பசில் கூறுவதற்கு ஏற்ப ஆட நான் பொம்மை கிடையாது – விஜயதாச காட்டம்

பசில் ராஜபக்‌ச கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை கிடையாது என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் ​போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பசில் ராஜபக்‌ச பெரும் ஆத்திரம் கொண்டுள்ளார்.

அதன் காரணமாக என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

எனினும் அவர் நினைப்பதைப் போன்று நான் ஒன்றும் சிறுபிள்ளை கிடையாது. நான் விஜயதாச ராஜபக்‌ச, அதுவும் சட்டத்தை நன்றாக அறிந்த நீதி அமைச்சர்.

அதே ​போன்று பசில் ராஜபக்‌ச கூறுவதற்கு ஏற்ப ஆட நான் ஒன்றும் பொம்மையும் கிடையாது.

எனவே பசில் அவரால் முடிந்ததைச் செய்து கொள்ளட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராகவே இருக்கின்றேன்.

அதே ​போன்று சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடியே என்னைப் பதில் தலைவராக நியமித்துள்ளது.

அந்த விடயம் சட்டபூர்வமாகவே நடைபெற்றுள்ளது. அதனையும் யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே காரணம் – நீதி அமைச்சர் விஜேதாச குற்றச்சாட்டு

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைய மத்திய வங்கியே பிரதான காரணமாகும். அஜித் நிவாட் கப்ரால் அளுநராக இருந்த காலத்தில் இருந்து நாட்டின் அன்னிய செலாவனி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாட்டுகளில் இருப்பவர்களுக்கு மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாமல் போனது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரச வங்கிகள் சாதாரண மக்கள் தொடர்பில் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் அந் மக்கள் கறுப்பு வியாபாரிகளை நாடி, தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு பாரிய வட்டித் தொகைக்கு கடன் பெறுகின்றனர். இதனால் சாராதண வியாபாரிகள் விவசாயிகள் தங்களின் தொழிலில் நட்டம் ஏற்படும்போது அவர்கள் அந்த தொழிலை விட்டுவிடும் நிலைக்கு செல்கிறனர். அதனால்தான் இன்று நாட்டில் விவசாயம் செய்பவர்களின் வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனால் இது தொடர்பாக மத்திய வங்கி கொள்கை ரீதியில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பான சட்டங்களை அனுமதித்துக்கொள்ள எமக்கு நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய வங்கிக்கு நிதி தொடர்பான அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதனால் இன்னும் தாமதிக்காமல் மத்திய வங்கி இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாடு வீழ்ச்சியடைய பிரதான காரணம் மத்திய வங்கியாகும். இதற்கு 90 வீதம் மத்திய வங்கியின் நடவடிக்கையே காரணமாகும். 10 வீதம் மற்ற விடயங்களாகும். 2006இல் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டது முதல் எமது வெளிநாட்டு செலாவனி முற்றாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் வெளிநாடுகளில் இருக்கும் எமது தொழிலாளர்கள் பாரியளவில் வெளிநாடுகளில் வியாபாரம் செய்து, அங்கு சேமித்து வைத்துக்கொண்டுடார்கள். நாட்டுக்கு பணம் அனுப்பவில்லை.

அதனால் எந்தவொரு நாட்டும் வெளிநாட்டு செலாவனியை நிர்வகித்துக்கொள்ள தவறினால் அந்த நாடு தோலியடையும். அதுதான் எமக்கும் ஏற்பட்டது. எமது அவெளிநாட்டு செலாவனியை முகாமைத்துவம் செய்ய மத்திய வங்கிக்கு முடியாமல் போனது. சிறிமா அம்மையாரின் காலத்தில் வெளிநாட்டு செலாவனி மோசடி ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, அதில் குற்றவாளியாக்கப்பட்ட அனைவரையும் சிறையிலடைத்தார். சிலர் சிறையிலேயே மரணித்தார்கள்.

அதனால் நாட்டின் நிதி முகாமைத்துவம் தொடர்பாக மத்திய வங்கி சுயாதீன நிறுவனமாக செயற்படும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கு முன்னர் மத்திய வங்கி அதுதொடர்பான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முறையான நிதி முகாமைத்துவம் இல்லாமையே கறுப்பு சந்தை நிதி நிறுவனங்கள் அதிகரிக்க காரணமாகும் என்றார்.

ஐ.நாவின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை – நீதியமைச்சர் விஜயதாஸ

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் இணையப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை.

அத்துடன், அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை என்றும், அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் மட்டுமே கலந்துரையாடுவோம்.

மாறாக சர்வதேச நிபுணர்களுடன் அல்ல எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளாலேயே 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது – விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு

“தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்றும், கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. 13ஆவது திருத்தம் இன்று நலினமடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், 13ஆவது திருத்தத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் உரிய முறையில் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து மோதல்களுக்கும் அரசியல் முரண்பாட்டுக்கும்தான் தமிழ்க் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட்டனவே அன்றி, 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது உரியமுறையில் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.

இதனால்தான் வடக்கு மாகாணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படாமல் மீளத் திரும்பியது. கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்தது. ஆக, இருக்கும் அதிகாரங்களைக்கூட சரிவரப் பயன்படுத்தாமலிருந்துவிட்டு கூடுதல் அதிகாரங்களைத் தாருங்கள் என்று கேட்பது பொருத்தமற்றது.” – என்றார்.அ

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு அமையவே கொண்டுவரப்படுகின்றன – நீதியமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு உட்படும் வகையில் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்றன என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (18) நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு இசைவாக வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வெற்றிகரமாக்கிக்கொள்ளும் காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை மிகவும் உறுதிமிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்தும் மிகவும் ஜனநாயக முறையில் அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த சட்டங்கள் அமைக்கப்பட்ட முறை தொடர்பாகவும் அமைச்சர் ஒருங்கிணைப்பாளருக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் மிகவும் முக்கியமாகும் எனவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரா நிறுவனத்தினால் நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் இழப்பு

இலங்கையின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (நாரா) ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுமார் 32 ஆண்டுகளாக நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இப்பொறுப்பை திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தேசிய நீர்வரைவியல் காரியாலயத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தை நிர்வகிப்பதுடன் தொடர்புடைய இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.

கடற்பிராந்தியத்தில் உயிர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாகக்கொண்டே சகல நாடுகளும் அவற்றின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கின்றன.

தமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான கட்டணம் அறவிடல், கடற்பிராந்தியப் பாதுகாப்பின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், கடற்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் இப்பிரகடனத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையானது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. உலகின் ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுக்குமான நுழைவாயிலாகவும், பொருளாதார மற்றும் வாணிப ரீதியில் பெருமளவான நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய வகையிலும் இலங்கையின் அமைவிடம் உள்ளது.

இலங்கைக் கடற்பரப்பின் ஊடாக நாளாந்தம் சுமார் 200 – 300 வரையான கப்பல்களும், வருடாந்தம் சுமார் 35,000 கப்பல்களும் பயணிக்கின்றன. இவ்வாறு எமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடமிருந்து அதற்கேற்றவாறு கட்டணம் அறவிடப்படும்.

அதற்குரிய அதிகாரம் கடந்த 1981 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (நாரா) வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்பிராந்திய விவகாரங்களை உரியவாறு கையாள்வதற்கான நிபுணத்துவம் அக்கட்டமைப்புக்கு இல்லை. அதன் விளைவாக கடந்த 32 ஆண்டுகளாக (1981 தொடக்கம்) எமது நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி எமது கடற்பிராந்தியத்தை உரியவாறு நிர்வகிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஏற்ற பொருத்தமான கட்டமைப்பு இன்மையால், அதுபற்றிய தீர்மானங்கள் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டுக்கான வருமானத்தை இல்லாமல் செய்வதுடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு 4,197 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2022 இல் 3,648 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகம், காலி துறைமுகம், காங்கேசன்துறை மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றுக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை முறையே 164, 72, 32 ஆகப் பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு அவை முறையே 95, 7 மற்றும் 0 ஆக வீழ்ச்சிகண்டுள்ளன.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டு எமது நாட்டுக்குரிய கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கும் நோக்கிலேயே தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். இச்சட்டமூலத்தின் ஊடாக தேசிய நீர்வரைவியல் காரியாலயம் என்ற புதிய கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் விதமாக சிரேஷ்ட நீர்வரைவியலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். அதன்மூலம் நாட்டின் கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கவும், அதனூடாக வருமானமீட்டவும் முடியும் என்று தெரிவித்தார்.

போர் நடந்த இடங்களில் மனித புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் – விஜயதாஸ ராஜபக்ச

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின்
கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ஆகியோர் தவிர்த்துள்ளனர்.

அத்துடன் “போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” என்று நீதி அமைச்சர் அலட்சியமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் – பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரம்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும். இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.” – என்றார்.

நீதி அமைச்சர் விஜயதாஸ

“போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும்.

முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன். நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்க முடியாது. அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது.” – என்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவு அளப்பரியது – விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஒருமித்த கருத்துடன் நீண்ட கால சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் விரைவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய விஜயத்தின் போது அங்குள்ள ஊடகங்களுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கை மக்கள் மற்றும் தலைவர்களுடன் அரசாங்கம் தொடர்ச்சியான தொடர்புகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவுடன் நாங்கள் எங்கள் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்தோம். இலங்கையில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம். 2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது.

இது நாட்டில் அரசியல் கொந்தளிப்பைத் ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியானது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் போராடி வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல முயற்சிகளை எடுத்தோம். 2016 ஆம் ஆண்டு சகல செயற்பாடுகளையும் ஆரம்பித்து, காணாமல் போனவர்களுக்கான அலுவலகங்கள், சமாதானத்தை ஏற்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயல்பட்டோம்.

இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவவுள்ளதுடன், அனைத்து சமூகங்களுடனும் ஒருமித்த கருத்துடன் நீண்டகால சமாதானத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.

பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். பல வழக்குகள் இருந்தன, பல கைதிகள் இருந்தன. இருப்பினும், இப்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறியுள்ளன. இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றார்.

வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து எதுவித தீர்மானமும் இல்லை – நீதியமைச்சர்

வடமாகாணசபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கொண்டு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அப்பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் அத்தகைய தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவது குறித்து அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையிலேயேஇவ்வாறானதொரு செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.