கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தரின் தோல்வி ? – நிலாந்தன்.

கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சிகளை சாணக்கியன் ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்திருக்கிறார்.ஏற்கனவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வாறு அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார்கள். இது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் ஒன்றாக குடும்பம் நடத்திய பின் கணவன் மனைவியின் நடத்தையையும்,மனைவி கணவனின் நடத்தையையும் விமர்சிப்பதற்கு ஒப்பானது.தமிழரசியல் எவ்வளவு கேவலமாக போய்விட்டது?

ஒட்டுக்குழு என்ற வார்த்தை தியாகி எதிர் துரோகி என்ற அரசியல் வாய்ப்பாட்டிற்குள் காணப்படும் ஒரு வார்த்தைதான். போர்க்காலங்களில் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கிய பரா மிலிட்டரிக் குழுக்கள் அவ்வாறு ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்பட்டன. அதாவது அரசாங்கத்தோடு சேர்ந்து தமது சொந்த மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்ற பொருள்பட.

அப்படிப் பார்த்தால் இப்பொழுது தமது அரசியல் எதிரிகளை ஒட்டுக் குழுக்கள் என்று அழைப்பதனை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்கள் அரசாங்கத்தோடு நிற்கிறார்கள் என்ற பொருளிலா? கஜேந்திரகுமார் ஒரு படி மேலே சென்று அவர்களை இந்தியாவின் ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கிறார். இவ்வாறு மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைக்கும் தகுதிகளை இவர்கள் எப்பொழுது பெற்றார்கள்? எங்கிருந்து பெற்றார்கள்?குறிப்பாக சாணக்கியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வர முன்பு எங்கே நின்றார் ?யாரோடு நின்றார் ?எப்படி அவர் தமிழரசு கட்சிக்குள் வந்தார்? இப்பொழுது மற்றவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று கூறும் இவர்கள் எப்பொழுது தங்களை தியாகிகள் என்று நிரூபித்தார்கள்?

கடந்த 13 ஆண்டுகளாக நினைவு கூர்தலில் துணிச்சலான சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததைத் தவிர, நாடாளுமன்றத்தில் வீரமாகப் பேசியதைத் தவிர எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த ஒரு தியாகமும் செய்திருக்கவில்லையே? குறைந்தது தங்களுக்கு நாடாளுமன்றத்தில் கிடைக்கும் சலுகைகளைக்கூடத் துறக்கவில்லை. மற்றவர்களைத் துரோகிகள் என்று அழைப்பதால் யாரும் தியாகிகள் ஆகிவிட முடியாது. அவரவர் தாங்கள் தங்களுடைய சொந்த தியாகங்களின் மூலந்தான் தங்களை தியாகிகளாகக் கட்டியெழுப்பலாம். ஆனால் கடந்த 13 ஆண்டு கால அரசியலானது ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இப்பொழுதும் தியாகி – துரோகி என்ற வகைப் பிரிப்புக்குள் சிக்கப் போகின்றதா?

ஆயுதப் போராட்டத்தில் ஒருவர் தன்னைத் தியாகி என்று நிரூபிப்பதற்கு ஆகக்கூடியபட்ஷ வாய்ப்புக்கள் இருக்கும்.ஆனால் ஒரு மிதவாத அரசியலில் அப்படியல்ல. இரண்டுமே இருவேறு ஒழுக்கங்கள். மிதவாத அரசியலில் ஒருவர் தன்னை தியாகி என்று நிரூபிப்பதற்கு காலம் எடுக்கும். கடந்த 13 ஆண்டுகளில் தமிழ் அரசியலில் யாருமே தங்களை தியாகிகள் என்று நிரூபித்திருக்கவில்லை. எனவே மற்றவர்களைத் துரோகிகள் என்று கூறுவதற்கு யாருக்குமே தகுதி கிடையாது.

தனது முன்னாள் பங்காளிகளை நோக்கி தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது ஒருபுறம் அவர்கள் தமது எதிரிகளைக் குறித்து பதட்டமடைவதையும் அது காட்டுகிறது. இன்னொரு புறம் இனி வரக்கூடிய தேர்தல் அரங்குகளில் பிரச்சார உத்திகள் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு இறங்கப் போகின்றன என்பதனையும் அவை கட்டியம் கூறுகின்றன.

தமிழ் மக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள். எனவே எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும். எல்லாருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு.ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டம் கடந்த காலத்தை கிண்ட வெளிக்கிட்டால், பெருமளவுக்குப் புதைமேடுகளைத்தான் கிண்ட வேண்டியிருக்கும். இறந்த காலத்தின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைக் குற்றம் சாட்ட முற்பட்டால் புதை மேடுகளைத்தான் கிண்டவேண்டியிருக்கும். தமிழ் மக்கள் இறந்த காலத்தின் புதை மேடுகளைக் கிண்டினால் பிணமும் நிணமும் எலும்புக் கூடுகளும்தான் வெளியே வரும்.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை. அது முன்னைய மிதவாத அரசியலின் தோல்வியில் இருந்தே பிறந்தது.இன்னும் கூராகச் சொன்னால் மிதவாத அரசியலின் மீது தமிழ் இளையோருக்கு ஏற்பட்ட விரக்தி சலிப்பு ஏமாற்றம் என்பவற்றின் விளைவே ஆயுதப்போராட்டம் எனலாம். அவ்வாறு இளையோரை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தூண்டியதில் தமிழ் மிதவாதிகளுக்கு பெரிய பங்கு உண்டு.நமது தேர்தல் தோல்விகளின் போதெல்லாம் தீவிர அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதன்மூலம் தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க முற்றுபட்பட்டிருக்கிறது. இம்முறையும் அதைத்தான் தமிழரசு கட்சி பேச்சுவார்த்தை அரங்கில் செய்து கொண்டிருக்கிறது. தீவிர எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தான் இழந்த தமது வாக்கு வங்கியை மீளப் பெறலாம் என்று தமிழரசு கட்சி நம்புகின்றது.

இவ்வாறு தமது தேர்தல் தோல்விகளின் பின் தமிழரசு கட்சியும் ஏனைய தமிழ் மிதவாத கட்சிகளும் தீவிர நிலைப்பாடுகளை எடுத்ததன.அதன் விளைவாக அவர்கள் இளையோரை வன்முறைகளை நோக்கித் தூண்டி விட்டார்கள். இளம் தலைமுறையின் கோபத்தையும் ஆவேசத்தையும் விரக்தியையும் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக முதலில் தூண்டி விட்டார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ஆயுதப் போராட்ட அரசியலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஒரு தமிழ் மிதவாதக் கட்சியும் கூற முடியாது.

தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும், இளையோரின் கோபத்தையும் விரக்தியையும் திசைதிருப்பும் நோக்கத்தோடும் தமிழ் மிதவாதிகள் முழங்கிய கோஷங்கள் பல “வேர்பல் வயலன்ஸ்” என்று கலாநிதி சிதம்பரநாதன் கூறுகிறார். ஒரு காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் தொண்டர்கள் தமது விரலை வெட்டி அந்த ரத்தத்தால் தலைவர்களின் நெற்றிகளில் திலகம் இடுவார்கள். இவ்வாறு ரத்தத்தால் பொட்டு வைத்த காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் இயக்கத்தில் சேர்ந்த பொழுது பொட்டு என்று அழைக்கப்பட்டதாக ஒரு கதை உண்டு.

இவ்வாறு தமது இயலாமை, பொய்மை, அயோக்கியத்தனம் என்பவற்றிற்கு எதிராகத் திரண்டு வந்த இளையோரின் கோபத்தைத் திசை திருப்பி ஆயுதப் போராட்டத்தை நோக்கி ஊக்கிவித்ததன் மூலம் தமிழ் தலைமைகள் தந்திரமாக போராட்ட பொறுப்பை இளைய தலைமுறையின் தலையில் சுமத்தின. ஆனால் ஆயுதப் போராட்டம் படிப்படியாக அரங்கில் முன்னேற தொடங்கிய பொழுது அதன் தர்க்கபூர்வ விளைவாக தமிழ் மிதவாதிகள் பின்னரங்கிற்கு தள்ளப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் ஆயுதப் போராட்டம் மிதவாதிகளுக்கு எதிராகவும் திரும்பியது.அதாவது ஆயுதப் போராட்டத்தால் தண்டிக்கப்படுவோரின் பட்டியலில் தமிழ் மிதவாதிகளும் இருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

எனினும் அதே ஆயுதப் போராட்டம் அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பின் ஒரு பண்புருமாற்றத்துக்கு தயாராகியது அதன் விளைவு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ் அரசியலில் தோன்றிய அதிகம் சாம்பல் தன்மை மிக்க ஒரு கட்டமைப்பு அது. அதை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் வரலாறு அவருக்குத் தந்த ஒரு முக்கியமான பொறுப்பை அதாவது ஒரு பண்புருமாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறினார். அதன் விளைவாக கூட்டமைப்பு கடந்த 13 ஆண்டுகளாக உடைந்துடைந்து வந்து இப்பொழுது தமிழரசு கட்சி தனியே வந்துவிட்டது. ஏனைய கட்சிகள் ஒரு கூட்டாக நிற்கின்றன.

ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்கு தலைமை தாங்க முடியாத சம்பந்தர் கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல,சுமார் இரு தசாப்த காலங்களுக்கு தான் தலைமை தாங்கிய ஒரு கூட்டு ஏன் சிதைந்தது? அதற்கு யார் பொறுப்பு? என்பதைக் குறித்து இன்றுவரையிலும் உத்தியோகபூர்வமாக எதையுமே கூறாத அல்லது கூற முடியாத ஒரு தலைவராகக் காணப்படுகிறார்.

அவர் தலைமை தாங்கிய கூட்டமைப்பு மட்டும் சிதையவில்லை அவருடைய கண்களுக்கு முன்னால் அவருடைய தாய்க் கட்சியாகிய தமிழரசு கட்சியும் சிதையக் கூடிய ஆபத்துக்கள் தெரிகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் நாளன்று,மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தின் கட்டுப்பாட்டுக்குள் நிலைமைகள் இருக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்குள்ளேயே சிறு உடைவு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக சுமந்திரனின் ஆதரவாளர்கள் தனியாக ஒரு சுயேட்சைக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். சில ஆதரவாளர்கள் சந்தரகுமாரின் சமத்துவக் கட்சியோடு இணைந்து விட்டார்கள். இவை தமிழரசு கட்சியும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் பலமான, இறுக்கமான கட்சியாக இல்லை என்பதனை காட்டுகின்றன.கட்சியின் தலைமைத்துவத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி எதிர்காலத்தில் மேலும் விகார வடிவத்தை அடையக்கூடும். முன்னாள் பங்காளிகளை இப்பொழுது ஒட்டுக் குழு என்று கூறுபவர்கள் தலைமைத்துவப் போட்டி என்று வரும் பொழுது உட்கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவரை எப்படி முத்திரை குத்தப் போகிறார்கள்?

எனவே கூட்டமைப்பின் சிதைவு என்பது சம்பந்தர் ஒரு தலைவராக தோல்வி அடைந்ததை மட்டும் காட்டவில்லை, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி சிதைவடையக்கூடிய ஆபத்துகள் அதிகரிப்பதையும் கட்டியம் கூறுகின்றதா?

ரணில் இந்தியாவை நெருங்கிச் செல்கிறாரா? – நிலாந்தன்

ணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும ஆதரிக்குமாறு கூட்டமைப்பிடம் கேட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இலங்கைத் தீவு இப்பொழுது முப்பெரும் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கிறது. இன்னிலையில் ஒரு பேரரசை நோக்கி அதிகம் சாயும் ஒரு தலைவர் ஒப்பீட்டளவில் பேரவலம் குறைந்த பலவீனமான ஒரு தலைவராகவே இருப்பார்.அதனால்தான் சீனாவை நோக்கி சாய்ந்த மஹிந்த உள்நாட்டில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராக இருந்தார். ஆனால் நாட்டுக்கு வெளியே அவருக்கு அந்த அளவுக்கு அங்கீகாரம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுக்குள் அங்கீகாரம் இப்பொழுதும் இல்லை. ஆனால் அனைத்துலக அரங்கில் அவர் ஒப்பீட்டளவில் அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஒரு தலைவர்.ஏனென்றால் அவர் எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒருவர்.அப்படிப்பட்ட முதிர்ச்சியான ஒருவரை விடவும் முதிர்ச்சியும் அனுபவமும் அங்கீகாரமும் குறைந்த டளஸ் அழகப்பெரும வைக் கையாள்வது இலகுவானது என்று இந்தியா கருதியிருக்கக் கூடும்

தாமரை மொட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான ஒரு முன் தடுப்பாக ரணிலே காணப்படுகிறார். அதனால் அவர் ஜனாதிபதியாக வருவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் தாமரை மொட்டுக்கள் நாடாளுமன்றத்தில் இப்பொழுதும் பலமாக காணப்படுகின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் இந்தியா அவரை அதிகம் வரவேற்கவில்லை என்று கருதப்படுகிறது. பொதுவாக இலங்கைத்தீவின் ஆட்சித்தலைவர் பதவியேற்றதும் முதலில் செல்லும் நாடு இந்தியாதான். ஆனால் ரணில் இன்றுவரை இந்தியாவுக்குப் போகவில்லை அல்லது இந்தியா அவரை வரவேற்கவில்லை?

இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை என்றும் கருதப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அன்மையில் இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொழும்புக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளிவந்தன.இதை எந்த ஒரு தரப்பும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.ஆனால் அவருடைய வருகைக்குப்பின் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவை கவரும் விதத்தில் தொடர்ச்சியாக நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. அடுத்த சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமரை அல்லது ஜனாதிபதியை பிரதான விருந்தினராக அழைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு இந்திய தலைவர் ஒருவர் வருவதற்கு இந்தியாவை திருப்திப்படுத்தும் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டி இருப்பதாக தெரிகிறது.அதன்படி அண்மை வாரங்களாக பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலாவதாக, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை புனரமைக்கும் வேலைகள் இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இரண்டாவதாக, மூடப்பட்டிருந்த பலாலி விமான நிலையம் கடந்த வாரம் மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

மூன்றாவதாக, காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு யாத்திரிகர் பயணிகள் சேவை ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கப்படும் என்று ஊகங்கள் நிலவுகின்றன. அதற்குரிய கட்டுமான வேலைகளை செய்து முடிப்பதற்கு ஆக குறைந்தது 8 மாத காலம் எடுக்கும் என்றும் அதனால் அந்த படகுச் சேவையை உடனடியாக தொடங்க முடியாது என்றும் தகவல் உண்டு. மேலும் இது கடல் கொந்தளிக்கும் காலம் என்பதனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்காலிகமாக அந்த சேவையை தொடங்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்பு உண்டு. இந்த சேவையைத் ஆரம்பிக்க வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே குரலெழுப்பி வருபவர் ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம். அவர் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய தகவல்களின்படி இக்கப்பல்சேவையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாலாவதாக, இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட யாழ்.கலாச்சார மையத்தை திறக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக் கலாச்சார மையத்தை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் விரும்பின. சீனாவால் கட்டிக் கொடுக்கப்பட்ட தாமரை மொட்டு கோபுரத்தைப் போல கலாச்சார மைய த்துக்கும் ஒரு அதிகார சபையை உருவாக்கி அதை நிர்வகிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதாக தெரிகிறது. எனினும் இக்கலாச்சார மண்டபமானது தமிழ் மக்களுக்கான தனது பரிசு என்ற அடிப்படையில் அதனை தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு நிர்வகிக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியதாக தெரிகிறது. அதன்படி யாழ் மாநகர சபை மேற்படி மண்டபத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி உதவிகளை இந்தியா வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதற்கென்று பிரதான குழு ஒன்றும் உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளன . அடுத்த சுதந்திர தின விழாவையொட்டி இம்மண்டபம் திறக்கப்படக்கூடும். இந்திய அரசுத் தலைவர்களில் யாராவது ஒருவர் இந்த மண்டபத்தை திறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்பொழுது இந்திய ஜனாதிபதி வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கலாச்சார மண்டபத் திறப்பு விழாவோடு யாழ்ப்பாணத்திலும் கொண்டாடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் இந்தியத் தலைவர் ஒருவரை அழைப்பதன் மூலம் அரசாங்கம் பல்வேறு இலக்குகளை ஒரே சமயத்தில் அடைய முயற்சிக்கின்றதா?

ரணில் விக்ரமசிங்கே தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், இந்தியாவை நோக்கி நெருங்கி செல்வது என்பது அவருக்கு சாதகமான விளைவுகளைக் கொடுக்கும். இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்ய முடியும்.அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை அரசாங்கத்துக்குச் சாதகமாகக் கையாள முடியும்.அதை நோக்கி அவர் புத்திசாலித்தனமாக நகரத் தொடங்கி விட்டார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவை நெருங்கிச் செல்வதற்கு முயற்சித்து வருகிறார். எனினும் இந்தியா அவரை முழுமையாக நெருங்கி வரவில்லை என்று தெரிந்தது.ஆனால் அண்மை வாரங்களாக அவர் அந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது.அரசுடைய இனமாக இருப்பதில் உள்ள அனுகூலம் அதுதான். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் அவர்கள் இடைவெளிகளைக் கவனமாகக் கையாள முடிகிறது. ஆனால் தமிழ்த் தரப்போ அரசற்றது. இந்தியா உட்பட எல்லா பேரரசுகளும் இலங்கைதீவில் கொழும்பைக் கையாள்வதைத்தான் தமது பிரதான ராஜிய வழிமுறையாக கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த வை.கோபால்சாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதைக் காண முடிகிறது.பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா கொழும்புக்கு வழங்கிய உதவிகள் முழு நாட்டுக்குமானவை, எல்லா இனங்களுக்குமானவை என்று அவர் கூறுகிறார் .அதாவது கொழும்பில் உள்ள அரசாங்கத்தை கையாள்வதுதான் தொடர்ந்தும் இந்தியாவின் அணுகுமுறையாக காணப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் இந்தியாவின் பிடி ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகிறது. முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவோடு இணங்கி ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து பின் வந்த அரசாங்கங்கள் பின்வாங்கின. உதாரணமாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம்,பலாலி விமான நிலையத் திறப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.மேலும், வடக்கில் கடலட்டைப் பண்ணைகளின் மூலம் சீனா உள் நுழைவதாக இந்தியா சந்தேகிக்கிறது.அதேசமயம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு முதலில் புதிய நாடாக இந்தியா காணப்படுகிறது. அந்த உதவிகளின்மூலம் இந்தியா ஆறு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டது. அவற்றில் முக்கியமானது எம்.ஆர்.சி.சி என்று அழைக்கப்படும் கடல்சார் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு உடன்படிக்கையாகும்.மேலும் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்ட உடன்படிக்கையை முன்நகர்த்தும் விடயத்தில் இந்தியாவுக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்பட்டன. எனினும் வடக்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இணைப்பு திட்டங்கள் பொறுத்து, கொழும்பு இழுத்தடிக்கும் ஒரு போக்கை கடைப்பிடித்து வந்தது. ஆனால் அன்மை வாரங்களில் ரணில் விக்கிரமசிங்க டெல்லியை நெருங்கி செல்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்தியாவுடனான உறவுகளை அவர் சீர்செய்யத் தொடங்கிவிட்டார்.இது எதிர்காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

-நிலாந்தன்

தந்திரம் செய் – நிலாந்தன்

ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கும் ஐநாவை சமாளிப்பதற்கும் இது போன்ற அறிவிப்புகள் தேவை. அல்லது தமிழ் மக்களின் தலையில் ஏதாவது ஒரு அரைகுறைத் தீர்வை கட்டி விடுவதற்கு இது உகந்த தருணம் என்று ரணில் சிந்திக்கிறாரா?

ஏனெனில் 2015 ஆம் ஆண்டில் ரணில்+மைத்திரி அரசாங்கம் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க முற்பட்டது.அந்த யாப்புருவாக்கச் செய்முறைகள் இடைக்கால வரைபுவரை முன்னேறின.ஆனால் இடையே மைத்திரிபால சிறிசேன ஆட்சியைக் குழப்பினார்.அதனால் யாப்புருவாக்க முயற்சிகள் இடையில் நின்று போயின. அதன்பின் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இப்பொழுது ரணில் மீண்டும் வந்து விட்டார் அவர் 2018 இல் விட்ட இடத்திலிருந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது அதே பழைய முயற்சிக்கு ஒரு புதிய லேபலை ஒட்டி அதைத் தொடரப் போகிறாரா?அல்லது முற்றிலும் புதிதாக ஒரு முயற்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது பன்னாட்டு நாணய நிதியம் ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்குத் தமிழ் மக்களையும் பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமா ? என்ற கேள்விகளை தமக்குள் எழுப்பி தமிழ்த் தரப்பு ரணிலை எதிர் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தமிழ்த் தரப்பு ரணிலை எதிர்கொள்வதற்காக தங்களுக்கிடையே கலந்து பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கூறி கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எனைய கட்சித் தலைவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.அதில் அவர் சமஸ்ரிதான் தமிழ் மக்கள் கேட்கும் தீர்வு என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அது தொடர்பில் அவர் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களோடுகூட உரையாடவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவருடைய அழைப்பை, கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் பொருட்படுத்தவில்லை. கூட்டமைப்புக்கு வெளியே உள்ள கட்சிகளும் அந்த அழைப்பை பொருட்படுத்தவில்லை.சம்பந்தர் அழைத்தால் மேசைக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டை ஏனைய கட்சிகள் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் சுமந்திரனின் அழைப்பு வெற்றி பெறவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சம்மந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெறவிருந்த அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.அதாவது பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக தமிழ்த்தரப்பு தங்களிடையே பேசவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முயற்சி சறுக்கிவிட்டது.

அப்படி ஒரு முயற்சி அவசியமானது. அதை கட்சிகள் தங்களுக்கிடையே தாங்களாக செய்ய வேண்டும். அல்லது குடிமக்கள் சமூகங்கள் அதை நோக்கி கட்சிகளை உந்தித்தள்ள வேண்டும்.ஏனென்றால் தமிழ்த்தரப்பு என்ன கேட்கின்றது என்பதனை ஒரே குரலில் சொன்னால் அதற்குப் பலம் அதிகம் என்று அபிப்பிராயம் பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள் மத்தியில் உண்டு. தமிழ் குடிமக்கள் சமூகங்களை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அதை வலியுறுத்திப் பேசுவதுண்டு. தமிழ்மக்கள் மத்தியில் இருக்கும் பிரதான பலவீனமாக அதைச் சுட்டிக்காட்டிப் பேசும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் உண்டு.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமிழ்த்தரப்பு தான் எதைக் கேட்கிறது என்பதனை ஒரே குரலில் முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயத் தேவை உண்டு.

தமிழ் கட்சிகள் என்ன கேட்கின்றன ?இதுவரையிலும் தமிழ்த் தரப்பு முன்வைத்த தீர்வு முன்மொழிவுகளை தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுமே,எல்லாக் குடிமக்கள் சமூகங்களுமே ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றன.அவை கூட்டாட்சிப் பண்புடைய -சமஸ்ரிப் பண்புடைய தீர்வைத்தான் – கேட்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் தமிழ்த்தரப்பு அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த ஒரு காலகட்டம் எதுவென்றால் கடந்த ஆறு ஆண்டுகாலப் பகுதிதான்.2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 ஐநா தீர்மானத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றத்தை சாசனப் பேரவையாக மாற்றினார். அதாவது ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசன பேரவையாக மாற்றப்பட்டது.அதிலிருந்து தொடங்கி கோத்தாபயவின் யாப்புருவாக்கத்திற்கான நிபுணர்குழு வரையிலும் தமிழ்த்தரப்பு தனது முன்மொழிவுகளை முன்வைத்து வருகிறது.இதில் தமிழ்க்கட்சிகள்,தமிழ் குடிமக்கள் சமூகங்கள்,தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்புகளும் கடந்த 6 ஆண்டு கால பகுதிக்குள் அதிகளவு முன்மொழிவுகளை வைத்திருக்கின்றன.

இதில் குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது ஒரு சமஸ்ரி முன்மொழிவு.அதுபோலவே வட மாகாண சபை முன் வைத்ததும் ஒரு சமஸ்ரி முன்மொழிவு.விக்னேஸ்வரனின் கட்சி கொன்பெடரேஷனை கேட்கின்றது.அதுவும் உயர்வான ஒரு சமஸ்ரிதான்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு சமஸ்ரிக் கட்டமைப்பைக் கேட்கிறது.அரசாங்கம் ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி கூட்டாட்சிக்குத் தயார் என்று அறிவித்தால் தாம் ரணிலுடன் பேசத்தயார் என்று அக்கட்சி கூறுகிறது.

இதில் கூட்டமைப்பு ரணிலோடு இணைந்து உருவாக்க முயன்ற யாப்பைக் குறித்து விமர்சனங்கள் உண்டு.தமிழ் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் முதலாவது யாப்புருவாக்க முயற்சி அதுவென்று சம்பந்தர் சொன்னார். கூட்டமைப்பு அதை சமஸ்ரிப் பண்புடையது என்று கூறியது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அமைச்சர்களும் அது ஒற்றை ஆட்சிதான் என்று சொன்னார்கள்.சம்பந்தர் “பிரிக்கப்படமுடியாத, பிளவுபடாத இலங்கைத் தீவு” என்று திரும்பத் திரும்ப ஒரு மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தார்.சமஸ்ரி என்று வெளிப்படையாக லேபலை ஒட்டினால் அதைச் சிங்கள மக்கள் எதிர்பார்கள் என்றும் காரணம் கூறப்பட்டது. அதாவது நடைமுறையில் அந்தத் தீர்வு முயற்சியை அவர்கள் சிங்கள மக்களுக்கு ஒற்றை ஆட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். தமிழ் மக்களுக்கு அது கூட்டாட்சி என்று வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது சுமந்திரன் கூறுகிறார் ஒரு சமஸ்ரித் தீர்வை நோக்கி எல்லாக் கட்சிகளும் ஒரு குரலில் பேச வேண்டும் என்று.

அவர் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டபடி சமஸ்ரிதான் தீர்வு என்பதனை தமிழரசுக்கட்சி உறுதியாகவும் வெளிப்படையாகவும் விட்டுக்கொடுப்பின்றியும் கூறுமாயிருந்தால் ஏனைய கட்சிகளும் அவர்களோடு இணைந்து ஒரே குரலில் அந்தக் கோரிக்கையை முன்வைக்கலாம். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைய மறுத்தால் அதுவும் நல்லதே.அக்கட்சி வெளியில் நின்று கொண்டு ஏனைய கட்சிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும். எனைய கட்சிகள் தமது கோரிக்கைகளில் இருந்து இறங்கினால் அவற்றை முன்னணி அம்பலப்படுத்தும். எனவே ஒரு கட்சி எதிர் நிலையில் நிற்பதும் நல்லது.

ரணில் இனப்பிரச்சினையை சர்வதேசமயநீக்கம் செய்ய முற்படுகிறார்.வெளியாரின் தலையீடின்றி பிரச்சினையைத் தீர்க்க வருமாறு தமிழர்களை அழைத்திருக்கிறரார்.போரில் வெல்வதற்கு அவர்களுக்கு வெளி நாடுகளின் ஆயுதமும் உதவிகளும் தேவை.ஆனால் சமாதானத்துக்கு அது தேவையில்லையாம்.தமிழ்த் தரப்பு அதை ஏற்கக்கூடாது.இந்தியாவையும் உள்ளடக்கிய ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும்.அந்த மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தின்கீழ் சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் கூட்டாட்சிக்கான ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதுவதற்காகப் பேச வேண்டும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் ஐ.எம்.எப் போன்ற அனைத்துலக அமைப்புக்களிடம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பதை பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முன்நிபந்தனையாக வைக்குமாறு நிர்பந்திக்க வேண்டும்

ரணில் இப்பொழுது நிறைவேற்று அதிகாரமுடைய ஒரு ஜனாதிபதி.தந்திரமும் நிறைவேற்று அதிகாரமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.ரணில் ஒரு நரி.அவர் தந்திரங்கள் செய்வார் என்று தமிழ்த்தரப்பு தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருக்க முடியாது.தமிழ்மக்கள் தாங்களும் புத்திசாலிகள் என்பதனை நிரூபிக்க வேண்டிய ஆகப்பிந்திய தருணம் இது.

– நிலாந்தன்

ரணில் மெய்யாகவே தீர்வுக்குத் தயாரா ?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக வடக்கு,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் கஜேந்திரக்குமாரை நோக்கி அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும்,காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும், நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரணில்+மைத்திரி ஆட்சிக் காலத்தில் சம்பந்தர் ஒரு ஜோதிடரைப் போல அல்லது,ஆவிக்குரிய சபையின் போதகரைப்போல”அடுத்த தீபாவளிக்குள் தீர்வு”; “அடுத்த புத்தாண்டுக்குள் தீர்வு ” என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். இப்பொழுது ரணில் அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று கூறத் தொடங்கியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு கூறுகிறார்? ஒன்றில் அவரிடம் ஏதும் மந்திரக்கோல் இருக்க வேண்டும்.அல்லது அவரிடம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் அவர் தந்திரம் செய்கிறார் என்று பொருள். அவரிடம் மந்திர கோல் இல்லை.அவர் மந்திரம் தந்திரங்களில் நம்பிக்கை உள்ள ஆளும் அல்ல. எனவே அவர் எதையோ புத்திசாலித்தனமாக செய்ய முயற்சிக்கிறார் என்று மட்டும் தெரிகிறது.

அண்மை வாரங்களாக ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

முன்னாள் சமாதானத் தூதுவர் சூல் ஹெய்ம் மீண்டும் அரங்கில் குதித்திருக்கிறார்.அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும், அது ஓர் உருமறைப்பு என்று நம்பப்படுகிறது. இது முதலாவது.

இரண்டாவது,நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்சவும் கூறுகிறார், அடுத்த ஆண்டுக்குள் தீர்வு என்று.அதோடு காணாமல்போன எவரும் உயிருடன் இல்லை என்றும் கூறுகிறார்.

மூன்றாவதாக்க, மற்றொரு அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா கூறுகிறார்..”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தயாராகவுள்ளது. அதற்கு முன்னர் பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஓரணியில் சங்கமிக்க வேண்டும்.” என்று.

நாலாவதாக,காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் கூறுகிறார், இறுதிக் கட்டப்போரில் யாரும் சரணடையவோ காணாமல் போகச் செய்யப்படவோ இல்லை என்று.படைத்தரப்பு கூறுகிறது,இறுதிக் கட்டப் போரில் யாரும் சரணடையவில்லை என்று. அதாவது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் விவகாரத்தை அவர்கள் எப்படியாவது முடித்து வைக்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

ஐந்தாவதாக உண்மை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்கப் போவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,ரணில் விக்ரமசிங்க மீண்டும் நல்லிணக்க முயற்சி ஒன்றை நோக்கி நகரப் போகிறாரா என்ற கேள்வி பலாமாக எழும்.

யாழ்ப்பாணத்தை நோக்கி மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு அவர்கள் அரசியல்வாதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்கள். மேற்கத்திய நாட்டு தூதுவர்கள் மட்டுமல்ல தென்னாபிரிக்கத் தூதுவரும் யாழ்ப்பாணத்துக்கு வந்து போயிருக்கிறார். சிவில் சமூகங்களுடனான சந்திப்புகளின்போது, அவர்கள் ஒரு தீர்வுக்கான களநிலைமை குறித்துத் தகவல்களைத் திரட்ட முற்படுவதாகவே தோன்றுகிறது. தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா முன்னெடுத்த நல்லிணக்க முயற்சிகளைப் போன்ற ஒரு ஏற்பாட்டுக்கு அரசாங்கம் தயாராகி வருகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையை மற்றும் நீதிக்கான ஆணைக்குழு என்பது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு ஆகும். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் ரணில், அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.இப்பொழுது அந்த முயற்சிகளை அவர் தொடரப் போகிறாரா?

அப்படியென்றால் நிலைமாறுகால நீதிச் செய்முறையின் கீழ் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பலவீனமான கட்டமைப்புகளை இயங்க வைத்து, தேவையான புதிய கட்டமைப்புகளையும் உருவாக்கி, தென்னாபிரிக்கா பாணியிலான ஒரு நல்லிணக்க முயற்சியை நோக்கி ரணில் நகரப் போகிறாரா?

அவ்வாறு ஒரு தீர்வு முயற்சியை நோக்கி ரணில் சீரியஸாக உழைக்கத் தேவையான ஒப்பீட்டளவில் சாதகமான ஒரு சூழல் அவருக்கு இப்பொழுது உண்டு. அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

முதலாவதாக,முன்பு ரணில்+ மைத்திரி ஆட்சிக்காலத்தில் அவர் தீர்வைக் கொண்டுவர முற்பட்டபொழுது அவர் ஒரு பலவீனமான பிரதமர்.ஆனால் இப்பொழுது அவர் ஒரு பலமான ஜனாதிபதி.குறிப்பாக வரும் மார்ச் மாதத்தோடு அவர் மேலும் பலமடைந்து விடுவார். எனவே பலமான நிலையில் இருந்து கொண்டு தான் ஏற்கனவே தொடங்கிய தீர்வு முயற்சிகளைத் தொடரலாமா என்று அவர் யோசிக்க முடியும்.

இரண்டாவதாக, அவர் அந்தத் தீர்வு முயற்சியை முன்னெடுத்த பொழுது கூட்டமைப்பு அதில் பங்காளியாக இருந்தது. சஜித் பிரேமதாச அவருடைய கட்சிக்குள் இருந்தார். எனவே அதே முயற்சியை மீண்டும் தொடங்கினால் இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புக்கு வாய்ப்புகள் ஒப்பிட்டளவில் குறைவு. சுமந்திரன் இப்பொழுது ரணிலுக்கு எதிரானவர் போல தோன்றுகிறார்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் தீர்வு முயற்சிகளுக்கு தாம் ஆதரவு அளிக்கப் போவதாக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் கஜேந்திரகுமார் அணி எதிர்க்கும்.அதனால்தான் ரணில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரக்குமாரை நோக்கி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.

மூன்றாவதாக,முன்னைய தீர்வு முயற்சியை குழப்பியது மைத்திரி. அவரைப் பின்னிருந்து இயக்கியது மகிந்த அணி. புதிய யாப்புக்கான இடைக்கால வரைபை அடுத்தகட்ட வாசிப்புக்கு போவதற்கிடையில் மைத்திரி ஒரு யாப்புச்சதியைச் செய்தார். ஆனால் இப்பொழுது மகிந்த ரணிலில் ஒப்பீட்டளவில் தங்கியிருக்கிறார். எனவே தனது யாப்புருவாக்க முயற்சியை எதிர்த்த மகிந்தவை ஒப்பிட்டுளவில் சமாளிக்கக்கூடிய பலத்தோடு ரணில் காணப்படுகிறார்.அதனால் ஒரு தீர்வு முயற்சிக்கு எதிராக மஹிந்த காட்டக்கூடிய எதிர்ப்பை ஒப்பிட்டுளவில் குறைக்கலாம் என்று அவர் நம்ப முடியும்.

நாலாவதாக,தமிழ்மக்கள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படுகிறார்கள்.கூட்டமைப்பு முன்னைய தீர்வு முயற்சியின் பொழுது 16 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இப்பொழுது 10 ஆசனங்கள்தான். தமிழ்த் தேசியத் தரப்பு மூன்றாகச் சிதறிக் கிடக்கிறது. அதேசமயம் தமிழ் தேசியப் பரப்புக்கு வெளியே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. குறிப்பாக கிழக்கில்,கிழக்குமைய வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார்கள்.எனவே வடக்கு-கிழக்கு இணைப்புப் பொறுத்து கிழக்கு வாழ் தமிழ்மக்கள் மத்தியிலேயே அதற்கு எதிரான கருத்துக்களை உருவாக்கக்கூடிய சக்திகள் பலமடைந்து வருகின்றன.இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரம்சம். அண்மையில் அவர் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைமைப் பொறுப்பை பிள்ளையானுக்கு வழங்கியிருந்தார் என்பதனை இங்கே கவனிக்க வேண்டும்.

எனவே தொகுத்துப் பார்த்தால் முன்னைய சமாதான முயற்சிகளோடு ஒப்பிடுகையில், இம்முறை ரணில் ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறார். சூல் ஹெய்மை அரங்குக்குள் கொண்டு வந்ததன்மூலம் அவர் மேற்கு நாடுகளையும் கவர முடியும். தமிழ்த் தரப்பு ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், சிங்கள மக்கள் மத்தியிலும் கடும்போக்கு வாதிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் ரணில் விக்கிரமசிங்க தனது தீர்வு முயற்சியை புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் முன்னகர்த்த முடியும்.

எதிர்ப்பு-ஆதரவு, தமிழ்த் தரப்பின் பலம்-பலவீனம் என்பவற்றைக் கூட்டி கழித்துப் பார்த்தால்,ரணிலுக்கு ஒப்பீட்டளவில் சாதகமான நிலை என்று கூறலாம்.எனவே அவர் மெய்யாகவே ஒரு தீர்வு முயற்சியை நோக்கி நகரக்கூடுமா?

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தைக் கவர்வதற்கும் அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்துக் கையாள்வதற்கும் அவருக்கு அது உதவும்.ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள பெரு முதலாளிகளை அவர் நெருங்கிச் செல்லத் தொடங்கிவிட்டார். முன்னைய நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் அவர் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றை நெருங்கிச் சென்றார். இம்முறை பெரு முதலாளிகளை நெருங்கிச் செல்கிறார். அவரிடம் ஏதோ ஓரு புத்திசாலித்தனமான திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. அல்லது குறைந்தபட்சம், பன்னாட்டு நாணய நிதியம், ஐநா போன்றவற்றைத் திசை திருப்புவதற்காகவாவது,அவர் ஒரு தீர்வை கண்டுபிடிக்க போவதான தோற்றத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம்.

இந்நிலையில் மூன்றாகச் சிதறிக் காணப்படும் தமிழ்த் தேசியத் தரப்பு அதனை புத்திசாலித்தனமாக அணுக வேண்டியுள்ளது. அவர் ஒரு நரி. சூழ்ச்சிகள் செய்வார் என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தரப்பு அப்பாவி வெள்ளாடுகளாக இருக்கத் தேவையில்லை. பதிலுக்குத் தாங்களும் சூழ்ச்சிகளில் வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும்.

– நிலாந்தன்