யாழ் மாநகரசபை பாதீடு மீண்டும் தோல்வி

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது.

இதற்கு சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் ஒருவர் நடுநிலைமை வகித்திருந்தார்.

முதல்வர் ஆர்னோல்டினால் , 2023ஆம் ஆண்டிற்கான பாதீடு கடந்த 13ஆம் திகதி முன் மொழியப்பட்ட போது , அது தோற்கடிக்கப்பட்டது அதன் பின்னர் அவர் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று சமர்ப்பித்த பாதீடும் தேற்கடிக்கப்பட்டமையினால் அவர் பதவி இழந்துள்ளதுடன் மாநகர சபையின் செயற்பாடுகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு குறைந்தளவிலான ஒதுக்கீடு

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று புதன்கிழமை (21) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் நிறைவேறியது.

வாக்கெடுப்புக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவினால், 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை – ரணில்

மின்சார சபையின் நட்டத்தை போக்க மின் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழி இல்லை. நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே இந்த நிலையில் இருக்கின்றோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரித்தது. என்றாலும் அது போதாது.  மேலும் 152 பில்லியன் நட்டம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. 2013 இல் இருந்து மின்சார சபையின் மொத்த நட்டம் 300 பில்லியனாகும்.

இந்த தொகையை இந்த காலப்பகுதியில் தேடிக்கொள்ளவேண்டி இருக்கின்றது. குறிப்பாக அடுத்த வருடம் நடுப்பகுதியில் வரட்சி ஏற்படலாம் அவ்வாறு ஏற்பட்டால் எமக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றுது.

சாதாரண மழைவீழ்ச்சி கிடைத்தால் எமக்கு 352 பில்லியன் ரூபாவரை தேவைப்படும்.  அவ்வாறு இல்லாமல் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றால் 295 பில்லியன் ரூபா வரை தேவைப்படுகின்றது. இந்த தொகையை நாங்கள் எவ்வாறு தேடிக்கொள்வது?. இது தான் பிரச்சினை.

அத்துடன் அரசாங்கத்துக்கும் வருமானம் இல்லை. பணம் அச்சிட்டால் ரூபா வீழ்ச்சியடையும். வரி அதிகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும். அப்போதும் பிரச்சினைதான். அப்படியானால் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும்.

இது பிரச்சினைக்குரிய விடயம் என்பதை நான் அறிவேன். மின் துண்டிப்புக்கு செல்ல முடியும். ஆனால் அடுத்து மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருப்பதால் மின் துண்டிப்பை நிறுத்தவேண்டி இருக்கின்றது. மின் கட்டணம் அதிகரிக்க யாரும் விரும்பப்போவதில்லை.

இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் சுமையும் எமக்கு தெரியும். இதனைத்தவிர எமக்கு இருக்கும் மாற்று வழி என்ன? நாங்கள் பொருளாதாரத்தை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தாக்கிப்பிடித்துக்கொண்டு, தற்போது சீனாவுடன் கலந்துரையாடி முடிவுக்கு வரும்போது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லாம்.

நாங்கள் நட்டத்தை காட்டி வருமானத்தை காட்டாவிட்டால் வெளிநாட்டுகளிடமிருந்து உதவிகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் இதனை செய்யவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நாடு என்ற ரீதியில் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நாங்கள் எப்போதும் பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க தவறியதாலே நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம். 2013க்கு பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படவி்ல்லை. அதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்பக்கூற வேண்டும். வேறு நாடுகள் கடினமான தீர்மானங்களை எடுத்தன. ஆனால் நாங்கள் அதில் இருந்து தப்பிச்சென்றோம். இப்போது என்ன செய்வது என எங்களிடம் கேட்கின்றனர்.

அத்துடன் 2001இல் நான் பிரதமராகியதுடன் ஜப்பானுடன் இருந்த நுரைச்சோலை நிலக்கறி திட்டத்தை நிறுத்தினேன். அதற்கு நிதி பிரச்சினை ஏற்படுவதால் 6மாதத்துக்கு நிறுத்தினேன். ஆனால் எமது அரசாங்கம் தோல்வியடைந்தவுடன் மீண்டும் இந்த இடத்தில்தான் அதனை போடவேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் ஓய்வு பெற்றுச்சென்றுள்ளனர். அதேபோன்று 2002இல் நாங்கள் உலக வங்கியின் உதவியை பெற்றுக்கொண்டு, மின்சக்தி தொடர்பில் எமக்கு அறிக்கை ஒன்றை தந்தார்கள். அந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு, தற்போது இருக்கும் மின்சாரம் தொடர்பான சட்டமூலத்தை கருஜயசூரிய கொண்டுவந்தார்.

ஆனால் நாங்கள் தேர்தலில் தோலியடைந்ததுடன் அந்த சட்டமூலத்தை செயற்படுத்தவில்லை. 2007 சட்டமூலத்தை கொண்டுவருமாறு தெரிவித்தனர். அப்போது நாங்கள எந்த மின்சார உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனால் அதன் பிரகாரம் செயற்பட முடியாமல் போனது.

பின்னர் 2017, 2018,2019 காலத்தில் நாங்கள் இந்தியா, ஜப்பானுடன் கலந்துரையாடி எல்..என்.ஜி. மின் உற்பத்திய நிலையங்கள் 2 பெற்றுக்கொண்டோம்.

தேர்தல் முடிந்து எமது அரசாங்கம் சென்ற பின்னர், இவர்கள் என்ன செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தை இரத்துச்செய்யாமல், அமெரிக்காவின் நியுபோட்ரஸுக்கு வழங்கினார்கள். அதன் பின்னர் நியுபாேட்ரஸுக்கு விருப்பம் இல்லாமல் அதனை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வழங்கினார்கள். தற்போது ஒரே பூமியில் இந்தியா, ஜப்பான், சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா அனைத்து நாடுகளும் இருக்கின்றன.

ரஷ்யா மாத்திரமே இல்லை. உலக யுத்தம் ஒன்று ஏற்படாததுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரே இடத்தை அனைத்து நாடுகளுக்கும் கொடுத்துவிட்டு தற்போது பிரச்சினையை தீர்க்குமாறு என்னிடம் தெரிவிக்கின்றனர். இறுதியில் எல்.என்.ஜியும் இல்லை எதுவும் இல்லை.

நாடாளுமன்றில் பாதீட்டு அலுவலகம் ஒன்றை நிறுவ தீர்மானம்

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வரைவுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்து, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, பிரதமர் இது தொடர்பான ஆரம்ப சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதுடன், கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளிக்கவில்லை. இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லை.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வாக்களிப்பில் நடுநிலை வகித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (நவ 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பித்தார்.

நவம்பர் 15 ஆம் திகதி முதல் இன்று (22) வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடம்பெற்றது.

இந்நிலையில், இதன் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு ஒதுக்கீடு : எதிராக வாக்களிப்போம் – செல்வம் எம்.பி.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆகவே நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், பாதுகாப்பிற்கு பெருமளவில் செலவழிக்காமல் இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்துக்கு 11.2% ஒதுக்கீடு, இனவாத சிந்தனைகளை மையமாக கொண்ட பாதீடு. – சுரேஷ் பிரேமச்சந்திரன்

நாடாளுமன்றில் அதிபரால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் – தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்தத்தில் இந்த வரவு-செலவுத் திட்டமானது நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த வரவு-செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு, 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டமானது, எந்தவிதமான ஆரவாரமுமின்றி, நாடாளுமன்றத்தின் ஆதரவுக் குரல்களுமின்றி அதிபரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் நேற்று 14.11.2022 சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்த வருமானமாக 3415பில்லியன் ரூபா என்றும் மொத்த செலவாக 5819 பில்லியன் ரூபா என்றும் எதிபார்க்கப்படுகிறது. அதன்படி துண்டுவிழும் தொகையாக 2404பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு இணங்கவே இந்த வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மையும் உள்ளது. இலங்கை ஏற்கனவே வங்குரோத்து அடைந்த நாடாகவும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாடாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது.

இதன் காரணமாக மிகப்பாரிய அளவிலான பணவீக்கமும் அதன் விளைவாக கடந்த வருடத்திலும்விட, நான்கு, ஐந்துமடங்கு விலை அதிகரிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கோ தனியார்துறை ஊழியர்களுக்கோ எவ்வித ஊதிய உயர்வுகளுமில்லாமல் இருக்கின்ற அதேசமயம், பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து மிக உச்சத்தில் இருக்கின்றது. இதனால் ஏற்கனவே மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த அரச உத்தியோகத்தர்களும் தனியார்துறை ஊழியர்களும் தொழிலாளர்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டுகோடி இருபது இலட்சம் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் ஏறத்தாழ தொண்ணூறு இலட்சம் மக்கள் மூன்றுவேளை உணவிற்கே அல்லாடுவதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லை என்றும் பல இலட்சம் மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இவற்றிற்கு நிவாரணம் வழங்கக்கூடிய எந்த விடயங்களும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதுமாத்திரமல்லாமல், மக்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை தரக்கூடிய எத்தகைய எந்த விடயங்களும் இதில் உள்ளடக்கப்படவுமில்லை.

மேலும், நாட்டை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்றோ, மக்களுக்குமேல் ஏற்றப்பட்ட சுமைகளை எவ்வளவு கால அவகாசத்தில் தம்மால் குறைக்க முடியுமென்றோ எத்தகைய அறிவுறுத்தல்களும் இல்லை. உண்மையில் அதிபருக்கே இது தொடர்பில் எத்தகைய தெளிவும் இல்லை என்பதை உணரமுடிகிறது.

அதிபர் தனது உரையின்பொழுது நாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டிருக்கின்றார். இலங்கை சுதந்திரமடைந்த அடுத்த வருடம் தான் பிறந்ததாகவும், இன்று எழுபத்தைந்து வருடம் பூர்த்தியடைந்த நிலையில் மிகப் பின்தங்கிய வங்குரோத்து அடைந்த ஒரு நாடாக இலங்கை இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற அதிபர் எங்கே பிழை விட்டிருக்கின்றோம் என்றும் கேட்கின்றார்.

உண்மையில் அவருக்கு இதற்கான விடை தெரிந்திருக்கும். ஆனால் அந்த விடயத்தைத் தயக்கமின்றி தெளிவாகச் சொல்வதற்கு அவர் அஞ்சுகின்ற நிலைமையை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல கலாசாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டு சகலருக்கும் சம உரிமைகள், சம சந்தர்ப்பங்கள் வழங்கும் ஒரு நாடாக இதனை மாற்றியிருந்தால், ஆசியாவின் வளமிக்க ஒரு நாடாக இது மாறியிருக்கும்.

எங்களுக்குப் பின்னர் சுதந்திரமடைந்த சிங்கப்பூர் அவ்வாறுதான் செயற்பட்டது. நான்கு மொழிகள், நான்கு இனங்கள், பல மதங்கள் பல்வகையான கலாசாரங்கள் இவை எதுவும் பாதிக்கப்படாத ஒரு நாடாக சிங்கப்பூர் கட்டியெழுப்பப்பட்டது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக வளர்ச்சியடைந்த ஒரு நாடாக சிங்கப்பூர் மாறியிருக்கின்றது. இனவாதத்தில் ஊறிப்போயிருக்கக்கூடிய சிங்கள அரசியல் தரப்பு இதனை இன்னமும் உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் சிங்கள பௌத்தத்தைப் பேணிப்பாதுகாப்பது என்றும் இதற்கு முப்படையினரும் உதவவேண்டும் என்ற அடிப்படையிலும் இனவாத சிந்தனைகளை மையமாக வைத்து கட்டியமைக்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு செலவீனமாக இலங்கையின் மொத்த செலவீனத்தில் 11.2 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 130கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் அதுவும் அண்டை நாடுகளுடன் நீண்ட எல்லைகளையும் எல்லைத் தகராறுகளையும் கொண்ட நாடே பாதுகாப்பிற்கு 9வீதத் தொகையையே ஒதுக்கியுள்ளது. இரண்டுகோடியே இரண்டரை இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைக்கு பாதுகாப்பிற்காக 41000 கோடி ரூபா செலவு அவசியம்தானா? இவ்வளவு பெருந்தொகை படையினர் தேவைதானா? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வளவு முகாம்கள் தேவைதானா? இலங்கை, எந்த நாட்டிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்புப்டையை வைத்துக்கொண்டு அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்கின்றது? இலங்கை, உலகத்தின் பதிநான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிற்கு இவ்வளவு பெரிய இராணுவ அமைப்புமுறை அவசியம்தானா?

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் என மூன்று துறைகளை உள்ளடக்கிய ஒரு அமைச்சுக்கு வரவு-செலவுத்திட்டத்தில் 23.4.வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான கருத்து என்னவென்றால், இலங்கை முழுவதிலுமுள்ள அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், மாகாணசபை ஊழியர்கள், மாகாணசபை நடவடிக்கைகள், உள்நாட்டலுவல்கள் என ஒட்டுமொத்தமான இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக 23.4 வீதத்தை ஒதுக்கும் இந்த அரசாங்கம் பாதுகாப்பு என்ற பெயரில் முப்படையினருக்கும் 11.2வீதத்தை ஒதுக்கியதானது அரசாங்கத்தின் தேவையற்ற செலவீனத்தையே காட்டுகின்றது.

தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள கட்சிகளும் சர்வதேச சமூகமும் அரசாங்கத்தின் இத்தகைய அநாவசிய செலவுகளைக் குறைக்கும்படிக் கோரியபோதிலும் அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் நாட்டின் இன்றைய சூழலில், இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இன்றைய அதிபர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக இருந்தபொழுது, மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பில் 1500கோடி ரூபா முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்காக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? இதனைப் போன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் வெளிநாட்டுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

இலங்கை வங்குரோத்து அடைந்தமைக்கு இதுவே முக்கியமான காரணமென்றும் சிங்கள புத்திஜீவிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறைந்தபட்சம் இவற்றை மீளக் கொண்டுவருவதற்கான ஏதேனும் ஒரு வழிமுறையைக்கூட இவரால் அறிவிக்கமுடியவில்லை. அதுமட்டுமன்றி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழல்களையும் இலஞ்ச லாவன்யங்களையும் நிறுத்தி, அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய உருப்படியான எத்தகைய திட்டங்களையும் இவரால் அறிவிக்க முடியவில்லை.

இவ்வாறான ஒரு வரவு-செலவுத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்புடையதல்ல, தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்தத்தில் இந்த வரவு-செலவுத் திட்டமானது நிராகரிக்கப்படவேண்டிய, குப்பைக்கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என்பதே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” – என்றுள்ளது.

Posted in Uncategorized

வரவு செலவுத்திட்டம் பொருளாதார மீட்சி ஸ்திரதன்மையை அடிப்படையாக கொண்டது

2023 வரவு செலவுதிட்டம் பொருளாதார மீட்சி அதனை ஸ்திரப்படுத்தியவாறு எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவக்கூடிய நடுத்தர நீண்டகால பொறுளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுவந்ததாகஅவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பின்பற்ற சில தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் மேலும் மோசமாக பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் தாமதங்கள் மீட்பு நடவடிக்கையை பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் குறைக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப நாட்களில் நீண்டவரிசைகள்  பலமணிநேர மின்வெட்டு போன்றன காணப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி ஆளுநர் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையேற்பட்டது வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாணயக்கொள்கையை இறுக்கமாக்கியிருக்காவிட்டால் வட்டி வரிகள் போன்றவற்றை அதிகரித்திருக்காவிட்டால் பணவீக்கம் 100 வீதத்திற்கும் அதிகமானதாக காணப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.