ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமனம்

ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்நியமிக்கப்பட்டுள்ளார்,

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) தனது 11 மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்து வருகின்றது அதற்கு அமைவாக யாழ் மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் யாழ் நகரப்பகுதியில் நடைபெற்றது

இன் நிகழ்வில் யாழ்மாவட்ட உறுப்பினர்கள் ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கருணாகரம் (ஐனா) ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

நிர்வாகத் தெரிவில் யாழ் மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவு செய்யப்பட்டார் அத்துடன் துணை மாவட்ட அமைப்பாளராக முன்னாள் யாழ் மாநகர துணை மேயர் து. ஈசன் தெரிவாகியதுடன் 37 பொதுக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் ஒரு அழகான காகித பூ போன்றது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது  பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக நடைமுறைக்கு வருமா போன்ற பல்வேறு கேள்விகள் எங்கள் மத்தியில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (17) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை பொருத்த மட்டில் வரவு செலவு திட்டம் என்பது இப்போது வாசிக்கப்பட்டிருக்கிறது அதிலே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் அரச ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு ஒட்டுமொத்தமாக  எல்லாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்த முக்கியமான விடயம் மாகாண சபைகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு மிகச் சிறந்த  தீர்மானம். ஆனால் இது ஒரு காகித பூவாகத்தான் நான் பார்கின்றேன்.

ஏன் என்றால்  பொருளாதார ரீதியிலே பின்தங்கி இருக்கிற ஒரு நாட்டிலே இந்த பத்தாயிரம் கொடுப்பனவு என்பதை பார்க்கின்ற போது வரி விதிப்பு என்பது ஜனவரி மாதமே வர இருக்கிறது ஆகவே அவர்களுடைய சம்பள உயர்வு என்பது நான் நினைக்கின்றேன் மார்ச் மாதத்துக்கு பின்னரே கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே இந்த வரியை கட்டுவதற்கு இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை மாகாண சபைகளுக்களுக்கு  பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அதிகாரம் தொடர்பில்  சொல்லப்பட்டிருக்கின்றது.

காணாமல் போன உறவுகளுக்கு  கொடுக்கின்ற தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று அன்றைக்கு ஜனாதிபதி வாசித்தார் என்னை பொருத்தமட்டிலே அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் அந்த மக்கள்   போரிலே தங்களுடைய உறவுகளை கண்முன்னாலே ஒப்படைத்து நியாயம் கேட்கின்ற,பல வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கின்ற மக்களாக இருக்கிறார்கள்.

அந்த மக்களின் பிரச்சினைகளை நிவாரணத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது  ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே சலுகைகள் என்பது என்னும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாற்கான வாய்ப்புகள் என்னை பொருத்தவரை குறைவாக தான் இருக்கின்றது.

அந்தந்த நேரத்திலே வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது முக்கியமாக விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு மக்களுக்கு இன்னும் அரசு ஊழியர்களுக்கு இப்படியான சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் நாங்கள் அதை வரவேற்க முடியும்.

அது நடைமுறைபடுத்தும் வரையில் எங்களா கருத்துக்கள் தெரிவிக்க முடியாது இருப்பினும் என்னை பொருத்தவரையில் இந்த வரவு செலவு திட்டம் என்பது என்னை   பார்வைக்கு நன்றாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அது எங்கள் மக்களை சென்றடையுமா அல்லது இந்த பத்தாயிரம் வரிகட்டுவதற்கே சரியாகிவிடுமா என்ற கேள்விகள் இருப்பதாகவும் மொத்ததில் இந்த பட்ஜட் ஒரு அழகான காகித பூ மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு மிட்டாய் போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத பல்கலைக்கழகம் காட்டுகிறார் ரணில் – சபா குகதாஸ்

2024 ஆண்டுக்கான 78 வது பாதீட்டில் வடக்கு , கிழக்கு மாகாணசபைகளுக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணசபை அதிகாரங்களுடன் அமைப்பதற்கான முன் மொழிவு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. வேடிக்கை என்னவென்றால் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பகிர்வதற்கான கோரிக்கைகளை பல தடவை தமிழர் தரப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் முன் வைத்தும் ஏமாற்றி வரும் சம நேரம் குழந்தைகளுக்கு மிட்டாய் காட்டுவது போல தமிழர்களுக்கு அதிகாரம் இல்லாத மாகாணசபைக்குள் பல்கலைக்கழகம் கொண்டுவருவதாக மிட்டாய் காட்டுகிறார் இதற்கு இனவாதி சரத் வீரசேகர கொம்புக்கு மண் எடுப்பது போல இனவாதத்தை தூண்டி தன்னுடைய அரசியலை நடத்துகின்றார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் தமிழர்கள் சார்ந்து கொண்டுவரப்பட்ட பல முன்மொழிவுகள் கடதாசிகளில் மட்டுமே இருந்தன நடைமுறைப்படுத்தப்பட

வில்லை அதே போன்று இம்முறையும் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்குவதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயற்பாடாகும் உண்மையாக முதலாவது பொறுப்புக் கூறலின் ஊாடாக பக்க சார்பற்ற சுயாதீன விசாரணை அதன் பின்னர் தான் பரிகார நீதி இவ்வாறான ஒழங்கு முறை மூலமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் இதுவே பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையும் ஆகும்.

கடற்தொழில் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு என்பது மிகப் பெரும் ஏமாற்று காரணம் வடக்கு கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர் நோக்கும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் கடல் அட்டைப் பண்ணை விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு ஐனாதிபதி இதுவரை அவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்காமல் பிரச்சினைகளை கண்டும் காணாதவர் போல இருந்து கொண்டு கடல்வள அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்வது வேடிக்கையாக உள்ளது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது – செல்வம் எம்.பி. கடும் எதிர்ப்பு

சீனாவைப் பொருத்த வரையில் இலங்கையிலே ஒரு பொது நல நோக்கோடு அவர்களின் செயற்பாடுகள் இடம் பெறுவது இல்லை. மாறாக தங்களுடைய இலாபத்தை கருத்தில் கொண்டே சீனா செயற்படுகின்றது எனவும் வடக்கிலோ கிழக்கிலோ சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க கூடாது எனவும் அதை நாங்கள் எதிர்போம் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு இன்று வெள்ளிக்கிழமை (10) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையிலே அபிவிருத்தி என்ற போர்வையிலே சீனாவினால் வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய இலாபம் கருதியே இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.

அதேபோல் போர்ட் சிட்டியும் சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக போர்ட் சிட்டியை வைத்துக் கொண்டது. அதேநேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி விகிதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது.

அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாத நிலையில் இருக்கிறோம். இப்பொழுது சீனா மீண்டும் வடக்குக் கிழக்கிலே குறிப்பாக வடக்கை தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது.

எப்படி என்று சொன்னால் இங்கே தன்னுடைய லாபம் கருதி எண்ணெய் விடயங்களை கையாள முடியுமோ அதை கையாளுகின்ற வகையிலே இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது. சீனாவினுடைய தூதுவர் வடக்கிலே பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றர். அதேநேரம் மீனவர்களுக்கு மீன் வலைகளையும் வழங்குகின்றார்.

ஆகவே சீனா நினைப்பது என்ன வென்றால் மீனவர்களை தன்னகத்தே கொண்டு வந்தால் வடக்கில் உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு வடக்கில் உள்ள முழுமையான நிலங்களையும் அபகரிக்கின்ற நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.

எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

இந்தியாவுக்கும் எங்களுக்கும் மீனவர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவை விட்டு நாங்கள் வேறு நாட்டின் பக்கம் நிற்கின்ற வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது.

ஏனென்றால் எங்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியா தான் முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் இருக்கின்றது.

அந்த வகையிலே நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள் முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த விடயத்திலே சீனா தூதுவரின் வருகை வடக்கிலே எங்களுடைய மீனவ பகுதிகளில் இருக்கின்ற செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே எனவே அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பது என்னுடைய கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை அணியா? அல்லது சிங்கள அணியா? – வினோ எம்.பி சபையில் கேள்வி

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்குள் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் இது இலங்கை அணி அல்ல எனவும் இது ஒரு சிங்கள அணி என்ற நிலமை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இருந்து வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு இலங்கைக்குள்லேயே போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் வன்னி மாவட்டத்திலே கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் சபையிலே வாக்களிக்கின்ற உரிமை மறுக்கப்பட்டவர்களாக குறித்த மாவட்ட சம்மேளனங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற சமயத்தில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காகா நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டிந்தார்.

இந்நிலையில் இல்லாத ஒரு தேர்தலுக்கு எதற்காக தேர்தல் திருத்தச்சட்டங்கள் எனவும் வினோ நோகதாரலிங்கம் எம்.பி கேள்வியெழுப்பியிருந்தார்.

நிகழ்நிலை காப்புச்சட்டம் நிறைவேறினால் அனைவரும் சாப்பிட மட்டுமே வாய் திறக்க முடியும் – சபா குகதாஸ் எச்சரிக்கை

நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் கொடுத்த கட்டளையை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் சபை முதல்வர் அதன் அடிப்படையில் உத்தேச நிகழ் நிலை காப்புச் சட்டத்தில் காணப்படும் பல சரத்துக்கள் எவ்வாறு அரசியலமைப்புக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றும் அவ்வாறு முடியாவிட்டால் நீதிமன்றம் குறிப்பிட்ட விடையங்களை மாற்றியமைத்து சாதாரண பெரும்பாண்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

தற்போதைய அரசாங்கம் தமக்கு எதிரான மக்களின் கருத்துக்களை மற்றும் மக்கள் போராட்டங்களை கண்டு மிக அஞ்சுகின்றது காரணம் அடுத்து வர இருக்கும் தேர்தலை இலக்காக கொண்டு ஆட்சி தொடர்பாக சாதாரண பெரும்பாண்மை மக்களுக்கு சமூக ஊடகங்களினால் உடனுக்குடன் அரசாங்கததின் பலவீனங்கள் வெளிக் கொண்டு வரப்படுகின்றன இதனால் தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால் சமூகவலைத் தளங்களை அடக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவருகின்றனர்.

இது ஊடக அடக்குமுறைக்கு அப்பால் மக்களின் ஜனநாயக குரல் வளையை நசுக்கி அரச சர்வாதிகாரத்தை மேலோங்கச் செய்யும்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேறினால் நாட்டு மக்களும் சரி ஆளும் கட்சி தவிர்ந்த எதிர்க்கட்சிகள் அனைவரும் சாப்பிடுவதற்கு மட்டுமே வாயை திறக்கவும் கையை அசைக்கவும் முடியும் மாறாக அரசின் தவறுகளை விமர்சித்தால் சிறைச் தண்டனையுடன் கூடிய சொத்துக்களை பறி கொடுத்தல் மற்றும் தண்டப்பணம் சொலுத்துதல் போன்றவற்றை எதிர் கொள்ள நேரிடும்.

இலங்கைத் தீவு ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பெயரில் மக்களின் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்தை அடக்கும் கொடூர சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றுவதை தடுக்க மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

பெரும்பான்மை சிங்கள மக்களை விட ஏனைய இனங்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு பாரிய ஆபத்து காத்திருக்கின்றது தமிழர்களின் தாயகத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஆயுதங்கள் இல்லாமல் இனத்தின் இருப்பை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்கும் நிலையையும் இழக்கும் அபாயம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இன அழிப்பு என இலங்கை அரசு ஒப்புதல் வாக்குமூலம் – சபையில் ஜனா எம்.பி

ஹாசாவில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? என ஜனாதிபதி அண்மையில் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடகிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்குலக்கு அன்று நாம் செய்தவற்றைக் கண்டிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள கடல் வளம் உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாதது. எமது கடற் பரப்பு கடல் வாழ் உயிரினங்கள் வளர்வதற்கேற்ற தட்ப வெப்ப சூழ்நிலை கொண்டது. எமது கடற்கரையைச் சுற்றி கடல்வாழ் உயிரினம் வாழ்வதற்கேற்ற கண்ட மேடையும் உள்ளது. கடல் சூழ்ந்த நாடுகள் அனைத்திலுமே இத்தகைய ஒரு பௌதீகச் சூழல் இருப்பதில்லை. உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாத நன்னீர் வளமும் எமது நாட்டுக்குக் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாகும். இவ் வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா? இவ் வளங்களின் பயன்பாடு மூலம் எமது நாடு வளம் பெறுகிறதா? என்று எம்மை நாமே வினாவினால் வருகின்ற விடை பூச்சியமே.

இந்த வளம் மாத்திரமல்ல இது போன்ற எல்லா வளமும் நிரம்பிய நாடு எமது நாடு விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால் நெல் உற்பத்தியில் தன்நிறைவு கண்ட நாடு. இதற்கு முதல் கால்கோளிட்டவன் குளம் தொட்டு வளம் பெருக்கிய பராக்கிரமபாகு மன்னன். ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை எமக்கு, பண்ணை விவசாயம் செய்து விலங்கு வேளாண்மையில் தன்நிறைவு காணவேண்டிய நாம் இன்று விலங்கு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய அவலம். முட்டையைக் கூட அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய பரிதாபம் எமக்கு. இவை யாவற்றுக்கும் காரணம் என்ன? ஊழலும் மக்கள் நலன் கருதாத அரசுமே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Fisheries and Aquatic Resources Act Ni ik 1996 சட்டம் அதற்குக் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் துறைசார் அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி வெளியீடுகள் துறைசார் அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம் இதுவரை நாம் அடைந்த பயன் என்ன என்ற கேள்விக்குறியோடு இன்று இச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தமும் ஏதேனும் பயனை எமது நாட்டுக்கும் மக்களுக்கும் தந்துவிடுமா.? அவ்வாறு அத்தகைய சட்டங்கள் மூலம் எம் மக்கள் உரிய பயன் பெறுவதற்குரிய இயலுமையை இந்த அமைச்சும் இந்த அரசாங்கமும் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எனக்கு இன்னும் உள்ளது. எனது சிந்தனை எதிர்மறையாக உள்ளது என யாரும் நினைக்க வேண்டாம். எமது நாட்டின் கடந்த கால அனுபவம் என்னை அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

அங்கு இங்கு எங்கும் போக வேண்டாம். ஆகக் குறைந்தது எமது அண்மையிலிருக்கும் மாலைதீவிலிருந்து இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஏன் பாடங்களைக் கற்றுக் கொள்ளக்கூடாது. குறைந்த பட்சம் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளையாவது, நன்னீர் வளங்களையாவது வட கிழக்கு மக்கள் முறையாகப் பயன்படுத்த அனுமதித்தால் கூட நாட்டின் முழுத் தேவையை இல்லாவிட்டாலும் இவ்வளங்கள் தொடர்பான முக்கால் வாசித் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய தைரியமும் மனத்திடமும் இயலுமையும் வட கிழக்கு மக்களிடமுண்டு. ஆனால் இவை தொடர்பான வட கிழக்கு வளங்கள் யாவும் தென்னிலங்கையாலும் அயல் நாடுகளாலும் கபளீகரம் செய்யப்படுகிறது. இதற்குரிய நிவாரணங்களை எம் மக்கள் எமது அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கமைவாக எடுத்துக்காட்டினால் அவர்கள் பயங்கரவாதிகள், அவர்கள் பிரிவினைவாதிகள் எனக் கருதுவதே எமது நாட்டின் வரலாறு. இதற்கான தண்டனைகளை அனுபவிப்பதே எமது வட கிழக்கு மக்களின் தலைவிதி.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இதற்கான நல்லதொரு உதாரணம் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாததும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களினதும் மாறி மாறிப் பதவியிலிருந்த அரச உயர் அதிகாரிகளினதும் மறைமுக ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் அளவீடு செய்து வர்த்தமானி மூலம் மயிலத்தமடு – மாதவணையில் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு இன்று நடைபெறும் சம்பவங்கள் தகுந்த உதாரணங்களாகும்.

எமது மாவட்ட மக்கள் இந் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பதற்கு இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். பண்ணை உற்பத்தியில் பாரிய பங்களிப்பினை நல்குவதற்கும் இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். தசாப்தங்களுக்கு மேலாக இம் மேய்ச்சல் தரையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கா நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் அனைவரும் இணைந்து எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களோடு உயர் மட்டப் பேச்சுகளை அண்மையில் நடத்தினர்.

எமது ஜனாதிபதியும் இது தொடர்பாக எமது மக்களுக்குச் சாதகமான பதிலைக் கூறியதாக ஓரளவுக்கு மகிழ்ந்தோம் என்பது உண்மைதான். ஆனால், இவ்வளவும் நடந்த பின்னரும் எங்கிருந்தோ கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வந்த முன்னாள் ஆளுநரும் மட்;டக்களப்பு அடாவடிப் பிக்குவும் புத்தர் சிலை வைத்து எம் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள். இந்த விபரம் தற்போது ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அறிகின்றேன்.

கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எமது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இது ஒன்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியோ, அல்லது அறகலய போன்ற ஆட்சியாளர்களை விரட்டும் போராட்டமோ அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி அவர்கள் பயணிக்கும் போது வீதியின் இரு மருங்கிலுமிருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்தனர். இதற்காக ஜனாதிபதி தனது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை அங்கு எழவில்லை. ஆனால், அன்று நடந்தது என்ன? ஜனாதிபதி தனது பயணப் பாதையை மாற்றினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இன்று நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர். இதில் இன்னும் ஓர் விநோதம் என்னவென்றால் அன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத பல தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் எதிராக இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்து தமது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பாரிய பொறுப்பை எமது பொலிஸ் படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

நான் மேலும் கூறுவதென்னவென்னால் வட கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட சில மாதங்கள் தெரியும். அம் மாதங்களில் குறிப்பிட்ட சில திகதிகளும் தெரியும். வட கிழக்கில் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், குறிப்பிட்ட சில சமூக ஆர்வலர்களது பெயர்களையும் பட்டியலோடு வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் அந்த மாதங்களை அந்தத் திகதிகளை மறந்தாலும் எமது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும் பொலிசார் அந்த மாதங்களை, திகதிகளை ஞாபகப்படுத்திவிடுவார்கள். இதற்காக முன்கூட்டியே கலந்து கொள்ள நினைக்காதவர்களின் பெயரிலும் கூட தடையுத்தரவினைப் பெற்றுவிடுவார்கள். எனக்குக் கூட இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீதிமன்றத் தடையுத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வொன்றில் பங்குபற்றியதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் எனக்கு எவ்வித நீதிமன்றத் தடையுத்தரவும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும் என்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவேயுள்ளேன்.

ஆயுதப் போராளியாக இருந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்த பின்னர் எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஏன், பாராளுமன்றத்தில் கூட எனது கருத்துக்களை, எனது முரண்பாடுகளை, எனது எதிர்ப்புக்களை சட்டரீதியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் என் மீதும் எமது மக்கள் மீதும், சட்ட முரணாகவே நடந்து கொள்கின்றனர்.

56 இனக்கலவரம், 77 இனக்கலவரம், 83 இனக்கலவரங்களின் போதெல்லாம் வெளிப்படுத்தப்படாத இன, மத முரண்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக பகிரங்க வெளியில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை வெட்டி, வெட்டிக் கொல்வேனென்று கருத்து வெளியிட்ட போது, அவர் பொலிசாருடன் மோதும் போது, அவர்களின் சீருடையை பிடித்து அசிங்கப்படுத்தும் போது, அவர்களுடைய தொப்பியைக் கழற்றி வீசும் போது, அதனை அமைதியாக ஏற்றுக் கொண்ட பொலிசார் எமது அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் முதலாம் உப பிரிவு வழங்கிய சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ளனர். இப்படியொரு செயற்பாட்டை ஒரு இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு, ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் இதே மௌனத்தை எமது பொலிசார் கடைப்பிடிப்பார்களா?

இதேவேளை, மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்காக இடம்பெறும் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து அகிம்சை ரீதியாக போராட்டமொன்றை நடத்தினார்கள். ஆனால், இந்தப் பிக்கு செய்யும் அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களை சிறைப்பிடித்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைக்கின்ற கைங்கரியத்தினையே செய்துள்ளனர். இவ்வாறாயின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு இந்த நாட்டில் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

எமது நாட்டை இன்று ஆள்வது யார்? ஆளும் கட்சிக்கே தாம் தான் ஆளும்கட்சியென்று புரியாத அவல நிலை. இன்று நம் நாட்டின் ஜனாதிபதியை விரட்டுவோம், வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கோசமிட்ட காலம் போய் ஆளும் கட்சியினரே இவ்வாறு கோசமெழுப்புவது சாதாரணமாகியுள்ளது.

எமது ஜனாதிபதி அவர்கள் ஒரிரு நாட்களின் முன் மேற்குலக நாடுகளுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை போன்றவற்றுக்கு மேற்குலக நாடுகள் வரும் போது பரிசுத்தமான கரங்களுடன் வரவேண்டுமென்றுரைத்தார். எமது ஜனாதிபதி அவர்களது புலமை, திறமை தொடர்பாக எனக்கு மதிப்புண்டு. ஆனால், இந்தக் கருத்தினை வெளியிடும் போது அவர் மறைமுகமாக எமது நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையினையும், இனச் சுத்திகரிப்பினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று கருதக் கூடியதாக இருக்கின்றது. ஹாசா யுத்தத்தில் இஸ்ரேல் நடத்தும் மனாதாபிமானமற்ற மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவினை நல்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? எனக் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடக்கு கிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் நீங்கள் அன்று நாம் செய்த செயலை கண்டிப்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என குறிப்பிடுவதன் மூலம் இஸ்ரேலும் நாமும் ஒன்றையே செய்தோம் என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

எமது நாட்டில் சட்டங்கள் ஆக்கப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பாராட்டப்பட வேண்டிய விடயங்களே இவை. ஆனால், இவை மட்டும் போதாது. இயற்றப்படும், திருத்தப்படும் சட்டங்கள் இன, மத, மொழி பேதமின்றி பிரதேச வேறுபாடுகளின்றி அரசாங்கப் பிரமுகர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் என்ற வேறுபாடுகளின்றி பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் என்று வேறுபாடின்றி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதான, சகவாழ்வுக்கும் சவாலாக இருக்கும் அனைவர் மீதும் சட்டம் சமமாக பிரயோகிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே எம் நாட்டில் சட்ட ஆட்சி நிலவும் இல்லையெனில் இன்றைய நிலைமை ஒரு தொடர்கதையாகவே முடியும். இது இன்று சமர்ப்பிக்கப்படும் கடற்றொழில் சட்டமூலத்துக்கும் பொருத்தமாகும்.

இன்றைய தேவை கருதி ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த உயரிய சபையின் கவனத்தின் பால் ஈர்க்க விளைகின்றேன். எமது நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் நினைக்க முடியாத அளவுக்கு உயர்வடைந்து வருகின்றது. மக்கள் வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணுவதே சிரமம் என்னும் நிலை இன்னும் ஓரிரு நாட்களில் ஏற்படினும் ஆச்சரியமில்லை. உயர் வருமானம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், நிபுணத்துவ உத்தியோகத்தர்கள், தொழில் சார் வல்லுனர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்கள். சாதாரண மக்கள் மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றை பாவிக்க முடியாத அளவுக்கு இவற்றின் விலையேற்றம் உள்ளது.

ஓன்றிணைந்த தொழிற் சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாவது தேவை என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போதுமானதென நியாயமாகச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், இதையாவது அரச ஊழியர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற முறையான நிதி நிருவாக முகாமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். அரச உயர் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் முற்றாக இல்லாமலாக்கப்படவேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருட்கள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் இருந்த விலைகளை நாம் அறிவோம் அரச ஊழியர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சம்பளத்தையே தற்போதும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது விலைவாசிகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றது. உண்மையிலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்று மடங்கு உயர்வினைக் கேட்க வேண்டிய நிலையில் வெறுமனே இருபதாயிரம் சம்பள உயர்;வையே கேட்கின்றார்கள். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக அந்த இறக்குமதியாளர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய கூற்று எமது நாட்டில் ஊழல் இன்னமும் எந்த அளவுக்கு வேரோடி உள்ளது என்பதற்கு தக்க உதாரணமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு எமது மக்களின் எதிர்கால வாழ்வின் சுபீட்சத்துக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் வழி வகுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்- சபா குகதாஸ் தெரிவிப்பு

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆனால் ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது.

ரணிலின் எதேத்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை  தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடையம்.

அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலனமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. இதனால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார்.

அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். அண்மையில் ஐேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றார் ஐனாதிபதி.

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.

தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர்.

இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார். பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார். உண்மையில் அரசியல் அமைப்பில் உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஐனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.

நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது.

இதற்கு காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும்  நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும். மீறினால் சிறைதான்.

அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள்  மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என்றார்.

அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலைக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும் – சபா குகதாஸ் தெரிவிப்பு

நாட்டின் மொத்த சனத்தொகையில் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அவர்களது சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள் வலுப் பெறுகின்ற சம நேரத்தில் நாட்டில் சகல அடிப்படைப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கின்றன இவ்வாறான விலை அதிகரிப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ்தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பள உயர்வுக் கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஊதியம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கான குறைநிரப்பு செயற்பாட்டை அடிப்படை பொருட்களின் விலை உயர்வு மூலமே அரசாங்கம் பெற முயற்சிக்கின்றது அத்துடன் அதிகரித்த சம்பளத்தை உடனடியாக பொருட்களின் விலை உயர்வு மூலம் பறித்தெடுக்கின்றது அரசாங்கம்.

அரசாங்கம் வருமான மார்க்கங்கள்  யாவற்றையும் இழந்து அன்னியச் செலாவணியை பெறமுடியாத சூழ்நிலையில்  இருக்கின்ற போது சம்பள உயர்வு கோருவதால் அரசாங்கமே தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்  கொள்வதற்காக விலை உயர்வை கையில் எடுக்கின்றது.

சம்பள உயர்வு கோரல் மூலம் மேற் கொள்ளப்படும் விலை உயர்வு   அரச ஊழியர்களை மாத்திரமல்ல நாட்டின் ஏனைய இரண்டு கோடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மிகக் கொடூரமாக பாதிக்கும் இதனால் சம்பள உயர்வுக்கான போராட்டங்களை விட பொருட்களுக்கான நிர்ணய விலை கோரிய போராட்டங்கள் வலுப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் .

மேலும் அடிப்படைப் பொருட்களின் நிர்ணய விலையே பெரும் எண்ணிக்கையில் வாழும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்திற்கு  ஆதாரமாக இருக்கும் எனவே அரசாங்கம் அடிப்படைப் பொருட்களின் விலைகளை நிர்ணய முறையில் பேண வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வட இலங்கையிலும் பரவலடைய வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான நீதவான்கள் 22 பேர் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பியால் நியமனம்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா அவர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 பேருக்கு முதற்கட்டமாக சமாதான நீதவான் பதவி நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற இச் சமாதான நீதவான் பதவியானது கோ.கருணாகரம் ஜனா அவர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட சிலரில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டவர்களுக்கான நியமனத்தினை இன்றைய தினம் அவர் வழங்கி வைத்தார்.

இதன்போது பா.உ ஜனா கருத்துத் தெரிவிக்கையில்,

பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தற்போது உங்களுக்கு இந்த நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை மக்களைக் கருத்திற்கொண்டு சேவையாற்ற வேண்டும். இதனை வருமானம் ஈட்டும் செயற்பாடாகக் கருதாமல் மக்களின் குறைகளை நிவர்த்திக்கக் கூடியவாறு செயற்பட வேண்டும். இதன் கௌரவத்தினைப் பாதிக்காத வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.