்ஷன் குறூப், உலக தமிழ் அமைப்பு – அமெரிக்கா ஆகிய அமைப்புகள் ஒப்பமிட்டுள்ளன.

  1. Australian Tamil Congress (ATC)
  2. Federation of Tamil Sangams of North America (FeTNA)
  3. Ilankai Tamil Sangam, USA
  4. Tamil Americans United PAC
  5. United States Tamil Action Group(USTAG)
  6. World Thamil Organization, USA

ரணில் ராஜபக்சக்களுக்கு வெள்ளையடிப்பதா உலகத்தமிழர் பேரவையின் நோக்கம்? – சபா குகதாஸ் கேள்வி

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இன நல்லிணக்கம் ஏற்படும் வகையில் பிரகடனம் ஒன்றை ஐனாதிபதி ரணிலிடம் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன மிகவும் வேதனையாக உள்ளது ஐனாதிபதியின் நல்லிணக்கம் தமிழர் விவகாரத்தில் இதுவரை எப்படி இருக்கிறது என்று தெரியாது போன்று நடிக்கிறார்களா? GTF ரணிலுடன் இணைந்து.

தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் சிங்கள மயப்படுத்தல் , ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்தமை, அரசியல் அமைப்பு சபையில் தமிழர் பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் அமைப்பில் உள்ள 13 திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தை சாட்டியமை , வடக்கு மீனவர் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் தள்ளுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதியை தட்டிக்கழித்தல், நினைவேந்தல்களில் ஈடுபட்டோரை பயங்கரவாத சட்டத்தல் சிறையில் அடைத்துள்ளமை, தமிழர் தாயகத்தில் இந்திய சீனாவிற்கு இடையில் போட்டியை ஊக்குவித்தல், தமிழர் மீது சிங்கள இனவாதிகள் வீசும் இனவாத கருத்துக்களை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் ஐனாதிபதி ரணிலின் இன நல்லிணக்கமா?

ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதியாக வந்த பின்னர் தமிழர் விவகாரத்தில் கடந்த காலங்களைப் போன்றே சந்தர்ப்பவாத வேடம் போட்டு வருகிறார் இது உலகத் தமிழர்களுக்கே புரியும்.

ரணிலின் தந்திரம் தெரிந்து தான் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்னர் நீங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுமையாக அமுழ்ப்படுத்துங்கள் என கோரிக்கை வைத்தனர் இதனை எதிர்பார்க்காத ஐனாதிபதி ரணில் தன்னையே ஏமாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெற வேண்டும் என பொய் உரைத்தது மட்டுமல்லாமல் பொலீஸ் அதிகாரம் தர மாட்டேன் என தான் தான் அரசியலமைப்பை தீர்மானிப்பவர் போல பதில் அளித்தார் இத்தோடு வெளியில் வந்தது ரணில் இனநல்லிக்க தீர்வு நாடகம்.

தற்போது GTF குழுவிற்கு வழமையான பல்லவியை பாடியுள்ளார் ரணில் அதாவது புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வு தருவதாக இதனை வடிவேல் பாணியில் சொன்னால் வரும் ஆன வராது.

புலம் பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் பெரும் தியாகத்தின் பெயரால் வடிவமைக்கப்பட்டவை அதனை தரம் தாழ்த்தும் வகையில் நடந்து கொண்டால் வரலாறு பதில் சொல்லும்.

தமிழ் மக்களின் அரசியலை புலம்பெயர் தனிநபர்கள் கையாள முனைவது கண்டனத்துக்குரியது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தனி நபர்கள் தமக்குள் பொறுப்பற்ற பிரகடனங்களை உருவாக்கி அவற்றை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக முன்மொழிய முற்படுவது கண்டனத்திற்குரியது. உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்ப சேர்ந்த ஒரு சிலர் பௌத்தப பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கொச்சைப் படுத்து முகமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாது அவர்களது அனுமதியை பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக்குரியது. புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக் கொண்டு எமது ஒட்டுமொத்த அரசியல் அபிலாசைகளையும் தவறாக வழி நடத்திச் செல்லும் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த நடவடிக்கையானது அவர்களது சொந்த நலன்களை பூர்த்தி செய்வதற்கு தமிழ் மக்களின் அரசியலை பலிக்கடாவாக்கும் செயற்பாடா என்று சந்தேகம் கொள்ள வேண்டி உள்ளது.

ஈழத் தமிழர்களால் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக நமது தேசத்தில் அயராத முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் அமைப்புகள் ஆதரவாக செயற்பட வேண்டுமே தவிர அவற்றை மலினப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.

அவர்கள் முன் வைத்திருக்கும் பிரகடனத்திலே மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது வேடிக்கையானது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கையே புரிந்து கொள்ளாதவர்கள் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகிறது.

தமிழ் மக்களின் இறுதி அரசியல் தீர்வு என்பது சமஷ்டி முறையான ஆட்சியமைப்பாகவே இருக்க முடியும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறாத கொள்கையோடு தொடர்ந்தும் பயணித்து வருகிறது . அந்த அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப் பட்டபோது, நல்லிணக்க நடவடிக்கையாக ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரங்களை பகிர்ந்து தேர்தல்களை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளாம். அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைளும் நடந்தன. இந்த நேரத்திலே புதிய அரசியல் யாப்பு, மாகாண சபைக்கான அதிகாரங்களை பகிர்வதற்காக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கின்ற கோரிக்கை அபத்தமானதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை குழி தோண்டி புதைக்கும் ஆபத்தான நடவடிக்கையும் ஆகும்.

ஒருசிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைப்பதோடு, நமது கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கிறோம்.

சுரேந்திரன்
பேச்சாளர்-ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானம்

நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

சட்ட மூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெறும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கைப் பிரஜைகளின் முறைப்பாடுகள் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் வகையில் நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் நிலையான அமைதிக்குத் தேவையான வசதிகளை வழங்குவதே முன்மொழியப்பட்ட செயல்முறையின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொண்ட மோதல் சூழ்நிலைகளில் இருந்து மீள்வதற்கு அவசியமான ஒரு முக்கிய அங்கமான உண்மையைத் தேடுவதற்கு ஒவ்வொரு இலங்கையருக்கும் உள்ள மறுக்க முடியாத உரிமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த உத்தேச ஆணைக்குழு செயற்படும்.

மேலும், இலங்கை மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு, சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சகவாழ்வு, சமத்துவம், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் வலுப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும்.

இலங்கையின் பல்லின மற்றும் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் நிலவும் பொருத்தப்பாடின்மை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உறுதியுடன் செயற்படுதல் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) உட்பட இலங்கையின் யுத்தத்துக்குப் பிந்தைய நல்லிணக்க முயற்சிகளில் கடந்த பல ஆணைக்குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை மீளாய்வு செய்யவும், பரிசீலிக்கவும் மற்றும் நடைமுறைப்படுத்தவும் இந்த ஆணைக்குழு செயற்படும்.

அரசாங்கத்தினால் 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான ஆலோசனை செயலணியின் கண்டுபிடிப்புகளையும் இந்த ஆணைக்குழு கவனத்தில் கொள்ளவுள்ளது.

உத்தேச சுயாதீன ஆணைக்குழு எந்தவித அரசியல் தலையீடு இன்றியும் பக்கச்சார்பற்றதாகவும், செயற்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

உத்தேச புதிய சட்டம் அமுலுக்கு வரும் வரை, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) என்ற இடைக்கால நிறுவனத்தை ஸ்தாபிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம், இந்த உத்தேச ஆணைக்குழுவிற்குத் தேவையான சட்ட மற்றும் கொள்கைக் கட்டமைப்பு, செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

சுதந்திரமான உள்நாட்டு ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அவசியமான வசதிகளை வழங்குதல், நீதிமன்ற அதிகார பிரதேசங்களின் வெற்றிகரமான வழிமுறைகளிலிருந்து உத்வேகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை ஆய்வு செய்வதன் மூலம் உண்மை, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் உள்நாட்டுத் தீர்விற்கான அடிப்படையை உருவாக்குவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் நோக்கமாகும்.

இந்தப் பொறிமுறையை வடிவமைக்கவும் மற்றும் இறுதியில் நிலையான அமைதி மற்றும் தேசிய ஒற்றுமைக்கு வழி வகுக்கக் கூடிய, குறித்த தரப்பினர்களின் பங்கேற்புடன் மற்றும் ஆலோசனையுடன் ஆணைக் குழு கட்டமைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினால் தற்போது பொது மக்களுடனும் குறித்த தரப்பினர்களின் பங்குபற்றளுடன் கூடிய நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.

Posted in Uncategorized