தென்னிலங்கை ஏற்றுக்கொண்டு தமிழருக்கு வழங்க முன்வந்த நிரந்தர அரசியல் தீர்வுதான் என்ன? அனுரகுமார திசாநாயக்கா சொல்வாரா? – சுரேந்திரன்

தென்னிலங்கை நிராகரிக்கும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கை இதுவரையும் ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு முன்வைத்த அரசியல் தீர்வுதான் என்ன என்பதற்கு அனுரகுமார திசாநாயக்கவால் பதில் கூற முடியுமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகக் குறைந்தது தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே இனப் பிரச்சினை உள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்து உடையவர்கள் என்பதையும் தங்களது கட்சியாவது ஏற்றுக்கொள்ளுமா?

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களும் அல்ல என்பதை உங்களது கட்சியின் ஸ்தாபகர் மறைந்த ரோகன விஜயவீர அவர்கள் கட்சி நிலைப்பாடாக அறிவித்தமையும் அதைத் தொடர்ந்தும் உங்களுடைய கட்சி பின்பற்றி வருவதையும் நீங்கள் அறியாமல் இல்லை.

மேலும் எமது அரசியல் தீர்வாக அமையாத 13ம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராகவும் மாகாண சபை முறைமைக்கு எதிராகவும், அது நாட்டை பிரித்து விடும் என்று தங்களது கட்சி ஆயுதமேந்தி போராடியதையும் நீங்கள் மறந்து இருக்க வாய்ப்பு இல்லை. இணைந்த வடக்கு கிழக்குக்கு எதிராக நீதிமன்றமேறி வாதாடி அதைப் பிரிப்பதற்கும் தங்களுடைய கட்சி ஆற்றிய பங்கு பெருமளவு. அதை தமிழ் மக்கள் ஒருபொழுதும் மறந்துவிடவில்லை.

தமிழ் மக்கள் இந்நாட்டின் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு இனப் பிரச்சினை உள்ளது, அது தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தென் இலங்கை அரசியல் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குத் தீர்வாக எதனை பரிந்துரைத்துள்ளார்கள் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா? அல்லது அது சம்பந்தமாக தங்களுடைய கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் எட்டியுள்ளீர்களா?

ஆகவே தங்கள் கட்சி ஆட்சி அமைத்து தென்னிலங்கையும் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என்ற கானல் நீரை தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்

 

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை – சுரேந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அது தான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும். சர்வதேச நாடுகளாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்று பட்டே இருக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட என தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளரானா குருசாமி சுரேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு  (19.02.2023)வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி-1.
உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான ரோலோ மற்றும் புளோட் திடீரென மற்றும் கட்சிகளையும் கூட்டமைத்து தேர்தலில் எவ்வாறு விரைவாக போட்டியிட முடிந்ததன் பின்னணியென்ன?

பதில்
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயலாற்றி வந்தோம். அப்படியான அனைவரையும் உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான கட்டமைப்பாக வரையறுத்து பொது சின்னத்தின் கீழ் பதிய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக அமைந்திருந்தது. இது எங்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் ஒரு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்தபொழுது, எம்மோடு ஒருமித்து செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க முடிந்தது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடமாக ஒருமித்து செயலாற்றியதன் பின்னணியே தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

கேள்வி-2
தமிழ் கட்சிகளின் ஐக்கியமின்மை தமிழர்களுக்கு பாதகமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென?

பதில்
நமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இந்த ஒற்றுமையின்மை என்பது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட. குறிப்பாக தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் தரப்புகளை ஒன்றாக இணைந்து வருமாறு நையாண்டித்தனமான கோரிக்கையை கடந்த காலங்களில் முன் வைத்தனர். இது நீடிக்குமானால் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவது சிரமமானதாகிவிடும்.

கேள்வி- 3
உங்களது கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டுடன் செல்லப் போகின்றது?

பதில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூறி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும் மக்கள் நடத்தி வந்துள்ளனர். அதற்கு செவி சாய்த்து நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்கிறோம். தேர்தல் நோக்கங்களை தாண்டி இது தமிழ் மக்களினுடைய பொது தேசிய இயக்கமாக பரிமாணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். அதை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

கேள்வி-4
அண்மையில் யாழ் வந்த இந்திய இணையமைச்சரிடம் உங்கள் கூட்டிலுள்ள கட்சி தலைவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டமைக்கு காரணம் என்ன?

பதில்
கடந்த காலங்களில் இந்திய அரசினால் உத்தியோபூர்வமாக முன்வைக்கப்பட்ட அழைப்புக்கள் தமிழ்த் தரப்பால் சரியான முறையில் கையாளப் பட்டு இருக்கவில்லை. இந்திய அரசு தமிழ் மக்களுடன் கொண்டிருக்கும் அரசியல் உறவில் சில எதிர்மறையான அதிர்வலைகளை இது ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினையில் இந்திய பங்களிப்பு மிக அவசியமானது. நமது மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். அதில் இந்தியாவினுடைய தலைமையை வலியுறுத்தியுள்ளோம். இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

கேள்வி-5
அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவித்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்
கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை. அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன. இது மாத்திரம் போதாது. மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி-6
தற்போது வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் அணியினர் சந்தித்து எவ்வாறான விடங்களை பேசுகின்றீர்கள்?

பதில்
நமது தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சர்வதேச நீதிப் பொறிமுறை, அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்கான சர்வதேசத்தின் உறுதியான ஆதரவை பெற்றுக் கொள்ளவே அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். மாறிவரும் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் தொடர்ந்தும் சர்வதேச ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் அல்லது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேச்சுப் பொருளாக அமைகிறது.

குத்துவிளக்கு சின்னத்தின் வெற்றி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கான கோரிக்கையின் வெற்றி – சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது.

13 வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் 13 வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகிவிட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்றும் தெரிவித்தார்.

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை – தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள் – ரெலோ

தீர்வு விடயங்களில் கருத்தாட சொல்ஹெய்முக்கு அருகதை இல்லை தமிழ் மக்களே அதைப் பற்றித் தீர்மானிப்பார்கள்

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் ஒரு நாட்டினுடைய பிரதிநிதியோ அல்லது ஒரு ராஜதந்திரியோ அல்ல. அவருக்கு இட்ட பணியை அவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். அதை விடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தமான விடையங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது.

இன்றைய அரசியல் சூழலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? அல்லது யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

மேலும் அவருடைய ஆலோசனையோ தலையீட்டையோ கருத்துக்களையோ தமிழ்த் தலைவர்கள் யாரும் கோரவில்லை. யுத்தம் முடிவடைந்த பின் இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் நீதி, மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்கதையாகி பல சிரமங்களை எதிர்கொண்ட பொழுது இப்போது கருத்துச் சொல்பவர்கள் எங்கு சென்றார்கள்?

ஒருமித்த நிலையில் தமிழ் தலைவர்கள் பயணிக்காமல் தனித்தோட முயற்சி செய்வதாலேயே இப்படியான கருத்துக்களை சிலர் சொல்வதும் தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடுவதுமாக வரலாறு கடந்திருக்கிறது.

காலம் காலமாக புரையோடிப் போன தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எப்படியாக முன் நகர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ளனர். ஆகவே எரிக் சொல்ஹம் அவர்கள் தன்னுடைய உத்தியோபூர்வமான பணி எதுவோ அதைச் செவ்வனே செய்யுமாறு கோருகிறோம்.

கு. சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான பொறிமுறை – அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினருக்கும் ரெலோ முன்மொழிவு

  1. இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை
  2. சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
  3. ஐநாவின் பிரதிநிதித்துவம்
  4. நிபுணர்கள் குழு உருவாக்கம்
  5. புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு
  6. தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

 

இந்தியாவின் தலைமையில் மேற்பார்வை

தமிழ் தேசிய அரசியல் தரப்பில் செயல்படும் அனைவரும் சமஸ்டி முறையான அரசியல் தீர்வே இறுதி நிலைப்பாடு என்பதை ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிடும் அம்சமாக ஒற்றையாட்சி அற்ற, தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைந்து, எமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய முற்று முழுதாக அதிகார பகிர்வோடு கூடிய அலகாக அமைய வேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளோம். அதே நேரம் அரசியல் யாப்பிலே ஏற்கனவே உள்ள அதிகாரங்களை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தி மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதிலும் ஒத்த நிலைப்பாட்டில் உள்ளோம்.

பிராந்திய வல்லரசாகவும், தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து அக்கறையோடு செயற்பட்டு வந்த அண்டை நாடாகவும், இலங்கை அரசியலிலே செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளமையாலும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இருப்பவர்களாகவும், ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பிலே அதிகாரப் பகிர்வுக்கான ஒரு ஏற்பாட்டை செய்தவர்கள் என்ற வகையிலும், தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி வருபவர்களாகவும் இருப்பதனாலே இந்தப் பேச்சுவார்த்தை இந்தியாவின் தலைமையிலான மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் பங்களிப்பு

சர்வதேச நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி மற்றும் நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து இப்பொறிமுறையில் பங்குபெற்றல் அவசியமானது. ஐநா பொதுச் சபை, பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை என்பவற்றில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டவர்களாகவும் முன் நின்று செயல்படுபவர்களாகவும், பல சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது பங்களிப்பை வழங்கியதோடு அது பற்றிய அனுபவம் உள்ளவர்களாகவும், இலங்கை அரசாங்கத்தின் மீது பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை செலுத்தக் கூடியவர்களாகவும், மற்றைய நாடுகளையும் தங்கள் பின் அணி திரட்டக் கூடிய வல்லமை கொண்டவர்களாகவும் இருப்பதானாலே இவர்கள் பங்களிப்பு அவசியமானது. குறிப்பாக பிரித்தானியா இலங்கையை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த நாடாகவும் இங்கு நிலவியிருந்த சமஸ்டி ஆட்சி முறையை ஒற்றையாட்சி முறைமைக்கு மாற்றியவர்களும் அதனால் தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் பிரதிநிதித்துவம்

ஐநாவின் பிரதிநிதித்துவம் இந்த பொறிமுறையில் அவசியமாகிறது. பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை தாண்டி தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை என்பன மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகும். மேலும் உலக நாடுகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளை ஆணைக்குழுக்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் நிபுணர் குழுவின் மூலம் தீர்த்து வைத்த அனுபவமும் வரலாற்றையும் கொண்டது ஐநா.

நிபுணர்கள் குழு உருவாக்கம்

மேற்கூறிய பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் நிபுணர்களும் ஐநாவின் நிபுணர்களும் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் யாப்பு தயாரிப்பு சம்பந்தமான நிபுணர்களும் எல்லைகள் மீள் நிர்ணயம் நிர்வாகம் மற்றும் நிதிய ஆளுமை சம்பந்தமான நிபுணர்களும் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். இந்த குழுவில் தமிழ் மக்கள் சார்பில் புலம் பெயர் உறவுகளில் இருந்து நிபுணர்களும் இடம் பெறுவர். தவிர ஆலோசனை வழங்கவும் நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவும் உருவாக்கப் பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் ஒருங்கிணைப்பு

தமிழ் தேசியத் தரப்பினரும் புலம்பெயர் உறவுகளும் ஒருமித்து, இந்த நிபுணர் குழுவினருக்கான செயல்பாட்டை உறுதி செய்யவும், ஏதுவான அரசியல் சூழ்நிலைகளை உரிய தரப்புகளுடன் இணைந்து ஏற்படுத்துவதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையிலான பங்களிப்புடனும் வழிகாட்டுதலுடனும் அரசியல் தீர்வு எட்டப்படுதல் வேண்டும். அதற்கான தொடர்ச்சியான செயல்பாடும் அவசியமாகும்.

அரசியல் தீர்வானது இந்த நிபுணர் குழுவினர்கள் வழிகாட்டுதலிலே முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்தப்படும் வரை நாங்கள் பரிந்துரைத்த பொறிமுறை செயற்பாட்டில் இருக்க வேண்டும். முற்று முழுதான அதிகார பகிர்வு முறைமையை எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி முற்றுப் பெற வைப்பது என்பதை இந்தப் பொறிமுறையின் வழிகாட்டுதலுடன் தமிழ் தலைவர்கள் ஒப்பேற்ற வேண்டும்.

தீர்வு நடைமுறைப் படுத்தும் வரையான செயல்பாடு

கடந்த காலங்களில் அதிகாரப் பகிர்வு முறைமை அரசியல் யாப்பிலே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் வெற்றுக் காகிதங்களாகவே அமைந்துள்ளன. அப்படியல்லாமல் நியாயமான அரசியல் தீர்வை எட்டுவதும் அதனூடான அதிகார பகிர்வினை உறுதி செய்து நடைமுறைப் படுத்தும் வரை இந்தப் பொறிமுறையை தொடர்ச்சியான செயல்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது. தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் விடிவை எட்டுவதற்கு அனைத்து தமிழ் தேசிய தரப்பினரும் நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அரசுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இறுதி இலக்கை எட்டும் வரைக்குமான விடயங்களை அரசியல் மாற்றங்களைத் தாண்டி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பொறிமுறையை நாங்கள் முன்மொழிந்திருக்கிறோம். தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து தரப்பினரும் இந்தப் பொறிமுறையை மேலும் செழுமைப்படுத்த உங்கள் பங்களிப்பை கோரி நிற்கிறோம். குறை குற்றம் கூறி, ஒருவர் மீது ஒருவர் சேறு வாரி வீசிக் காலத்தை வீணடிக்கும் வெட்டி விவாதங்களை தவித்துக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுகிறோம்.

உங்கள் பரிபூரண ஆதரவுடன் மேற் குறிப்பிட்ட பொறிமுறையின் உருவாக்கம், நடைமுறை, மற்றும் செயற்பாட்டை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழ் தேசிய இனத்தின் இறுதி இலக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒருமித்து பயன்படுத்துவோமாக.

குருசுவாமி சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அரசியல் தீர்வுக்கான பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஒருமிப்பது அவசியம் – ரெலோ கோரிக்கை

சமஷ்டி முறைதான் எமது அரசியல் தீர்வு என்பதில் தமிழ்த் தேசியத் தரப்பினரிடம் தெளிவும் உறுதியும் உள்ளன. ஆனால் அதை அடையும் வழியும் பொறிமுறையும் எம்மிடம் இல்லை. அதை வகுப்பது மிக அவசியம். தென்னிலங்கை தலைவர்கள் அழைக்கும் போதெல்லாம் நாம் சென்று பேசுவதால் மாத்திரம் எமது அரசியல் தீர்வு சாத்தியமாகாது. இப்படியே பயணிப்பதால் அரசியல் இலட்சியங்களை நாங்கள் அடைய முடியாது. அதை அடைவதற்கான பொறிமுறையே எமது தீர்வை சாத்தியமாக்கும்.

நிரந்தரமான அரசியல் தீர்வுக்காக தமிழர்கள் பல காலமாக வெவ்வேறு வழிகளில் போராடி வருகிறோம். மாறி வரும் அரசாங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்திருக்கிறோம். அதன்பின் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்கள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பயனளிப்பதில்லை. அல்லது இறுதிக் கட்டத்தில் குழம்பி விடுகின்றன. இதற்கு காரணமாக அரசியல் மாற்றங்களை அமைந்திருக்கின்றன. பிராந்திய அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளக அரசியலில் குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் அதே போன்று தமிழர் தரப்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்று வகைப்படுத்தலாம்.

சந்திரிகா அம்மையார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியல் தீர்வு இறுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக பாராளுமன்றம் கலைக்கப் பட்டதோடு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. முக்கியமாக சர்வதேச நாடுகள் இதற்கு ஆதரவை வழங்கியிருந்தன.

அதன் பின்னர் தமிழ் அரசியலில் பேரம் பேசும் சக்தி மெளனிக்கப் பட்டு ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் யாப்பு மாற்றத்தையே தோற்றுவித்து இறுதிச்சுற்று வரை சென்ற அரசியல் தீர்வு விடயம் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் முடிவுக்கு வராமல் போனது.

தற்போது தமிழ் தரப்பில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் பிரதிநிதித்துவ மாற்றங்கள் எமது பேரம் பேசும் பலத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. தெற்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் தீர்வுக்கான தெளிவான பாதையை திறக்கவில்லை. அதனை வலியுறுத்த எமது பலமும் போதாமல் இருந்தது.

இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை எமது அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வருவதாக தோற்றம் தருகிறது. பேச்சுவார்த்தைக்கு நம் தரப்பு தயாராகின்ற போதிலும், இதைக் கையாளும் ஒருமித்த பொறிமுறை எம்மிடம் இல்லை. பேச்சுவார்த்தைகள் தோல்வி காண்பதற்கான காரணங்களை அனுபவப் பாடங்களாகக் கொண்டு அவற்றை தவிர்க்க அல்லது எதிர்கொள்ள சரியான பொறிமுறையை நாம் ஏற்படுத்துவதே எம் இனத்துக்கு நலன் பயக்கும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றி வரும் அனைத்து கட்சிகளும் எமது அரசியல் தீர்வு சம்பந்தமான ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டுள்ளன. தீர்வின் இறுதி வடிவம், கட்டமைப்பு சமஸ்டி முறையில் தான் அமைய வேண்டும் என்பதை எல்லோரும் மாறாத நிலைப்பாடாகக் கொண்டுள்ளோம். அதே நேரம் அதற்கான விடயங்களைக் கையாள எமது அரசியல் தீர்வுக்கான நிலையான பொறிமுறையுடன் கூடிய கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.

சர்வதேச, பிராந்திய, தென்னிலங்கை, மற்றும் தமிழர் தரப்பில் ஏற்படும் அரசியல், பிரதிநிதித்துவ மாற்றங்களினால் இந்தப் பொறிமுறையின் செயற்பாடுகள் குழப்பம் அடைய மாட்டாது. மாறாக விட்ட இடத்தில் இருந்து பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு வழி அமைக்கும்.

கடந்த காலங்களில், தெற்கிலுள்ள அரசாங்கங்கள் முன்மொழியும் அல்லது அழைக்கும் தற்காலிக கட்டமைப்புகளில் நாம் கலந்து கொள்வதாக அமைந்துள்ளதே தவிர எமது இனத்தின் உறுதியான அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாம் கொண்டிராமல் இருப்பது துரதிஷ்டவசமானது. இதை நாங்கள் இப்பொழுது தீர்க்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. கூட்டமைப்புகள், கூட்டணிகள், கட்சிகள், கட்சி நிலைப்பாடுகள், கொள்கைகள், தேர்தல் நோக்கங்கள் என்பவற்றைத் தாண்டி இந்த பொறிமுறையை வகுத்து, உருவாக்கி, செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவது காலத்தின் தேவை.

எமது இனத்தின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும், தரப்புகளினதும் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் -நிமல் சிரிபால டீ சில்வாவுக்கு ரெலோ பதில்

பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் இணைந்தால்தான் ரணில் அரசுடன் திறந்த மனதுடன் பேசி தீர்வு காண முடியும் என்று அண்மையில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் கு. சுரேந்திரன் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சிங்கள கட்சிகளே ஒரணியில் வரவேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலம் பதில் அளித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படாமல் இருப்பதற்கு பிரதான காரணம் சிங்கள கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே. இதை தமிழ் மக்களுக்கு பாடம் எடுக்க முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் பாராளுமன்றங்களில் முன்வைக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்தவர்கள் யார் என்ற வரலாற்றை இந்த நாடே அறியும். பல தசாப்தங்களாக ஆளும் கட்சிகள் ஒரு தீர்வை கொண்டு வருகின்ற பொழுது சிங்கள எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.

எதிர்க் கட்சிகள் தமிழர்களுக்கான தீர்வுக்கு ஆதரவு தெரிவிக்கின்ற பொழுது ஆளும் கட்சிக்குள் இரண்டாகப் பிரிந்து நின்று அதை எதிர்ப்பார்கள். தமிழ் மக்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் இலங்கை அரசியலில் பிரதானியாக, தலைவராக, அமைச்சராக பதவியில் இருந்த பொழுது நடைபெற்ற விடயங்களே அதற்கு சான்றாக அமையும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசு காலத்தில் தமிழ் மக்களால் ஏகோபித்துத் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஜனாதிபதி இறுதி வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலே தவிர்த்து வந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவராக அமைச்சராகப் பதவியில் இருந்தவரே நிமல் சிரிபால டி சில்வா.

அதேபோன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடங்கியதாக ஒரு புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படுவதாக இருந்தது. அந்த நேரத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையை சிதைத்து அரசியல் யாப்பு நிறைவேறாமல் குழப்பம் விளைவித்தது சிங்கள கட்சிகளே, தமிழர்கள் அல்ல என்பதையும் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். அப்போதும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்தரப்பில் மூத்த அமைச்சராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய அதிகாரங்களை முற்று முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு கூட சிங்களத் கட்சிகள் ஒற்றுமையாக முன் வருவார்களா? அதில் கூட தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பிரிந்து நின்று குரல் கொடுப்பவர்கள் சிங்கள கட்சிகளே.

இன்னும் வரலாற்றில் சிறது தூரம் பின் சென்றால் 1987ல் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அப்பொழுது ஆளும்கட்சியில் இருக்கும் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியோடு சேர்ந்து நின்று எதிர்த்தார்கள். அது தமிழர்களுக்கான தீர்வு அல்ல. ஆனால் குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழர்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் தான் சிங்களக் கட்சிகள் குறியாக இருந்தன.

ஆக குறைந்தது உங்களோடு இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளையாவது நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா என்றால் அதுவும் இல்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமக்ஷ்டி முறையில் அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளோம். அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான அழைப்பு எந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டாலும் சமக்ஷ்டி முறையிலான தீர்வையே தமிழ் மக்களின் அனைத்து தரப்பினரும் அரசியல் தீர்வாக முன்வைத்திருப்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நிறைவேற்றுவதற்கு சிங்கள கட்சிகளை ஓர் அணியில் வருவதே பிரதானம். ஆகவே அவர்களை ஒரணியில் வருமாறு கோரிக்கை முன்வைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.